— வி.சிவலிங்கம் —
இந்திய அரசின் புதிய அணுகுமுறை
சமீபத்தில் இடம்பெற்ற ஜெனீவா பிரச்சனைகளின்போது இந்தியாவும், ஏனைய பல நாடுகளும் தெளிவான நிலைப்பாட்டிற்குச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் பல அமெரிக்க அல்லது பிரித்தானிய ஆதரவு நாடுகளல்ல. இந் நாடுகள் இலங்கையின் இன்றைய போக்கை நன்கு உணர்ந்து அதனைத் தடுக்கவே வாக்களித்தன. இந்தியப் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து செல்லும் இவ் வேளையில் ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி குறித்து இந்தியா அக்கறை கொள்வதில் பல அம்சங்கள் உள்ளன. இலங்கையில் உறுதியான, நிலையான ஜனநாயக அரசு நிலைத்துக் காணப்படுமானால் அதன் தேசிய எல்லை பாதுகாப்பாக அமையும் என இந்தியா எண்ணுவது நியாயமானதே. இதன் காரணமாகவே இலங்கை மக்கள் கௌரவத்தோடும், சுபீட்சத்தோடும், சமத்துவத்துடனும் வாழவேண்டும் எனக் கோருகின்றனர். இங்கு தமிழ் மக்கள் எனக் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டு ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலன்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் தேசிய இனப் பிரச்சனைக்கான அர்த்தமுள்ள தீர்வு13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது என இந்தியா கூறுகிறது. தேசிய ஐக்கியமும், ஆட்புல ஒருமைப்பாடும், அடையாளங்களும் அதன் மூலமே உறுதி செய்ய முடியும் எனக் கூறுகிறது. இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசு இந்திய பாதுகாப்புக் குறித்து அலட்சியமாக செயற்படுவதாகும். போர்க் காலத்தின் போது இந்திய உளவுத்துறைத் தகவல்களும், ஆயுத உதவிகளுமே விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க உதவின. ஆனால் இலங்கை அரசு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்திய போர் படிப்படியாகவே தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே திரும்பியது. அதன் காரணமாகவே பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் போரின் இறுதிக் காலத்தில் கொல்லப்பட்டார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் இவ்வளவு பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வேளையில் இந்தியா விலகியே இருந்தது. இந்திய சமாதானப் படையினர் இலங்கையிலிருந்த வேளையில் தமிழ் அரசியல் தலைமைகளும், சிங்கள அரசியல் தலைமைகளும் அவர்களின் பணியைக் காத்திரமான விதத்தில் ஆதரிக்கவில்லை. 13வது திருத்தத்தினை முழுமையாக அமல்படுத்துவதாக உலக நாடுகளுக்கும். இந்தியாவிற்கும் வாக்குறுதியளித்த இலங்கை படிப்படியாக அவற்றிலிருந்து பின்வாங்கியது.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணியிலிருந்து நோக்கும்போது இந்திய அணுகுமுறை தனது பூகோள அரசியல் நலன்களிலிருந்து மட்டும் பிரச்சனைகளை நோக்கிச் செல்வதன் பின்னணியை நாம் உய்த்து உணர முடியும்.
ஜனாதிபதி கோதபயவின் சிங்கள பௌத்த நிலைப்பாடு
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய இனப் பிரச்சனை குறித்து தெரிவிக்கையில் இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாக அமையும் எனவும், இப் பிரச்சனையில் இந்தியாவின் ஆலோசனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், அதன் அர்த்தம் இந்திய உறவுகள் தேவையற்றது என்ற அர்த்தமில்லை எனவும், இப் பிரச்சனை இலங்கையர்களால் தீர்க்கப்பட வேண்டுமே தவிர இந்தியாவால் அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் ஏமாற்றம்
கடந்த 2013ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் இந்தியா சென்று 13வது திருத்தம் படிப்படியாக பலமிழக்கப்பட்டு வரும் ஆபத்தான போக்கை எடுத்துரைத்திருந்தனர். இதன் பின்னர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை சென்று 13வது திருத்தம் தொடர்ந்து பலவீனப்படுத்தப்படும் தன்னிச்சையான போக்கைத் தம்மால் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். ஏனெனில் அந்த ஒப்பந்தம் இந்திய – இலங்கை என்ற இரு தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால் அதனை ஒரு தலைப்பட்சமாக வலுவிழக்கச் செய்வது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.
தமிழர் தரப்பின் அடிப்படைவாதம்
இத் திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தடையாகவுள்ள சக்திகள் மிகவும் பலமாக செயற்படுகின்றன. இதன் பின்னணியில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகள் தீவிரமாக உள்ளன. அதே போலவே தமிழர் தரப்பிலும் உள்ளனர்.
சிங்கள தரப்பில் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் தடையாக இருப்பது போலவே தமிழர் தரப்பிலும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தேசம் எனவும், அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டுமெனவும் வாதிடப்படுகிறது. சுயநிர்ணய உரிமை என்பது மனித உரிமை சார்ந்தது. ஒட்டு மொத்த இலங்கையில் மனித உரிமை பேணப்படாத நிலையில் நாட்டின் ஒரு பிரிவு மக்களின் மனித உரிமையைப் பேண முடியாது. அதே போலவே நாடு முழுவதும் மனித உரிமை என்ற அடிப்படை உரிமைக்கான வாய்ப்புகள் இல்லை எனில் நாடு முழுவதற்குமான சுயநிர்ணய உரிமையும் அங்கு இல்லை என்பதே அரத்தமாகும். இந் நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்பதும், ஒரு நாடு என்ற அடிப்படையில் அங்கு ஜனநாயகம் செயற்படவில்லை எனில் இரு தேசத்திலும் சுயநிர்ணய உரிமைக்கான வாய்ப்புகள் இல்லையென்றாகிறது. எனவே ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கைகள் வெறும் அடிப்படைவாதக் கருத்துகளே தவிர அவை மாற்றங்கள் எதனையும் தூண்டப் போவதில்லை. பதிலாக இவை ஏனைய முயற்சிகளுக்கு மிகவும் தடையாகவே அமைகின்றன. குறிப்பாக 13வது திருத்த அமுலாக்கம் தொடர்பான வாதங்களைத் தடுப்பனவாகவே உள்ளன.
சிங்கள, தமிழ் அடிப்படைவாத இணைவுகள்
தமிழர் தரப்பிலுள்ள சிறிய தொகையினராகிய பிரிவினர் சமூக முன்னேற்றத்திற்கு அல்லது அரசியல் தீர்வுகளுக்கு எவ்வாறு தடையாக உள்ளனரோ அது போலவே சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளும் ஒப்பீட்டு அடிப்படையில் சிறிய தொகையினராக இருப்பினும் மிகவும் சக்தி வாய்ந்த பிரிவினராக உள்ளதால் குறிப்பாக பணம், ஊடக சக்தி என்பவற்றில் ஆதிக்கம் செலுத்துவதால் சாமான்ய சிங்கள மக்களின் சிந்தனைகளில் அதிக தாக்கங்களைச் செலுத்துகின்றனர். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகால போர்க் காலத்திலும் அதன் பின்னரும் பயன் பெற்ற சிங்கள மக்களிலுள்ள மத்திய தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் தமது அதிகாரத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்காக சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ள சிறுபான்மையினர் நாட்டைப் பிளவுபடுத்தவும், பௌத்த மதத்தைக் களங்கப்படுத்தவும் சூழ்ச்சி செய்வதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
இப் பிரச்சாரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமாயின் நாட்டின் தேசிய சிறுபான்மையினரும் தமது பங்கை அதிகளவு செலுத்த வேண்டும். எனவேதான் பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை எட்டுதல் என்பது வெறுமனே சொல்லளவில் அமையாது செயலளவில் இருத்தல் அவசியமாகிறது.
சிங்கள தரப்பில் 13வது திருத்தத்திற்கு எதிராக தீவிரவாத சக்திகள் செயற்படுவது போலவே தமிழர் தரப்பிலும் 13வது திருத்தத்தில் அதிகாரங்கள் எதுவும் இல்லை எனவும், அதனைக் கோருவதில் அர்த்தமெதுவும் இல்லை எனவும் நிராகரிக்கின்றனர்.
தமிழ் அரசியல் என்பது பிரிவினை அரசியலிலிருந்து தன்னை இன்னமும் மீட்டெடுக்கவில்லை என்பதே இன்றுள்ள இறுக்கமான போக்கின் பின்னணியாக உள்ளது. இதன் காரணமாகவே 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிகவும் நெருக்கமாக ஐக்கிய இலங்கைக்குள் சென்றால் பிரிவினை அரசியல் சாத்தியமாகாது என்ற அச்சம் சில பிரிவினர் மத்தியில் உள்ளது.
13வது திருத்தம் தொடர்பாக சந்தேக அபிப்பிராயம் கொண்டுள்ள பிரிவினர் கூட்டமைப்பிற்குள் காத்திரமான அளவில் உள்ளதால் அங்கு அத்திருத்தம் தொடர்பான தெளிவான நிலைப்பாடு இல்லாமலுள்ளது. குறிப்பாக 13வது திருத்தத்தினை ஆரம்பமாக கொள்ளலாம் என்ற விவாதங்களின் உள் நோக்கம் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தற்போதைய ஏற்பாட்டினை ஆரம்பம் எனில் அதன் அடுத்த கட்டம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் தற்போதைய 13வது திருத்தம் என்பது ஆரம்பம் எனில் அதன் அடிப்படைகள் காத்திரமாக உள்ளன என்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். அவ்வாறெனில் எந்த அடிப்படையில் அதனை ஆரம்பமாகக் கொள்வது? என்பது பற்றிய விளக்கங்கள் அவசியமாகின்றன. இவை எதுவுமே முன்வைக்கப்படாத நிலை என்பது அதன் அமுலாக்கத்தினைத் தடுக்கும் நோக்கமுடையதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
புதிய அரசியல் நோக்கிய சில அடிப்படைகள்
இந்த விவாதங்களில் அடுத்த பரிமாணமாக நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியம் பெறுகின்றன. பிரிவினைவாத அரசியல் என்பது சாத்தியமான ஒன்றல்ல என்பதற்கு மக்களின் சனத் தொகைப் பெருக்கம் முக்கிய சுட்டியாகும். நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் பாரம்பரிய தமிழர், மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் பிரதான பிரிவினராகும். இம் மக்கள் தொகையில் மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் தொகையினரின் தொகை வடக்கு கிழக்கு தமிழர்களை விட அதிகரித்துச் செல்கிறது. இப் பிரிவினரின் அரசியலும் ஐக்கிய இலங்கையை நேசித்துச் செல்லும் பிரதான போக்கை அடையாளப்படுத்துகிறது. பாரம்பரிய தமிழர்களில் ஒரு சாராரைத் தவிர ஏனைய பெரும்பான்மைத் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை வலியுறுத்திச் செல்கின்றனர். அத்துடன் பாரம்பரிய தமிழ் மக்களில் கணிசமான பிரிவினர் தற்போது சிங்களப் பகுதிகளில் நிரந்தரமாக வாழ்வதால் புதிய நிலமைகளுக்கு ஏற்ப அரசியல் மாற்றம் தேவையாகிறது.
எனவே நாட்டின் பெரும்பான்மைத் தேசிய சிறுபான்மையினர் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு அடிப்படையில் வாழும் அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளதால் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்க அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வதே நியாயமானதும், சாத்தியமான அரசியலுமாகும்.
சந்தேக அரசியலின் பரிமாணங்கள்
கடந்தகால அனுபவங்கள், சந்தேகங்கள் போன்றன புதிய மாற்றங்களைத் தடுக்க முயற்சிக்கலாம் ஆனால் அவை புதிய மாற்றங்களுக்குத் தடையாக மாறக்கூடாது. அந்த அனுபவங்களும், சந்தேகங்களும் புதிய முயற்சிகளுக்கு உதவலாமே தவிர அவை சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக அமையக்கூடாது. குறிப்பாக அரசியல் உரிமைகளுக்கான செயற்பாடுகள் மனித வாழ்வின் முன்னேற்றத்தின் தடைகளாக இருக்க முடியாது. தடையற்ற அமைதியான மனித வாழ்வு மிக முக்கியமானது. அவை உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அரசியல் உரிமைகள் அர்த்தமுள்ளதாக அமையும். இவ்விரு சிக்கலான நிலமைகளுக்கு மத்தியில் சமநிலை காணப்படுதல் வேண்டும்.
இச் சமநிலையை எட்டுவதானால் காத்திரமான வெளிப்படையான விவாதங்கள் தேவையாகின்றன. புதிய அணுகுமுறைக்கான அல்லது புதிய பாதை தொடர்பான ஆழமான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பிரிவினை அரசியல் எண்ணங்களுடன் தொடர்ச்சியான நடைமுறைச் சாத்தியமான விவாதங்கள் கொள்கைளில் மட்டுமல்ல அணுகுமுறைகளிலும் மாற்றங்களைக் கோர வேண்டும்.
நவ தாராளவாத பொருளாதாரத்தின் விளைவுகள்
ஒரு புறத்தில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத ஆதிக்கம் காத்திரமாகச் செயற்பட்ட போதிலும் நாட்டின் பொருளாதார நிலமைகள் வேறு விதமாக மாற்றத்தைக் கோருகின்றன. நியாயமான விதத்தில் உற்பத்தியும், விநியோகமும் நடைபெற வேண்டுமெனில் அதற்கு ஏற்றவாறான அரசியல் கட்டமைப்புகள் அவசியமானவை. கடந்த 40 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட நவ தாராளவாத பொருளாதாரக் கட்டுமானம் நாட்டின் வளங்களை ஒரு சிறு பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளதாலும், அவர்களே குவிக்கப்பட்ட அதிகாரத்தில் இருப்பதாலும் வருமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல அதிகாரக் குவிப்பும், செல்வக் குவிப்பும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கோரிக்கைகளுடன் ராணுவமும் இணைந்து பயணப்படுவதில் பல இடர்கள் காணப்படுகின்றன. பொருளாதார செயற்பாடுகளின் இரகசியங்களைப் பாதுகாக்க முடியவில்லை. சமீபத்தில் அரசு சீனியின் விலையைக் குறைக்க எண்ணிய வேளையில் அத் தகவல் கசிந்து தனிப்பட்ட கம்பனி ஒன்று பல தொன் சீனியை உடனடியாக இறக்குமதி செய்து பல கோடி ருபாய்களைச் சுருட்டிக்கொண்டது. இதனால் அரசின் திறைசேரிக்கு அப் பணம் கிடைக்கவில்லை. இவ்வாறான குழு ஆதிக்கம் காரணமாக தேசிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அரச கட்டுமானத்தின் ஜனநாயகத் தன்மை குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவதோடு ராணுவ தலையீடுகளின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. அதிகாரக் குவிப்பு, சொத்துக் குவிப்பு, ராணுவ, பொலீஸ் தலையீடு போன்றன நாடு ஓர் ஏகபோக அதிகாரத்தை நோக்கிச் செல்வதை மக்களால் உணர முடிகிறது. பொருளாதார குழு ஆதிக்கம் நாட்டின் சகல பகுதிகளிலும் வெளிப்படுகிறது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியும் இருப்பதே மாற்றங்களை அண்மையில் காண முடியவில்லை.
ஜனநாயக கட்டுமான பலப்படுத்தல்
இந் நிலையில் தேசிய அளவிலான ஜனநாயக மாற்றங்களை நோக்கி மக்கள் தவிர்க்க முடியாமல் செல்ல முனைகின்றனர். ஏகபோக, சர்வாதிகார அரசியல் போக்கு என்பது சகல மக்களுக்கும் ஆபத்தானது என்பதை ஹிட்லரின் வரலாற்றிலிருந்து அறிய முடிந்தது. எனவே ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்துவதாயின் 13வது திருத்தம் தொடர்பான வியாக்கியானங்கள் பரந்த அளவில் தேசிய அளவில் அவசியமானவை. ஏனெனில் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் நாடு முழுவதும் செயற்படுகையில் அவற்றின் அதிகாரங்கள் விஸ்தரிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். சிங்கள தரப்பின் ஒரு பிரிவினர் 13வது திருத்தம் என்பது இந்தியாவின் திணிப்பால் ஏற்பட்ட ஒன்று எனக் கூறி விவாதிக்கலாம். ஆனால் மாகாண சபை செயற்பாடுகள் கடந்த 35 ஆண்டுகளாக நாடு முழுவதும் செயற்பட்ட நிலையில் கடந்த காலத்தைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது. ஜெனீவாத் தீர்மானங்களின் போதும் மைத்திரி – ரணில் அரசின் தவறுகளால் ஏற்பட்டது என்ற போலிக் காரணங்களைக் கூறியே இன்றைய அரசு போர்க் குற்றங்களிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. அரசு தரப்பினர் அல்லது அதிகார வர்க்கத்தினர் உண்மைக்கு மாறான போலிக் கவசங்களுக்குள் வாழ எண்ணுகின்றனர்.
பொருளாதார அடிப்படைகளை உள்ளடக்கிய அரசியல்
தமிழ் அரசியல் தற்போது ஏற்பட்டு வரும் சர்வதேச அனுகூலங்களை நன்கு பயன்படுத்துதல் அவசியமானது. இவை வெறுமனே 13வது திருத்தத்தை நோக்கியதாக அமையாமல் தேசத்தின் பொருளாதார மாற்றம் குறித்தும் பேசப்பட வேண்டும். பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சகவாழ்வு நடத்துவதானால் தேசிய பொருளாதாரம் என்பது சில குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கத்தில் செயற்படுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? தேசிய பொருளாதாரக் கட்டுமானம் குறித்து தமிழ் அரசியல் பேச வேண்டும். நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துச் செல்கையில் குறிப்பாக தற்போது அமுலிலுள்ள நவ தாராளவாத பொருளாதாரக் கட்டமைப்பு இன்று தேசிய அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இப் பொருளாதாரக் கட்டமைப்பே அதிகாரக் குவிப்பையும், செல்வக் குவிப்பையும், வருமான ஏற்றத்தாழ்வையும் உருவாக்க உதவியாக இருந்தது. எனவே புதிய பொருளாதாரக் கட்டமைப்பு என்ன? என்பது குறித்த விவாதங்கள் உள்ளடக்கப்படுவது தேவையாகிறது.
எனவே கடந்த கால நிலமைகளிலிருந்து விலகி புதிய சமுதாயத்தை நோக்கி நகர வேண்டுமெனில் முதலில் தேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படுவதைத் துரிதப்படுத்த வேண்டும். இம் மாற்றங்களுடன் இணைத்தே 13வது திருத்தம் அவதானிக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கள் பொருத்தமாக அமைகின்றன.
‘….. 13வது திருத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையின் நலன் சார்ந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அது உதவும். இப் பிராந்தியத்தின் நலன்களையும், அமைதியையும் நாம் விரும்புகிறோம். இலங்கையின் ஐக்கியம், ஸ்திரத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை வளர்க்க நாம் எண்ணுகிறோம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எமது முயற்சிகள் நீண்டகால நோக்கமுடையவை என்பதுடன் அவை சகல மக்களது நலன்களையும் உள்ளடக்கியதாகவும், இனங்களிடையே அமைதியை உருவாக்கவதாகவும் அமைய நாம் உற்சாகப்படுத்துகிறோம். அவை இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, கௌரவம் என்பன எட்டப்பட வேண்டும் என எண்ணுகிறோம். அவை இலங்கை அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட அர்த்தமுள்ள 13வது திருத்த அமுலாக்கலையும் உள்ளடக்கியதாகும்.’
மேற்குறித்த இந்திய அமைச்சரின் நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டுமெனில் 13வது திருத்தம் குறித்த புதிய நிலமைகளுக்கு ஏற்றவாறான புதிய விளக்கங்களுடன் தேசிய அளவிலான ஜனநாயக மாற்றங்களுடன் தமிழ் அரசியல் பயணிக்கத் தயாராக வேண்டும். இதன் மூலமே புதிய சமூகத்தை நிர்மாணிக்கும் பயணத்தில் இணைய முடியும்.
முற்றும்.

