— வேதநாயகம் தபேந்திரன் —
தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும்.
இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது.
எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.
வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது.
பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்கு விற்று இலாபமீட்டிய தொழில் இன்று இறங்குமுகத்தை அடைந்துள்ளது.
எம்மவரின் தொலை நோக்கு இல்லாத பழக்கமே இதற்குக் காரணம். அதாவது ஒருவர் ஒரு தொழிலில் உழைத்து இலாபம் கண்டால் அதனைப் பார்த்துப்பலர் அந்தத் தொழிலைத் தொடங்குவார்கள்.
ஒரு தொழிலில் நிறையப் பேர் ஈடுபடும்போது உற்பத்திக்கான மூலப்பொருளைப் பெறுதல், தொழிலாளர்களைப் பெறுதல் உட்பட யாவுமே சவால் மிக்கதாக மாறிவிடும்.
அத்துடன் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாமல் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்று முயற்சியாளர்கள் பலர் நட்டப்படும் நிலை உருவாகும்.
இந்தப் பின்னடைவைத் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு போதுமான வகையில் வழங்கப்படுவதில்லை.
வடக்கின் அறிவு மையமாகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து அல்லது வழிப்படுத்தும் முகமாகச் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே கூறப்பட்டுவருகிறது.
தென்னை மட்டையை தூசாக்கித் தும்பாக்கி ஏற்றுமதி செய்யும் இந்தத் துறையில் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே வைத்திருக்கின்றனர்.
வடபகுதியில் இயங்கும் இந்தத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளைக் குருணாகல், புத்தளம் மாவட்டங்களுக்கே எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கி வருகின்றனர்.
உற்பத்திகளில் குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டி கிலோ ஒன்றுக்கான விலையில் குறைவை ஏற்படுத்தி ஏற்றுமதியாளர்கள் தம்மைச் சுரண்டுவதாகத் தொழில் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு யாருமே இதுவரை நாட்டம் காட்டவில்லை.
கல்யாண மண்டபங்கள் ஏட்டிக்குப் போட்டியாக நூற்றுக் கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன, அமைக்கப்பட்டுவருகின்றன.
இதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் எம்மவர்கள் தென்னை மட்டைகளைப் பயன்படுத்தி பெறப்படும் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.
தேங்காய் உரித்துத் தென்னை மட்டைகள் உருவாகும் வேகத்தைத் திடீரெனக் கூட்ட முடியாது.
இயற்கையில் கிடைக்கும் விளைபொருளை அது கிடைக்கும் அளவில்தான் பெறமுடியும்.
ஆனால் இதன் உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாகிய வேகம் அதிகமாக உள்ளன. அத்துடன் ஒரு நாளுக்கு 10 முதல் 15 ஆயிரம் தென்னை மட்டைகளை அரைக்கும் இராட்சத இயந்திரங்களைக் கொள்வனவு செய்து வைத்துள்ளனர்.
இந்த இயந்திரங்களுக்குத் தீனி போடும் அளவுக்குத் தென்னை மட்டைகளை வாங்க முடியாமல் கஸ்டப்படுகின்றனர்.
அதேவேளை தென்பகுதி தொழிலதிபர்கள் வடக்கில் முகவர்களை அமர்த்தி அவர்கள் மூலமான கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது ஒரு ரூபா விற்ற தென்னை மட்டைகள் 4 ரூபா வரையில் விலையேறி விட்டுள்ளன.
இதனால் இத்துறையில் ஈடுபட்ட சிறிய நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் நட்டப்பட்டுத் தொழிலில் இருந்து விலகும் நிலையை அடைந்துள்ளனர்.
வடக்கில் தென்னை வளம் சிறப்பாக உள்ளது. தேங்காய் உரித்த பின்பாகத் தென்னம் மட்டைகளைப் பெற்று அவற்றை இயந்திரத்தில் அரைத்துப் பொதி செய்து விற்கும் தொழிலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஈடுபட்டனர்.
தற்போது இத்தொழிலில் ஏராளம் பேர் இணைந்ததால் கழுத்தறுப்பு நிலையில் தொழில் வந்துவிட்டது. சராசரியாக ஒரு தென்னம் மட்டை 2 ரூபாவுக்கு விற்பனையாகினால் இத் தொழில் இலாபகரமாக நடக்கும்.
ஆனால் இத் தொழிலில் நிறையப் பேர் ஈடுபட்டதனால் ஒரு மட்டை 4 ரூபா விலைக்கு உயர்ந்து விட்டது.
அதே வேளை ஒரு நாளுக்குப் பல ஆயிரம் மட்டைகளை அரைக்கும் இராட்சத இயந்திரங்களைத் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த இயந்திரங்களின் ஆனைப்பசிக்குச் சோறு போடக் கூடியளவு தென்னம் மட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியவில்லை.
அதேவேளை புத்தளம், குருணாகல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் இங்கு இந்த உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபடுவதனால் இலாபம் ஈட்ட முடிகிறது.
ஆனால் வடக்கில் உள்ளோர்கள் தமது உற்பத்திகளைத் தென்பகுதி வியாபாரிகளுக்குக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதனால் அவர்களால் சிறந்த இலாபம் ஈட்ட முடியவில்லை.
அத்துடன் வடக்கில் தொழிலாளர்களின் கூலி மட்டங்களும் உயர்வாக உள்ளன. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்க இலாப வீதம் குறைகின்றது.
பாரம்பரிய தொழில்களைத் தாண்டி நவீன தொழில்களைத் தேடுவோரை வெற்றிகரமான முயற்சியாளராக மாற்றவேண்டியது எம் கைகளில்தான் உள்ளது.
போரைக் காரணம் காட்டிய காலங்கள் போய்விட்டன. தாயகத்தின் வளங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய நவீன தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது எமது கைகளில்தான் உள்ளது.