எஸ். எல். எம் – புதிதாய் பிறக்கும் ஒரு இளைஞன்

எஸ். எல். எம் – புதிதாய் பிறக்கும் ஒரு இளைஞன்

 — கருணாகரன் — 

நம்முடைய வாழ்க்கைக்கு மட்டுமின்றி சமூக வரலாற்றுக்கும் அவசியமான மனிதர்களாக வாழ்வது சிறப்பு. அவ்வாறானவர்களால்தான் சமூக அசைவியக்கம் வேகமாக முன்னகர்கிறது. சமூகப் பயன்கள் பலவும் விளைகின்றன. இவர்களாலேயே பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் போன்ற எதிர்நிலைகளுக்கு மத்தியிலும் சூழலும் மனித வாழ்வும் உயிர்ப்பூட்டப்படுகின்றன. இதுவே மனிதருக்கு அழகு. மனித ஆற்றலும் அறிவும் பண்பும் மனப்பாங்கும் ஒருங்கிணைந்து இந்த அழகை உருவாக்குகின்றன. 

ஆனால், இவ்வாறானதொரு வாழ்க்கையைத் தேர்வதும் அந்த வழியில் வாழ்வதும் லேசான காரியமல்ல. இந்த வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போது முதலில் ஒரே நேரத்தில் வீட்டோடும் சமூகத்தோடும் மோத வேண்டியிருக்கும். பிறகு அதிகார மையங்களோடு. பல சந்தர்ப்பங்களில் நண்பர்களோடும் அயலவர்களோடும் கூட.  

இது லௌகீக வாழ்க்கையின் மதிப்பீட்டில் ஏறக்குறைய தன்னைத் தானே பலிபீடத்தில் வைத்துக் கொள்வதற்குச் சமம். அல்லது தன்னைச் தானே சிரச்சேதம் செய்து கொள்வதைப்போன்றது. 

ஏனென்றால் சமூகமானது எப்போதும் சௌகரியமான முறையில் மரபுசார் வழமைகளில் தன்னைப் பிணைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து கொள்வதிலேயே விருப்புடையது. அதைச் சற்று முடுக்கி, வேகம் கொள்ளவைப்பதும் பாய்ச்சலைச் செய்யத் தூண்டுவதும் மரபை மீறிய புதிய சிந்தனையும் புத்தாக்கச் செயற்பாடுகளுமே. இது சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும்போது ஏற்கனவே உள்ள சமூகக் கட்டுமானத்தில் கலக்கமுண்டாகிறது. இந்தக் கலக்கத்தை அந்தக் கட்டுமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பண்பாட்டுத் தளமும் அதன் மேற்பிரதிநிதிகளும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இதை முறியடிப்பதற்காக புதியன விரும்பிகளும் மாற்றுச் சிந்தனையாளர்களும் எதிர்நிலையாளராகச் சித்திரிக்கப்படுகிறார்கள்.  

இந்த எதிர்நிலைச் சித்திரம் முதலில் செய்வது இவர்களைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திப் புறக்கணிப்பதாகும். இதன் மூலம் தனிமைப்படுத்திப் பலவீன நிலைக்குள்ளாக்குவது. புறக்கணிப்பின் மூலம் சமூக வெளியில் நெருக்கடியை ஏற்படுத்துவது. இதில் குடும்பம், மதநிறுவனங்கள், அரசு மற்றும் அரசியல் அதிகாரம், பண்பாடு, கல்வி போன்றன நேரடியாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. வலுவாகத் தொழிற்படுகின்றன.   

இவ்வாறிருக்கும் சூழ்ச்சிப் பொறியைத் தெளிவாகப் புரிந்து ஏற்றுக்கொண்டு, அதை எதிர்கொண்டவாறே சோதனைகளும் வேதனைகளும் நிரம்பிய நெருக்கடிக் களத்திலே தொடர்ந்து பயணத்தைச் செய்கின்றவர்கள் குறைவு. பலர் தங்களுடைய இளமைக்காலத்தில் இத்தகைய வாழ்க்கையை புரட்சிகரமாகவும் முற்போக்காகவும் உற்சாகத்தோடு தொடங்குவதுண்டு. ஆனால், இவர்களிற் பலர் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் களைப்படைந்து மெல்ல மெல்ல அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வர். அல்லது விடுபட்டு விடுவர்.  

எஸ். எல். எம் ஹனீஃபா அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். களைப்பின்றிச் சலிப்பின்றி இந்த வாழ்க்கையை களிப்போடும் அழகோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு, சூழலையும் புதுப்பிக்க முனைவோருக்கு வாழ்க்கை எப்போதும் அழகானதே.  எத்தகைய நெருக்கடிகளின் மத்தியிலும் தன்னைப் புதுப்பிக்கும் மந்திர வித்தைகள் எஸ். எல். எம்  மிற்குத் தெரியும். அவர் அதைச் செய்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார். இதனால்தான் அவருக்கு துயரங்கள் அதிகமில்லை. அல்லது அவற்றை அவர் வெல்கிறார்.  

இந்தக் குணவியல்பினால் அவருக்கு எல்லாத் தலைமுறையிலும் நண்பர்கள் உண்டு. இன்றைய 20களில் உள்ளவர்களும், எஸ். எல். எம்மின் சிநேகிதர்களே. எல்லோரும்  எஸ். எல். எம்மைக் கொண்டாடுகிறார்கள். எஸ். எல். எம்மும் எல்லோருடனும் இணைந்து கொண்டாடுகிறார். ஆக மொத்தத்தில் கொண்டாடிகளின் உலகமாகவே எஸ். எல். எம்மின் உலகம் உள்ளது. இதற்குக் காரணம் தன்னை அன்பினால் கரைத்துக் கொள்ளும் அவருடைய இயல்பே. அதற்குப் பெருந்துணையாக இருப்பது அவரிடமுள்ள கதை சொல்லும் கலை, திறன். அது ஒரு அழியாத வரம்போல எஸ்.எல்.எம்முக்கு வாய்த்திருக்கிறது. இந்தக் கதை சொல்லும் கலையினால் அவர் பலரையும் கவர்ந்திழுத்து விடுகிறார். ஆம், அவர் ஒரு காந்தக் கட்டி என்றே சொல்ல வேண்டும். பேச்சில் மெல்லியதாக காதலையும் காமத்தையும் கலந்து விடுவார். ஆனால், அதை யாரும் தூக்கலாக உணர முடியாது. கறியில் உள்ள உப்பைப்போலிருக்கும் மறைந்து. இதைக் கண்டு பலருக்கும் ஆச்சரியம். இதேவேளை எஸ். எல்.எம்முக்கு தெரியாத ஒரு சங்கதி இந்த உலகத்திலே இல்லை. எதைப்பற்றிப் பேசினாலும் அதைப்பற்றி ஆயிரம் கதைகள் அவரிடமுண்டு. இப்படி ஆச்சரியமூட்டும் வகையிலிருக்கும், எஸ். எல். எம்முடைய இந்த வாழ்க்கைக்கு மதிப்புச் செய்யும் விதமாகவே இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது. 

சமூக மனிதர் ஒருவரைப்பற்றி எழுதப்படும் குறிப்புகள் என்பது, அவரோடு மட்டும் மட்டுப்பட்டு நிற்பதில்லை. அவர் வாழ்ந்த காலம், அந்தக் காலத்தின் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழல், அதன் தன்மை, தாற்பரியம், அப்பொழுது ஏற்பட்ட மாற்றங்கள்,  இந்த மாற்றங்களுக்கு குறித்த நபர் ஆற்றிய பங்களிப்புகள் அல்லது அவர் செலுத்திய இடையீடுகள், அவற்றின் விளைவுகள், அதன் சமூகப் பெறுமானம் போன்ற பல விடயங்கள் அமைகின்றன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று பாதித்து ஒரு முழுச் சித்திரம் குறித்த நபரைப்பற்றியும் அவர் வாழ்ந்த சமூகச் சூழலைப் பற்றியும் அதனுடைய காலத்தைப் பற்றியும் உருவாகிறது.   

1940களில் பிறந்தவர் எல். எம் எம். அது இலங்கை சுதந்திரம் பெற்றிருந்த காலம். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து நெருக்கமாக உறவாடி வாழ்ந்த சூழல். இந்தச் சூழலோடிணைந்தே வளர்ந்தவர் எல். எம் எம். அவருடைய பாடசாலைக்கால ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். பின்னர் அவருக்குக் கிடைத்த இலக்கிய, அரசியல் உறவிலும் கூடத் தமிழர்கள் அதிகமாக இருந்துள்ளனர். ஆகவே தமிழ் – முஸ்லிம் உறவு நிலைப்பட்ட சூழலில்தான் எல். எம் எம்முடைய கல்வி, இலக்கியம், அரசியல் ஊடாட்டங்கள் எல்லாமே நடந்துள்ளன.

ஆனால், இதற்குப் பிறகு இலங்கையிலும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டவை. இதனால் இப்போதுள்ள சமூக அரசியல் சூழல் முற்றிலும் வேறாகி விட்டது. இன்று 2020இல் தமிழ்ச் சமூகமும் முஸ்லிம் சமூகமும் இருதுருவங்களாக பிளவுண்டு நிற்கின்றன. மிகச் சிக்கலான உறவும் மனநிலையும் இரண்டு சமூகங்களுக்கிடையிலும் உருவாகியுள்ளன. இதற்குள்ளும் ஒரு இணைப்புப் பாலமாகத் தொழிற்படுவோரில் எஸ். எல். எம் எம்மில் முக்கியமானவராக இருக்கிறார். இது சவாலானது. இரு பக்கமும் கூருள்ள கத்தியைப் பிடிப்பதை ஒத்தது. 

எஸ். எல். எம் தன்னுடைய வாழ்க்கையை தேர்வு செய்ததும் அதை ஒழுங்கமைத்துத் தொடர்ந்ததும் சவால்கள் நிறைந்த ஒன்று. இந்தச் சவால்களின் வழியான பயணத்தின் அனுபவங்களே அவரைப் பலப்படுத்தின. அவரை வீரராக்கின. இடையில் வந்த அத்தனை நெருக்கடிப் புயல்களிலும் அவர் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் பெரியதொரு ஆல். இதைத் தன்னுடைய “மக்கத்துச்சால்வை” என்ற சிறுகதைத் தொகுதிக்கான என்னுரையில் எஸ்.எல்.எம்மே சொல்கிறார். “என்னைச் சூழவும் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள், அறியாமையோடும் வறுமையோடும் வானம் பார்த்த பூமிமையை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்பார் நடத்துகின்ற அரசியல் புரோக்கர்கள் ஏழைகளைச் சுரண்டிவாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமே நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மானுஷிகத்தைத் தரிசிப்பதுதான் என் எழுத்துப் பணி. சன்மார்க்கம் (1968) கதை பிரசுரமான காலத்திலேயே சிலர் “ஹனீபாட கையை முறிச்சுப் போடணும்” என்று சொம்பினார்களாம்….. சமூகப் பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்து ஊழியமும் ஒரு புனித யுத்தமாகவே அமைந்து விடுவது சாத்தியமே” என.  இந்தக் குறிப்புகள் எழுதப்பட்ட காலத்தை நாம் ஊன்றிக் கவனிப்பது  அவசியம். 1968இல் இதை எஸ்.எல்.எம் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைக்கு 52 ஆண்டுகளுக்கு முன்பு. அப்படியாயின் அவருடைய இளமைக்காலம் தொடக்கம் இன்றைய முதுமைப் பருவம் வரை சவால்களின் வழியான பயணியாகவே எஸ்.எல்.எம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது எவ்வளவுக்குக் கடினமானது? எவ்வளவு கசப்புகளை அவர் தன் வாழ்நாளில் தின்றிருக்க வேண்டும்? எவ்வளவு அபாயக் கண்டங்களைச் சந்தித்துக் கடந்திருக்க வேணும்? 

ஏனென்றால் சூழல் இப்போது கூட மாறவே இல்லை. அது தலைமுறை தலைமுறையாக அப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் புதிய நுட்பங்களோடு மனிதர்களைச் சிதைத்தும் சிறைப்படுத்தியும் அலைக்கழித்துக் கொண்டும் நெருக்கடிகளோடு தொடர்கிறது. இதனால்தான் அன்று மட்டுமல்ல, இன்றும் எஸ். எல். எம் போன்றவர்கள் சவால்களை எதிர்கொண்டவாறே செயற்பட வேண்டியுள்ளது. ஆனாலும் இதில் பின்னடைந்து விடாமல், இந்தத் தொடர் செயற்பாட்டில் அல்லது தொடரியக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பதே எல்.எல்.எம்மின் வாழ்க்கை. அதுவும் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருப்பது. என்பதால்தான் அவரைப் பற்றி நாம் மதிப்போடு பேசவேண்டியதாகிறது.   

பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எஸ். எல். எம்முக்கு நல்லாயன்கள் கிடைத்திருக்கிறார்கள். சாம்பல்தீவு செல்லத்துரை, பன்குடாவெளி சாம்பசிவம் போன்றவர்கள். பிறகு எழுத்தாளர் எஸ்.பொ, அண்ணல், இளம்பிறை ரஹ்மான் என. இதனால் மிக இளம் வயதிலேயே நன்முயற்சிகளின் பால் எஸ். எல். எம் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டார். வாசிப்பு, எழுத்து, இலக்கிய ஆர்வம், அரசியல் என்றவாறாக. இப்படி நன்முயற்சிகளின் மீது இளவயதில் ஒருவருக்கு ஈடுபாடு வந்ததென்றால், அது லௌகீக வாழ்க்கைக்கு ஒத்துக் கொள்ளாது. மேற்படிப்பைத் தொடர்வது, தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது, அதை வளர்த்தெடுப்பது, அதில் வெற்றியடைவது போன்றனவெல்லாம் சாத்தியமே அற்றவை. 

ஆனால், எஸ். எல். எம்மின் குடும்பச் சூழலில் இப்படிப் பொருளாதாயம் தராத காரியங்களில் ஈடுபடுவதென்பது பொருத்தமானதல்ல. அது அவருடைய பெற்றோரின் கனவின் மீது மண்ணள்ளிப் போடுவதாகும். எஸ். எல். எம்மின் குடும்பம் அந்த நாளில் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதையும் அவரே சொல்கிறார், “வாப்பா கடலிலும் கரண்டிக்கால் புதையும் குருத்து மணலிலும் உழைப்பு. உம்மா சூளையிலும் மணிக்கட்டு மறைக்கும் களிமண்ணிலும் உழைப்பு. எத்தகைய உழைப்பு! உடுத்த துணிக்கு மாற்றுத் துணியில்லா உழைப்பு! ஒரு வேளைக்குச் சோறு கிடைக்காத உழைப்பு!“ (மக்கத்துச் சால்வை – முன்னுரை பக்xviii) என. எனவே இந்த வறுமைச் சூழலிலிருந்து குடும்பத்தை  மீட்டெடுக்கும் பொறுப்பிலிருக்கும் மகன், இந்த மாதிரி “ஊர்த்தொளவாரம் பார்க்கப் போகிறார்” என்றால், பெற்றோருக்கு எப்படியிருக்கும்?போதாக்குறைக்கு ஊருக்குள் இருளகற்றப்போகிறேன் பாருங்கள் என்று புரட்சித் தீப்பந்தத்தையும் ஏந்தத் தொடங்கிவிட்டாரென்றால்….? 

இதனால் அன்று ஊரின் தலையாரிகளாக இருந்த பிரமுகர்களுடனும் ஊர்ப்பெரியவர்களோடும் எஸ். எல். எம்முக்கு முரணும் மோதல்களும் உருவாகின. இதற்காக அவர் குடும்பத்தில் பெற்றோரோடும் அயலில் உறவுகளோடும் கூட முரண்படவும் மோதவும் வேண்டி வந்தது.  

இதையும் கூட அவரே சொல்கிறார், “ஊரில் வாப்பா ஒரு கட்சி. பெரிய கட்சி. நான் வேறு கட்சி. வாப்பா உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஒரே கருத்து மோதல்தான்” (மக்கத்துச் சால்வை – முன்னுரை பக் xix) என்று. இந்தக் கருத்து மோதல் தனியே அவருடைய தந்தையுடன் மட்டுப்பட்டதல்ல. சமூகத்திலும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான குறியீடே இது. இது சமூகத்தோடு மட்டுமல்ல, காலத்தோடும்தான். ஆனாலும் அவர் எந்த நிலையிலும் விட்டுக்கொடுப்புக்கோ சமரசத்துக்கோ பின்வாங்குதலுக்கோ இடமளிக்கவில்லை. அப்படித் தொடங்கிய அந்தப் பயணம் இன்னும் அந்தக் குணாம்சத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு எஸ். எல். எம் ஓட்டமாவடியிலிருந்து கிளிநொச்சி – வட்டக்கச்சியில் இயங்கிக் கொண்டிருந்த விவசாயப் பண்ணைக்குச் சென்றார்.  

அந்த நாட்களில் பெரும்பாலும் வடக்கிலுள்ளேரே கிழக்கிற்கும் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் படிக்கச் செல்வதுண்டு. அல்லது உத்தியோகம் பார்க்கப் போவார்கள். அல்லது வியாபாரம் போன்ற வேறு தொழில்களைச் செய்வார்கள். ஆனால், கிழக்கிலிருந்து எஸ். எல். எம் வடக்கிற்குப் படிக்கச் சென்றிருக்கிறார். இதன்மூலம் வடக்கு என்ற வேறொரு பிரதேசத்தின் அனுபவங்களும் தமிழ்ச்சூழலின் வாழ்க்கையும் புதிய அனுபவங்களையும் அறிதல்களையும் எஸ்.எல்.எம்முக்குக் கொடுத்தன. இவை இரண்டும் எஸ். எல். எம் மினுடைய வாழ்க்கை நோக்கை விரிவாக்கக் காரணமாகியுள்ளன. 

இப்படிப் புதிய திசைகளை நோக்கிய எஸ். எல். எம்மின் பயணம் புதிய அறிதல்களையும் அனுபவங்களையும் அவருக்குத் தொடர்ந்து கொடுத்தது. இதனால் அவர் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நன்றாகப் பரிச்சயமான ஒருவராக – இரண்டு தரப்பினாலும் கொண்டாடக்கூடிய ஒருவராக மாறினார். இப்பொழுதும் எஸ். எல். எம் அப்படித்தான்  இருக்கிறார். அவருக்கு முஸ்லிம் சமூகத்திலிருக்கும் மதிப்புக்கும் அன்புக்கும் நிகராகத் தமிழ்ச்சமூகத்திலும் மதிப்பும் அன்பும் உண்டு. இதனால்தான் அவரால் அத்தனை விடுதலை இயக்கங்களோடும் நெருங்கிப் பழகக் கூடியதாகவும் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும் எஸ்.எல்.எம்முக்கு நெருக்கமுண்டு. புலிகளோடும் நெருக்கமுண்டு. பத்மநாபா எஸ். எல். எம் எம்மின் மிக நெருங்கிய தோழர். புலிகளின் பசீர் காக்கா, புதுவை இரத்தனதுரை போன்றவர்களும் நண்பர்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் 1987இல் உருவாகிய வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த மாகாண சபைக் காலம் தொடக்கம் இன்றுவரை நெருக்கமாக இருக்க முடிகிறது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன் (2017) யாழ்ப்பாணத்தில் நடந்த ஈ.பி.ஆர். எவ்வின் தியாகிகள் தின நிகழ்வில் எல். எம் எம்மைக் கண்டேன். இதைப்போல 2002இல் புலிகளால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மானுடத்தின் தமிழ்க்கூடலிலும் அவரைச் சந்தித்தேன். எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கக் கூடாது என்ற ஹனீபாவின் நிலைப்பாட்டுக்கு இவை சான்று. அதேவேளை அன்றும் சரி, இன்றும் சரி இந்த இயக்கங்களை அவர் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றின் மீது தன்னுடைய விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறார். அதைப்போல இன்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு அப்பால், தமிழ்க்கட்சிகளோடும் அவற்றின் செயற்பாட்டாளர்களுடனும் விமர்சனங்களோடு பேசவும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது. 

இலக்கியம், மக்கள் அரசியல், சமூக அக்கறை என்பதற்கு மொழி, இனம், மதம் போன்றவை எந்த வரையறைகளையும் செய்யமுடியாது. பதிலாக இவை எல்லைகளை விரிவாக்கி, உலகளாவிய மானுட நேசிப்பையே ஏற்படுத்துகின்றன. இதற்கு நல்ல உதாரணமாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தொடக்கம் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஹஸீன், நபீல்,நளீம், ஓட்டமாவடி அரபாத், இத்ரீஸ், சிராஜ் மஸ்ஹூர், றஸ்மி, பௌசர், சோலைக்கிளி, பஸீர் சேகுதாவூத், அலறி, ஜிப்ரி ஹஸன், றியாஸ் வரையில் பலர் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு எப்போதும் சவால்கள் நிழலாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 

எஸ்.எல்.எம்முடைய சூழலில், அவரொத்த காலத்தவர்கள் பொருளாதாரத்தினால் முன்னேறிச் சென்று விட்டனர். சிலர் அரசியல் ரீதியாகவும் பலமடைந்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தில் பெரும் செல்வாக்கைக் கூட அவர்கள் பெற்றிருக்கலாம். ஆனால், பொருளாதாரம், அரசியல் அதிகாரம் போன்றவற்றுக்கு அப்பால், அவர்களால் பெற முடியாத ஒன்றை எஸ்.எல்.எம் பெற்றிருக்கிறார். சமானியனாக இருந்து கொண்டே இதை அவர் பெற்றது முக்கியமான ஒன்று. இதுதான் எஸ்.எல்.எம்மின் சிறப்பு. 

எஸ்.எல்.எம்முக்கு இலக்கிய அடையாளமும் அந்தஸ்தும் உண்டு. இப்படிச் சொல்லும்போது எஸ்.எல்.எம் இலக்கியத்தில் அதிகமாகச் சாதிக்கவில்லை. சாதனைகள் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்று யாரும் சொல்லக் கூடும். உண்மைதான். அவர் அதிகமாக எழுதியிருக்க வேண்டியவர். மொழியும் கதை சொல்லும் திறனும் கதைகளும் வகை தொகையாக அவரிடமுண்டு. வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் இயற்கை மீதான நேசிப்பும் அதைப் பேணும் அக்கறையான செயற்பாடுகளும் மிகச் செறிவான அனுபவங்களும் எழுத்தாற்றலும் எஸ்.எல்.எம்மிடம் உண்டு. ஆகவே இலக்கியத்தில் நிறையச் செயற்பட்டிருக்க வேண்டும். எழுதியிருக்க வேண்டும். அது நிகழாமல் போனது துயரே. இழப்பே. ஆனால், அதற்கும் அப்பால் அவர் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கிய, இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதன்மையான ஆளுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தனியே எழுத்தாளர் என்பதற்கும் அப்பால் அவர் ஒரு நல்ல வாசகர், நல்ல பேச்சாளர், நல்ல நண்பர், நல்ல தொடர்பாளர், நல்ல உபசரிப்பாளர், உரையாடலுக்கு சிறப்பானவர்  போன்ற பண்புகளால் அமையப்பெற்றது. இந்த முதிய வயதிலும் எங்கேயாவது இலக்கியக் கூட்டம்,புத்தக் காட்சி, நூல் வெளியீடு என நடந்தால் அங்கே எல். எம் எம்மைக் காணலாம். அது எவ்வளவு தொலைவு என்றாலும் மனிதர் பஞ்சி அலுப்புப் பாராமல் அங்கே நிற்பார். 

2013 க்குப் பிறகு யாழ்ப்பாணம், வன்னி, மலையகம் போன்ற இடங்களில் நடந்த இலக்கியச் சந்திப்பில் எல்லாம் கூட எல். எம் எம் கலந்து கொண்டிருக்கிறார். முதுமையும் தொலைதூரமும் அவருக்கு ஒரு இடைஞ்சலாக இடைநிற்கவில்லை. நிற்கவும் முடியாது. அவருடைய இலக்கியச் சாதனைகளில் இதுவும் ஒன்றே. இதற்கு அதில் உண்டான ஈர்ப்பே அடிப்படை. 

எஸ்.எல். எம் நிற்குமிடம் தனியாக ஒளிபெற்றிருக்கும். அவருடன் கதைப்பதற்கும் அவருடைய கதைகளைக் கேட்பதற்கொன்றும் பெரிய நண்பர் குழாம் எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கும். எல். எம் எம்மின் நகைச்சுவைப் பேச்சும் இதற்கொரு காரணம். எல். எம் எம்மின் நகைச்சுவைப் பேச்சுகளைப் பற்றித் தனியாகவே எழுத வேண்டும். வாழ்க்கையின் ரசத்தைப் பண்பாட்டுப் பரப்பில் வைத்து அவர் சொல்கின்ற கதைகள் ஈர்ப்புக்குரியவை. அந்தளவுக்குச் சிறப்புடையது அது. இதனால் எஸ். எல். எம்மின் உறவு வட்டமும் அறிமுகப் பரப்பும் தமிழ்நாடு, புலம்பெயர் சூழல் மற்றும் இலங்கை முழுவதிலும் என விரிந்தது. அந்தளவுக்கு தமிழ்ப் பரப்பில் எஸ்.எல்.எம்மிற்கு அறிமுகமும் செல்வாக்கும் உண்டு.  

சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஸ்ணன், கோணங்கி தொடக்கம் பேராசிரியர்கள் சிவத்தம்பி, மௌனகுரு, சிவசேகரம், நுஃமான் மற்றும் எஸ்.பொ, மு.பொ, சு.வி, அண்ணல், ரஹ்மான், அ.யேசுராசா, சேரன், ஜெயபாலன், சுமதி ரூபன், அசுரா, ராகவன், மல்லியப்பு திலகர், சிவலிங்கம், உமா வரதராஜன், மலர்ச்செல்வன், அனார், சிராஜ், ஓட்டமாவடி அறபாத், அலறி, அம்ரிதா ஏயெம், ஹஸீன், ஆத்மா, ஸர்மிலா, நடேசன், முருகபூபதி, நளீம் வரை ஏராளம் பேராக நீள்கிறது. இதைப் பட்டியலிட்டு முடியாது. அது முடிவற்றது. இதில் முக்கியமானது இளைய தலைமுறையுடன் அவருக்கிருக்கும் உறவு. தலைமுறை இடைவெளி என்பதே இல்லாமல் இப்படி இந்த உறவைப் பேணுவது கடினம். இது எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி வாய்த்தாலும் அதைத் தொடர்ந்து பேண முடியாது. அதற்கொரு ரசவித்தை வேண்டும். புதியனவற்றை அறிதல் வேண்டும். புதியதை உணரவும் ஏற்கவும் வேண்டும். தன்னை எப்போதும் புதிதாக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். இதற்கான நெகிழ்வுத் தன்மை அவசியம். இதையெல்லாம் தன்னுடைய பேச்சினாலும் பரந்த வாசிப்பினாலும் பழகும் விதத்தினாலும் எல். எம் எம் உருவாக்கி வைத்திருக்கிறார். 

எஸ். எல். எம்முடன் ரசனையிலும் இலக்கியக் கொள்கை, அரசியற் கொள்கை போன்றவற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டவர்களும் பகையற்ற உறவைக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். இதற்குக் காரணம்,இந்தக் கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டதைப்போல அவர் எதையும் கறுப்பு – வெள்ளையாகப் பார்ப்பதில்லை என்பதோடு, எதையும் நேரிலேயே பேசித்தீர்த்து விடும் பண்புமாகும். இத்தகைய பண்புடன், துணிச்சலுடன் இருப்போர் குறைவு. ஆனால், அதற்காக அவருக்கெனத் தனியான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை என்றில்லை. இருந்தாலும் அவற்றை அவர் எவர் மீதும் திணிப்பதில்லை. இது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஏனென்றால், இன்று தமிழ் முஸ்லிம் சமூகங்கள் உட்பட இலங்கைச் சமூகங்கள் அத்தனையும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முரண்கொண்டு, பிளவு பட்டுள்ளன. ஒன்றை  ஒன்று மேவவும் ஒன்றில் ஒன்றைத் திணிக்கவுமே முயற்சிக்கின்றன. இது இலங்கைத்தீவுக்கும் நல்லதல்ல. இந்தச் சமூகங்களுக்கும் நல்லதல்ல. இலங்கைத்தீவு என்பது பல்லின சமூகங்களைக் கொண்ட தேசம். அதன் அடிப்படையில் பன்மைப்பண்பாட்டுக்குரியது. இதைப்பற்றி ஆழமான புரிதல் எல். எம் எம்முக்கு உண்டு. அதனால்தான் அவர் அரசியல் நோக்கிலும் இலக்கியப் பார்வையிலும் பன்மைத்துவப் பண்புடன் சகல தரப்புகளோடும் உறவைக் கொள்ளக் கூடியதாக உள்ளது. என்பதால் இது அடிப்படையான ஒரு நெறியுடன் கூடிய முறைமையாகும். ஒரு அறிஞனாகவும் நல்லதொரு அரசியல் நோக்குடையவராகவும் எல். எம் எம் இருக்கிறார் என்பதற்கு இதுவும் சாட்சி. 

எஸ். எல். எம்மின் துலக்கமான அரசியல் அடையாளம் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகரான எம்.எச். அஷ்ரப் அவர்களோடானது. அதற்கு முன்பும் அவர் அரசியலில் செயற்பட்டிருந்தாலும் அஷ்ரப்புடன் கொண்டிருந்த அரசியல் உறவே முக்கியமானது. அந்த அரசியல் உறவின்போதுதான் அவர் வடக்குக் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகவும் செயற்பட்டார். ஆனால், இதை அவரால் தொடர முடியவில்லை. இதற்கு அஷ்ரப்புடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடும் ஒரு காரணம். அதற்குப் பிறகு உண்டான அரசியற் குதம்ப நிலை அவரை முழுமையான அரசியல் செயற்பாட்டுக்கு உந்தவில்லை. ஏனெனில் எஸ்.எல்.எம் அடிப்படையில் இலக்கியப் படைப்பாளி. இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் கட்சி அரசியல், இயக்க அரசியல், போன்றவற்றில் தொடர்ந்தும் இயங்க முடியாது. அவற்றின் நிபந்தனைகளுக்குள் அவரால் கட்டுப்பட்டிருக்க முடியாது. இலக்கியமும் அரசியலும் ஒன்றை ஒன்று இடையீடு செய்வதாக இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு துறைகள். இரண்டின் குணவியல்புகளும் வேறு வேறானவை. அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பது. அதைப் பிரயோகிக்க முற்படுவது. இலக்கியம் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது. அதைச் சிதைப்பது. ஆகவேதான் எஸ்.எல்.எம் எப்போதும் தான் செயற்பட்ட, செயற்படும் அரசியல் ஊடாட்டப்பரப்பில் முரணியாக இருக்க நேர்கிறது. 

இன்றைய இலங்கைச் சூழலில் எஸ்.எல்.எம் போன்றவர்களால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்து விடமுடியாது. எவ்வளவுதான் சவால்கள் மத்தியில் நின்று பிடித்துச் செயற்பட்டாலும் எவ்வளவு கால அனுபவங்களோடிருந்தாலும் மாற்றங்களை உருவாக்குவதென்பது கடினம். அந்தளவுக்குப் பலமுடையது இந்த அதிகாரச் சக்கரம். ஆனால் இவர்களுடைய குரல் முக்கியமானது. சிறியதெனினும் இவர்களுடைய செயற்பாடு அவசியமான ஒன்று. அது அறத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதாலும் நீதி மறுப்புக்கு எதிரான நியாயக் குரல்  என்பதாலும் ஜனநாயகத்தை அதன் உண்மையான உள்ளீட்டுடன் பேண முற்படுவதாலும் முக்கியமானதாக உள்ளது. இதனால்தான் எஸ்.எல்.எம் போன்றவர்கள் பேசப்படவேண்டியவர்களாக உள்ளனர். மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் அந்த மாற்றங்களுக்கான விதைகளாக. இப்படித்தான்  எஸ். எல். எம் இலக்கியப்பரப்பிலும் தொழிற்படுகிறார். எந்த முகாம்களுக்குள்ளும் கட்டுப்பட்டு ஒடுங்கிப் போகாதவராக. வயதைக் கூடக் கடந்த வல்லமையாக. ஒரு இடையறாத இடையூட்டக்காரராக. பலருக்குமான பாலமாக. 

எஸ். எல். எம்மின் ஒட்டுமொத்த அடையாளமும் அவருடைய பாத்திரமும் நமக்கு முக்கியமானதாக இருப்பது மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையிலானதே. எல்லாவற்றையும் பதப்படுத்தும் ஒரு வாழ்கலைஞனாக. அதனால்தான் நாம் எஸ். எல். எம்மைக் கொண்டாட வேண்டியவர்களாக உள்ளோம். நமக்கான முன்னோடிகளில் ஒருவராக அவரை ஏற்றுப் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இதுவே அறுபது ஆண்டுகளாக எஸ். எல். எம் உருவாக்கிய, வாழ்ந்த வாழ்க்கை நமக்குத் தந்திருக்கும் பரிசும் பாடமுமாகும். இது பெரிய வெகுமதியல்லவா!