ஆண்டகையே வழியனுப்புகின்றோம்! (காலக்கண்ணாடி – 31)

ஆண்டகையே வழியனுப்புகின்றோம்! (காலக்கண்ணாடி – 31)

   — அழகு குணசீலன் — 

அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களே! 

வன்னிப் பெருநிலப்பரப்பில் தாண்டவம் ஆடிய போர்ச்சூழலில் நீங்கள் ஆற்றிய மக்கள் பணியை அரசியல் ரீதியில் உங்களை விமர்சிக்கும் எதிர்க்கருத்தாளர்களும் கூட மறுக்கமாட்டார்கள். 

நீங்கள் சூடியிருந்த ஆண்டகை மகுடத்தை மதத்திற்காக அல்ல, மக்களுக்காக கவசமாக அணிந்து உயிரைத்துச்சம் என மதித்து பெரும் பணி ஆற்றிய பெருமை உங்களுக்கு உரியது. 

ஆண்டகையே!  

நீங்கள் முற்றும் துறந்தவர். துறப்பதற்கு உயிர்மட்டும்தான் உங்களிடம் இருந்தது, அதையும் ஈயத்தயார் நிலையில், வருவதை துணிச்சலுடன்  எதிர் கொண்டு ஊன், உறக்கம் இன்றி, ஒய்வின்றி இயங்கிய ஒரு இயந்திர மனிதனை மக்கள் இழந்து நிற்கிறோம். 

இந்தப்பதிவை காலக்கண்ணாடி இடுவதற்கு காரணம் உங்களை ஒரு மதத்தலைவனாக காட்டுவதற்கல்ல. 

மாறாக ஒரு அரசியல்வாதியாகவும் காட்சிப்படுத்துவது முறையல்ல. 

ஒரு தமிழனாகவோ அல்லது கிறிஸ்தவ மதத்தவனாகவோவும் பதிவு செய்வது சரியான பதிவாகாது. 

ஒரு வட்டத்துக்குள் வெறும் சமூக ஆர்வலர், மனித உரிமையாளர், சமூக விடுதலைக்கான ஒரு போராளி என்றெல்லாம் குறிப்பிடுவது உங்கள் ஆளுமையைப் பூரணப்படுத்தாது. 

அதனால்…. அதனால்….. ஆண்டகையே!  

நீங்கள் ஒரு மனிதன்.!  

மக்களை மனிதத்தால் நேசித்த, மனிதம் நிறைந்த மனிதன். 

ஆம்! மனிதமற்ற மனிதர்கள் வாழ்கின்ற இந்த மண்ணில் நீங்கள் ஒரு மனிதன்தானே! 

மனிதனும் தெய்வமாகலாம் என்பார்கள். 

உங்கள் இறப்பிலும் ஒரு தனிச்சிறப்பு. கிறிஸ்த்தவம் யேசு பிறப்பிற்கு அடுத்தாக சிறப்பாக கொண்டாடும் திருநாள் ஈஸ்டர் பெருநாள். அதற்காக கிறிஸ்தவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் போது அந்த செய்தி கேட்டது. 

இராயப்பு ஜோசப் அடிகளார் மரணித்து விட்டார். 

2021 ஏப்ரல் 1ம் திகதி பெரியவியாழன். கிறிஸ்தவர்களின் புனிதகாலமான ஈஸ்டர் காலத்தில் உங்களை நாம் இழந்திருக்கிறோம். 

அதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது ஆண்டகையே ! 

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு அதற்காக உழைத்த பெருந்தகை நீங்கள். போரின் பங்காளிகளான ஒரு தரப்பை கடுமையாக விமர்சித்தும், அம்பலப்படுத்தியும் ஒரு ஆண்டகையின் செயற்பாட்டு வரையறைக்கப்பால் செயற்பட்டவர்.  

காலத்தின் தேவை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது மானிட மாண்பல்லவே. அந்தப் பணியை ஒரு கடமையாக ஏற்று செய்திருக்கிறீர்கள். 

இது விடயத்தில் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன, விமர்சனங்கள் வந்தன. கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உடனான முரண்பாடும் இதில் ஒன்று. 

நீங்கள் தமிழர் சார்பாகவும், கார்டினல் சிங்களவர் சார்பாகவும் செயற்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதனால்தான் கண்ணாடி உங்களை எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் என்றது. தவறுதலாகவேனும் தவறு விடாத மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா? இல்லைதானே. 

இன்னும் ஒருவிடயம். “அவர்களின்”……(?): கண்ணாடி யாரைக் சுட்டுகிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். “அவர்களின்” மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள், வன்முறைகள் குறித்து நீங்கள் மௌனம் சாதித்ததாகவும் கூறப்படுகிறது. 

முக்கியமாக சகோதரப் படுகொலைகள், கிழக்கு போராளிகள் மீதான தாக்குதல், முஸ்லீம்கள் மீதான வன்முறைகள். ஏன்? உங்கள் நிலையில் அப்பாவி சிங்கள மக்கள் மீதான வன்முறையும் கண்டிக்க வேண்டிய ஒன்றுதானே இல்லையா ஆண்டகையே? 

இன்னொரு கதையும் காதில் விழுந்தது. அதையும் உங்கள் காதில் போட்டு விடுகிறேன். நீங்கள் இந்த போக்கை “அவர்களுக்கு” காதோடு காதுவைத்தால் போன்று வன்மையாகக் கண்டித்ததாகவும் வெளிப்படையாகத்தான் பேசவில்லை என்றும் ஒரு செய்தி உண்டு. 

ஒற்றுமையை எப்போதும் வலியுறுத்திய ஒருவர் என்ற வகையில் நிச்சயம் இது பற்றி பேசி இருப்பீர்கள் என்று நம்பலாம். 

ஆண்டகையே……! 

நாங்கள் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மதங்களைச் சேர்ந்தவர்கள். 

இந்த வகையில் நீங்கள் அதற்கே உரித்தான ஈஸ்டர் காலத்தில் எங்களைவிட்டுப் பிரிந்தாலும் மீண்டும் உயிர்த்து எழுவீர்கள் என்று நம்புகின்றோம். 

அதனால் விடைபெறுகின்றோம்.! எங்கள் அஞ்சலிகள்! 

சென்றுவாருங்கள்!!  

மீண்டும் சந்திப்போம்!!! என்று வழியனுப்புகின்றோம்.!!!