என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

  — கருணாகரன் — 

தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்? 

தற்போதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள் (முக்கியமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) செயற்பாட்டு அரசியலைக் கொண்டிருக்காதவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உட்பட விடுதலை இயக்கங்கள் அத்தனையும் செயற்பாட்டு அரசியலையே பிரதானமாகக் கொண்டவை. அதனால்தான் அவற்றினால் தமிழ்ச்சமூகத்திலும் தமிழ் அரசியற் பரப்பிலும் மாற்றங்களைச் செய்ய முடிந்தது. தற்போதுள்ள மாகாணசபை முறைமை கூட இயக்கங்கள் முன்னெடுத்த செயற்பாட்டு அரசியலின் விளைவுகளில் ஒன்றாகும்.  

ஆனால் இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள் அப்படியானவையல்ல. அவை செயற்பாட்டு அரசியலுக்குப் போகாதவை. மட்டுமல்ல, போகவே முடியாதவை. அவற்றின் அரசியற் பண்பும் ஒழுக்கமும் அப்படியானதே. அவற்றின் எந்தத்தலைவருக்கும் அப்படியானதொரு செயற்பாட்டுப் பழக்கமும் நடைமுறையும் இல்லை.  

மாவை சேனாதிராஜா, சம்மந்தன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் என ஒவ்வொருவரையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்கலாம். இயக்க அரசியற் பாரம்பரியத்திலிருந்து (செயற்பாட்டு அரசியலில் இருந்து) வந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரும் புளொட்டும் கூட இன்று செயற்பாட்டு அரசியலுக்கு வெகு தொலைவிலேயே நிற்கின்றன. இதுவே இவற்றின் பெருந்தோல்வியாகும். இவை தேர்தல் வெற்றிகளின் மூலமாகத் தங்களைத் தக்க வைத்திருக்கின்றனவே தவிர, மக்கள் அரசியலில் வெற்றியடைந்தவை அல்ல. தேர்தல் வெற்றியில் கூட இவற்றின் இடம் இப்போது கேள்விக்குள்ளாகியே உள்ளது.  

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன் நடந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் இவற்றின் இறங்குமுகம் தெளிவாகியது.  

இந்தத் தலைவர்களை விட எதிர்நிலையில் நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) போன்றோர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தனர். இது செயற்பாட்டு அரசியலின் பெறுபேறாகும். தமிழ்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இந்தத் தலைவர்களுடன் உடன்பாடின்மை இருந்தாலும் செயற்பாட்டு ரீதியாக மக்களுக்கிருக்கும் நம்பிக்கையும் அதன் தேவைசார்ந்த அடையாளமுமே இவர்களுக்கான ஆதரவாகும். 

ஆக மொத்தத்தில் செயற்பாடின்மையே தமிழ்த்தேசிய அரசியலாக உள்ளது. இதை மேலும் நாம் விரித்து ஆராயலாம். அதைச் செய்வது அவசியமானது. 

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப்போல புலிகளின் நீட்சியாகவோ நிழலாகவோ தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்தக் கட்சிகள், புலிகள் முன்னெடுத்த எந்தவிதமானஅரசியல் பிரதிபலிப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டோம். அரச எதிர்ப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதையும் இவை பதிலாகக் காட்ட முற்படலாம். அது ஒன்றும் புதியதல்ல. 1950 களிலிருந்தே தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் போன்றவையும் பின்னர் இவற்றின் கூட்டான தமிழர் விடுலைக்கூட்டணியும் முன்னெடுத்த வாய்ப்பேச்சு அரசியலே இதுவாகும். இதையே பின்னர் வந்த செயற்பாட்டு அரசியலாளர்களான இயக்கத்தினர் வெட்டிப்பேச்சு அரசியல், முழக்க அரசியல், மோசடி அரசியல் என்று நிராகரித்தனர். நிராகரித்தது மட்டுமல்ல, இந்த அரசியலை முன்னெடுத்தோரைத் தண்டிக்கவும் செய்தனர். ஆலாலசுந்தரம், கனகரத்தினம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சித்தார்த்தனின் தந்தையார் வி. தர்மலிங்கம் போன்றோர் உயிரிழந்தது இந்தக் காரணத்தினாலேயே. 

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு இப்பொழுது மறுபடியும் அதே அரசியல்தான் வழிமுறைப்படுத்தப்படுகிறது என்றால், இதன் அர்த்தம் என்ன? 

இது தோற்றுப்போன – நடைமுறைக்கு உதவாத – அரசியல் என்று வரலாறு நிரூபித்திருக்கிறது. அதுவும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே. அன்றே கழித்துக் குப்பைக் கூடைக்குள் போடப்பட்ட அரசியலைத் தூக்கி மேசையில் அலங்கரித்து வைப்பது என்றால் தமிழ்ச்சமூகத்தின் இயலா நிலையையும் தமிழ் அரசியலின் வெறுமையையும் எப்படிச் சொல்வது?அதுவும் இவ்வளவு பெரிய – நீண்ட போராட்டத்தை நடத்திய பின்பு. இவ்வளவு இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த பிறகு. இவ்வளவு காலம் கடந்த பிறகு. 

இதற்குள்ளே நாம் பெற்றதென்ன? கற்றதென்ன? என்ற அடிப்படை அறிவைக் கூட தமிழ் மக்களும் தமிழ்த்தலைமைகளும் தமிழ்க்கட்சிகளும் கணக்கிற் கொள்ளாமல் விடுவதேன்? 

குறிப்பாக கடந்த கால அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளைப் பற்றிய மதிப்பீட்டையும் ஆய்வையும் நேர்மையான முறையில் செய்யாமல் தவிர்ப்பதேன்? இந்தத் தயக்கத்தை தொடர்வதேன்? 

கடந்த கால அரசியலில் மிக மோசமாகத் தலைவிரித்து நின்றது ஜனநாயக வெறுமையும் ஆதிக்கப்போட்டியுமாகும். இயக்கங்கள் தமக்கிடையிலும் தமக்குள்ளும் மட்டுமல்ல,  மக்களுக்கும் தமக்கும் இடையிலும் கூட ஜனநாயகத்தைப் பேணவில்லை. இதுவே  செய்யப்பட்ட அத்தனை தியாகங்களையும் மேற்கொள்ளப்பட்ட அத்தனை போராட்டப் பெறுமதிகளையும் இல்லாதொழித்தது. இருந்தபோதும் இதற்குள் ஏற்பட்டிருந்த சமூக முன்னேற்றங்கள், பால் சமத்துவம் அல்லது பெண்களுக்கான இடம், சாதியப் பாகுபாடற்ற நிலை போன்றவை குறிப்பிடத்தக்கன. இவற்றோடு சமூகப் பாதுகாப்பு, இயற்கை வளப்பேணுகை, ஊழலற்ற நிர்வாகம் போன்றவையும் முக்கியமானவையாகும். 

ஆனால், இவை கூட இன்று இல்லாது போயுள்ளனவே. இன்றைய தமிழ்த்தேசியவாத அரசியலில் ஜனநாயகம் கட்சிகளுக்குள்ளும் இல்லை. சமூக வெளியிலும் இல்லை. அதைப்போல சமூக நீதியும் சமத்துவமும் பால்நிலையிலும் இல்லை. சமூக வெளியிலும் இல்லை. இதனால் பெண் ஒடுக்குமுறையும் சாதியமும் மறுபடியும் மேற்கிளம்பியுள்ளன. பிரதேசவாதம் தலையெடுத்துள்ளது. தேர்தலின்போது சாதிபார்த்து, ஊர் அல்லது பிரதேசம் பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, வாக்குச் சேகரிப்பது, வாக்களிப்பது எல்லாம் நடக்கிறது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் கூட சாதியும் பிரதேசமும் பார்க்கப்படுகிறது. 

இதெல்லாம் விடுதலை அரசியலுக்கு ஏற்றவையா? 

இந்தக் கேள்வி ஏனெனில் தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ் மக்களுக்கான விடுதலை அரசியலாகவே காண்பிக்கப்படுகிறது. அப்படிக் காண்பிக்கப்படும் அரசியல் உண்மையான விடுதலை அரசியலுக்குரிய அடிப்படைகளைக் கொண்டுள்ளதா?அதற்கான பாதையில் செல்கிறதா? அதற்குரிய பண்புடன் உள்ளதா? 

விடுதலை அரசியலுக்குச் சில முக்கியமான பண்புகள் உண்டு. 

1. அது மக்கள் நலனையும் அவர்களுடைய பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது. 

2. ஜனநாயக உள்ளடக்கத்தைப் பேணுவது. 

3. விஞ்ஞான பூர்வமானது. அதாவது அறிவு பூர்வமானது. எதையும் பகுத்தாராய்ந்து முன்னகர்வது. அதை உணர்ச்சிகரமாக அணுகவே கூடாது. அப்படி அணுகினால் அது பேரழிவிலேயே கொண்டு போய் விடும். 

4. முக்கியமானதும் தவிர்க்கவே முடியாததும் செயற்பாட்டு ரீதியான அரசியலை முன்னெடுப்பது. சொல்வதை விடவும் செய்வதே முக்கியம். கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அடிப்படையான விடயங்களில் பலமான நிலையில் மக்களை வைத்திருக்கவேண்டும். விடுதலை அரசியலுக்கு இது மிகமிக அவசியமானது. 

5. சமூகப் பாதுகாப்பும் சமூக நீதியும் சமத்துவமும். 

6. பால் வேறுபாடுகளற்ற நிலையைப் பின்பற்றுவது. பெண்களின் ஆற்றலுக்கும் உரிமைக்கும் பொறுப்பளித்தல். 

7. இயற்கை வளங்களைப் பேணுவதும் அவற்றை மேம்படுத்துவதும் சுதேசத் தன்மையுடையதும். 

8. சோரம்போகாதிருத்தல். எந்த மேற்சக்திகளிடத்திலும் குறுகிய நலனுக்காக அடிப்படையான இலக்கையும் கொள்கையையும் விட்டுக் கொடாதிருத்தல். 

9. புதிய தலைமுறையினருக்கான இடத்தை உரிய வகையில் அளித்தல். 

10. பால் வேறுபாடுகளற்ற நிலையைப் பின்பற்றுவது. பெண்களின் ஆற்றலுக்கும் உரிமைக்கும் பொறுப்பளித்தல். 

இவற்றில் எதையேனும் இந்தத் தேசியவாதக் கட்சிகளும் தலைமைகளும் கொண்டுள்ளனவா? அப்படியென்றால் அவை எவை என்று யாராவது சொல்லுங்கள்? 

இதைக் குறித்துக் கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்பது தவறா? அப்படிக் கேட்டால் அதை அரசியல் மாண்பின் அடிப்படையில் ஏற்றுப் பரிசீலிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் பதிலாக அவதூறுகளை வாரி இறைப்பது ஏன்? அவ்வாறு கேள்வி எழுப்புவோரையும் விளக்கங்களைக் கேட்போரையும் எதிரிகளாகப் பார்ப்பதும் துரோகிகளாகச் சித்திரிப்பதும் ஏன்? இப்படிச் செய்து தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து ஒதுக்க முற்படுவது எந்த வகையில் நியாயம்? 

இதனால்தான் இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளையிட்டு நாம் எச்சரிக்கை அடைய வேண்டியுள்ளது. அவற்றைப் பொருட்படுத்துவது அவசியமில்லை என்று கருதவேண்டியுள்ளது. இவை நடிப்புச் சுதேசிகள். போலி டப்பாக்கள். விடுதலைக்கு எதிரானவை. மக்கள் விரோதமானவை. இப்படியான கட்சிகளையும் தலைமைகளையும் எப்படி ஏற்றுக் கொள்வது? 

(தொடரும்)