ஈஸ்டர் படுகொலை நூலும் தமிழ் தேசியவாதமும்

ஈஸ்டர் படுகொலை நூலும் தமிழ் தேசியவாதமும்

— ராகவன் —

சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை நூல்  பற்றிய செவ்வி ஒன்றை  விரிவுரையாளர் சுமதி சிவமோகன் வழங்கியிருந்தார். அதுபற்றிய ஆரோக்கியமற்ற விமர்சனங்களும், அவதூறுகளும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டன. ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதும் அவரது கருத்துகளுக்கான எதிர்க்கருத்துகளை முன்வைப்பதும் ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுக்கும். ஆனால், அவ்வாறான விவாதங்கள் தமிழ் அரசியல் பரப்பில் அரிதாக இருப்பது கவலைக்குரியது.  

இவ்வகையில்,பேசப்படவேண்டியதும் விமர்சிக்கப்படவேண்டியதும் சுமதி  நூல் சம்பந்தமாக  செவ்வியில் சொன்ன கருத்துகளே.

சுமதி நூல் பற்றிய விமர்சனத்தில் முக்கியமான சிலவிடயங்களை முன்வைக்கிறார் .

1.  நூலை யாராவது ஒருவர் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்காக வரும் நூல்களில் இதுவுமொன்று எனப்பேசாமல் இருந்துவிடலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவராக , அமைச்சராக இருப்பவர் ஒரு நூலை எழுதும்போது பொறுப்புடன் எழுத வேண்டும். முக்கியமாக இனரீதியான முரண்களை அரசியலாகக்  கொண்ட இலங்கையில், அதுவும் தமிழ்- முஸ்லிம் முரண்கள் அரசியலாக்கப்படும் சூழல் கொண்ட கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களைப்பற்றி எழுதும் போது ஒரு அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

2.  30 வருடங்களுக்கு மேலான யுத்தம் காரணமாக பல்வேறு சமூக மாற்றங்கள், இடப்பெயர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன் தமிழ் – முஸ்லிம் பிளவுகள் அதிகமாகி ஒருவருக்கொருவர் மோதியிருக்கின்றனர். அழிவுகளை சந்தித்திருக்கின்றனர். இந்த அரசியல், சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டு, கிழக்கு வாழ்  முஸ்லிம் மக்களின்அரசியல், சமூக, பொருளாதார வாழ்வியலை ஆய்வு செய்யாமல்,  வெறும் விக்கிப்பீடியாவில் வந்த ‘சர்வதேசஇஸ்லாமிய  பயங்கரவாத’ தாக்குதல்களையும் அமைப்புகளையும் பட்டியல் போட்டு, இலங்கை முஸ்லிம் தீவிரவாதமாக அதனைப் பொதுமைப்படுத்தியிருப்பதை சுமதி இஸ்லாமிய வெறுப்பின் ஒரு அங்கமாக பார்க்கிறார். ஹஸ்புல்லா, மிராக் ரஹீம், பர்சானா ஹனிபா போன்ற ஆய்வாளர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். அவ்வாறான ஆய்வுகளைவிடுத்து, வெறும் விக்கிப்பீடியா தகவல்களை வைத்து ஒரு சமூக அரசியல், மத , கலாசார வாழ்வை ஆய்தல் கேள்விக்குரியதென்கிறார்.  

3.  நூல் நல்லிணக்கம் பற்றியதென்ற தலைப்பில் இருப்பினும் அது நல்லிணக்கத்துக்கு  எதிரானதாகவே இருக்கின்றதென்கிறார் சுமதி. அதற்காக அவர் சொல்லும்காரணம் முக்கியமானது. 

4. சந்திரகாந்தனின் ரி எம் வி பி அரசியலை, தமிழ்தேசியத்தின் ஒரு கூறாகவே  சுமதி நோக்குகிறார். அவ்வகையில் வஹாபிச ஊடுருவல் பற்றிய சந்திரகாந்தனின் பார்வை , மிக மேலோட்டமானதும், ஆபத்தானதுமென கருதுகிறார்.  சமூக, அரசியல் வரலாற்றுப் பார்வையை விடுத்து, சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற மேற்கத்தய கட்டமைப்புக் கண்ணாடியூடாக  முஸ்லிம்’ தீவிரவாதம்’ கட்டமைக்கப்படுவது நல்லிணக்கத்துக்கு வழி வகுக்காது. அத்துடன் நல்லிணக்கத்தை தமிழ் தேசியவாத சிந்தனையிலிருந்து சந்திரகாந்தன் அணுகுகிறார் என்ற விமர்சனத்தை அவர் முன்வைக்கிறார். 

5. இனவாத அரசியலை முன்னெடுத்த ராஜபக்சர்களுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்த சந்திரகாந்தனின் அரசியல்பற்றியும் அவர் விமர்சிக்கிறார். சந்திரகாந்தனின் அரசியலை யாழ்ப்பாண தமிழ் தேசிய சிந்தனை முறைக்குள் இருந்து துரோகி விம்ப அரசியலுக்கூடாக பார்க்கவில்லை.  மாறாக தமிழ்- முஸ்லிம் உறவுகள், நல்லிணக்கம் ஆகியவை பற்றிய கரிசனையில் தான் அவரது விமர்சனம் அமைந்ததை நேர்காணலைப் பார்த்தவர்கள் புரிந்து கொள்வர். அதற்காக அவரது விமர்சனங்கள் நூறு வீதம் சரியானவை என்றில்லை.   

இந்த விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான விமர்சனங்களை வைப்பதை விடுத்து , அவதூறுகளைத்தான் புலம் பெயர், இலங்கைத்தமிழர்கள், முக்கியமாக ரி எம் வி பி ஆதரவாளர்கள் முன்னெடுக்கின்றனர். இங்கு பலரின் அரசியல் பக்குவம், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பண்பு ஆகியவை கேள்விக்குறியாகின்றன. அத்துடன் கிழக்குத்தனித்துவம் என்ற பதாகையின் பின் தமிழ்த் தேசியவாத சிந்தனை கருக்கொண்டிருக்கின்றது என்பதையும் அவதானிக்கமுடியும். 

இந்த நூலின் அட்டைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு, கடந்த இலக்கிய சந்திப்பில், எனது உரையின் போது நானும் அட்டைப்படம் பேசும் அரசியல் பற்றி  கடுமையான விமர்சனத்தை முன்வைத்தேன். இலங்கை நான்கு இனங்களின் ஐக்கியத்தால் கட்டப்பட்டது; சஹ்ரானின் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கை அதனை சுக்கு நூறாக்கியது போன்ற விம்பம் ஒன்றை அட்டையில் செதுக்கியிருந்தனர்.  

இந்த நூலை நான் முழுமையாக வாசித்த போது, அதன் பெரும்பாகம் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ எவ்வாறு சர்வதேசங்களில் ஊடுருவி, தாக்குதல்களை மேற்கொண்து, எந்த அமைப்புகள் தாக்குதல்களை நிகழ்த்தின என்ற தகவல் திரட்டாகவே பார்க்கமுடிகிறது. அத்துடன் இஸ்லாம் பற்றிய குறிப்புகளும் மதப்பிரிவுகளும் பற்றியும் நூல் பேசுகிறது.  இவை மிக மேலோட்டமான தகவல் சார் தன்மையை கொண்டுள்ளன. மட்டுமின்றி இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஈஸ்டர் படுகொலைகள் நிகழ்ந்தன என்ற நேர்கோட்டு ,ஒற்றைப்பார்வையை ஆசிரியர் கொண்டு வருகிறார். அட்டைப்படம் சொல்லும் கதைதான்  நூல் என்பதில் சந்தேகமில்லை. 

சந்திரகாந்தன் உண்மையிலேயே இன நல்லிணக்கத்தை மனதில் கொண்டு நூலை எழுதியிருக்கலாம். ஆனால் அது எழுதப்பட்ட விதம்  நல்லிணக்கத்திற்கான அடிப்படையை அமைக்கவில்லை. அத்துடன் அவரது நோக்கம் தனக்கும் ஈஸ்டர் படுகொலை சூத்திரதாரிகளுக்கும் சம்பந்தமில்லை என நிறுவுவதே என்பது வெளிப்படை. அவருக்கு அதில் சம்பந்தம் இருக்காது  என்பதற்கான நியாயப்பாடுகள் உள்ளன. இவ்வகையில்,தனக்கும், ஈஸ்டர் படுகொலை சூத்திரதாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நூலை எழுதியிருக்க முடியும். 

குண்டு வெடிப்பின் போது சந்திரகாந்தன் சிறையில் இருந்தார். சனல் 4 சொன்ன விடயம் தவறு என்ற அடிப்படையில் தனது பக்க நியாயங்களை தொகுத்து ஒரு நூலைக் கொண்டுவந்திருந்தால் அதற்கான நியாயப்பாடுகள் இருந்திருக்கும். அத்துடன் யுத்தகாலங்களில் தமிழ் முஸ்லிம் உறவுகள் எவ்வாறு பாதிக்கப்பட்டன. இலங்கை அரசின் பாத்திரம். முஸ்லிம்ஊர்காவல் படையின் பாத்திரம். விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுத அமைப்புகளின் முஸ்லிம் விரோத சிந்தனை. எவ்வாறு தமிழ் -முஸ்லிம் பிரச்சனைகள் இனஅரசியலாக்கப்பட்டது. இவ்வாறான விடயங்களை அரசியல்,வரலாற்று  ரீதியாக ஆய்ந்து எழுதுவதை விடுத்து, ஒருவரட்டுத்தனமான தமிழ் தேசிய பார்வை கொண்டு சமூக அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. அத்துடன் இன்று கிழக்கு மாகாணத்தில் இந்து ஆகமவழிபாடுகள் முதன்மைப்படுத்தப்படுகிறதும் இந்துத்துவ சிந்தனைமுறை தலைதூக்குவதும் அதன் அரசியல் பற்றியுமான பார்வை, அகிம்சையை போதிக்கும் பௌத்தம் எவ்வாறு அரசியலாக்கப்பட்டு அரச பயங்கரவாதத்திற்கு துணையானதுஎன்ற பார்வை என்பவற்றுடன் அரசியல் இஸ்லாம் பற்றிய பார்வையை கொண்டுவருவதை விடுத்து ஒருபக்க பார்வைக்கூடாகவும், ஒரு அரசு எவ்வாறு பயங்கரவாதம் என்பதை வடிவமைக்கிறது என்ற வரையறைக்குள் நின்று பார்க்கும் அரசியலும் சர்ச்சைக்குரியது.

இவ்வகையில் நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு பிரதியை  கொண்டு வர விரும்பியிருப்பின் அவர் பல விடயங்களை முன்வைத்திருக்கலாம். சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத கட்டமைப்பை கைவிட்டு , தனக்கோ, ரி எம் வி பிக்கோ குண்டு வெடிப்பில் சம்பந்தம் இல்லை என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை முன்வைத்திருக்கலாம். 

அவர் தமிழ் முஸ்லிம் உறவை சீர்படுத்த முயன்ற அரசியல் நடவடிக்கைகள் பற்றி எழுதியிருக்கலாம். கிழக்கு மூவின மக்களை ஏறத்தாழ சரி சமமாக கொண்டிருப்பதால், குறைந்தபட்சம் தனது கட்சியில் முஸ்லிம் அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அவர்களது பதவி விவரங்களை தந்திருக்கலாம். தனது முதலமைச்சர் பதவிக்காலங்களில் சந்திரகாந்தன் நேரடியாக முஸ்லிம் பிரமுகர்களையும் மக்களையும் சந்தித்து உரையாடியது பற்றி குறித்திருக்கிறார். அது நல்லிணக்கத்துக்கான அறிகுறி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தொடர்ந்து அப்பணி நிகழ்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ரி எம் வி பி கட்சியினர் கடந்த தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிரான பரப்புரையை மேற்கொண்டபோது கட்சித்தலைமை அதனை கண்டித்து அவர்கள் மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்வியும் உண்டு.

அதிருக்க, உதாரணத்துக்கு, காலனிய காலத்திலேயே அதிகசனத்தொகை கொண்ட கிராமமாக இருந்த காத்தான் குடியில், யுத்த காலங்களில் புலிகளுக்கு பயந்து ஏறத்தாழ 30கிராமங்களிலிருந்து மக்கள் காத்தான் குடிக்கு வந்ததாக பர்கானா ஹனீபாவின் ஆய்வு தெரிவிக்கிறது. அபிவிருத்தி அரசியலுக்கே முதலிடம் என விளம்பும் சந்திரகாந்தன் அங்குள்ள மக்களின் இட நெருக்கடி, நீர் மாசடைதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அல்லது நிலங்களை அவர்கள் வாங்குவதற்கான வழிகள் போன்றவற்றை செய்ததாக தகவல்கள் ஏதும் இல்லை. தமிழ் முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தவேண்டும் என நினைக்கும் மண்ணின் மைந்தன் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவர் நல்லிணக்க அரசியலை முன்னெடுக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். 

ஒரு முறை இந்திய அரச வீடமைப்பு திட்ட அமலாக்க நிகழ்வின்போது சந்திரகாந்தனும் கலந்து கொண்டார். அங்கு ரி எம் வி பி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் முஸ்லிம்களுக்கு வீடுகொடுக்கக்கூடாது என்ற வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கினர். சந்திரகாந்தன் அதனை பார்த்துக்கொண்டிருந்தார். எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என செய்திகள் வந்தன. எனவே அவர் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப்பிரசுரங்களை  மறைமுகமாக  அங்கீகரித்ததாக அல்லது பாராமுகமாக இருந்ததாக கொள்ளமுடியும்.

அதேபோல்,தேர்தல் சமயங்களில் முஸ்லிம் எதிர்ப்புபரப்பரைகள் ரி எம் வி பி இனரால் மேற்கொண்டதாக தேர்தல் கண்காணிப்பு குழு பதிவு செய்திருக்கின்றது. எனவே ஆரம்பத்தில் முஸ்லிம் மக்களுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற சிந்தனை, தேர்தல் வாக்கு அரசியலால் பின் தள்ளப்பட்டு முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு இட்டு சென்றதாக பார்க்கமுடிகிறது.

இவ்வாறான நிகழ்வுகளைக்கூட ஒரு வழுவல் அது ரி எம் வி பிஇன் கொள்கையில்லை என ரி எம் வி பி  அறிவித்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் , கிழக்குத்தனித்துவம் என்ற சிந்தனை கிழக்குத்தமிழ்த் தனித்துவமென்ற அர்த்தம் பெறும்போது, ஒரு தனித்துவமான தமிழ்த் தேசிய அடையாள அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. 

அத்துடன் சந்திரகாந்தன் தனிப்பட்ட ரீதியில் தமிழ்-முஸ்லிம் உறவை விரும்புபவராக கூட இருக்கலாம். ஆனால் அவர் ஒருகட்சியின் தலைவர். எனவே அவரது கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள், கட்சி நடைமுறைகள் மூலமாகவே கட்சி அரசியலை எடை போட முடியும். 

 ஆனால் அதைவிடுத்து , அப்போதிருந்த சிறிசேன அரசு பாதுகாப்பை தளரவிட்டதை ஒரு காரணமாக முன்வைத்து, அதனுடன் சர்வதேச ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ பொருத்துவதையும் முனைந்ததால் அவரது வாதம் பலகீனமாகிறது. ஒருவகையில் ராஜபக்ச அரசு இருந்திருப்பின்இதனை தடுத்து நிறுத்தியிருக்கும் என்ற விம்பத்தையும் நூல்கட்டுகிறது.

 இன்னொரு புறம், ராஜபக்சர்கள் நாட்டில் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க சஹ்ரான் போன்றவர்களை வளர்த்துவிட்டார்கள் என்ற பலத்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கத்தோலிக்க ஆயரிலிருந்து பலர் இச்சந்தேகங்களை எழுப்பினர். ராஜபக்சர்கள் சொல்லி சஹ்ரான் தற்கொலைதாக்குதலை மேற்கொள்ளவில்லை என்பதும் கூட சாத்தியமானதே. ஆனால் ராஜபக்சர்களுக்கு சஹ்ரானின்அமைப்பை வளர்ப்பதில் ஒரு பங்கு இருந்தது என்பதை நம்புவதற்கான வலுவான  காரணங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. இது பற்றி நூல் பேசவேயில்லை.

அது ஒரு புறம் இருக்க, நூலில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற கட்டமைப்புக்கூடாக குண்டுவெடிப்பையும்,  வஹாபிச ஊடுருவலையும், ‘சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்தையும்’ கலந்த ஒரு சித்திரத்தை புனைந்து அதன் வெளிச்சத்தில் அனைத்தையும் வரிசைப்படுத்தியது தான் மாபெரும் அரசியல் தவறு. 

இலங்கை ஒரு இனத்துவ அரசாக கட்டமைக்கப்படும் போது அதற்கெதிராக சிறுபான்மை இனங்கள் எவ்வாறு இனத்துவ அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள், அந்த இனத்துவ அடையாளங்கள் அடிப்படையில் மற்றைய இனங்களைப்புறந்தள்ளும் போது,புதிய அடையாளங்கள் உருவெடுக்கின்றன என்பதை ஆய்தல் அவசியம். முஸ்லிம் அடையாளம் என்பது தமிழ் தேசியவாதம்  முஸ்லிம் மக்கள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயங்கியதாலும், தமிழ் அடையாளத்தை ஏற்றுக்கொள்ள தயங்கியதாலும் பிறத்தியார் என்று ஒதுக்கியதாலும் எழுந்த அடையாளம். அவ்வாறான அடையாளப்படுத்தலில் வஹாபிசம் போன்ற சிந்தனைகளும் பாதிப்பு செலுத்தின. ஆனால் அது முழுப்பரிமாணமுமல்ல. 

நூலில் அரேபிய மயமாக்கலும் பண்பாட்டு மாற்றமும் என்ற அத்தியாயம் முக்கியமானது.  அதில் முஸ்லிம்கள் மத அடையாளத்தை முதன்மைப்படுத்தியதாலும், பதியுதீன் மஹ்முட் அமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைகளால் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள் போன்றவை பேசப்படுகிறது. அத்துடன் யாழ் மேட்டுக்குடி சிந்தனையால் தமிழ் – முஸ்லிம் வேறுபாடுகள் பார்க்கப்பட்டதால் முஸ்லிம்கள் தமிழர் அரசியல்  ஒற்றுமைப் பாதையிலிருந்து விலகியதாகவும் நூலாசிரியர் கூறுகிறார். மேலும், விடுதலைப்புலிகளும் மற்றய ஆயுத இயக்கங்களும் முஸ்லீம் எதிர்ப்பு சிந்தனைகொண்டிருந்ததால் வந்த விளைவுகள், முஸ்லிம் இளைஞர்களை எவ்வாறு அரசு பயன்படுத்தி ஊர்காவல்படைகளை உருவாக்கியது என்ற விடயங்களையும் தொட்டுச் செல்கிறார்.  

அத்துடன் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காத்தான்குடி மசூதிப்படுகொலைகள், வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற விடயங்கள் மதரீதியாக முஸ்லிம்கள் ஓரணியில் திகழ்வதை ஊக்குவித்ததென்கிறார்.

அதன் பின் எவ்வாறு தவ்ஹீத் சிந்தனை வேரூன்றியது, சவுதிஅரேபியாவுக்கு சென்றவர்கள் சவுதிக்கலாச்சாரத்தை இறக்குமதி செய்தது , இஸ்லாமிய நாடுகளின் நிதி உதவிபோன்ற விடயங்கள் வஹாபிச சிந்தனை ஆகியவை முஸ்லிம் என்ற அடையாளத்தை மதத்தின் ஊடாக நிலைநிறுத்தும் முனைப்புகளாகி மதம் சார்ந்த இறுக்க நிலைக்கு முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டனர் என்கிறார். 

முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கம் பற்றியும் முஸ்லிம்கள் தமக்கென தனி அரசியல் உரிமைகளை வேண்டி நிற்கும் நிலைபற்றியும் நூல் பேசுகிறது. வஹாபிச சிந்தனையால் ஷியா, சூபி முஸ்லிம்கள் தாக்கப்பட்டது, தர்காக்கள் உடைக்கப்பட்டது பற்றியும் பேசுகிறது.

இதில் சில உண்மைகள் இருப்பினும் முஸ்லிம் மக்களின்அரசியல், ஒற்றைப் பரிமாணத்தில், தமிழ் தேசியவாத சிந்தனைக்கூடாக கட்டப்படுவது கண்கூடு. இஸ்லாமிய அத்திவாரம் ஒன்றை கட்டி அதன் மேல் முஸ்லிம் மக்களை நேராக அடுக்கிக்கட்டிய மதிலுக்கு வஹாபிய சாயத்தை அடிப்பதைத்தான் அவர் செய்திருக்கிறார்.

வஹாபிச கருத்தியல் என்பது பிரச்சனைக்குரியது. ஆனால் வஹாபிசத்தை வெறும் மதமாக பார்க்கமுடியாது. அது ஒரு அடையாளக் கருத்தியலுக்கான வேலைத்திட்டமுமாகும். அவ்வகையில் வஹாபிசம் எவ்வாறு நவீனமயப்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் எவ்வாறு அடையாளப்படுத்தல்கள் உருவாகுகின்றன என்பதை யும் ஆய்வதை விடுத்து ‘ சர்வதேசப்பயங்கரவாதத்தையும், அரபு மயமாக்கலையும், வஹாபிசத்தையும் ஒரு புள்ளியில் இணைத்தல்  ஆபத்தானஅரசியல் போக்கு. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் அதிதீவிர வஹாபிச கருத்தியலுக்கும் தொடர்புகள் ஒட்டுமொத்தமாக இல்லை என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இதனை  மதநம்பிக்கையால் சொர்க்கம் போகும் விடயமென குறுக்கி விடமுடியாது. 

உதாரணமாக ஷாஹுல் ஹஸ்புல்லா மற்றும் பெனடிக்ட் கோர்ஃப் ஆகியோரால் எழுதப்பட்ட முஸ்லிம் புவியியல், வன்முறை மற்றும் கிழக்கு இலங்கையில் சமூகத்தின் எதிர்ப்புகள்” என்ற கட்டுரை, குறிப்பாக வன்முறை மற்றும் வகுப்புவாத பதட்டங்களின் பின்னணியில் கிழக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகங்களின் சிக்கலான இயக்கவியலை ஆராய்கிறது. முஸ்லிம் குடியேற்றங்களின் இடஞ்சார்ந்த அமைப்பையும் பிராந்தியத்தில் உள்ள பிற சமூகங்களுடனான அவர்களின் தொடர்புகளையும் வரலாற்று, சமூக மற்றும் அரசியல் காரணிகள் எவ்வாறு வடிவமைத்துள்ளன என்பதை கட்டுரை ஆராய்கிறது. புவிசார் குடியிருப்புகளை சீர்குலைப்பதிலும் மறுவடிவமைப்பதிலும் வன்முறையின் பங்கையும், அத்தகைய வன்முறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அடையாளங்கள் கட்டமைக்கப்படும் வழிகளையும் இது ஆராய்கிறது. இந்த சூழலில் சமூக உருவாக்கங்களின் முரண்பாடான தன்மையை ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள், அங்கு ஒற்றுமையும் மோதலும் ஒன்றாக உள்ளன, மேலும் உரித்துடையவர் மற்றும் விலக்கப்படுபவர் பற்றிய கருத்துக்கள் தொடர்ந்து  மோதுவதும் இணக்கப்பட்டுக்கு வருவதும் நிகழ்வதை அவர்கள் அவதானிக்கின்றனர். 

இன்னொரு புறம், ஆணாதிக்க சிந்தனைமுறையின் நவீனவடிவமாகவும் வஹாபிச கருத்தியல் உருவெடுக்கிறது.  கலாசாரம் என்பதை பெண்களின் ஆடை, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் போன்றவற்றை திணிப்பது என்பதே அவர்களின் வழிமுறை.  தீவிர மத,இன, மொழித்தேசியவாதங்களுக்கு இந்தப்பண்பு பொதுவானதே. தீவிர தமிழ்த்தேசியம், ஆர் எஸ் எஸ் இன் இந்துத்துவா. பொதுபலசேனவின் பௌத்தம் போன்றவையும்  இப்பண்புகளை கொண்டிருக்கின்றன.  கிழக்கில் வஹாபிசத்தின் தாக்கம் பற்றிய சமூக, அரசியல் வரலாற்றுப்பார்வை அவசியமே. ஆனால் அதனை வெறும் மதமாகவும் சர்வதேசப் பயங்கரவாதத்தின் கிளை என்றும் கட்டமைப்பது இஸ்லாமிய வெறுப்பிற்கானஅடித்தளத்தைக் கட்டும் ஆபத்தை நோக்கி நகரும்.  

உதாரணத்திற்கு காத்தான்குடி யுத்தகாலத்தில் எவ்வாறு ஒருசுற்றிவளைக்கப்பட்ட சிறு பரப்பாக இருந்ததென்பதையும் அங்கெழுந்த பல்வேறு சமூக பிரச்சனைகளையும்  ஹஸ்புல்லா போன்ற  தமிழ் – முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கின்றனர், தமிழ் ஆயுதஅமைப்புகள், இராணுவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல் காரணமாக 1987 இல் மசூதிகளின் சம்மேளனம் உருவாகி , மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறுகல்களை தீர்ப்பதற்கும் அத்துடன் இராணுவத்துடனும் இணக்கமாக போவதற்கான சூழலுக்கும் சம்மேளனம் வித்திட்டது.  இக்காலகட்டத்தில் சவுதி போன்ற நாடுகளுக்கு சென்று ,உழைத்துத் திரும்பியவர்கள், ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற  விடயங்களை கொண்டுவந்ததும் தூய இஸ்லாம் மூலம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள

தலையெடுத்ததும், குடி  முறையில்  சூபி போன்ற வழிபாட்டுமுறைகளை கொண்டிருந்த பழைய காத்தான்குடி வாழ்மக்களிடையே அசூசையை ஏற்படுத்தியது. இந்த முரண்பாடுகளினால் தூய இஸ்லாமை வலியுறுத்துவர்களால், மற்றைய பிரிவினர் மேல் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. சம்மேளனம் ஒற்றுமையை வலியுறுத்தினாலும் இவ்வாறான நிகழ்வுகளின் போது அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் விடுதலைப்புலிகளை விமர்சனத்துக்காளாக்கிய எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா இலங்கை அரசுடன் இருந்த காலங்களில் கட்டிடங்கள், வீடுகள், வீதிகளை கட்டி, காத்தான்குடி மக்களிடம் தனது அரசியல் செல்வாக்கை அதிகமாக்கியதும் நிகழ்ந்தது. 

ஒருவகையில், தூய்மைவாத இஸ்லாமிய பண்பாடு அரசியலுக்கும்  வழமையாக நடைமுறையில் இருந்த இஸ்லாமிய பண்பாடு அரசியலுக்குமான எதிர் முரண்களாகவே காத்தான்குடி வாழ்நிலை பார்க்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறான முரண்பாடுகள் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன என்பதும்  யதார்த்தமே. எனவே ‘சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத’ கண்ணாடியால் பார்க்கும் போது அனைத்து முஸ்லிம்களையும் ‘தீவிரவாதிகள்’ என்ற பிம்பம் கட்டப்படும் ஆபத்து இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இலங்கையைச் சேர்ந்த  எந்த ஒரு முஸ்லிம் அமைப்போ, தனிநபரோ இந்த குண்டு வெடிப்பை போற்றவில்லை.  வஹாபிசத்தை நம்புகிறவர்கள் உட்பட.   

தமிழ் பேசும் மக்கள் என்ற தமிழரசுக்கட்சி அரசியல், தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முன்வந்தது. 1976 இல் பிரதேச ரீதியான  தமிழீழக்கோரிக்கை முன்வைத்த போது, ஏறத்தாழ 70% முஸ்லிம்கள் வட கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்கையில், தமிழீழம் என்பது முஸ்லிம்களினதோ, மலையக மக்களினதோ அரசியல் அபிலாசைகளை பிரதி நிதுத்துவப்படுத்தவில்லை என்பதே அடிப்படைப்பிரச்சனை. எனவே அவர்கள் தமிழீழ அரசியலிலிருந்து விலகி நின்றனர். அத்துடன் ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகள் பெரும்பாலும் தமிழர் தாயகம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இங்கு பிரச்சனை தமிழ்த்தேசியவாத சிந்தனை முறை. தமிழ் தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக முஸ்லிம்கள் பார்க்கப்படும் போது அவர்கள் எதிரியாக்கப்படுகின்றனர்.

இதனை யாழ் மேட்டுக்குடி சிந்தனையாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக இதனை   தமிழ் தேசியவாத சிந்தனையின் பின்னணியில் பார்க்கவேண்டியது அவசியமாகிறது. அத்துடன் ஒவ்வொரு பிரதேசங்களில் இருக்கும் அரசியல், பொருளாதார கலாசார பின்னணியிலும் இதனை அணுக வேண்டும். உதாரணமாக யாழ். குடா நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அரசியல் பலம் அற்றவர்களாக, தமிழரில் தங்கி வாழும் வாழ்க்கையை வாழ்ந்தனர். தமிழ்தேசியவாத சிந்தனையையும் யாழ் மேலாதிக்கவாத சிந்தனையையும் கொண்டவர்களுக்கு யாழ். முஸ்லிம்கள் ஒரு அரசியல் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மன்னாரைப் பொறுத்தவரை தமிழ் – முஸ்லிம் உறவுகள் சுமூகமாக இருந்தன. ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை முஸ்லிம் மக்கள் தமிழ் அரசியலுக்கான அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டனர். முக்கியமாக முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் உருவாக்கம் போன்றவை தமிழ் அரசியல் இருப்புக்கான அச்சுறுத்துதல்களாக பார்க்கப்பட்டன. 

தமிழ் – முஸ்லிம் கலவரங்கள், ஊர்காவல்படை, விடுதலை அமைப்புகள் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதல்கள், விடுதலைப்புலிகளின் காத்தான்குடிப்படுகொலை போன்றவை இந்தச் சிக்கலான அரசியல் பரிமாணங்களின் வெளிப்பாடுகள். இவ்வகையில் மத அடையாள அரசியல் என்பது ஒட்டுமொத்த யுத்த கால நிகழ்வுகளின் தொடர்ச்சியின் ஒரு  பரிமாணமே. அதுவே முழுக்காரணி

அல்ல.  

இந்த அரசியல் வரலாற்றுப் பின்னணியின் சிக்கல் நிறைந்த முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் மதத்தை மட்டும் காரணங்காட்டல் ஆபத்தான அரசியல். 

தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்த ஐரோப்பாவில் வாழும் ஸ்டாலின் மாஸ்டரை நியமித்ததாக சந்திரகாந்தன் குறிப்பிடுகிறார். ‘சர்வ தேச இஸ்லாமிய பயங்கரவாதம்’ எவ்வாறு மேற்கு நாடுகளில் கட்டுமானம் பெற்றது. அந்த மொழியாடலின் மூலம் எவ்வாறு இஸ்லாமிய வெறுப்பு பரப்பப்படுகிறது. முஸ்லிம் ஒருவரின் வெளித்தோற்றம், உடை என்பன எவ்வாறு ‘பயங்கரவாதத்தின்’ கூறாக  நோக்கப்படுகின்றது என்ற பல்வேறு முஸ்லிம் வெறுப்பு அரசியல் பரிமாணங்களை புறம் தள்ளி இந்த நூல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை ஸ்டாலின்  

போன்றவர்கள் சுட்டிக்காட்டவில்லை.

வியப்பு என்னவெனில் காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் போன்ற விடயங்களுக்கான காரணத்தை யாழ் மையவாதமாக குறுக்கி யாழ் மையவாத அரசியலை கோச அரசியலாக்குவது. 

கிழக்கு தமிழ் இளைஞர்களை பெருமளவில் புலிகள் பலிகொடுத்ததாலும் கிழக்கு தளபதிகளுக்கு 

முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாலும் ரி எம் வி பி பிரிந்ததாக சொல்லும் போது, வடக்குத்தலைமை முஸ்லிம்மக்கள் மேல் தாக்குதலை நிகழ்த்தக் கேட்பதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கிழக்கில் உள்ள தலைமை சொல்லியிருந்தால் அது நியாயமான நிலைப்பாடு. 80 களில் டெலோ மேல் புலிகள் தாக்குதல் நிகழ்த்தும் போது கிழக்கில் பொறுப்பாக இருந்தவர்களான கடவுள், பிரான்சிஸ் இருவரும் கிழக்கில் டெலோ உறுப்பினர்கள் மேல் தாக்குதல் தொடுப்பதை எதிர்த்தனர்.  வடக்குத் தலைமை கிழக்குத்தலைமையை நிராகரித்து யாழ்ப்பாணத்திலிருந்து சிலரை அனுப்பியது. கடவுள், பிரான்ஸிஸ் இருவரும் கருணா போன்றவர்கள் போல் பெரும் அரசியல் ராணுவ  அதிகாரம் கொண்டிருக்கவில்லை. ஆனால் புலிகளின் டெலோ மேலான தாக்குதலுக்கு உடன்படாமல் வெளியேறினர்.

 எனவே ஒரு அமைப்பில் இருக்கும் போது அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தார்மீகப் பொறுப்பை எடுப்பதை விடுத்து, யாழ் மையவாதம் என குற்றம் சாட்டுதல் பொறுப்பிலிருந்து நழுவுவதே. அத்துடன் தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கும் வழிசமைக்காது. ஏதோ யாழ்ப்பாண மையவாதம் ஆயுதவடிவெடுத்து காத்தான்குடி பள்ளிவாசலில் குண்டு மழைபொழிந்தது. நாங்கள் யாரும் போகவில்லை என்ற கதை இது. 

குண்டு வெடிப்பின் போது நான் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தேன். முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவக்கெடுபிடிகள், கைதுகள், தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.  முஸ்லிம் மக்கள் மிகப்பதட்டப்பட்ட சூழலில் இருந்தனர். ஒரு சில முஸ்லிம் வெறுப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன.  குண்டு வெடிப்பை எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் நியாயப்படுத்தவில்லை. அத்துடன் சஹ்ரானின் அமைப்பு முஸ்லிம் மக்களின் தார்மீக ஆதரவைப்பெற்ற அமைப்பாகவும் இருக்கவில்லை. இந்த நிலையை உணர்ந்து யாழ்ப்பாணத்தில் சகவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுத்து அவ்வமைப்பில் அனைத்து மத பிரதி நிதிகளையும் இணைத்து சிலவேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். முஸ்லிம் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் ஒன்றும் நிகழ்ந்தது. முஸ்லிம் மக்களின் பீதி, தாங்கள் சூழப்பட்டிருக்கிறோம் என்ற மன நிலைபோன்ற விடயங்கள் இந்த முன்னெடுப்புகளால் ஓரளவு தணிந்தன. அத்துடன் ஒரு நல்லிணக்கத்துக்கு வழி சமைக்கவும் உதவின. இதனை யாழ் மையவாதமாக பார்க்க முடியாது.  இவ்வாறான முன்னெடுப்புகள் தான் இன நல்லிணக்கத்துக்கான ஆரம்ப்புள்ளியாக இருக்க முடியும். 

யாழ் மையவாதம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. அதற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் உள்ள உறவு அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட வேண்டியது.

ஆனால் இங்கு பிரச்சனை என்னவெனில் யாழ் மைய வாதத்துக்கு பதிலாக கிழக்கு தமிழ் தேசியவாதம் முன்வைக்கப்படுவதே. இவை இரண்டும் தமிழ் தேசியம் என்ற  ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரின் குறியீடே அந்த அமைப்பு தமிழரின் அமைப்பென்றதை பகர்கிறது. 

எனவே தமிழ் தேசியவாத   சிந்தனையிலிருந்து கருவாகிய நூலே ஈஸ்டர் படுகொலை.