சொல்லத் துணிந்தேன் – 66

சொல்லத் துணிந்தேன் – 66

     — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

23.03.2021 அன்று நிறைவேற்றப்பெற்றுள்ள ஜெனீவா தீர்மானத்தின் ஊடாக, 

ஃ இலங்கையின் பொறுப்புக்கூறல்- நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை மேம்படுத்தல் கடப்பாடுகள் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

ஃ இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் ஆவணப்படுத்திப் பாதுகாக்கவும் ஒரு தனியான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரமும் (ஆணை) அதற்கான வளங்களும் ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஃ இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பதினெட்டு மாத காலக்கெடு (2022 செப்டம்பர் வரை) வழங்கப்பட்டு ஆறு மாத கால இடைவெளிகளில் அதனை மீளாய்வு செய்வதற்கான அதிகாரமும் (ஆணை) ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஃ மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடாத்தி பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்திலுள்ள அதிகாரப் பகிர்வை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வலியுறுத்தல் சமிக்ஞையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்தால் 2012 இல் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய முதலாவது தீர்மானத்திற்கும் அதன் நீட்சியாக 2015 செப்டம்பரில் இலங்கையின் ‘நல்லாட்சி’ அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்துக்கும் பின் தொடர்ந்து இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்ட 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களுக்கும் தற்போதைய 46/1 தீர்மானத்துக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை.  

புதிய பிளாவில் பழைய கள்ளுத்தான் ஊற்றப்பட்டுள்ளது.  

எது எப்படியிருப்பினும் தீர்மானத்தின் பலாபலன்கள் இலங்கை அரசாங்கத்தின் அரசியல் விருப்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கமோ விருப்பம் இல்லாததொரு பெண்ணுக்குத் தாலி கட்டிய மனோநிலையில்தான் உள்ளது. 

2015 செப்டம்பரில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்திற்கிணங்க உண்மைகளைக் கண்டறிதல்-பொறுப்புக்கூறல்-பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்தற் கடப்பாடுகளை, அத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ‘நல்லாட்சி’ அரசாங்கமே நான்கு வருட காலமாக நிறைவேற்றாமல் காலம் தள்ளியதை அனுபவரீதியாக நோக்குகையில், இப்போது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் அதுவும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தற்போதைய இலங்கை அரசாங்கம் எத்தகைய பிரதிபலிப்புகளைக் காட்டப் போகிறதென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் தமிழர் தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் சில உள்ளன. 

ஃ சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் தற்போதைய இலங்கை அரசாங்கத்தைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்கு நாடுகள் பயன்படுத்தியுள்ளனவே தவிர இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தின் மீது கொண்ட கரிசனையால் அல்ல. ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து 2018 இல் தன்னை விலக்கிக் கொண்ட அமெரிக்கா தனது நோக்கத்தை ஐக்கிய இராச்சியத்தினூடாக (பிரித்தானியா) ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதில் இலங்கைத் தமிழர் விவகாரம் இரண்டாம் பட்சமே. 

ஃ இலங்கைத் தமிழர் விவகாரங்கள் சம்பந்தமாக எடுக்கப்படும் எந்த சர்வதேச மட்டத்திலான நகர்வுகளும் இந்தியாவை மீறி வெற்றி அளிப்பதற்கான சாத்தியமே இல்லை. எனவே இந்தியாவைக் குற்றம் சுமத்திக் கொண்டு – விமர்சித்துக் கொண்டு- சொட்டை சொல்லிக்கொண்டு – தவறுகளைக் கற்பித்துக் கொண்டு- பகைத்துக்கொண்டு – இந்தியா அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டுமென்று தமிழர் தரப்பு கோரிக்கை விடுப்பதும் எதிர்பார்ப்பதும் அரசியல் அறிவீனமாகும். இந்தியாவை ஓரம்கட்டிவிட்டு மேற்குலக நாடுகளை நம்பி தமிழர்கள் எதனையுமே அடையப் போவதில்லை. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவுடனான வழுவழுத்த உறவை விடுத்து வைரம் முற்றிய உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமே பலனளிக்கக் கூடியது. 

ஃ தந்திரோபாய அரசியல் செயற்பாடுகளினூடாகவும் இராஜதந்திர நகர்வுகளினூடாகவும் அதிகாரத்திலுள்ள இலங்கை அரசாங்கங்களின் மனதை மாற்றுவதன் மூலம்- வெல்லுவதன் மூலம்தான் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமே தவிர சர்வதேச நாடுகளை நம்பி இலங்கை அரசை ஆத்திரம் ஊட்டுவதால் அல்ல. சர்வதேசம் என்பது ஒரு மாய மான். 

ஃ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு தேசங்கள் ஒரு நாடு என்ற கோட்பாடும், சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டிக் கொள்கையும், இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுபடாத இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் கௌரவமான தீர்வு என்ற வழுவழுப்பான கோரிக்கையும் வெறுமனே கோஷங்களாகவும் கோரிக்கைகளாகவுமே இருந்து காலத்தை விழுங்கப் போகின்றன. இவைகள் வெறுமனே பட்டு வேட்டிக் கனவுகள்தான். இலங்கைத் தமிழர் தரப்பின் உடனடித் தேவை கோவணத்தைக் காப்பாற்றுவதே. இன்றைய தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் கள நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான-அறிவுபூர்வமான அரசியல் மார்க்கம் யாதெனில் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழான பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு திருப்திகரமான அதிகாரப் பகிர்வை நோக்கி நகர்வதற்கான அரசியல் வியூகத்தைத் தாமதமின்றி வகுப்பதாகும். 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்த போர்க் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பக்கச்சார்பற்ற விசாரணையொன்று (அது சர்வதேச விசாரணையாகவோ அன்றி உள்ளக விசாரணையாகவோ இருக்கலாம்) நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்பட்டு மேலும் இந்த யுத்தத்திற்கும் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணியான இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்படுவதன் மூலம் இக்குற்றங்கள் மீளநிகழாமை உறுதி செய்யப்பட வேண்டுமென்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இயற்கை நீதியின்பாற்பட்டதாகும். இதன் மூலமே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளே இவை. 

மேலே, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் இழப்பீடு என்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கான இழப்பீடு-கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வசதிகள்-இந்த யுத்தத்தோடு தொடர்புடைய காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்ட அல்லது விளக்கமறியல் மற்றும் தடுப்புக்காவலில் விசாரணையின்றிப் பல வருட காலம் சிறைவாசம் அனுபவிக்கும் அனைவரையும் ஓர் அரசியல் தீர்மானத்தின் மூலம் விடுதலை செய்து அத்தகையோருக்கும் புனர்வாழ்வளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகும். 

இக்குற்றங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கான அரசியல் நடவடிக்கை அல்லது அரசியல் காப்பீடு என்பது இனப் பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வாகும். குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் அரசியல் விருப்பத்துடன் இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல் செய்வதாகும். 

மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைச் சாத்தியமான-நியாயமான- நீதியின்பாற்பட்ட விடயங்களைத்தானும் செய்யாது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தபின் அதிகாரத்திலிருந்த (நல்லாட்சி அரசாங்கம் உட்பட) அத்தனை அரசாங்கங்களும் காலத்தை இழுத்தடித்ததே இலங்கை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். இதனாலேயே இந்த விவகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் எடுபடக் காரணமாகும். இந்த அரசாங்கங்களுக்கு ஒத்தாசையும் உதைகாலும் கொடுத்துக்கொண்டிருந்த சகல தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளும் இக்குற்றச்சாட்டில் பங்கெடுத்தேயாகவேண்டும். 

அதேவேளை இலங்கைத் தமிழர் தரப்பும் ‘இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை தீவிரப் படுத்தாமல் மேற்கூறப்பெற்ற நடைமுறைச் சாத்தியமான- நியாயமான-நீதியின் பாற்பட்ட கோரிக்கைகளை அதாவது நிலைமாறுகால நீதிக் கோரிக்கையை சர்வதேச அரங்கிலே இங்கிதமாக முன்வைத்திருந்தால் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் கூட (இந்தியா உட்பட) இக்கோரிக்கைகளை முழுமையாக ஆதரித்து நிற்கும் சூழலும் அப்படியானதொரு சூழலில் இலங்கை அரசாங்கத் தரப்பு அதனை அனுசரித்துப் போகும் நிலைமையும் ஏற்பட்டிருக்கக்கூடும். 

ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் ஏதோ குத்துச்சண்டைப் போட்டிக்கு போகும் இரு அணிகள் போல இலங்கைத் தமிழர் தரப்பும் இலங்கை அரசாங்கத் தரப்பும் ஜெனீவாக் களத்தில் மோதலில் குதித்தமையே இந்த விவகாரத்தைச் சிக்கலாக்கியுள்ளது.  

உண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இரு தரப்புக்குமே தோல்வி. இதில் தமிழர்தரப்பு சந்தோசப்படவும் இலங்கை அரசாங்கத் தரப்பு கோபம் கொள்வதற்கும் எதுவுமேயில்லை. இருதரப்பும் இதுவரை பேணி வந்த பகை முரண்பாடுகளைத் தவிர்த்து ‘நிலைமாறுகால நீதி’ச் செயற்பாடுகளை நட்பு முரண்பாடுகளோடு எவ்வாறு இரு தரப்பும் இணைந்து முன்னெடுக்கலாமென்று சிந்திப்பதே எதிர்காலத்தில் இருதரப்பு நலன்களுக்கும் முக்கியமானது. இதனால் மட்டுமே நல்லிணக்கத்தை கொண்டு வரலாம். இந்தச் செயற்பாட்டில் இந்தியா மத்தியஸ்த வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள முடியும். 

எப்போதும் அடிபட்டவனுக்கே வலிக்கும். அடித்தவனுக்கு வலிக்காது. இங்கே அடிபட்டது தமிழர் தரப்பு; அடித்தது இலங்கை அரசாங்கத் தரப்பு. சமாதானம் என்பது அடிபட்டவனுக்கே தேவை. அடித்தவனுக்கு அது இரண்டாம் பட்சமே. 

எனவே, இந்தக் கட்டத்தில் மத்தியஸ்த வகிபாகத்தை வகிப்பதற்கு இலங்கைத் தமிழர் தரப்பே முன்வந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுப்பதுதான் தமிழர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய இராஜதந்திர நகர்வுகளின் ஆரம்பப் புள்ளியாக இருக்கும். இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாக விளங்கும் இந்தியாவை மேலும் நெருங்குவதற்கான அரசியல் நகர்வுகளே இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு அவசியமானவை.