புளியந்தீவில் சிலை உடைப்பு….!              இனமத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்முறை….!(மௌன உடைவுகள்-83)

புளியந்தீவில் சிலை உடைப்பு….! இனமத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்முறை….!(மௌன உடைவுகள்-83)

— அழகு குணசீலன் —

மகாத்மாகாந்தி 

கல்வித்தந்தை மெதடிஸ்த மிஷனரி  வில்லியம் ஓல்ட் 

சுவாமி விபுலாநந்தர் 

சுவாமி விவேகானந்தர் 

பேர்டன் பவுல் 

புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை 

உலக நாச்சியார் 

நரசிம்மர் ஆலயம்……

 இவை மட்டக்களப்பு புளியந்தீவிலும், ஆரையம்பதியிலும் உடைக்கப்பட்ட வரலாற்று சின்னங்கள். இவர்கள்  கிறிஸ்த்தவ, இந்து சமய சமூகப்பெருந்தகைகள். இனம், மதங்களை கடந்து சமூகப்பணி செய்தவர்கள். தங்களின் தன்னிகரற்ற பணியினால் பன்மைத்துவ சமூகங்கள் மத்தியில் சமாதானத்தையும், இனமத நல்லிணக்கத்தையும் போதித்தவர்கள். 

இந்த அறிஞர் பெருமக்களை கௌரவிப்பதற்காக  மட்டக்களப்பு மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அவர்களை நேசித்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். அந்த சமூகத்தின் வரலாற்று அடையாளங்களை அழித்தொழிக்கும் செயல். தமிழ் – கிறிஸ்தவ,சைவ சமூகத்தின் முகவரியை மறைக்கும் முயற்சி. தலிபான் பாணியிலான பயங்கரவாதம். இது பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும், அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், எதிர்கால சந்ததிக்காக  இவற்றை வரலாற்று பதிவாக்குவதற்கும் அந்த சமூகத்திற்கு இருக்கின்ற உரிமை அடிப்படை மனித உரிமைகள் சார்ந்தது. அதனையே ஈஸ்டர் படுகொலை இனமத நல்லிணக்கம் அறிதலும் -புரிதலும் என்ற நூல் பதிவுசெய்கிறது.

“இஸ்லாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிலை வணக்கத்தையோ, சிலைகளை நினைவுச்சின்னங்களாக வைத்துக்கொள்வதையோ அனுமதிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின் புனிதா கஃபா ஆலயத்திற்குள் நபியவர்களும், தோழர்களும் பிரவேசித்த போது அங்கே நூற்றுக்கணக்கான உருவச்சிலைகள் இருந்தன. அவற்றுள் இறைத்தூதர்களான இப்ராஹிம், இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சிலைகளும் இருந்தன. “அவற்றை நாம் வணங்கவில்லை, நினைவுபடுத்தவே வைத்திருக்கிறோம்” என்று மக்கா வாசிகள் கூறிய போதிலும் நபியவர்கள் அவற்றை உடைத்தெறிந்த வரலாற்றை நாம் மறந்து விடமுடியாது”  என்று இந்தியாவில் இருந்து வருகைதந்த கோவை ஐயூப் ஆற்றிய உரையை ஆசிரியர் இங்கு கோடிட்டுக் குறிப்பிடுகிறார். இதைப் போன்று இதே கொள்கையை கொண்ட இந்தியாவில் இருந்து வந்திருந்த மற்றொருவரான சாஹிர்நாயக் ஆற்றிய உரை பற்றியும் நூலில் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த அடிப்படை கருத்து முரண்பாடு ஷியா/சூபிய முஸ்லீம்களுக்கும் சுன்னி முஸ்லீம்களுக்கும் இடையே காலாகாலமாக நிலவிவருகிறது. காத்தான்குடி கபுறடி வன்முறைகள் இந்த கருத்து முரண்பாட்டின் அடிப்படையிலானவை. ஒரு தரப்பின் மத நம்பிக்கையையும், வரலாற்று வழக்கையும் மறு தரப்பு அங்கீகரிக்க மறுப்பதன் விளைவு. இது வஹாபிஷ வளர்ச்சியின் பின்னர் மாற்றுமதங்களின் உருவச் சிலை -சொரூப வணக்க பாரம்பரியத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. மட்டக்களப்பில் சிலை, கோயில் உடைப்புக்களில் தொடர்புபட்ட ஓட்டமாவடி, ஒல்லிக்குளம், பாலமுனை பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர் விபரங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இவற்றில் மில்ஹான் என்பவரின் பங்கும், தலைமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த அடிப்படையிலேயே சிலை உடைப்புக்களுக்கு பின்னால் ஷஹ்ரான் குழுவினர் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வரலாறு சமூகத்தின் கடந்தகால வாழ்வியலை பதிவு செய்கிறது. சமகால, எதிர்கால வாழ்வியல் அம்சங்களே நாளைய வரலாறாக அமைபவை. இவை இளைய தலைமுறையினர் – அடுத்துவரும் சந்ததியினர் தமது சமூகத்தின் கடந்த காலத்தை அறிந்து கொள்ள, ஆய்வு செய்ய, விளங்கிக்கொள்ள மிகவும் அடிப்படையானவை. துரதிருஷ்டவசமாக இன்றைய கல்வி நிலையங்களில் இனமத நல்லுறவில் வரலாற்றுக்கான பங்கு வழங்கப்படுவது குறைந்து வருகிறது.  உண்மைகள் மறைக்கப்படலும், திரிபுபடுத்தல்களும் அதிகரிக்கின்றன. சிங்கள, தமிழ், முஸ்லீம் இன, மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மத நல்லிணக்கத்திற்கான அறிதலுக்கும், புரிதலுக்கும்  ஒழிவு மறைவின்றி உண்மை  வரலாறு பேசப்படவேண்டும். இதற்கு இந்த நூல் தரும் தகவல்கள் எதிர்கால சந்ததிக்கு மட்டக்களப்பின் வரலாற்றை சொல்லும். அதற்காக இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பல்ல. 

தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கிடையேயான நல்லுறவுக்காக தனது முதலமைச்சர் பதவிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையில் தன்னால் உருவாக்கப்பட்ட ” கிழக்கு மாகாண சபையின்” இன நல்லுறவு பணியகத்தை ” நினைவூட்டுகிறார் ஆசிரியர்  பிள்ளையான். இப்பணியகத்தின் பணிப்பாளராக தனது அரசியல் ஆலோசகராக இருந்த எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் பணியாற்றினார். ஸ்டாலின் ஞானம் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையிலும், குறிப்பாக கிழக்கிலங்கையிலும், புகலிடத்திலும் இன, மத நல்லுறவுக்கு பெரும் அக்கறையுடன் ஒரு செயற்பாட்டாளராக எழுதியும்,பேசியும் வருபவர்களுள் ஒருவர். ஆனால் அப்போது எனது அமைச்சரவையில் அங்கம் வகித்த ஹிஸ்புல்லா இனமத நல்லுறவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு  வஹாபிஷவாதிகளுடன் தொடர்புகளைப்பேணினார் என்ற கருத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

ஆரையம்பதி பிரதேச சபையியினால், ஆரையம்பதி பிரதான வீதியில் 2012 ஜனவரி 9ம் திகதி சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலாநந்தர், திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டன. மறுநாள்  ஆரையம்பதி -காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் சிலை இரவோடிரவாக சிதைக்கப்பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் யார்? இவர் எந்த வகையில் மாற்று இனங்களுக்கு, மதங்களுக்கு   எதிரானவர்?  சுவாமி விவேகானந்தர் 130 ஆண்டுகளுக்கு முன்னர் 1893 இல் அமெரிக்காவில் நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க “சிக்காக்கோ பிரசங்கம்” மேற்குலக தலைவர்களாலும், தத்துவவியலாளர்களாலும் இன்றும் மேற்கோள் காட்டப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது.  விவேகானந்தர்  கண்டங்களை கடந்து, இனமதங்களை கடந்து மதிக்கப்படுகின்ற ஒரு துறவி.

மட்டக்களப்பின் இதயமான புளியந்தீவிவில் இந்த சிலையுடைப்பு வன்முறையை விஷமிகள்  மேலும் தொடர்ந்தார்கள்.  2012 ஏப்ரல் 6ம் திகதி இந்திய சுதந்திரப்போராட்ட பிதா மகாத்மாகாந்தி, சாரணர் இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல், கிழக்கிலங்கையின் சமூக – இயற்கை  விஞ்ஞானியும் , இலக்கிய தனித்துவ தத்துவவியலாளருமான சுவாமி விபுலாநந்தர், தமிழ் இலக்கிய பேரறிஞர் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தினர். சிரச்சேதம், கையைத்துண்டாடல், அங்கங்களை அகற்றுதல் ……. போன்ற   தாக்குதல்கள்  இப்பெரியார்களின் சிலைகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய சுத்திரப்போராட்டத்தில்  சகல மக்களையும், மதங்களையும் மதித்து செயற்பட்டவர்கள் காந்தி. இன்னும் சொல்லப்போனால் இந்துக்களைவிடவும், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக உரத்துக்குரல்கொடுத்தவர் மகாத்மா.  இந்து அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிதாரி கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டவர். ஒரே காரணம்….ஒரே ஒரு காரணம்…… இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு -முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார் என்பது மட்டுமே. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்ற சர்ச்சை எழுந்தபோது மவுண்ட் பேட்டனிடம் ஜின்னாவை பிரதமராக்குங்கள் என்று ஆலோசனை சொன்னவர் காந்தி. அந்தளவுக்கு அவர் முஸ்லீம்களை நேசித்தார். இந்தியா பிளவுபட்டு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க எந்த விலையையும் கொடுக்க முன்வந்தார்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் பாகிஸ்தான் சென்று பிரிவினையின் போது இந்தியாவில் அந்த மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் பங்குகொள்ளவிரும்பினார்.  காந்தியை பாதுகாப்பு காரணங்களுக்காக பம்பாயில் இருந்து கடல்மார்க்கமாக  கராச்சிக்கு வருமாறு ஆலோசனை வழங்கினார் ஜின்னா. அதை மறுத்த காந்தி “எனது மக்கள்” விரட்டப்பட்ட வழியாகவே பாதையாத்திரை செய்ய விரும்புகிறேன். வழி நெடுகிலும் மக்களை சந்திக்கவும், அவர்கள் பட்ட துன்பங்களை அறியவும் விரும்புகிறேன்  என்று கடல்மார்க்கமான பயணத்தை மறுத்து விட்டார். ஒரு வகையில்  இயேசுவின் சிலுவைப்பாதையை நினைவூட்டுவதாக இது அமைகிறது. பாதயாத்திரையாக லாகூர் செல்ல விரும்பிய காந்தி சுசீலா நய்யாரை இதுபற்றி பேசுவதற்கும், ஏற்பாடுகளை செய்வதற்கும் லாகூருக்கு அனுப்பிவைத்தார். சுசீலா நய்யார் திரும்பி வருவதற்குள் கோட்சேயின் துப்பாக்கி மூன்று முறை காந்தியின் நெஞ்சை துளைத்தது. காந்தி இஸ்லாமியர்களுக்காக தன் உயிரை  ஈய்ந்தவர். 

 ஈஸ்டர் தாக்குதல் ஆராதனையின்போது  தேவாலயங்களில் தாக்குதல் நடாத்திய ஐ.எஸ். ஸஹ்ரான் குழுவை, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடாத்திய புலிகளில் இருந்தும், மகாத்மாகாந்தியை சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். கோட்சேயில் இருந்தும் எந்தவகையில் எங்களால் தனியாக பிரித்து நோக்கமுடியும்? என்ற கேள்வி எழுகின்றது. மட்டக்களப்பின் பாடுமீன் வாவிக்கரையில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை 60 ஆண்டுகளுக்கு முன்னர் , பெருந்தலைவர் செ. இராசதுரை அவர்களினால் நிறுவப்பட்டது என்பதும் இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது சிலை என்ற வரலாற்றைக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேர்டன் பவுலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் சர்வதேச ரீதியான இளைஞர், யுவதி அமைப்பு. இந்த அமைப்பு இளம் சமூகத்திற்கான வழிகாட்டி. அதுவும் இலங்கை போன்ற -மட்டக்களப்பு போன்ற பல்கலாச்சார பன்மைத்துவ ஒருங்கிணைந்த வாழ்வுக்கு சாரணர் இயக்கம் மதங்களை, இனங்களை கடந்து ஒருவரையொருவர் அங்கீகரித்து, அறிந்து, புரிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதும், கட்டுப்பாடு, ஒழுக்கம், எதிர்கால வாழ்வுக்கான தயார்படுத்தலாகவும் அமைவது. இளம் சந்ததியினரை தனிமைப்படுத்தாது ஒன்றிணைந்த வாழ்வுக்கு ஊக்கமளிப்பது.   கூட்டு கலாச்சார சூழலில் சமாதான வாழ்வுக்கு வழிகாட்டுவது. பிள்ளையானின் இந்நூல் பேசுகின்ற இன- மத நல்லிணக்கத்திற்கும் அறிதலுக்கும், புரிதலுக்கும் சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகள் பாரிய பணியை. சர்வதேச ரீதியாக ஆற்றியிருக்கின்றது. அதற்கான கதவுகளைத்திறந்தவர் பேர்டன் பவுல்.

கிழக்கிலங்கையின் சர்வ தத்துவஞானி சுவாமி விபுலாநந்தர். சுவாமியின் அரும்பெரும் முயற்சியினால் அன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் இராமக்கிருஷ்ணமிஷன் நிறுவப்பட்டு சிவானந்த வித்தியாலயம் அமைக்கப்பட்டது.  இது ஒரு  சைவ பாடசாலையாக இருந்த போதும்  கல்விக்கான கதவு சகல இன, மதத்தினருக்கும் திறந்தே இருந்தது. யாழ்ப்பாணத்தில் கல்விக்கான கதவுகள் மூடப்பட்டிருந்த சமூக கொடுமைக்கு- சமூக அநீதிக்கு  எதிராக செயற்பட்ட பெருந்தகை சுவாமி விபுலாநந்தரின் சமூக  வாழ்வியல் தத்துவத்திற்கு ஏற்ப சகல இனத்தவரும்,மதத்தவரும் கல்விகற்கும் வாய்ப்பு இங்கு வழங்கப்பட்டது. அன்று மூதூர் முதல் பொத்துவில் வரையான நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள், கையளவு  மலையக மாணவர்கள், தமிழ் மாணவர்களோடு ஒரே வகுப்பில் கலவிகற்றார்கள். சிவாநந்தியன்களாக  இன்றும் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் முன்னணிவகிக்கிறார்கள். மூவின, நான்குமத  அம்பாறை மாவட்டத்தின் சமூகச் சூழலில்  காரைதீவில் பிறந்து வளர்ந்தவர் சுவாமி விபுலாநந்தர்.

சிவானந்த வித்தியாலயம் கிழக்கிலங்கையில் பல இஸ்லாமிய அரசியல் தலைவர்களை, கல்வியாளர்களை உருவாக்கி இருக்கிறது.   சிவானந்தாவில் வருடாவருடம் இடம்பெறும் பரிசளிப்பு விழாவுக்கு பழையமாணவர்களை அழைப்பதே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் சிவானந்தா பழைய மாணவர்களான  முஸ்லீம் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் பிரதம அதிதிகளாக, எந்த இனமத வேறுபாடும் இன்றி அழைக்கப்பட்டு, இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு ஏற்ப ஹலால் விருந்துபசாரம் செய்து கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கான பாதையை வகுத்த, கிழக்கிலங்கை மக்களின் கல்வி வறுமையை  வேறுபாடின்றி தன் பணியினால் போக்கிய விபுலாநந்தர் சிலையை உடைப்பவர்கள் சமூகவிரோதிகள் அன்றி வேறு யார்?

மட்டக்களப்பு பொதுநூலக முன்றலில் அருட்தந்தை வில்லியம் ஓல்ட்டின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. யார் இந்த அருட்தந்தை ஓல்ட்?  மட்டக்களப்பு மத்திய கல்லூரியை இலங்கையின் முதலாவது மிஷ்னரி பாடசாலையாக ஸ்தாபித்தவர். மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷன்களின் பங்கு மிகப்பாரியது. புளியந்தீவுக்குள் மட்டுமன்றி மட்டக்களப்பின் கிராமங்கள் தோறும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. புளியந்தீவில் இருக்கின்ற  முன்னணி பாடசாலைகளில் சகல மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்விகற்கும் வாய்ப்பு இருந்தது. /இருக்கிறது. மிகவும் கட்டுப்பாடும்,ஒழுக்க நடைமுறைகளையும், ஆங்கில வித்துவமும் கொண்ட பிரின்ஸ் காசிநாதர் மத்திய கல்லூரியின் அதிபராக நீண்டகாலம் கடமையாற்றியவர். மட்டக்களப்பின் கல்விவளர்ச்சி வரலாற்றில் காசிநாதர் குடும்பத்திற்கு ஒரு தனியிடம் உண்டு. பிரின்ஸ் காசிநாதர் 1989 தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர். ஐந்தாமவர் காத்தான்குடி யைப் சேர்ந்த எம். எல்.ஏ. எம் ஹிஸ்புல்லா.

காத்தான்குடி பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் கலாநிதி ஷரிப்தீன் அவர்களின் வாப்பாவும், பத்துவயது தம்பியும் அடங்குவர். இந்த துயரத்தின் மத்தியில் கொல்லப்பட்ட தனது தந்தையின் நண்பரான பிரின்ஸ் காசிநாதரை தான் அணுகியபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மேலான மனிதராக தனக்கும், தனது குடும்பத்திற்கும் செய்த உதவிகளை வெளிப்படையாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். மட்டக்களப்பின் பழமையான சென்.மிக்கேல் கல்லூரியின் மாணவரான இவர் கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் கற்றவர். பன்மைக்கலாச்சார சூழலில் மாற்று இன, மத சகமாணவர்களை தன்கல்லூரியிலும், வகுப்பிலும் கொண்டிருந்தவர், அச்சூழலில் மாணவப்பருவத்தை கழித்தவர்.

பிரின்ஸ் காசிநாதர் மட்டக்களப்பு தொடர்பான நூல் ஒன்றை எழுதும் நோக்கில் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை புலிகள் அவரின் வீட்டில் இருந்து ஆயுதமுனையில் கொள்ளையடித்துச் சென்றது பற்றியும், பின்னர் அவை படுவான்கரையில் குப்பைமேடுகளில் வீசப்படிடிருப்பதை அறிந்து காசிநாதர் மனம் நோந்துபோனதாகவும் ,” மட்டக்களப்பின் முதுசங்களை அழித்துப்போட்டானுகளே” என்று கண்ணீர் விட்டதாகவும் அலவி ஷரிப்தீன் காசிநாதர் நினைவாக  ஒரு பதிவை இட்டுள்ளார்.  மட்டக்களப்பின் வரலாற்றை மறைப்பதற்கான, அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே புலிகளின் இந்த நடவடிக்கையை பார்க்கவேண்டும்.

பிரின்ஸ் காசிநாதர் “நான் ஒரு மட்டக்களப்பான்” என்பதை பெருமையோடு பேசுபவர் என்பதையும் அலவி ஷரிப்தீன் பதிவு பேசுகிறது.

 ஆவணங்களை “குப்பையாக” பார்ப்பவர்கள் அவற்றை குப்பையில்தானே கொட்டுவார்கள்.  இதில் புலி என்ன? பூனை என்ன?  காசிநாதரின் அந்த நூல் வெளிவந்திருந்தால் அது ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் மட்டக்களப்பு பற்றிய வரலாற்று பதிவுகளைக்கொண்ட, ஒரு சர்வதேச தரத்திலான  இன்னொரு “முறிந்த பனையாக”  இருந்திருக்கும். இவ்வாறான வரலாற்று தடையங்களை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் புலிகளில் இருந்து வேறுபடுத்தமுடியாது.

மட்டக்களப்பின் குறிப்பிடத்தக்க இலக்கியகர்த்தாக்களுள் -அறிஞர்களுள் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை முன்னணியானவர். அவரது சிலையும் புளியந்தீவில் சிதைக்கப்பட்டவற்றில் ஒன்று. அதுபோன்றே மண்முனை அரசி உலகநாச்சியாரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மற்றொரு சமூகம், தான் சார்ந்த கலாச்சார பண்பாட்டை, மத வழிபாட்டு முறையை சுயமாக நிர்ணயிக்கும் உரிமையை மறுப்பதுடன், கொச்சைப்படுத்துவதாகவும் அமைகின்றன. அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பவை. இந்த விடயத்தில்  வன்முறையிளர்கள் எந்த மதத்தின் பெயரால் அல்லது எந்த இனத்தின் பெயரால் அவற்றை செய்தாலும் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இந்த வன்முறைகளால் சமூகங்களை பிளவுபடுத்தமுடியுமே அன்றி ஒற்றுமையை – நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

 புலிகளின் மேற்கொண்ட பௌத்த விகாரைகள், பள்ளிவாசல் மீதான தாக்குதல்களையும்,  ஐ.எஸ்.ஷஹ்ரான் குழுவின் ஈஸ்டர் தாக்குதல்களையும் , அனுபவமாகக்கொண்டு  சகல சமூகங்களும் ஒழித்துப்பிடித்து விளையாடாமல் மனம் திறந்து வெளிப்படையாக பேசவேண்டும். தாம் சார்ந்த சமூகத்தவறுகளை மறைப்பதும் நியாயப்படுத்துவதும் , மற்றைய சமூகத்தவறுகளை வெளிப்படுத்துவதும்  நியாயமற்றதாக பார்ப்பதும் இனமத நல்லுறவு மற்றும் அறிதலும் புரிதலுக்குமான மார்க்கம் அல்ல. இந்த சகோதரத்துவ புரிந்துணர்வை பிள்ளையானின் புத்தகம்  எந்தளவு எட்டப்போகிறது என்பது சகல சமூகங்களினதும் புரிந்துணர்வில் தங்கியிருக்கிறது.

“YOU MUST NEVER BE FEARFUL ABOUT WHAT YOU ARE  DOING WHEN IT IS RIGHT”.    – ROSA PARKS –