— வி.சிவலிங்கம் —
இன்று 13வது திருத்தம் பற்றிய விவாதங்கள் முன்னெப்போதையும் விட அதிகம் தேவைப்படுகின்றன. ஏனெனில் அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான உள்நாட்டு சூழலும், சர்வதேச சூழலும் கனிந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இலங்கையின் அரசுக் கட்டுமானம் படிப்படியாக ராணுவக் கலவையுடன் கூடிய சர்வாதிகார ஆட்சியாக மாற்றம் பெற்று வரும் நிலையில் நாடு பல முனைகளில் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது. உள்நாட்டில் தேசிய இனப் பிரச்சனை என்பதன் வடிவம் மாற்றமடைந்து அவ்வாறான ஓர் பிரச்சனை இல்லை எனவும், இவை தமிழ் இனவாதத்தின் தோற்றம் எனவும் விபரிக்கப்படுகிறது. அதே போலவே முஸ்லீம் மக்களின் பிரச்சனை என்பது ஓர் சிங்கள பௌத்த நாட்டில் வேற்று மதங்களுக்கான இடம் பற்றிய விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே இப் பிரச்சனைகள் படிப்படியாக சிங்கள பெரும்பான்மை வாதமாகவும், சிங்கள மக்கள் அனைவரும் பௌத்தர்கள் என்பதால் நாடு சிங்கள பௌத்த மக்களின் நாடாகவும் விளக்கப்படுகிறது.
இலங்கையின் அடையாளம்
இலங்கை என்பது பன்மைத்துவ, பல்லினங்கள், பன் மதங்கள் வாழும் ஜனநாயக நாடு என்ற அடையாளம் ஆட்சியாளர்களால் ( மக்களால் அல்ல) மறைத்துச் செல்லப்படுகிறது. இந் நிலையில் இலங்கைத் தேசத்தின் அடையாளம் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ் விவாதங்கள் வெறுமனே இலங்கைத் தேசத்தின் உள்ளே நடைபெறும் மாற்றங்கள் எனவும், இவை குறித்து அந்நியர் எவரும் தலையிட முடியாது என்ற வாதங்களும் உள்ளன. இவற்றை வெறுமனே அவ்வப்போது ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களின் விளக்கங்களோடு மட்டும் முடிவடைந்ததாக நாம் கொள்ள முடியாது. அங்கு ஓர் வரலாறு உண்டு. எனவே ஆட்சியாளர்கள் தமது விவாதங்களைப் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பதாக வாதிட முடியாது. ஓர் தொடர்ச்சியான வரலாற்றின் இடையில் இத்தகைய வாதங்கள் எழுவதால் வரலாற்றின் போக்கிலிருந்தே அதற்கான மாற்றங்கள் எழ வேண்டும். எனவே ஓர் ஆட்சியாளர்கள் தமது 5 வருட ஆட்சிக் காலத்தில் இலங்கையின் வரலாற்றினை தாம் எண்ணியவாறு விபரித்துச் செல்லலாம். அடுத்த 5 ஆண்டு காலத்தில் இன்னொரு ஆட்சியாளர் வேறு விதமாக வர்ணிக்கலாம். இவை நாட்டின் எதிர்காலத்தினை சூனிய நிலைக்கே எடுத்துச் செல்கின்றன.
ஜனநாயகத்தின் பலவீனங்களின் விளைவுகள்
இவ்வாறான தன்னிச்சையான போக்குகள் நாட்டில் ஜனநாயகம் பலவீனமாக இருக்கும்போதே எழுகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னணிகளை நாம் ஆராய்ந்தால் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயக விழுமியங்கள் பலவீனமடைந்த வேளைகளில்தான் பாசிசம், நாக்ஸிசம் போன்ற மனித நாகரீகத்திற்கு எதிரான சக்திகள் தோற்றம் பெற்றன. இந்த சக்திகள் எவ்வளவு வேகமாக வளர்ந்தனவோ அவ்வளவு வேகமாக அழிந்தன.
இந்த வரலாற்றுப் போக்கிலிருந்தே நாம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்க வேண்டும். இலங்கையின் தேசிய அரசியல் ஜனநாயக விரோதப் பாதையை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளின் அளவீடுகளே மாற்றத்தின் அளவீட்டினையும் தீர்மானிக்கிறது. தற்போதுள்ள நிலையில் தேசிய ஐக்கியம், பலமான ஜனநாயக கட்டுமானங்கள், சமத்துவம், நீதி, நியாயம், கௌரவம் என்பன பலப்படுத்தப்பட வேண்டியுள்ளன. தேசிய இனங்களிடையே இடைவெளி அதிகரித்து முரண்பாடுகளும் கூர்மை அடைந்து செல்லும் வேளை நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிப்பில் உள்ளது. இந் நிலையில் தேசிய அளவிலான அமைதியின்மை தோற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறான ஓர் சூழலையே ராணுவமும், பாசிச சக்திகளும் எதிர்பார்க்கின்றன. நாட்டின் அடிப்படைகள் ஆட்டம் காணும்போது மக்களும் காத்திரமான தலைவர் இல்லையே! என அங்கலாய்க்கின்றனர். அதனால் தேசிய அமைதியை ஏற்படுத்த வல்லவர் யார்? என்ற கேள்விக்கான பதில்களை மக்கள் தேட ஆரம்பிப்பார்கள். அவ்வாறான ஓர் ஆபத்தான சூழல் தற்போது இலங்கையில் ஏற்படுவதற்கான ஆரம்ப சமிக்ஞைகள் காணப்படுவதாகவே உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல, சர்வதேசமும் அவதானித்து வருகிறது.
இரண்டாம் உலக மகா யுத்தமும்,அனுபவங்களும்
மேற்குறித்தவாறு எமது அவதானங்களை வெளியிடும்போது இதனைக் கற்பனையாகவும் சிலர் கருத வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஜேர்மனியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அத்துடன் முதலாவது உலக மகா யுத்தத்தின் பாதிப்புகளுக்கு ஜேர்மனியே காரணம் எனக்கூறி போரின் தோல்வியின் பின்னர் பெருந்தொகையான தண்டனைப் பணத்தை ஜேர்மனி செலுத்த வேண்டியிருந்தது. உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியும், கடன் தொல்லைகளும் முதலாவது உலக மகா யுத்தின் பின்னர் ஜேர்மனியில் அமைந்திருந்த அரசினால் சமாளிக்க முடியவில்லை. அவ் வேளையில் ஜேர்மனியில் தேசிய அளவிலான சோசலிச சமூகக் கட்டுமானத்தை உருவாக்குவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது எனவும் தெரிவித்து வந்த அடோல்வ் ஹிட்லர் பொருத்தமான தலைவராகக் காணப்பட்டார். இவரின் செயற்பாடுகளை அவதானித்து வந்த இதர ஐரோப்பிய நாடுகள் அதனை உள்நாட்டுப் பிரச்சனையாகவே நோக்கினர். ஆனால் உள்நாட்டில் தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் என ஆரம்பித்து யூதர்கள் ஆயிரக் கணக்கில் கொலை செய்து குவிக்கப்பட்ட போதும் இந்த ஐரோப்பிய நாடுகள் மௌனமாகவே இருந்தன. ஈற்றில் ஹிட்லரின் படைகள் தனது அயல்நாடுகளின் மேல் படையெடுக்கும்போதுதான் அவர்கள் விழித்துக் கொண்டனர்.
அதே போலவே இலங்கையில் ஏற்கெனவே கூறியது போல எதுவும் நடக்காது. அது வெறும் கற்பனை எனக் கருதுபவர்கள் வரலாற்றின் போக்கிலிருந்து அனுபவங்களைப் பெற்று அவ்வாறான நிலமைகள் ஏற்படாது தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. எனவேதான் இலங்கை அரசுக் கட்டுமானத்தில் ஜனநாயக விழுமியங்கள் பலமாக, உறுதியாக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. இதன் மூலமே சிறுபான்மை சமூகங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
2005ம் ஆண்டின் அனுபவங்கள்
இதன் அடிப்படையிலேயே 13வது திருத்தம் பற்றிய விபரங்கள் நோக்கப்பட வேண்டும். இத் திருத்தத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. உதாரணமாக, போரின் இறுதிக் காலத்தில் அதாவது 2005ம் ஆண்டு காலத்தில் உள்நாட்டில் இடம்பெற்றிருந்த சிவில் போரினை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை இலங்கையிலும், உலக நாடுகளிலும் காணப்பட்டது. அவ்வேளையில் தேசிய பொருளாதாரமும் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து சென்றதால் ஒட்டு மொத்த தேசமும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் செல்லலாம் என பல நிபுணர்கள் எச்சரித்தனர். இப் பின்னணியில் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதோடு, அதற்கு அப்பாலும் செல்வதாக அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். போர் முடிவடைந்த பின்னர் 2013ம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தினார். இனவாத சக்திகள் மலிந்திருந்த அவரது அரசு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை வழங்கத் தயங்கியது. பொலீஸ் அதிகாரங்களை வழங்கினால் தம்மையும் கைது செய்யும் நிலமை ஏற்படலாம் என அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் அரசின் காலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இவர்கள் இருவரும் தேசிய அளவிலான பாரிய மாற்றங்களின் அவசியத்தைப் புரிந்திருந்தனர். இலங்கைத் தேசத்தைக் கட்டுவதில் ஏற்பட்டுள்ள தவறுகளை அவர்கள் அடையாளப்படுத்தினர். அதன் காரணமாகவே தேசிய நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து மாகாண சபைகளுக்கு அதிகார பரவலாக்கம் செய்யப்பட்டு அச் சபைகள் சுயாதீனமாக இயங்கச் செய்வதன் மூலம் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த இரு தலைவர்களும் சிந்தித்தது போல மகிந்த ராஜபக்ஸவினால் சிந்திக்க முடியவில்லை. அவரின் ஆதரவுத் தளம் போரின் பின்னர் மிகவும் மாற்றமடைந்திருந்தது. நாட்டில் பயங்கரவாதமே ஓர் பிரச்சனையாக இருந்ததாகவும், தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்று இல்லை எனவும் விடுதலைப்புலிகளை அழித்ததன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கருதினார்.
இந்திய தரப்பின் எண்ணங்கள்
உள்நாட்டின் தலைவர்கள் மத்தியில் இவ்வாறான அபிப்பிராய பேதங்கள் காணப்பட்ட வேளையில் இந்திய அனுபவங்கள் வேறு விதமாக அமைந்தன. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது 13வது திருத்தத்தினை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தினால் முரண்பாடுகள் தணிவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு என அவர்கள் கருதினர். ஆனால் இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது இப் 13வது திருத்த அமுலாக்கத்திற்கு தமிழர் தரப்பினர் உதவுவார்களா? என்பதாகும். ஏனெனில் தமிழர் தரப்பினர் 13வது திருத்த அமுலாக்கத்தில் கரிசனை செலுத்துவதை விட அதனை சமஷ்டி அரசியல் தீர்வாக மாற்றுவதில் அல்லது வர்ணிப்பதிலேயே அவர்களது ஆர்வம் காணப்படுகிறது. அத்துடன் தாம் பல தியாகங்களை மேற்கொண்டு ஏற்படுத்திய வாய்ப்புகளை இந்தியா தட்டிப் பறித்துச் செல்வதாக விடுதலைப்புலிகள் கருதினர்.
இப் 13வது திருத்தத்தினை அரசியல் யாப்பில் அதுவும் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் யாப்பில் சமஷ்டி அரசியல் கோட்பாடுகளின் அடிப்படைகளை உள்ளடக்கியதான அத் திருத்தம் இணைக்கப்பட்டிருப்பது அதுவும் அப்போதிருந்த இலங்கையின் மிகவும் குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் மிகவும் சிக்கல் நிறைந்திருந்தமை கவனத்திற்குரியது. சிங்கள பெருந் தேசிய அரசியல் கோட்பாடுகளில் அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டதான அதிகாரக் கட்டமைப்பையே வற்புறுத்தினர். அதன் மூலமே இலங்கையை சிங்கள தேசமாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறான இறுக்கமான வரலாற்றின் பின்னணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வரலாற்றுத் தாயகங்கள் என ஏற்றுக்கொள்ள வைத்தது என்பது மிகவும் கவனத்திற்குரிய முக்கிய அம்சமாகும். இவ்வாறான சாதகமான அரசியல் சூழலை சாதாரண வழிகளில் ஏற்படுத்தியிருக்க முடியாது. அவ்வாறான சமாதானச் சூழலை அல்லது தீர்வை அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்பார்க்க முடியவில்லை. எனவே 13வது திருத்தத்தின் வரலாற்றுத் தேவையை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியும், அதிகார பகிர்வும்
நாம் இதனை அரசியல் யாப்பிலிருந்து அவதானிப்பதானால் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் வகையிலும், தனி ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதாகவும் உடைய யாப்பில் சமஷ்டித் தன்மையுள்ள அதிகார பகிர்வினை உள்ளடக்கிய மாகாணசபை உருவாக்கம் என்பது அதற்கே உரித்தான தடைகளைக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை 1990ம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 17 மாத கால ஆயுளையே கொண்டிருந்தது. இச் சபைக்கு காத்திரமான நிதி ஆதாரம் வழங்கப்படவில்லை. தமிழர் தரப்பில் போதுமான உற்சாகம் காணப்படவில்லை. சிங்கள தரப்பினர் இந்த ஏற்பாடு தம்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவே எண்ணினர். இதன் காரணமாக படிப்படியாக ‘தேசியக் கொள்கை’ என்ற பெயரில் விவசாயம், போக்குவரத்து, கல்வி போன்றன மறுபடியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றன. இந்த மாற்றங்களை நாம் அவதானிக்கையில் அதிகார பகிர்வுக்குப் (devolution) பதிலாக அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதையே (decentralisation) அரசு முக்கியப்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை மாற்றங்கள்
இதுவரை ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பில் 13வது திருத்த அமுலாக்கலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பார்த்தோம். இங்கு எமது விவாதம் என்னவெனில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட்டமைப்பினர் தமது அணுகுமுறைகளையும், கொள்கைகளையும் மாற்றியதாக அறிவித்தனர். அதாவது பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு என்ற சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அணுகப் போவதாகத் தெரிவித்தனர். அவ்வாறாயின் அவ்வாறான அணுகுமுறை இரண்டு பிரதான அம்சங்கள் குறித்து தெளிவான நீண்டகால பாதையைத் தெரிவிக்க வேண்டும். அதாவது பிளவுபடாத ஐக்கிய இலங்கையின் ஆட்சி வடிவம் என்பது அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட தற்போது நிலவும் ஜனாதிபதி ஆட்சி முறையிலானதா? அல்லது 1977ம் ஆண்டிற்கு முன்னர் நிலவிய பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் அரசியல் யாப்பு ஆட்சி முறையிலானதா? என்பதாகும். தமிழ் அரசியல் பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டப் போவதாக அறிவித்த பின்னர் அரசாங்கங்களை விமர்ச்சிப்தை விட அதிகாரத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை நோக்கித் திரும்ப வேண்டும்.
அரசியல் தந்திரோபாயங்கள்
இலங்கையில் அமையும் அரசாங்கத்தில் பங்குதாரியாக மாற்றமடைவதன் மூலமே வலிமையான ஜனநாயகக் கட்டுமானத்தையும், அதில் 13வது திருத்த முழுமையான அமுலாக்கலையும் காண முடியும். எனவே தேசிய அரச கட்டுமானத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்ட குறைந்தபட்ச நிபந்தனைகளை உருவாக்க வேண்டும். அந்த நிபந்தனைகள் என்பன ஒரு புறத்தில் ஐக்கிய இலங்கையை வலியுறுத்துவதாகவும், மறு புறத்தில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்த அமுலாக்கலையும் கோர முடியும். வெறுமனே 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என வெறும் வாயை மெல்ல முடியுமே தவிர மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. நாட்டில் காணப்படும் இனவாத அரசியல் விரைவில் மறையப் போவதில்லை. பதிலாக அதன் தீவிரப் போக்கைத் தணிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை மாற்று சக்திகளுடன் இணைந்து தோற்றுவிக்க வேண்டும். இங்கு விட்டுக் கொடுப்புகள் அவசியம். அதற்கான வலிமையான, காத்திரமான, இலட்சிய நோக்குள்ள அரசியல் தலைமைகள் இரு தரப்பிலும் உருவாக வேண்டும். அதற்கான வாய்ப்பான சூழல் தோற்றம் பெறுவதாகவே எண்ணுகிறோம்.
கூட்டமைப்பினரின் குழப்பமான நிலைப்பாடுகள்
ஒருவேளை தற்போது நிலவும் பாராளுமன்றம், ஜனாதிபதி என்ற இரண்டு அதிகார மையங்களோடு இயங்கும் அரசுக் கட்டுமானம் எனில் இரண்டு அதிகார மையங்களையும் கட்டுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவுமான கட்டுமானம் என்பது பலமான சுயாதீன நீதித்துறையா? என்பதாகும். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் ரணில் அரசிற்கு அளித்த ஆதரவை திடீரென விலக்கியதன் மூலம் மகிந்த ராஜபக்ஸ 52 நாட்கள் பிரதமாராக செயற்பட வழியேற்பட்டது. இப் பிரச்சனை நீதிமன்றத்திற்குச் சென்ற வேளையில் கூட்டமைப்பினர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறியே ரணில் அரசிற்கு ஆதரவளித்தனர். எனவே நாட்டின் ஜனநாயகம் என்பதற்கான முக்கிய அடையாளப்படுத்தல்கள் தேவையாகிறது. இங்குள்ள முக்கிய கேள்வி என்னவெனில் ஜனநாயகம் என்பது ஆட்சியைக் காப்பாற்றுவதா? அல்லது ஜனநாயகக் கட்டுமானத்தைப் பாதுகாப்பதா? என்பதாகும்.
ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண மீறல்கள்
அரசியல் யாப்பின் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி, யாப்பின் பிரகாரம் ஆட்சியை நடத்துவதாகவே ஜனாதிபதியின் சத்தியப் பிரமாணம் கூறுகிறது. எனவே அரசியல் யாப்பின் 13வது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வேறு விதத்தில் செயற்படவோ அல்லது விளக்கமளிக்கவோ முடியாது. அவர் 13வது திருத்தத்தினை அமுல்படுத்தத் தவறினால் நீதிமன்றம் செல்வதே அடுத்த செயற்பாடாக அமைய முடியும். இதனை உள்நாட்டில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் மேற்கொள்ள முடியும். ஏனெனில் தனது நாட்டின் அரசியல் யாப்பினைப் பின்பற்றாத ஒரு அரசுடன் இன்னொரு அரசு வர்த்தக ஒப்பந்தத்தை எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்கிறது? என்ற கேள்வி எழுகிறது. உதாரணமாக, இலங்கையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட ஒருவர் மீது எந்த நாட்டிலும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை உள்நாட்டுப் பிரச்சனை எனக் கொள்ள முடியாது எனவும் சர்வதேச சட்டம் கூறுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் சர்வதேச அளவில் ஒரே உரிமை உள்ளவன் என்பதால் அவன் எங்கு வாழ்ந்தாலும் அவரது உரிமை பறிக்கப்படுமாயின் மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டில் அதாவது அது சர்வதேச குற்றம் என்ற அடிப்படையில் வழக்குத் தொடர முடியும். சர்வதேச சட்டங்கள் பாரிய அளவில் மாற்றமடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் தரப்பினர் பிளவுபடுத்தப்படாத, ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து செயற்படுவதாக மிகவும் பகிரங்கமாகத் தெரிவித்த நிலையில் தமிழ் மக்களைப் பிரிவினைவாதிகள் என சில அரசியல் கட்சிகள் அழைப்பதன் மூலம் பிரிவினை ஏற்படப் போவதில்லை. அதே போல ஒரு நாட்டின் மக்களின் சுயநிர்ணய உரிமை மீறப்படுவதும் மனித உரிமை மீறலாகும். எனவே நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, ஐக்கியம், தேசிய பாதுகாப்பு, ஜனநாயக செயற்பாடுகள் என்பவற்றில் தெளிவான மாற்றங்களுடன் தேசிய இனப் பிரச்சனை கையாளப்பட வேண்டும்.
(தொடரும்)

