முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

   முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமா இவ்வளவு காலமும் ஏன் காத்திருந்தார் என்று  விளங்கவில்லை.

  முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தங்களது உடலாரோக்கியத்துக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்காக செலவிடப்படுகின்ற அரசாங்க நிதி எந்தவொரு அரசியல் நடவடிக்கைக்காகவும் பயன்படுத்தக்கூடாது என்றும் அழகப்பெருமா சில தினங்களுக்கு முன் கூறினார்.

  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் குயின்ஸி அடம்ஸ் மாத்திரமே ஒரு தடவை அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டார் என்றும் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்ட ஒரேயொரு வெளிநாட்டு அரச தலைவர் அவரே என்றும் அழகப்பெரும உதாரணத்தையும் கூறினார்.

  முன்னாள் ஜனாதிபதிகளின் உடலாரோக்கியத்தில் அழகப்பெருமவுக்கு இருக்கக்கூடிய அக்கறை ஒருபுறமிருக்க, அவர்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதில் உள்ள பயனற்றதன்மையை இப்போதாவது அவரால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பது நல்ல விடயமே.

நாட்டின் அதியுயர் பதவியை வகித்து பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அரசியலைக் கைவிட மனமில்லாதவர்களாகவும் அதிகாரத்தில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் கூட மீண்டும் பதவிக்கு வருவதற்கு துடிப்பவர்களாகவும் எம்மத்தியில் இன்று வாழ்கின்ற முன்னாள் ஜனாதிபதிகளைக் காண்கிறோம்.

  இலங்கையின் முதலாவது நிறைவேற்று  அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தனது இரு பதவிக்காலங்கள் நிறைவடைந்த பிறகு அரசியலில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெற்றார்.  இறக்கும்வரை அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதில் நாட்டம் காட்டவேயில்லை. ஓய்வில் இருந்த காலப்பகுதியில் அவர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்கமாக கருத்தைக் கூறியதுமில்லை.

  இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

 அவரின் எஞ்சிய ஒன்றரை வருட  பதவிக் காலத்துக்கு அதிகாரத்தில் இருந்த டி.பி.விஜேதுங்க ஓய்வுபெற்ற பிறகு அரசியல் பக்கம் திரும்பிப்பார்க்கவே இல்லை. ஆனால், அவருக்கு பிறகு கடந்த மூன்று தசாப்த காலத்தில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் பொதுத்  தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்துக்கும்  வந்திருக்கிறார்கள்.

  திருமதி குமாரதுங்கவை பொறுத்தவரை, சுமார் இரு தசாப்தங்களுக்கு முன்னர் தனது இரு பதவிக்காலங்களின் முடிவில் ஓய்வுபெற்ற பிறகு அவரது அரசியல் ஈடுபாடு பெருமளவுக்கு ராஜபக்சாக்களுக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடனானதாகவே இருந்தது.

  மகிந்தவுக்கு எதிராக இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொது வேட்பாளர்களைக் களமிறக்குவதில் திருமதி குமாரதுங்க முன்னின்று செயற்பட்டார்.    மற்றும்படி முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதுடனும் ஊடகங்களுக்கு  நேர்காணல்களை வழங்குவதுடனும்  தனது அரசியல் செயற்பாடுகளை அவர் மட்டுப்படுத்திக்கொண்டார். பாராளுமன்றத்துக்கு மீண்டும் வருவதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

   ஆனால், அண்மைக்காலமாக திருமதி குமாரதுங்க கடந்த நூற்றாண்டில் பல தசாப்தங்கள்  தங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

  படுமோசமாகப் பலவீனப்பட்டிருக்கும் சுதந்திர கட்சியை மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இருந்து விடுவித்து மீண்டும் மக்கள் ஆதரவுடனான கட்சியாக மாற்றுவதற்கு திருமதி குமாரதுங்க முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் பெரும் பயனைத் தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. கட்சி மேலும் பிளவுபடக்கூடிய ஆபத்தே இருக்கிறது.

  மகிந்த ராஜபக்ச 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்தபிறகு சுதந்திர கட்சியை பண்டாரநாயக்க குடும்பத்துக்கு  சொந்தமான கட்சி என்ற நிலையில் இருந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழான கட்சியாக மாற்றினார். 2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த  தோல்வியடைந்ததை தொடர்ந்து சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தங்கள் வசம் வைத்திருக்க ராஜபக்சாக்களினால் முடியாமற்போய்விட்டது. பிறகு அவர்கள் தங்களுக்கென்று தனியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கி மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியையும் கைப்பற்றினார்கள்.

  இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையிலான படுமோசமான தவறான அரசியல் மற்றும் ஆட்சிமுறைப் போக்குகளுக்கு வழிவகுத்தவரான மகிந்த நாட்டின் அதியுயர் பதவியை வகித்துவிட்டு மீண்டும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வருவதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கியதாக  தெரியவில்லை.

   2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக  குருநாகல் மாவட்டத்தில்  போட்டியிட்டு வெற்றிபெற்று   பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக இருந்த மகிந்த 2020 பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தலைவராக போட்டியிட்டு  வெற்றிபெற்று தனது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு நடந்தவை  அண்மைக்கால வரலாறு.

  இலங்கை வரலாற்றில் மக்கள் கிளர்ச்சியினால் பதவியில் இருந்து விரட்டப்பட்ட அபகீர்த்திக்குரிய அரசாங்கம் என்றால் அது ராஜபக்சாக்களின் அரசாங்கமேயாகும்.

 முன்னரும் இலங்கை அரசியல் குறிப்பிட்ட சில உயர்வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்தது  என்றபோதிலும், ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகச் செய்ததைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிக் கிளர்ச்சி செய்யவில்லை. 

  இத்தகைய வரலாற்று அவமதிப்புக்குள்ளான ஒரு குடும்பம் இன்னமும் கூட பின்னணியில் இருந்து அரசாங்கத்தை இயக்கக்கூடியதாக இருப்பதும் இலங்கையின் எதிர்கால அரசியல் திசை மார்க்கத்தை தங்களால் தீர்மானிக்கமுடியும் என்று அகங்காரத்துடன் நினைப்பதும்  ஒரு பெரிய விசித்திரமாகும்.

  மகிந்தவை பின்பற்றி முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவும் கடந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சாக்களின் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டு மீண்டும்  பாராளுமன்றத்துக்கு  வந்தார்.  அவ்வாறு கூட்டுச் சேராமல் போட்டியிட்டிருந்தால் தனது தலைமையில் சுதந்திர கட்சிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் இலட்சணத்தை சிறிசேன  தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.  

 ஜனாதிபதியாக சிறிசேன  நாட்டை ஆட்சிசெய்த இலட்சணத்தையும் அண்மைக்காலமாக பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைக் கூறி ஏற்படுத்திவருகின்ற ( கோமாளித்தனமான )  சர்ச்சைகளையும்  நோக்கும்போது இத்தகைய ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு வாக்களித்த இலங்கை மக்களின் விவேகத்தை உலகம் உண்மையில் சந்தேகிக்கவே செய்யும்.

  கோட்டாபய பதவி விலகிய பின்னர் அவரை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு விசுவாசிகள் பல தடவைகள் முயற்சித்தனர். ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் தவறான ஆட்சி முறைக்கான முழுப்பழியையும் அவர் மீதே சுமத்தி தங்களை அவரிடமிருந்து தூரவிலக்கிக்கொள்ளும் ஒரு உபாயத்தை கடைப்பிடிக்கிறார்கள். தனது அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாக குற்றஞ்சாட்டி கோட்டாபய   எழுதிய புத்தகம் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான ஒரு முன்னறிவிப்பு என்றும் சில அவதானிகள் கூறினார்கள். 

” வழமையாக பரந்தளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கிளர்ச்சியின் விளைவாக நாட்டின் தலைவர் ஒருவர் பதவிவிலக நிர்ப்பந்திங்கப்படுகிறார் என்றால் ஒன்றில் அவர் தேர்தல்கள் இன்றி ஆட்சி செய்கின்ற ஒரு சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் அல்லது அவர் நாட்டு மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் என்றால் தேர்தல் முறையைச் சூழ்ச்சித்தனமாகக் கையாண்டு நீண்டகாலமாக அதிகாரத்தில் இருக்கின்ற ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் நான் இந்த இரண்டு வகைகளில் எந்த ஒன்றுக்குள்ளும் வருபவன் அல்ல” என்பதே கோட்டாபயவின் நூலின் முன்னுரையின் முதல் வசனமாகும். எதற்காக ஜனாதிபதி பதவியை விட்டு ஓடவேண்டிவந்தது என்பதை புரிந்து கொள்வதில் அவருக்கு இன்னமும் கூட தடுமாற்றம் இருக்கிறது போலும்.

எது எவ்வாறிருந்தாலும்,   நாடு இரு தேசிய தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும்  நிலையில் அவர்  மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு  நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை.

 எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் பற்றி பேசும்போது நாம் முக்கியமான ஒரு  விடயத்தை அவதானிக்கத் தவறக்கூடாது.

  முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோரும் மக்களின் கோடிக்கணக்கிலான பணத்தில்தான் பராமரிக்கப்படுகிறார்கள்.  அவர்கள் ஒய்வூதியம், பாதுகாப்பு, தலைநகரில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய வாசஸ்தலம் என்று பல வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார்கள். இவர்களில் எவருமே தங்களது சொந்தப் பணத்தில் வாழ முடியாதவர்கள் அல்லர். அத்துடன் தங்கள் குடும்பச் சொத்துக்களை நாட்டின் நன்மைக்காக தியாகம் செய்தவர்களும் அல்ல. மாறாக, அரசியலின் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருமளவு சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்பது அண்மைக்காலமாக நாட்டு மக்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.

  இத்தகைய வசதிகளுடன் கூடிய ஆடம்பர வாழ்கையை அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளில் மகிந்தவும் சிறிசேனவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.

  ஜனாதிபதிகள் பதவிக்காலம் நிறைவடைந்து ஒய்வுபெற்ற பின்னர் மீண்டும் அரசியலுக்கு வராமல் இருந்தால் மாத்திரமே அவர்களுக்கு ஓய்வூதியமும் அரசாங்க செலவில் வசதிகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட  திருத்தச் சட்டங்கள்  கொண்டுவரப்பட்டால் நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்பார்கள். 

  புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும் கொண்டு வரப்போவதாகப் பேசுகின்ற எதிரணி அரசியல் தலைவர்கள்  எதிர்வரும் தேசிய தேர்தல்களில் இது  மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை  வழங்க முன்வருவார்களா? தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதை குறிப்பிடுவார்களா?

 முன்னாள் ஜனாதிபதிகள்  அரசியலில் ஈடுபடுவது அவர்களது  அடிப்படை உரிமை என்ற வாதம் முன்வைக்கப்படலாம். ஆனால், அரசியலில் ஈடுபடுவதும்  நாட்டின் அதியுயர் பதவியில்  இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும்  மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் பதவிநிலைகளுக்கு  வந்து மக்களின் பணத்தில் மேலதிக  சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதும் உண்மையில்  வெவ்வேறு விடயங்கள்.

(ஈழநாடு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *