வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல்  தற்கொலை!  (காலக்கண்ணாடி – 32)

வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)

 — அழகு குணசீலன் — 

விடுதலைப் போராட்டம் ஒன்று தோல்வியில் முடிந்த  வரலாற்றை வாகரை – வெருகல் ஆற்றுத்தாக்குதல் எழுதி முடித்திருக்கின்றது. 

விடுதலைப்புலிகளின் தனிநபர் பயங்கரவாதம் முதல் தமது சொந்த போராளிகள் மீதான அராஜக பயங்கரவாத அரசியல் வரை இது நடந்து முடிந்திருக்கிறது. 

விடுதலைப்புலிகள் அமைப்பு எப்போது சகோதரப் படுகொலைகளை ஆரம்பித்ததோ, அப்போதே இப்போராட்டம் தோல்வி அடையும் என்பதும் தெரிந்துவிட்டது. தொடர்ந்தும் புலிகள் ஆயுத பூஜைகளை நடாத்திய போது அது மேலும் தெளிவானது. 

விடுதலைப்போராட்டம் ஒன்று குறித்து அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்திற்கும், அதிகாரத்தின் பக்கம் ஒத்து ஊதுகின்ற ஊடகதர்மத்திற்கும், பினாமிகளுக்கும், புலம்பெயர்ந்து முளைத்த புதிய  பணக்காரர்களுக்கும் இது எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். 

புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு சுயவர்க்க நலனுக்காக அனைத்து வன்முறைகளையும் அங்கிகரிக்கின்றவர்களுக்கும் இது தெரியாமல் இருந்து இருக்கலாம்.  

ஏனெனில் இவர்கள் புலிகளின் நாட்டுப்பற்றாளர்கள், புனிதர்கள். அரசியல் குருடர்கள், செவிடர்கள், ஊமைகள். அரசியல் ஊனமுற்றோர். 

ஆனால் புலிகளால் துரோகிகள் எனப் பட்டம் சூட்டப்பட்டவர்களுக்கும், அரசியலை ஜதார்த்தமாகவும், விடுதலைப்போராட்டம் ஒன்றின் குணாம்சங்களையும், வரலாற்றையும் நன்கு அறிந்தவர்களுக்கும் இந்தப்போராட்டம் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. 

குறிப்பாக தோழர் சண்முகதாசனும், தோழர் வி.பொன்னம்பலமும் ஆரம்பம் முதலே தோல்விக்கு கட்டியம் கூறியவர்கள். 

‘தம்பிமார் கொள்கையை வகுத்துக்கொண்டு ஆயுதம் தூக்கவில்லை மாறாக ஆயுதத்தை தூக்கிக் கொண்டு அதற்கு ஒரு கொள்கையை தேடியவர்கள், இவர்கள் தோற்பர்’ என்றவர் தோழர் சண்முகதாசன். 

ஆக, இங்கு இருந்த ஒரேயொரு கேள்வி, தோல்வி எப்போது என்பதுதான். இந்த காலக்கெடுவை விரைவு படுத்தியது கருணாவின் பிரிவும், கிழக்குபோராளிகள் மீதான புலிகளின் அடக்குமுறையுமாகும். 

தற்கொலையை ஆயுதமாக தேர்ந்தெடுத்திருந்த புலிகளுக்கு, அதுவே அந்த இயக்கத்தின் அரசியல் தற்கொலையாக முடிந்திருக்கிறது.  

இதற்கு புலிகளும் அவர்களின் பினாமிகளும் கூறுவது போன்று தனியாக கருணாவும், சிறிலங்கா அரசும், இந்தியாவும், மேற்குலகமும் காரணமல்ல. முழுக்க முழுக்க புலிகளே காரணம். வேண்டுமானால் மற்றையவை தோல்வியை துரிதப்படுத்தியவை என்று கொள்ளலாம்.  

புலிகளின் தோல்விக்கு இருவகையான காரணங்கள் உண்டு. 

1. அகரீதியான காரணங்கள் 

2.புறரீதியான காரணங்கள். 

அகரீதியான காரணிகள்: 

புலிகள் அமைப்பு ஒரு தனிநபர் வழிபாட்டு அமைப்பு. அரசியல் பேசிக்கொண்டபோதும் ஆயுதங்களைப் பூஜித்த அமைப்பு. “ஆயுதத்தின் மூலம் அனைத்தும் அடையக்கூடியது” என்ற ஆதிக்க அரசியல் தந்திர உபாயம் கொண்டது. 

உள்இயக்க கட்டமைப்பில் ஜனநாயகம் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம், சமூகவிடுதலை மேலாண்மை இருக்கவில்லை. இருந்ததெல்லாம் அரச கூலிப்படைகளின் கட்டமைப்பை ஒத்த இராணுவக் கட்டமைப்பு. இது ஒரு விடுதலை இராணுவத்திற்கான கட்டமைப்பல்ல. 

சந்தேகங்கள் நிறைந்த, ஒருவரை ஒருவர் நம்பாத, ஒவ்வொருவரையும், தனியாகவும், கூட்டாகவும் மோப்பம் பிடிக்கின்ற மோப்பநாய் கட்டமைப்பு. ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு அதன் போராளிகளையே நம்பாது, கூலிப்படையாக கையாள்கின்ற முறை. 

இந்த போக்கில் ஆரம்பம் முதல் பல அகரீதியான முரண்பாடுகளை அது கொண்டிருந்தது. மட்டக்களப்பு மைக்கேல் முதல் மாத்தையா வரை போன்று, அடுத்து கருணா வரை ஆயுதத்தின் மூலம் ஆட்களை முடித்து விடுவதன் மூலம் பிரச்சினைகளை முடித்து விடுகின்ற பொல்பொட் மாதிரி. 

கருணாவிடம் அது பலிக்கவில்லை. கருணா முந்திக்கொண்டதால் தப்பினார். இல்லையேல் அவரைப் போட்ட இடத்தில் புல் அல்ல பெரிய வனமே வளர்ந்திருக்கும். 

புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் கூறுவது போன்று ‘கருணாவால் இப்போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது. அதனால்தான் இப்போராட்டம் தோல்வியடைந்தது’ என்பதெல்லாம் புலிகளின் வரலாற்று தவறுகளை மறைக்கும் முயற்சி. 

புலிகள் அமைப்பு விடுதலையின் பெயரில் மேற்கொண்ட சகல விடுதலை முரண்பாடுகளையும், செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி “அந்த இயக்கம் சரியாகத்தான் செயற்பட்டது கருணாதான் அதன் சிதைவுக்கு காரணம்” எனக்காட்டும் திட்டமிட்ட மேலாதிக்க கதைகட்டல். 

புலிகள் இயக்கத்தின் உள்கட்டமைப்பு பலவீனங்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருப்பித்து காட்டப்பட்ட வெளித்தோற்ற விளம்பர மாயையையும் கொண்டது. 

கருணா – பிரபாகரன் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தாலும் இது தோல்வியில் முடிகின்ற போராட்டம் தான் என்பதை இந்த மாஜாஜால வித்தைக்காரர் மறைக்கப் பார்க்கிறார்கள். 

கருணா பிரிந்து செல்லாமல் இருந்திருந்தால் புலிகளின் ஆயுட்காலம் சற்று நீடித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அந்த இயக்கத்தின் அரசியல் தற்கொலையை தவிர்த்திருக்க முடியாது.  

இதனால்தான் கருணாவின் பிரிவுதான் புலிகளை அழித்தது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று. ஆனால் சுமார் 6000 போராளிகளுடன் கருணா வெளியேறிய செயல் புலிகளின் அழிவை துரிதப்படுத்தியது அல்லது புலிகளின் ஆயுளைக் குறைத்தது என்பதே சரியானது. 

 புறரீதியான காரணிகள்: 

தேசிய, பிராந்திய, சர்வதேச நேச சக்திகளுடன் புலிகள் முரண்பட்டார்கள். 

அப்பாவி சிங்கள, முஸ்லீம், ஏன் ஒரு பகுதி தமிழர்களைக்கூட அவர்களால் போராட்டத்திற்கு ஆதரவான நேசசக்திகளாக அணைத்துக் கொள்ளமுடியவில்லை.  

இவர்களை எதிரிகளாக பகைத்துக்கொண்டார்கள். சிங்களவர்களை காசுக்கு வாங்கி அவர்களின் மூலம் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தினார்கள். 

புலிகள் விட்ட மற்றொரு தவறு தமிழ், முஸ்லீம், சிங்கள அரசியல் தலைமைத்துவங்களை அழித்தது. இதன்மூலம் ஜனநாயக ரீதியான மிதவாத அரசியல் தலைமைத்துவங்கள் அழிக்கப்பட்டன. 

இது சிங்கள அரசியலில் மிதவாத அரசியல் தலைமைத்துவங்கள் அழிக்கப்பட்டு கடும்போக்காளர்களுக்கு வழிதிறந்து விடப்பட்டது. இதன்மூலம் யுத்தம் தொடர்வதனூடாக வெறும் ஆயுத அரசியலை புலிகள் விரும்பினர். 

புலிகளின் தாக்குதல்களால் சிங்கள மக்கள் கடும்போக்காளர்களை தமது அரசியல் தலைமையாக தேர்வு செய்தனர். 

இது புலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் தங்களுக்கு தாங்களே புதைகுழி வெட்டுவதாக அமைந்தது. 

பிராந்தியத்திலும், மேற்குலகிலும் மேற்கொள்ளப்பட்ட எல்லை மீறிய பயங்கரவாதம் புலிகளை இலகுவாக பயங்கரவாத இயக்கமாக தடைசெய்வதற்கு வசதியாக இருந்தது. 

பிராந்திய, சர்வதேச சமாதான முயற்சிகள் அனைத்தையும் தமது சுய இலாப அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்தினார்கள். ஒரு கட்டத்திற்கு அப்பால் புலிகளுக்கு பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் நேசசக்திகள் இருக்கவில்லை.  

அனைவரும் எதிரிகளாக மாறி புலிகள் இருக்கும் வரைக்கும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை அடையமுடியாது என்ற முடிவே இறுதிக்கட்ட யுத்தத்தில் பிராந்தியமும், சர்வதேசமும் பார்வையாளர்களாக இருந்ததற்கு காரணம்.  

அதேவேளை இந்தச் சக்திகள் மறைமுகமாக யுத்தத்தின் பங்காளர்களாக இன்னொரு பக்கத்தில் இருந்தார்கள். எரிக் சொல்கைம் சொன்னது போன்று “புலிகளின் தோல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு முக்கிய காரணம்”. 

கிழக்கு போராளிகளின் வலிசுமந்த மகாவலி ! 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், கிழக்குப் பிராந்திய தளபதி கருணா அம்மானுக்குமான வெடிப்பு பலரும் அறிந்ததே. 

ஆனால் அது எப்போது ஆரம்பித்தது என்பது பலரும் அறியாத ஒன்று. 

எல்லோரும் அறிந்திருப்பது போன்று 2004 மார்ச்சில் இது ஏற்பட்டதல்ல. மாறாக 2002 யூலையில் கருணா அம்மான் பிரபாகரனிடம் “நீங்கள் வடக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் கிழக்கைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னதில் இருந்து வெடித்தது.  

ஆம்! தமிழ் ஈழத்தில் வடதமிழீழம், தென்தமிழீழம் என்ற இரு அலகுகள். வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்களைக் கொண்ட ஒற்றுமையில் வேற்றுமையையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், பல்லினத்தன்மையையும் அங்கிகரிக்கின்ற இரு இராணுவ, அரசியல் கட்டமைப்புக்கள். இதுதான் கருணாவின் ஆலோசனை. 

கிழக்குப் பிராந்தியத்தின் தனித்துவங்களை   முதன்மைப்படுத்திய சுயாதீனக் கட்டமைப்பு. ஆதாவது தமிழீழம் இரு சுயாதிக்க அரசியல் அலகுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். 

கருணா அம்மானின் இந்த ஆலோசனை பிரபாகரன் எதிர்பார்த்திராத ஒன்று மட்டுமல்ல அவரால் மட்டுமன்றி யாழ்.மேலாதிக்க சக்திகள் எதுவும், ஏன்? இன்றைய பாராளுமன்ற தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள்கூட இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை? என்று கேட்கும் காசி ஆனந்தனிடம்தான் யார் அந்த ஆண்டபரம்பரை?  கிழக்கார் எப்போது ஆண்டார்கள் என்று கேட்கவேண்டும். 

கருணா அம்மாவின் இந்தக் கருத்தை தொடர்ந்து வடக்கு “கிழக்கை” கண்காணிக்கத் தொடங்கியது. பொட்டம்மான் உட்பட, அவரின் நம்பிக்கைக்குரிய  நீலன் போன்ற முக்கிய புலனாய்வு பிரிவினர் கிழக்கில் அதிகம் பிரசன்னமாய் இருந்தனர். கிழக்குப் பிராந்திய தளபதி கருணா அம்மானுக்கு தெரியாமலே, சுயேட்சையாக முடிவுகளை எடுத்துச் செயற்பட்டனர். இதற்கு பிரபாகரன் பச்சை கொடி காட்டினார். 

இவர்கள் தேனகம் உள்ளிட்ட பல முகாம்களையும், கட்டளையிடும் கட்டமைப்பையும், செயற்பாட்டையும் அவதானித்தபின் கருணா அம்மான் இப்போதே, தான் விரும்பும் சுயாதிக்க கட்டமைப்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை வன்னிக்கு வழங்க, கருணா மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. 

இதனைக் கருணாவும் அறியாமல் இருக்கவில்லை. இருதரப்பும் சரியான தருணத்தை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மாத்தையாவுக்கு நடந்தது தான் தனக்கும் நடக்கும் என்பதை உணர்ந்திருந்த கருணா முந்திக்கொண்டார். இந்த நிகழ்வுதான் 2004 மார்ச்சில் நிகழ்ந்தது. வெளிச்சத்திற்கு வந்தது. 

2004 ஏப்ரல் ஈஸ்டர் காலத்தில் ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம் எழுதப்பட்டது. மாகாவலி கங்கையின் வெருகல் ஆற்றுப்படுக்கையில் கிழக்குப்போராளிகள் சிந்திய இரத்தமும் சதையும் வலியாக, மகாவலி சுமந்து வங்கக் கடலில் கலந்தது. 

மனித உரிமைகள் காப்பகம் பேசும் சாட்சியம்! 

வெருகல் – வாகரைப் பிராந்தியத்தில் வன்னிப்புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட புலிப் பயங்கரவாதம் பற்றி களத்தில் தகவல்களை சேகரித்த மனித உரிமைகள் காப்பகத்தின் அறிக்கை கூறும் சாட்சியம் இது. 

1. கிராமவாசியின் சாட்சியம்: “நான் விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு பத்து பதினைந்து சடலங்கள் கிடந்தன. அப்போது சண்டை நடந்து சுமார் 15 நாட்கள் இருக்கும். அவை அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசின. 13 வயது முதல் 20 வயது வரையானவர்களுடையவையாக இருக்கலாம். அவற்றில் 3 இளம் பெண்கள் உடையவை. அவை ஒரே இடத்தில் கிடக்கவில்லை. அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. துப்பாக்கிகள் எதுவும் இல்லை. வெற்றுத்தோட்டாக்கள் மட்டும் கிடந்தன.” 

2.  இடம்பெயர்ந்தவர் சாட்சியம்: “ஏப்ரல் 10ம் திகதி பயத்தினால் இடம்பெயர்ந்து, வாகரையில் இருந்து பனிச்சங்கேணி நோக்கி போனோம். போகும் போது 4, 5, சடலங்களைக் கண்டோம். அடுத்த நாள் திரும்பி வருகையில் 40, 50 சடலங்களைக் கண்டோம். பிரபாகரனின் ஆட்கள் சடலங்களை எரிக்கும் படி ஊர் ஆட்களைக் கேட்டார்கள். நீங்கள் சுட்டவர்களை நீங்களே எரியுங்கள் என்று ஊரார் சொன்னார்கள்” 

3. கதிரவெளிக்காரர் சாட்சியம்: “ஏப்ரல் 10ம் திகதி கதிரவெளி அருகில் 20 சடலங்கள் கிடந்தன. ஒரு அம்புலன்ஸ் சாரதியும் அம்புலன்ஸ் உள்ளே இறந்து கிடந்தார். நாங்கள் சாரதியின் உடலை எடுக்க முயற்சித்தோம் புலிகள் அனுமதிக்கவில்லை. மீண்டும் புலிகள் இல்லாத நேரம் பார்த்து ஏப்ரல் 11ம் திகதி போய், துர்நாற்றத்தின் மத்தியிலும் இரு சடலங்களை எடுத்து கிராம சுடலையில் எரித்தோம்.” 

4. வெருகல்வாசியின் சாட்சியம்: வெருகல் பிரதேசத்தில் பொதுமக்கள் புலிகளோடு முரண்பட்டார்கள். “நீங்கள் ஏன் எங்கள் பிள்ளைகளை கொல்கிறீர்கள். பிரபாகரனும், கருணாவும் தங்கள் பிரச்சினையை தாங்கள் பார்த்துக் கொள்ளட்டும். அதற்காக பிள்ளைகளைக் கொல்லவேண்டாம்” என்றார்கள். மக்கள் புலிகளின் பிக்கப் வாகனத்தை மறித்து கல்லெறிந்தார்கள். “நாங்கள் அவர்களின் பிக்கப் வாகனத்தை தொடர்ந்து முகாமுக்கு சென்றபோது வந்தால் சுடுவோம் என்று மிரட்டி ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தார்கள்.” 

5. மனித உரிமைகள் காப்பகம்: “இறந்தவர்கள் கருணாவின் ஆட்கள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டோம்”. “யார் கருணாவின் ஆட்கள், யார் வன்னிப்புலிகள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் இந்த ஊர்வாசிகள் என்று பதிலளித்தார்கள் அவர்கள்.” 

6. ஒரு பெண் போராளியின் சாட்சியம்: “வாகரையில் சண்டை நடக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் எமக்கு பயமாக இருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் முகாமில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு ஓடினோம். முதல் நாள் பகல் புறப்பட்ட நான் மறுநாள் காலை வீட்டுக்குப் போனேன். 

வீட்டில் ஆட்கள் கூடியிருந்தனர். எனது வயதான ஆச்சி இறந்து விட்டார் என்று நினைத்தேன். இல்லை அது எனக்கான இறுதிக்கிரியை. நான் இறந்துவிட்டேன் என்று எண்ணிய எனது பெற்றோரும் உறவினர்களும் சமய முறைப்படியான கிரியைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள்.” 

அறம் தவறிய அரசியலில் கொலைக்கு கொலை என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. 

வெருகல் ஆற்றில் சிந்திய  கண்ணீருக்கும் இரத்தத்திற்கும், நந்திக் கடலில் கலந்த கண்ணீருக்கும், இரத்தத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? 

வெருகல் ஆறே! நந்திக் கடலே!! நீ கூறு!!!  

கிழக்கின் விடுதலைக்காய் வீரச்சாவைத் தழுவிய அனைத்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் வீரவணக்கம் !