‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

  — கருணாகரன் — 

தமிழ் தேசியம் – சில கேள்விகள் 

“தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலையே ஆதரிக்கிறார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் பலவும் கூட தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்திருக்கும் மக்களிலும் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலின் பக்கமே நிற்கின்றனர். அப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ்த்தேசிய அரசியலின் மீது கடுமையாக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் முன்வைக்கிறீர்களே! இது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக நிற்பது தவறென்று உணரவில்லையா?” என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். 

இந்தக் கேள்வி சிலரிடம் அல்ல, பலரிடமும் உள்ளது என்பதை அறிவேன். இது நீண்ட நாட்களாகப் பலருக்குள்ளேயிருந்து துளைத்துக் கொண்டிருக்கும் கேள்வி என்பதையும் அறிவேன். 

ஆனால், என்ன செய்வது, ரஜினிகாந் ஒரு திரைப்படத்தில் சொல்வதைப்போல, “என் வழி தனி வழி” என்று சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறு எதைத்தான் சொல்ல முடியும்? அல்லது ரஜினியே இன்னொரு படத்தில் சொல்வதைப்போல “மந்தை கூட்டமாகத்தான் வரும். சிங்கம், சிங்கிளாகத்தானிருக்கும்” என்றுதான் சொல்ல வேண்டும். 

இதொன்றும் பகடியல்ல. அல்லது இதைப் பகடியாக்கிக் கடந்து செல்லவும் முடியாது. ஆனால், உண்மையில் இது பகடியாக்கப்படுகிறது. அதையும் இவர்களே செய்கிறார்கள். 

“ஏனென்றால், உண்மையில் தமிழ்த்தேசியம் என்றால் என்ன?” என்ற தெளிவும் புரிதலும் இவர்களிடம் உண்டா? அந்தக் கேள்வியும் தேடலும் இவர்களிடம் உள்ளதா? 

தேசியவாதத்தின் உள்ளடக்கம், அதன் பண்புகள் குறித்த விளக்கமேதும் இவர்களுக்கிருக்கிறதா? 

அதன் சிறப்பியல்புகளையும் குறைபாடுகளையும் அதனுள்ளே மறைந்திருக்கும் பயங்கரத்தையும் இவர்கள் அறிந்திருக்கிறார்களா? அல்லது இதைப்பற்றிய உரையாடல்கள் எதையாவது இவர்கள் செய்திருக்கிறார்களா? 

இப்போது கூட இவ்வாறான உரையாடல்களைச் செய்வதற்கும் இது குறித்த புரிதல்களை அடையவும் இவர்கள் தயாரா? 

இந்த நண்பர்கள் கூறுவதைப்போல அல்லது நம்முடைய நிலைப்பாட்டைக் குறித்துக் கவலைப்படுவதைப்போல தற்போது பிரயோகத்தில் உள்ளதுதான் தமிழ்த்தேசியமா? 

இவர்களுடைய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கும் புலிகளுடைய நிலைப்பாட்டுக்கும் இடையில்  உள்ள ஒற்றுமை – வேற்றுமை (வேறுபாடு – மாறுபாடுகள்) என்ன? 

புலிகளின் அரசியலையே பின்பற்றுவதாக இருந்தால் அதை எந்த வகையில் பின்பற்றுகிறார்கள்? அதைப் பற்றிச் சொல்ல முடியுமா? 

அல்லது அதைக் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க இவர்கள் தயாரா? அது இவர்களால் முடியுமா? 

புலிகளின் அரசியல் தொடர்ச்சியைத்தான் இவர்கள் முன்னெடுப்பதாக இருந்தால் அது எந்த அளவுக்கு எதிர்காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும்? 

புலிகளிலிருந்து வேறுபடுவதாக இருந்தால் அந்த வேறுபாடு என்ன? யுத்தத்துக்குப் பிறகு தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுக்கும் முறைமை குறித்து இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் அணுமுறை சரியானதா? 

இந்த அணுகுமுறையின் மூலம் பெற்ற – பெற்றுக் கொண்டிருக்கும் – வெற்றிகளும் நன்மைகளும் என்ன? இதைப்பற்றிய மதிப்பீடுகள், ஆய்வுகள் உண்டா? 

சாதி, பால், பிரதேச ஒடுக்குமுறைகளுக்கும் பாரபட்சத்துக்கும் (அசமத்துவங்களுக்கு) இவை தமது தமிழ்த்தேசியத்தினுள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? அதற்கான வேலைத்திட்டம் என்ன? அவ்வாறான அநீதியும் ஒடுக்குமுறையும் நிகழுமிடங்களில் இவை எங்காவது அதைக்குறித்துத் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றனவா? செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனவா? 

இந்த மாதிரியுள்ள ஆயிரம் கேள்விகளுக்குரிய பதிலாகவே என்னுடைய நிலைப்பாடுள்ளது. அதாவது இவை எதிலும் இவை உருப்படியாகவும் வெளிப்படையாகவும் நிலைப்பாடுகளை முன்வைக்காமல் தனியே அரச எதிர்ப்பு – சர்வதேச சமூகத்தின் நீதிப் பரிந்துரை என்ற அரசியல் முன்னெடுப்பை நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அது மக்களுக்கு எந்தவிதமான நன்மைச் சாத்தியங்களை உருவாக்கப்போவதுமில்லை. 

இதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால், மக்களுக்கான அரசியலைச் செய்யாமல், மக்களை வைத்து, மக்களின் பேரால் தமக்கான அரசியலைச் செய்வதை நிராகரிக்கிறேன். இந்த அரசியல் தவறு. அநீதியானது என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடு என்பது கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் அரசியல், வரலாறு மற்றும் சமூக விஞ்ஞான அடிப்படையிலானதுமாகும். 

இதை இன்னும் சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்வதென்றால், அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களுடைய வெற்றிக்கானது. அவர்களுடைய எதிர்காலத்துக்கானது. அவர்களைப் பாதுகாப்பதற்கானது. அவர்களை மேம்படுத்துவதற்கானது. உலகளாவிய அரசியற் பொருளாதாரப் போக்கின்பாற்பட்டது. அதற்குத் தாக்குப்பிடித்து நிற்கக் கூடியது. இதை மறுப்பதாக இருந்தால் இவர்கள் கூறும் அந்தப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியவாதிகளை நோக்கிச் சில கேள்விகளை எழுப்பலாம். 

முதலில் இவர்கள் அனைவரும் புலிகளின் அபிமானிகளாக புலி நிழலில் ஊஞ்சலாடுகிறார்கள். ஆகவே அதைக்குறித்துச் சில கேள்விகள். 

1. விடுதலைப்புலிகளையும் அவர்களுடைய தியாகங்களையும் மதிப்பதாக கூறும் அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் அந்தக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் நடைமுறையில் புலிகளுக்கு மாறாகவே செயற்படுவது ஏன்? உதாரணமாக – 

2. புலிகள் காடழிப்புக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதேவேளை வனவளப்பாதுகாப்புப் பிரிவை உருவாக்கி காட்டைப் பாதுகாத்ததுடன், மரநடுகைகளிலும் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் நடுகை செய்த காடுகள் வடக்குக் கிழக்கில் இன்னமும் பல இடங்களிலும் உண்டு. 

ஆனால், இப்பொழுதோ காடழிப்புக் கட்டற்ற முறையில் நடக்கிறது. ஒரு பக்கம் மரம் வெட்டுதலாக, மறுபக்கத்தில் அரச செல்வாக்கைப் பயன்படுத்தி காணி பிடிப்பதற்காக என. இதைச் செய்வது வேறு யாருமல்ல. அரச எதிர்ப்பைப் பலமாகக் கூவிக் கூவித் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருக்கும் தரப்புகளே. இதற்கு சட்டம், ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளும் வனப்பிரிவும் ஏதோ வகையில் ஒத்துழைக்கின்றன. 

அதெப்படி அரசியலில் அரச எதிர்ப்பைச் செய்து கொண்டு அரசாங்கத்தின் ஏஜென்டுகளாக இருக்கும் காவல் பிரிவினர், வனப்பிரிவு, காணிப் பிரிவு, அமைச்சுகள், அதிகாரிகள் போன்ற தரப்புகளின் மூலமாகதங்களின் தனிநலன்களைப் பேணுவது நீதியாகும்? தவிர, புலிகளின் காடு பராமரிப்புக்கு இது எதிரானதாக உள்ளது அல்லவா! 

3. தனித்தேசமும், அந்தத் தேச வளங்களும் முக்கியம். தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாறாக – தமிழ்த்தேசிய அடிப்படைக்கு மாறாக எப்படிச் செயற்பட முடியும்? புலிகளின் தமிழ்த்தேசியம் என்பது தமிழீழம் என்ற தேச வரையறையையும் வரன்முறையையும் உள்ளடக்கமாகக் கொண்டது. அந்த அடிப்படையில் அவர்கள் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு, வளப் பேணுகை, வள உருவாக்கம், சமூகச்சமத்துவம் என்றவாறாக தேசக் கட்டுமானங்களில் கவனம் கொண்டிருந்தனர். இதில் சரி பிழைகள் இருக்கலாம். தங்கள் நோக்கில் இவ்வாறான கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்தனர். ஆனால், புலிகளின் பெயரைச் சொல்லி, அவர்களுடைய தியாகத்தில் அரசியல் நடத்துவோர் இதை எந்தளவுக்குப் பின்பற்றுகிறார்கள்? எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள்? 

4. இதைப்போல மணல் அகழ்வுக்கு எதிராகவும் வயல் நிலத்தில் அல்லது பயிர்ச்செய்கைக்குரிய நிலத்தில் வீடுகள், வணிக மையங்கள் போன்றவற்றை அமைப்பது தவறு என்பதில் புலிகள் உறுதியாக நின்றனர். 

ஆனால், இன்றோ இதற்கு மாறாகவே பலரும் நடக்கின்றனர். வயல்களில் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. குளங்கள் மூடப்படுகின்றன. எப்போதும் எங்கும் குளங்களைத் தூர் வாருவதே நடப்பதுண்டு. ஆண்டுதோறும் குளங்களை அகழ்ந்து, வாய்க்கால்களைப் புனரமைப்பது வழமை. ஆனால், இப்பொழுது குளங்கள் மூடப்படுகின்றன. வாய்க்கால்கள் நிரவப்படுகின்றன. இந்த வாரம் கூட வவுனியாக் குளத்தை அபிவிருத்தியின் பேரால் மண் நிரப்பிச் சுருக்குவதற்கு எதிராக வவுனியா நகரில் மக்களால் ஒரு போராட்டம் நடக்கிறது. 

ஆனால், மறுவளத்தில் குளங்களை மூடுவோரும் வயல் நிலங்களை ஆக்கிரமிப்போரும் புலிகளின் விசுவாசிகளாகவே தம்மைக் காட்டிக்கொள்கின்றனர். இது எந்தளவு சரியானது புலிகளை உண்மையாக நேசித்தால், அவர்களையும் அவர்களுடைய இலட்சியத்தையும் உண்மையாகவே மதித்தால் இப்படி எதிர்மறையாகச் செயற்பட முடியுமா? 

5. கசிப்பு, போதைப்பொருள் போன்றவற்றைக் கடுமையாக புலிகள் எதிர்த்தனர். இதற்கு மரண தண்டனை வரையில் கொடுத்தனர். ஆனால், புலிகளை ஆதரிப்பதாகக் கூறுவோரில் பலரே இப்பொழுது கசிப்புக் காய்ச்சுவது, கசிப்பை விநியோகிப்பது தொடக்கம் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இவர்களும் தமக்கு வசதியாக சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான தரப்புகளை (அரச தரப்பை) பயன்படுத்துகின்றனர். 

ஒரு பக்கம் தமிழ்த்தேசியமும் அரச எதிர்ப்பும். மறுபக்கத்தில் அரச நிறுவனங்களின் அனுசரணையைப் பயன்படுத்தி சட்டவிரோத, சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை எப்படிச் சொல்வது? இந்த முரணுக்கு (அயோக்கியத்தனத்துக்கு) என்ன பெயர்? 

6. புலிகளுடைய இன்னொரு முக்கியமான நிலைப்பாடு ஊழலுக்கு எதிரானது. ஆனால், இன்று தமிழ்ப் பிரதேசங்களில் அரச நிர்வாகப் பிரிவுகள் தொடக்கம், சட்டத்தைப் பாதுகாக்கும் பிரிவுகள், பாடசாலை அதிபர்கள் வரையில் எல்லா இடங்களிலும் ஊழல் பெருத்துள்ளது. இதில் ஈடுபடுவோரிலும் அநேகர் நான் முன்னரே குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டை அல்லது அந்த அரசியல் அடையாளத்தைக் கொண்டோரே! 

7. மேலும் புலிகள் முன்னெடுத்த அல்லது தமது செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த சமூகப் பாதுகாப்பு, பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாம் இன்று எந்த நிலையில் உள்ளன? பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் மீதான வன்முறை போன்றவற்றுக்கு இடமிருந்ததில்லை. பெண்களின் பாதுகாப்பு ஒப்பீட்டளவில் உயர்வாகவே இருந்தது. ஆனால் இன்று? இது தலைகீழாகி விட்டது. இப்பொழுது யாருக்குமே பாதுகாப்பில்லை என்ற அளவுக்கு சமூக வன்முறைகளும் ஒடுக்குறைகளும் பாரபட்சங்களும் அதிகரித்து விட்டன. இதைக்குறித்து தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு என்ன? நடவடிக்கை எது? 

குறைந்த பட்சம் இதையெல்லாம் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் எப்படிப் பார்க்கின்றன? இந்தச் சீரழிவுக்கு இவை எந்த அளவில் பொறுப்பேற்கின்றன? இவற்றைத் தடுப்பதற்கு என்ன வகையான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கின்றன? இவற்றில் பால் அசமத்துவம் (பால்வேறுபாடு) சாதியப் பிரிவினை போன்றவை முக்கியமானவை. 

8. புலிகளால் முன்னெடுக்கப்பட்ட நினைவு கூரல்களைச் செய்வது மட்டும் பணியல்ல. அதற்கு நிகரானவை இந்தச் சமூகச் சீரழிவுகளைத் தடுப்பதும் தேச வளங்களைச் சூறையாடுவதை எதிர்ப்பதுமாகும் அல்லவா? 

இதில் ஏன் இவை அக்கறைப்படாமல் உள்ளன? இவர்களுடைய ஆதரவாளர்கள் இவற்றில் ஈடுபடுவதை ஏன் கட்டுப்படுத்தத் தயங்குகின்றன? இவற்றுக்கு எதிராக இந்தச் சக்திகள் ஏன் போராட முன்வரவில்லை? குறைந்த பட்சமாகத் தங்களுடைய அரசியல் உரையாடல்களில் இதைப் பற்றிய பிரக்ஞை தவறியதேன்? 

9. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் நலத் திட்டங்களையும் திறன் வளர்க்கும் கட்டமைப்புகளையும் உருவாக்கிச் செயற்படுத்தினர். இதுவரையில் உங்களில் எவராவது அப்படிச் சிந்தித்ததுண்டா? செயற்பட்டதுண்டா? 

10. ஆனால், ஒன்றை மட்டும் வெற்றிகரமாகச் செய்கிறீர்கள். அவர்களுடைய நினைவு கூரல்களை மட்டும் செய்கிறீர்கள். இது அவர்களுடைய தியாகத்தில் குளிர்காய்வதாகும். இதற்கு அதிகமாக உழைக்க வேண்டியில்லை. செலவழிக்க வேண்டியதுமில்லை. இந்த நினைவு கூரலைச் செய்ய முற்படும்போது ஏற்படுத்தப்படும் தடைகள் கூட உங்கள் அரசியலுக்கு முதலீடாகும். அப்படித்தான் முதலீடாக்கப்படுகிறது. மற்றும்படி சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவற்றைக் குறித்துச் சிந்திப்பதும் அவற்றைச் செயலாக்கம் செய்ய முயற்சிப்பதும் கிடையாது. ஆக மொத்தத்தில் தேசம் பற்றிப் பேசும் அளவுக்கு அந்தத் தேச உருவாக்கம், அந்தத் தேசத்தின் கட்டுமானம், அதன் இயங்கு நிலை, அதன் வளங்கள் குறித்தெல்லாம் அக்கறையே இல்லை. இது பெரும் முரண்பாடு மட்டுமல்ல பெரும் போலியுமாகும். 

முக்கியமாகச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு முடியாத தயக்கம் இது. இந்தத்  தயக்கத்தையும் இந்த முரண்பாட்டு அரசியற் செயற்பாட்டையும் எப்படிச் சொல்வது? இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? 

(தொடரும்)