“நான் கற்றுக் கொண்டதும்  தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

 — குசல் பெரேரா —

   வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற  தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன்.

  அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது.

  இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

  ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது  பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு  அந்த சமூகம் தீர்மானித்தது.

  இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள்.

 கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல்  இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.

  நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது.

  2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில்  ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள்.  வெறுமனே  பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.

  அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது.

  அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின  உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது.

 ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை:

———————————/

 போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ; 

 (1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2)  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு  விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5)  அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும்.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள்  தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள்.

   வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும்.

  முன்மொழிவுகளுக்கு 

  முக்கியத்துவமில்லை:

——————————-

 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது.  உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று  ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும்  முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன.

  8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான  தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன.

  மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு  — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும்  தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

  ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும்  மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள்.

  அன்புக்குரிவர்கள் எங்கே? 

 காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும்  மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை.

  2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை.

 போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும்  மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்? 

  தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள்.

  மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது.

  அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்:

————————————————

 வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

  பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு  உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில்  16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.

  ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள்.  மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத்  தேர்தலில் வடக்கு,கிழக்கு  தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது.

   வேறு  மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும்.

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட  “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று  அணியும் இருப்பதாக தெரியவுமில்லை.

தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று  இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

  தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல்  துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை  அது அவசரமாக வேண்டிநிற்கிறது.

  (பைனான்சியல் ரைம்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *