— அ. தேவதாசன் —
என்னோடு அறையில் ஒன்றாக தங்கி ஒன்றாக உணவருந்தி இருந்த பல நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. சிலர் மட்டும் ஒரு குடும்பம் போலத்தொடர்கிறோம். இதன் பின்னணியிலும் சாதியே ஒட்டி இருக்கிறது. நான் பிரான்சுக்கு வரமுன்னர் இருந்த நட்புக்களில் சிலரே இன்றுவரை எனது நன்மை தீமைமைகளில் ஒன்றறக் கலக்கும் உறவாக தொடர்கிறார்கள் .
பிரான்சில் தமிழ் ஈழ விடுதலைப்பேரவை எனும் அமைப்பில் 1983ல் அண்ணன் காசி. ஊடாக என்னை இணைத்துக்கொண்டேன். பாலகிருஷ்ணன், சபாலிங்கம், உமாகாந்தன், கொம்மினிஸ் பாலா ஆகியோரது நட்பு அங்கிருந்தே உருவானது. பேரவையால் வெளியிடப்பட்டு வந்த தமிழ் முரசு பத்திரிகை ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவும் பின்னர் தட்டச்சு பிரதியாகவும் வெளியானது. எனக்கு ஓரளவு ஓவியம் வரையத் தெரிந்த காரணத்தால் அட்டைப்படம் வரைதல், கட்டுரைகளுக்கான தலைப்புகள் எழுதுதல் போன்ற வேலைகள் ஊடாக சங்க நிர்வாக சபையில் நானும் ஒருவனானேன். அச்சங்க நிர்வாகம் சாதிய ரீதியான பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டதை அறிவேன். அவர்களது வீட்டுக்குள் எப்படி இருந்தார்கள் என்பதை நானறியேன். சமூகக் கட்டமைப்பு அவர்களை மட்டும் விட்டுவைக்குமா?
கருத்தோவியங்கள் பக்கம் சிந்திக்க வைத்ததில் தமிழ் முரசுக்கு முக்கிய பங்குண்டு. பாலஸ்தீன விடுதலைக் கருத்தோவியங்கள் போன்றவற்றை சேகரித்து தரும் சபாலிங்கம் மிகப்பெரிய உற்சாக ஊட்டியாக இருந்தார். உமாகாந்தன் நெருங்கிய நண்பன் ஆனான். நேரத்தை மதிக்கத்தெரியாத சமூகத்தில் நேரமும், நிர்வாகமும் மனித சக்திக்கு அவசியம் என்பதை செயலில் கற்பித்தவர் பாலகிருஷ்ணன். சாதி மதம் அற்ற சமத்துவ ஈழம் அமைய வேண்டும் என்பதை பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தனர்.
இதனாலேயே பின்னாளில் eprlf இயக்கத்திற்கு பேரவை சார்பெடுக்கக் கூடிய சூழல் உருவானது. அது சாதாரணமாக நடந்து விட்ட காரியமல்ல.
பேரவை ஆரம்பித்த காலத்தில் இருந்ததை விட 1983க்குப் பின்னர் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் மிக வேகமாக வளர்ந்தன. அதன் தாக்கம் பேரவையையும் தாக்கியது. பிரான்சில் வாழும் தமிழர்களில் அதிகமானோர் அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு பேரவை இயங்கியது. மாதம் ஐநூறு புத்தகங்கள் விநியோகம் செய்தோம். அதில் சில பக்கங்கள் பிரெஞ்சு மொழியிலும் தகவல்கள், செய்திகள் எழுதபட்டிருந்தன.
நாம் பேரவை சார்பில் இலங்கை இனப்பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து மக்களை சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திற்கு சார்பு என்கிற கேள்விகள் தொடர்ச்சியாக எழ ஆரம்பித்தன. இதனால் எமது அமைப்பு ஏதோ ஒரு இயக்கத்திற்கு சார்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன தனிநபர் இயக்கங்களாக கருதப்பட்டு பேரவையினால் உடனேயே நிராகரிக்கப்பட்டன. மீதியாக இருந்த EROS, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களில் எது என்பதே விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் EPRLF கருத்தியல் ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் பேரவையின் கருத்தோடு ஒன்றிப்போய் உள்ளதால் EPRLF அமைப்புக்கு சார்பெடுப்பது என்பதே தீர்மானமாகியது.
அங்கேதான் மாற்றுக்கருத்து, ஜனநாயகம், சர்வதேசியம் போன்ற பல விடயங்களை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன், பல புதிய நண்பர்களும் கிடைக்கக்பெற்றனர். பேரவை ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்கு சார்பெடுத்தபோது தோழர் புஷ்பராஜா அவர்கள் கட்சியின் மத்திய குழுவால் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். பின்னாளில் நாங்கள் உறவினரானோம். இவரோடு அசுரா, கலாமோகன், அருந்ததி போன்ற பலர் அடங்குவர். இதில் அசுரா மட்டுமே அன்று தொட்டு இன்றுவரை எல்லா காலங்களிலும் இணைந்து வேலை செய்பவராகவும் குடும்ப நண்பராகவும் தொடர்கிறார்.
ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் சாதியத்தின் வீரியத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கவில்லை. சோசலிச ஈழமோ, தமிழீழமோ அமைந்தால் சாதியம் அற்ற சமூகம் அமைந்துவிடும் என பெரும்போக்காக நினைத்ததுண்டு. ஒரு இயக்கத்தை சாதியின் பெயரோடு இணைத்து ஏளனமாக அழைக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து அந்த இயக்கம் அழிக்கப்டடதுமே அதன் பின்னால் உள்ள சாதியத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
Eprlf விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதன் விளைவு பிரான்சிலும் எதிரொலித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் பதவி ஏற்று சில காலங்களிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சரணடைந்தார். இதை பிரான்சில் வேலை செய்த தோழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ச்சியாக இயங்கி வந்த என்போன்ற தோழர்கள் அடுத்து என்ன செய்வது என குழப்பிக் கொண்டிருந்தோம்.
“தமிழ் முரசும்” நின்று போயிருந்த காலம், அதனால் “புன்னகை” எனும் பெயரில் ஒரு சிற்றிதழை கொண்டு வந்தேன் அதுவும் ஒன்றோடு நின்றுபோனது.
ஜேர்மனியில் சில நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு ஜனநாயகத்தின் குரலாகவும், மாற்றுக்கருத்தை பேசுவதாகவும், பாசிசத்திற்கு எதிரான குரலாகவும் செயற்பட்டு வந்தது. எனது கருத்தோடு அவர்களது கருத்தும் ஒத்துப்போனதால் அவர்களது சந்திப்புக்களில் தொடர்சியாக பங்கெடுத்துவந்தேன்.
ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு போன்ற உரையாடல்களே சாதியம், தேசியம், மதம், பெண்ணியம், தலித்தியம், மாற்றுக்கருத்து என பல விடயங்களை தேடலுக்குள்ளாக்கியது. பெரியார், அம்பேத்கர் போன்றோரையும் படிக்கத்தூண்டியது. விவாதங்களை உருவாக்கியது. இலக்கியச் சந்திப்பு ஊடாக பல ஆற்றல் மிக்க தோழர்கள் அறிமுகமானார்கள். செயற்பாட்டாளர்களாக, எழுத்தாளர்களாக, ஆய்வாளர்களாக, சிறுபத்திரிகை வெளியீட்டாளர்களாக, பெண்கள் சந்திப்பு நடாத்துபவர்களாக, விமர்சகர்களாக, நடிகர்களாக, ஓவியர்களாக, இப்படி பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் எனது நண்பர்களானார்கள்.
விஜி, ஞானம், நிர்மலா, ராகவன், உமா,முரளி, ஜெபா, கற்சுறா, லக்ஷ்மி, கலைச்செல்வன், இன்பா, சுசீந்திரன், றஞ்சி, ரவி, பத்மபிரபா, புதுமைலோலன், வனஜா, சின்ரா, நித்தியானந்தன், சிவராஜா, கேகே ராஜா, ஷோபாசக்தி, சுகன், சரவணன், கீரன், காண்டீபன், றங்கன், முத்து, தமயந்தி, அசோக், கரவைதாஸ், கலையரசன், அரவிந் அப்பாத்துரை, வாசுதேவன், றயாகரன், மனோ, பௌவுசர், தர்மினி இப்படி பலரோடு இணைந்த எனது பங்களிப்பானது அற்புதமான அனுபவங்கள்.
பிரான்சில் முப்பத்தியெட்டு வருடங்கள் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயற்பட்டமையால் சாதியம் எவ்வளவு நுணுக்கமாக செயற்படுகிறது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வந்துள்ளேன்.
யாழ்ப்பாண குடாநாட்டின் குடியிருப்புகள் யாவும் சாதிச் சமூகங்களாகவே பிரிந்து கிடக்கின்றன. அதனாலேயே ஒருவரின் சாதியை அறிய வேண்டுமெனில் ஊர், தெரு, வட்டாரம் போன்றவைகளை விசாரித்தால் யார் என்ன சாதி என்பதை இலகுவாக அறிந்து விடலாம்.
உதாரணமாக நான் பிறந்து வளர்ந்தது வேலணை. வடமாகாணத்தில் ஏழு தீவுகளில் ஒரு தீவான வேலணையும் அடக்கம். அதனால் நான் ஒரு தீவான். வேலணையானது மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னிரண்டு வட்டாரங்களும் உள்ளன. அங்குள்ள வாழ்விடங்கள் சாதிளாகவே இன்றும் பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கிலிருந்து முக்கியர், பள்ளர், நளவர், கோவியர் , தச்சசர், வெள்ளாளர் என வரிசைபப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள் இப்போதும் அப்படியேதான் காட்சி தருகின்றன. முப்பது வருட ஆயுதப்போராட்டம் பத்துவருட இடப்பெயர்வு இவைகளால் கூட இதை அசைக்க முடியவில்லை.
ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்சிலும் அதே மனநிலையை அறிவேன். ஆரம்பத்தில் நம்மவர்கள் பல மாடிக் கட்டிடத்தொடர்களிலேயே வீடுகள் வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் வீடு பார்க்க வரும்போது அந்த மாடியில் ஆபிரிக்கர்கள், அரேபியர்கள், சீனர்கள் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால், தமிழர்கள் இருந்தால் அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து விட்டே வீடு வாங்குவர். தட்டத்தவறி ஏற்கனவே பள்ளரோ, நளவரோ அந்த மாடியில் குடியிருந்தால், அவர்கள் அந்த இடத்தை தவிர்த்து விடுவார்கள். அந்தளவுக்கு நிறம், மொழி, தேசம் யாவற்றையும் பின்தள்ளி விட்டு சாதி மட்டும் முன்செல்கிறது. இதேவே தமிழரின் முதன்மை கலாச்சாரம் என்பேன்.
எனது நண்பன் ஞானம் தானும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதால் பல வீடுகள் பார்த்தார். Bondy என்னும் இடத்தில் வீடு பார்க்க சென்றபோது முன்னர் இவரோடு ஒரே அறையில் வசித்த நண்பரை தற்செயலாக காண்கிறார். பரஸ்பரம் சுகம் விசாரித்துவிட்டு வீடு பார்க்க வந்த செய்தியை சொல்கிறார். பதிலுக்கு அந்த நண்பர் “ஏன் இதுக்குள்ள வீடு பாக்கிறியள் இதுக்குள்ள நளவரொல்லோ கனபேர் இருக்கினம்” என்கிற தனது நல்லெண்த்தையும் பகிர்ந்து விட்டு நகர்ந்தார். ஞானம் என்னைக் கண்டு “உங்கட யாழ்ப்பாணத்தார் என்னடாப்பா இப்படி சொல்கிறார்” எனச்சிரித்தார். “இப்படி அவர் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்” என பதில் சொன்னேன்.
ஐரோப்பாவில் வெள்ளையர்களது ஆட்சியில் அவர்களது நிர்வாகத்திற்குள் வாழ்ந்தாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர் எனச்சொல்லப்படுவோர் இன்னொரு தமிழரிடம் தனது சாதியை மறைத்து வாழ்வதே பண்பாடாகவுள்ளது. எனது மைத்துனர் முறையானவர் ஜேர்மனியில் வாழ்கிறார். அவரது வீட்டிற்கு ஒருநாள் சென்றேன். பல வருடங்களுக்கு பின்னர் அவரோடு உரையாடுவது மகிழ்ச்சி, அவரும் ஊரில் என்னைப்போலவே தெங்கு பனம்பொருள் சங்கத்தில் பணிபுரிந்தவர். அந்த அனுபவங்கள் பற்றி நான் பேச்சு எடுக்கும்போது, பதட்டப்பட்ட அவர் அதனை தொடர வேண்டாமென கண்ணசைவால் காட்டினார். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கதையை மாற்றிக் கொண்டேன் காரணம் அவர் பக்கத்தில் இன்னுமொரு நண்பரும் இருந்தார். அந்த நண்பர் சென்றவுடன், ‘தாசன் (என்னை தாசன் என்றே அழைப்பார்) அவை பெரியாக்கள் நான் எனது ஊரை மறைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன் நமது சங்கத்தைப் பற்றி கதைத்தால் என்னை கண்டுபிடித்து விடுவார் நட்பு கெட்டுவிடும்’ என விளக்கம் கொடுத்தார். நானும் கூட ஆரம்பத்தில் அப்படித்தான்.
(தொடரும்..)