உயிர்த்த ஞாயிறும் பிள்ளையான்  பேசும் அரசியலும்! (காலக்கண்ணாடி 30)

உயிர்த்த ஞாயிறும் பிள்ளையான் பேசும் அரசியலும்! (காலக்கண்ணாடி 30)

— அழகு குணசீலன் — 

உயிர்த்த ஞாயிறு..! 

பிள்ளையான்  பேசும் அரசியல்….!! 

#யேசுநாதர் கொடுங்கோலர்களால் பெரிய வெள்ளியில் சிலுவையில் அறையப்பட்டு ஞாயிறு உயிர்த்தெழுந்த அந்த நன்நாளில் கோரக்குண்டுக்குப்பலியான அனைவருக்கும், உறவுகளை இழந்து ஆறாத்துயரில் மீளாதிருக்கும் உறவுகளுக்கும்……… 

இந்தக் கொடுமையின் பக்கவிளைவாக உயிர், உடைமைகளை இழந்த அப்பாவி முஸ்லிம்களுக்கும் அரங்கத்தின் அஞ்சலிகளும் அனுதாபங்களும் # 

ஈழப்போராட்டம் மௌனித்த பின்னர் இலங்கையையும் சர்வதேசத்தையும் அதிரவைத்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகிறது. 

இதற்குக் காரணம் அது குறித்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகும். 

ஆளுந்தரப்பும், எதிர்த்தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். 

 ஆனால் ஒரு வித்தியாசம்! 

அன்றைய ஆளுந்தரப்பு இன்று எதிர்தரப்பாக, இன்றைய எதிர்தரப்பு அன்றைய ஆளுந்தரப்பாக, இந்த தரப்பு மாற்றம் மட்டக்களப்பு தேச மண்வாசனை மொழி வழக்கில் “கட்டையைப்பிடுங்கி முள்ளை அடித்த கதை”. 

இந்த நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகளின் உரையும், வேறுபட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களும், ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று நன்கு அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனின் பாராளுமன்ற உரை இங்கு கவனிக்கத்தக்கது. 

மற்றையவை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினதும், தமிழ்மக்கள் தேசிய விடுதலை முன்னணியினதும் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடகபேச்சாளர் சுமந்திரன்ஆகியோரின் கருத்துக்கள்.  

முஸ்லீம் கவுன்சில் இலங்கை அரசாங்கத்திற்கு “அசாத் சாலி கைது” தொடர்பாக எழுதியுள்ள கடிதம் போன்ற பல விடயங்களை காலக்கண்ணாடி காட்சிப்படுத்த முனைகிறது. 

மோதும் கருத்துக்கள்: 

‘அரசாங்கம் இத்தாக்குதல் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெற்றிருந்தும் அதைத்தடுக்க தவறிவிட்டது.’                    —-சுமந்திரன்- 

ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் முழுமையாக வெளியிடாமல், ஒருபகுதியை இருட்டடிப்புச் செய்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலில் கூட அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டது.’ —- சஜித் பிரேமதாசா- 

‘போரின் போது அரசாங்கத்தினை ஆதரித்த முஸ்லீம்கள் தற்போது அரசாங்கத்தின் இலக்கு.  

புலனாய்வுஊர்காவல்படை, முப்படைகளிலும் முஸ்லீம்கள் இணைந்திருந்தார்கள்’    —கஜேந்திரகுமார்- 

 இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் ஒருசில பயங்கரவாதிகள் உட்பட அனைத்து வகையான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக அசாத்சாலி குரல் கொடுத்தவர்.’ 

‘முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தள்ளப்படுவது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒருசில முஸ்லீம் தலைவர்களில் அசாத்சாலியும் ஒருவர்.’ 

‘இது குறித்து பலதடவை பாதுகாப்பு தரப்பினருக்கு அசாத்சாலி எழுதியுள்ளதுடன்செய்தியாளர் மாநாடுகளிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.’  — —— சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்- 

‘வகாபிச கொள்கையினால் ஈர்க்கப்பட்டு சிறிய குழுவினராக இருக்கின்ற இளைஞர்களை கவனமாக அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களை வெறுக்கத்தக்க வகையில் எவ்வித சம்பவங்களும் இடம்பெறக்கூடாது’—- -பிள்ளையான்- 

அனுபவம்ஜதார்த்தம்இனஉறவு: 

எந்த ஒரு பிரச்சினையும் அணுகப்படுகின்ற ஒரு பொதுவுடமை உள்ளது. 

1. பிரச்சினையை இனம்காணல். 

2. தீர்வுக்கானவழி முறைகளைக் கண்டறிதல் 

3. அந்த வழிமுறைகளூடாக அடையக்கூடிய இலக்கை நிர்ணயித்தல். 

பிள்ளையான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்ணமயில் பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாகக்கொண்டவை. அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால் எவ்வாறு கவரப்பட்டு ஈர்க்கப்பட்டார், அது போல் ஆயிரமாயிரம் இளைஞர்களும், யுவதிகளும் அதில் இணைந்து  தமது இலக்கில் எவ்வாறு தோல்வி அடைந்தனர் என்ற அனுபவத்தின் ஊடாக அவர் பேசுகிறார் என்றே கொள்ளவேண்டி உள்ளது. அதனால் அப்படியான ஒருநிலை முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்படக்கூடாது என்பதன் வெளிப்பாடாகவும் இதனைக் கொள்ளலாம். 

இன, மத தீவிரவாதங்கள் மிகவும் விரைவாக தீ போன்று பரவக்கூடியவை. அது ஒரு சமூகத்தில் இரண்டறக்கலந்து விட்டால் அதைப்பிரித்துக் கையாளுவது மிகவும் கஷ்டமானது. இதனால் இது மிகக்கவனமாகக் கையாளப்படவேண்டிய விடயம்.  இது காலம் தாழ்த்தினால் ஒரு கிளாஸ் தூய நீரில் ஒரு கரையும் குளிசையை நாம்போட்டால் அது முற்றாக்கரைந்து நீரோடுநீராகிவிடும் பின்னர் நீர்வேறு, குளிசை உள்ளடக்கம் வேறு என்று பிரிப்பது கஷ்டம். 

இதனால்தான் பிள்ளையானின் உரை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகிறது. இந்த நிலை ஏற்பட்டபோது தான் முழுத்தமிழர்களையும் புலி என்றும், பயங்கரவாதிகள் என்றும் சிங்களப்பேரினவாதம் அழைத்தது. அந்த நிலை ஏற்படாமல் ஈர்க்கப்பட்டுள்ள சிறிய குழுவினரை கவனமாக ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு  பிரித்தெடுக்கும் யோசனையை அவர் முன் வைக்கிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் அரசாங்கத்தால் பயங்கரவாதிகளாகத்தான் காட்டப்பட்டார்கள். 

புலிகள் இயக்கம் ஒரு கையளவு பத்துப்பேரேடு ஆரம்பிக்கப்பட்டு, பல பத்தாயிரம் பேராக வளர்ந்தது. ஒன்றில் இருந்து ஒன்றாகக் குட்டி போட்டு பல இயக்கங்கள் தோன்றி, சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தி இறுதியில் விடுதலைப்போராட்டத்தை ஏகபோகமாக்கி, தோல்வியுற்றதும், அழிவுகளைச் சந்தித்ததும் வெறும் சம்பவங்கள் அல்ல. மாறாக வரலாறு.  

இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இலங்கைச்சமூகங்கள் அனைத்துக்கும் நிறையவே உண்டு. ஆகவே தீவிரவாதத்தை கையாள்வதும் கட்டுப்படுத்துவதும் எப்போதும் அழிவுகளோடு இணைந்தது. இந்த அனுபவமும் தூரநோக்கும் பிள்ளையானின் உரையில் தொனிக்கின்றன. 

கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவதனால், குறிப்பிட்ட சமூகத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதனால், தடைகளை விதிப்பதனால் முழுமையாக வன்முறையை கட்டுப்படுத்த முடியாது. அதுவும் தற்கொலை தாக்குதல் அமைப்பு ஒன்றுக்கு எதிராக இவை அனைத்தும் பலவீனமானவை. இதனால்தான் தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் சட்டம், அழுத்தங்கள், பொருளாதாரத்தடை எதுவும் வெற்றி அளிக்கவில்லை. 

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் மூன்று இனங்கள் அருகருகே வாழும் இந்த மாகாணத்தில் இன ஐக்கியத்தின் அவசியம்  அவரால் உணரப்படுகிறது. எப்போதும் பெரிய எழுத்துக்களில் எழுதப்படவேண்டிய ஒன்றாக  இன ஐக்கியம் உள்ளது. 

பிள்ளையான் முதலமைச்சரான காலப்பகுதி கிழக்கில் இன ஐக்கியம் சிதறிக்கிடந்த காலம். அதை மீண்டும் ஒரளவுக்காவது ஒட்டவைப்பதற்கும் தமிழ் முஸ்லீம் கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கும் உறவுக்கும் சகல விமர்சனங்களுக்கும் அப்பால் பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் குறைத்து மதிப்பிட முடியாதது. 

பிள்ளையான் இன உறவை, வெளியில் நின்று, சுமந்திரன், கஜேந்திரகுமார், சஜித் பிரேமதாசா போன்று பார்க்கவில்லை. பிரச்சினைக்கு மத்தியில் நின்று பார்க்கிறார். தாக்குதல் நடந்த களம் தனது மண், நடாத்தியவர்கள் தனது சக இனத்தின் சிறுகுழுவினர். அழிவுகளைச் சந்தித்தவர்கள் தனது மக்கள், அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது அப்பாவி முஸ்லிம் சமூகம் என்று பார்க்கின்றார்.  

கிழக்கு முஸ்லிம்கள் அடைந்த அதிர்ச்சியும், சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் முன்வந்து வழங்கியதையும், அவர்கள் இவ்வாறான வன்செயல்களுக்கு ஒத்தாசையாக இல்லை என்பதை கவனத்தில் கொண்டே மிகக்கவனமான கையாடல் பற்றி பேசுகிறார். அப்பாவி முஸ்லீம்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது அவரின் ஆதங்கமாக உள்ளது. 

கிழக்கில் சக இனங்களுக்கிடையிலான உறவு சுமுகமாக இல்லை என்றால் அதனால் நன்மை அடையப்போவது இனவாத, மதவாத அரசியல்தான். இது மாகாணத்தின் அபிவிருத்தியையும், முதலீட்டுப் பாய்சலையும் பாதிக்கும். வேலை வாய்ப்புக்களையும், மக்களின் சுதந்திரமான நகர்வுகளையும் பாதிக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது இருதரப்பு அன்றாடம் காய்ச்சிகள்.  

இனப்பூசல்களால் ஏற்படும் தளம்பல் நிலையை  அரசியல் இலாபத்திற்காக ஒரு தரப்பினர் விரும்புவார்கள். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் சுமூகநிலை பிள்ளையானுக்கு முக்கியமானது. மக்களின் சக வாழ்வும் சமாதானமும் முக்கியமானவை. அதனூடாகவே மாவட்ட அபிவிருத்தியை முன் எடுக்க முடியும். 

தமிழ் இயக்கங்கள் தனிநபர் பயங்கரவாத்திலும், படையினர் மீதான தாக்குதல்களையும் ஆரம்பித்த போது தமிழ் அரசியல் தலைமைகள் வெறும் பத்திரிகை அறிக்கையோடு மௌனமாகிப்போனார்கள். கொல்லப்பட்டவர்கள் தங்கள் அரசியல் எதிரிகள் என்று ஆறுதல் அடைந்தார்கள். சிலர் இயக்க இளைஞர்களோடு மறைமுகமாகவும், நேரடியாகவும் தொடர்புகளைப் பேணினார்கள். இதன்மூலம் இறுதியில் பேரழிவின் பங்குதாரர்கள் ஆனார்கள். 

இப்படி முஸ்லீம் தலைமைகளும், சமூகமும் பார்த்துத் கொண்டு இருக்கக் கூடாது என்பது பிள்ளையானின் கருத்து. முஸ்லீம் அரசியல்வாதிகளும், சமூக, சமய முக்கியஸ்தர்களும் கண்டும் காணாத வகையில் நடந்து கொண்டால் இறுதியில் பெரும்விலை செலுத்த வேண்டி இருக்கும் என்று அவர் பெற்ற அனுபவம் பேசுகிறது. 

பிள்ளையானின் கருத்துக்களோடு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொருத்திப் போகின்றன. 

ஒரு சிலர்தான் பயங்கரவாதிகள் என்றும், இந்த தகவல்களை அசாத்சாலி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார் என்றும் கவுன்சில் கடிதம் கூறுகிறது. இப்படியான உண்மையைப் பேசும், ஆபத்தை உணரும் அமைப்புக்களின் ஆதரவைத்தான் பிள்ளையான் தனது உரையில் கோரியிருந்தார். 

களத்தில் இல்லாத எதிர்ப்பு அரசியல்: 

சுமந்திரனும், சஜீத் பிரேமதாசாவும் பேசுவது எதிர்க்கட்சி அரசியல். தாக்குதல் நடந்த காலப்பகுதியில் இவர்கள் இருவரும் நல்லாட்சியின் பங்காளர்கள். நல்லாட்சிக்காலத்தில் இரு அரசாங்கங்கள் செயற்பட்டன, ஒன்று ரணில் உடையது மற்றையது சிறிசேன அரசாங்கம். 

இந்த இழுபறிதான் தகவல்கள் பரிமாறப்படுவதை தவிர்த்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. 

கஜேந்திரகுமார் பேசுவது பெருக்கிளாசி அரசியல். எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்தீர்கள் இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது என்று வஞ்சம் தீர்க்கும் அரசியல்.  

முஸ்லீம் இளைஞர்கள் ஏன்? ஊர்காவல் படையில் சேர்ந்தார்கள். புலனாய்வு, படைப்பிரிவுகளில் சேர்ந்தார்கள்? 

புலிகளின் அராஜகத்தில் இருந்து தங்கள் சமூகத்தை தற்காப்புச் செய்ய அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்பட்டது. 

அம்பாறை, மட்டக்களப்பு, பொலநறுவை எல்லைக் கிராமக் கொலைகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டது, காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள், முஸ்லீம்களை தற்காப்பு வேண்டி தள்ளிவிட்டது. இறுதியில்  ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக இரு சமூகங்களும் இழப்புக்களைச் சந்தித்தன. 

சகோதரப் படுகொலை அச்சுறுத்தலை சந்தித்த, புலிகளால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் இலங்கை, இந்திய இராணுவங்களின் பாதுகாப்பை நாடினார்கள். ஏன் அது? தற்பாதுகாப்புத்தான் பதில். புலிகளால் அழிக்கப்பட்ட அரசியல் தலைமைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இலங்கை, இந்திய இராணுவத்தின் பாதுகாப்பில் வளர்ந்து தப்பிப்பிழைத்தவர்கள் தமிழ்த் தேசியத்தின் புனிதர்களாக பவனிவருகிறார்கள். 

இந்த அரசியலை கொழும்பில் சிங்கத்தின் குகைக்குள் பதுங்கி இருந்த சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் அறிந்திருந்தும் அறியாதுபோல் நடிக்கலாம். ஆனால் யுத்தக்களத்தில் வாழ்ந்த மக்கள் நன்கறிவார்கள். 

செல்வநாயகங்கள், பொன்னம்பலம்கள், திருச்செல்வங்களின் சட்ட அரசியல் தமிழ் மக்களை சரியாக வழி நடத்தவில்லை. 

பிராந்தியசர்வதேச வியூகங்கள்: 

எப்படி இந்தியா தனது மேலாதிக்க அழுத்தங்களை இலங்கைமீது திணிக்க, தமிழ் இயக்கங்களைப் பயன்படுத்தியதோ, அப்படித்தான் அரபு நாடுகளும் முஸ்லீம் குழுக்களுக்கு மதவாத அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. 

பயங்கரவாதத்தை அடக்க எந்தப் பிசாசிடமும் இருந்து உதவிபெறத்தயார் என்றார் ஜெ.ஆர்.ஜெயவர்த்தன. இஸ்ரேல் மொஸாட் வந்திறங்கியது. சிங்களப்படைக்கும், புலிகளுக்கும் இஸ்ரேலில் மொஷாட் பயிற்சி அளித்தது. இஸ்ரேலின் நம்பிக்கையையும், மேலும் பயிற்சியும் ஆயுதமும் பெற புலிகள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள். முஸ்லீம் இளைஞர்கள் அரசாங்கத் தரப்பில் இணைந்து தமது கிராமங்களைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதன்மூலம் மொசாட் ஒருபக்கம் ஒரே யுத்தத்தின் இருதரப்புக்கும் ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது. புலிகளை முஸ்லீம்களைத் தாக்கவிட்டு, முஸ்லீம் இளைஞர்கள் அரச படைகளில் இணைவதற்கு வழிவகுத்தது. விளைவு தமிழரும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் விரோதியானார்கள். காரியம் கச்சிதமாக முடிய இஸ்ரேல் வெளியேறியது. 

சிவசேனை, விஷ்வ ஹிந்து பரிஷத் புலிகளுக்கு நிதி வழங்கினார்கள். அநுராதபுர விகாரையில் தாக்குதல் நடாத்தவேண்டும் என்பது நிபந்தனை. விக்டர் தலைமையில் தாக்குதல் நடாத்தினார்கள். 

சிங்களவர்கள் தமது உறவுகள் விகாரையில் கொல்லப்பட்ட ஒரு மாத நினைவை அனுஷ்டித்தபோது அந்த செய்தியை லங்காபுவத் சொன்னது. 

விக்டர் கொல்லப்பட்டார். தேசிய பாதுகாப்பு மந்திரி லலித் அத்துலத் முதலி படையினரைப் பாராட்டினார். 

இப்போது என்ன நடக்கிறது? யாழில் துணைத் தூதரகம் வந்தது. மணியோசை வரும் முன்னே மாடுவரும் பின்னே. சிவசேனை வந்தது. 

விஷ்வ ஹிந்து பரிஷத் வந்தது. இப்போது பாரதிய ஜனதாவும் வந்து விட்டது. மன்னாரில் -மடுவில் வளைவுகள் உடைப்பு. பிரிக்கமுடியாதிருந்த தமிழர்கள் கிறிஸ்தவர்களாகவும், இந்துக்களாகவும் பிரிந்து நிற்கிறார்கள். 

இந்த நிலையில்தான் பிராந்தியமும் சர்வதேசமும் பயங்கரவாதத்தின் பெயரில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றன. மரணம்தான் சவப்பெட்டிக் கடைக்காரனுக்கு வருமானம். 

அது போல் யுத்தமும், இன, மத மோதல்களும்தான் இவர்களுக்கு ஆதிக்க அரசியலை இலகுவில்  ஏற்றுமதி செய்ய அரசியல் பட்டுவீதி.  

இலங்கை முப்பதாண்டு காலம் எரிந்தது போதும்.  

அன்று அனுமனும் எரித்தான்…….? 

இன்று நவீன அனுமான்கள் மீட்பர்களாக வந்து எரிப்பவர்களாக….?! 

தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கு சமர்ப்பணம். 

தொப்பி இரு தரப்புக்கும் அளவாகத்தான் இருக்கிறது.