சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)

சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)

  — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—

தமிழர் தரப்பினால் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பரபரப்புடன் நோக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 22.02.2021 அன்று ஆரம்பித்து 23.03. 2021 இல் வாக்கெடுப்புடன் நிறைவு பெற்றுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பான பிரேரணை இறுதித் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட விடயத்துக்கு வர முதல் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழர் தரப்பினால் விடுக்கப்பட்ட ‘இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப் படுத்தவேண்டும்’ என்ற கோரிக்கை குறித்து நோக்குவோம்.

2002இல் ‘Rome statute’ (ரோம் சாசனம் அல்லது உடன்படிக்கை என அழைக்கப்படும்) என்ற சர்வதேச ஆவணத்தின் ஊடாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- International Criminal Court (ICC) நிறுவப்பட்டது.

உலக சமாதானத்தைப் பேணவும் ஒடுக்கப்பட்ட இன குழுமங்களை பாதுகாக்கவும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணை பொறிமுறை மூலம் அடையாளம் கண்டு, தண்டிப்பதன் மூலமும் அக்குற்றங்கள் மீள நிகழாமல் உறுதிப்படுத்தவுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பெற்றது.

மேலே கூறப்பட்டுள்ள ‘Rome Statute’என்ற சர்வதேச ஆவணத்தை ஏற்றுக் கையொப்பமிட்டு, அதற்கமைவாக உள்நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து, அது அந்நாட்டு பாராளுமன்ற பெரும்பான்மையில் நிறைவேற்றப் பெற்றால்தான் அத்தகைய நாடொன்றில் நிகழ்ந்த குற்றச் செயல்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பெறும். இந்த ‘Rome statute’இல் இதுவரை இலங்கை கைச்சாத்திடவில்லை.

மேலும் பின்வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே சர்வதேச குற்றவியல் விசாரணை சாத்தியப்படும்.
*  ‘Rome statute’ இல் கைச்சாத்திட்ட நாடென்று தனது நாட்டில் நிகழ்ந்த பாரதூரமான குற்றச் செயல்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை தானாகக் கோரும்போது.
* ஒரு நாட்டில் நிகழும் குற்றச்செயல்களால் உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தல் உள்ளது என நம்பத் தகுந்த ஆதாரங்களைக் கொண்ட அறிக்கைகளின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் (UN security council) தீர்மானத்தின்படி ‘Rome statute’ இல் கைச்சாத்திடாத நாட்டில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரணைக்குட்படுத்தலாம்.
* ‘Rome statute’ இல் கைச்சாத்திட்ட நாடொன்றைப் பொறுத்தவரை நாட்டில் நடந்த பாரிய குற்றச் செயல்களுக்காக விசாரணை செய்யுமாறு பொது அமைப்புக்கள் (NGOO) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதாரபூர்வமான ஆவணங்களின் அடிப்படையில் கோரமுடியும்.

‘Rome statute’ இல் பின்வருவன போர்க்குற்றங்களாகக் குறித்துரைக்கப்பட்டுள்ளன.
# பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் கட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள்.
# போர்க் கைதிகளையும் (prisoners of war- POW) சரணடைந்தவர்களையும் படுகொலை செய்தல்.
# பலவந்தமாக ஆட்களை காணாமல் போகச் செய்தல்.
# போர்க்களத்தில் சிக்குண்ட பொதுமக்களுக்கான உணவு குடிநீர் மருந்துப் பொருட்கள் போன்றவற்றைத் தடை செய்தல்.
# சிறுவர்களை படைகளில் சேர்த்தல் (Child Recruitment)

மேலும் ‘Rome statue’ இல் கைச்சாத்திடாத நாடுகளைக் கூட மேற்படி குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு ‘Rome statute’ இன் பிரிவு 13 ஏ மற்றும் ஐ.நா. பட்டயத்திற்கு அமைவாக ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.  

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான மற்றுமொரு வழிமுறை ‘உலகளாவிய நியாயாதிக்கம்’ (Universal Jurisdiction) என்பதாகும். இது ‘சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்’ எனவும் அழைக்கப்படுகிறது. உலகின் எந்தப் பாகத்திலும் போர்க்குற்றம் இழைத்தவர் அவர் எந்த நாட்டுப் பிரஜையாகவிருந்தாலும் அத்தகையவர் ‘Rome statute’ இல் கைச்சாத்திட்ட வேறொரு நாடொன்றில் வதிவாரானால் அத்தகைய நபர் மீது விசாரணை நடத்தி, அவர் போர்க் குற்றவாளியாக காணப்படுமிடத்து அவரைத் தண்டிப்பதற்கு அந்நாடு அதிகாரமுடையது. அத்தகைய குற்றங்கள் போர்க்குற்றங்கள் (war crimes) மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் (Crimes against humanity) இனப்படுகொலை (Genocide) வகையைச் சார்ந்தவையாக நிரூபிக்கப்பட வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நாடு ஒன்றைத் தண்டிக்க முடியாது. குற்றமிழைத்த நபரொருவரையே தண்டிக்க முடியும்.

குற்றவாளி ஒருவரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேரடியாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த முடியாது. ஐ.நா. பொதுச் சபைக்கு பரிந்துரை செய்து, பின்பு ஐ.நா. பொதுச் சபை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரையை ஆராய்ந்து, அதன் பின்னர் ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தின் படி ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குப் பாரப்படுத்தி, இறுதித் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைதான் எடுக்கும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்ற  நாடுகளுக்கு எந்த தீர்மானத்தையும் இல்லாமல் செய்வதற்கான ‘வீட்டோ’ (Veto) அதிகாரமுண்டு.

இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை ‘Rome statute’ இல் கைச்சாத்திடாததாலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மேற்கூறப்பட்ட வீட்டோ அதிகாரத்தை உடையதும் இலங்கையின் நல்ல நட்புடனுள்ளதுமான ரஷ்யாவும் சீனாவும் நிரந்தர உறுப்பு நாடுகளாக விளங்குவதாலும், இலங்கையின் செயற்பாடுகளினால் உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும் இலங்கை விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தலையீடு செய்வதற்கான அல்லது இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கான சாத்தியம் அறவேயில்லை.

அத்துடன் ‘உலகளாவிய நியாயாதிக்க’ (Universal Jurisdiction) வழிமுறையின் கீழும் போர் குற்றங்களுக்காக இலங்கையின் இராணுவ அதிகாரிகளையோ சிங்கள அரசியல் தலைவர்களையோ தண்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் பெருமளவிலில்லை. போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று கருதப்படக்கூடிய இலங்கை ராணுவ அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் பெரும்பாலும் வெளிநாடுகளில் வதியவுமில்லை.

இவற்றையெல்லாம் ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்காமல் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அல்லது பழிதீர்க்கும் மனோநிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு தமிழர் தரப்பு தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் ஜெனிவா நோக்கி கோரிக்கை விடுத்தமை வெறுமனே கேலிக்கூத்து மட்டுமல்ல தாயகத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களை தவறாக வழி நடத்துவதுமாகும்.

இது ஒருபுறமிருக்க, மேற்சொன்ன தடைகளையெல்லாம் தாண்டி மேற்சொன்ன சர்வதேசச் சட்ட விதிமுறைகளையெல்லாம் திருப்தி செய்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்று நடைபெற்று அதன் பொறுப்பாளராக இறுதிக்கட்ட அல்லது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது பொறுப்பாகவிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பதில் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஏனைய இலங்கை ராணுவத்தின் கட்டளைத் தளபதிகள் குற்றவாளிகளாகக் காணப்படுகிறார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் இவர்களைக் குற்றவாளிகளாக காணுவதால் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய சமூக பொருளாதார அரசியல் அனுகூலங்கள் யாவை?தமிழீழம் கிடைத்துவிடுமா? அல்லது குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியாவது கிடைக்குமா? இல்லவேயில்லை.  

மற்றது, நடைமுறையில் இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடைபெற்று மேற்கூறப்பட்டவர்கள் குற்றவாளிகளாக காணப்படுவதற்கான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு எடுக்கப்போகும் காலத்தை கணக்கிட்டால் விசாரணை முடிந்து தீர்ப்பு எழுதும்போது குற்றவாளிகளாக காணப்படுகின்ற அநேகம்பேர் மூப்படைந்து இயற்கை மரணம் எய்தியிருப்பார்கள். அப்போது இத்தகைய விசாரணை அர்த்தமற்றதாகிவிடும்.

இலங்கையைப் பழிதீர்ப்பதால் அல்லது ராஜபக்சாக்களைப் பழிதீர்ப்பதால் அல்லது இலங்கை இராணுவ அதிகாரிகளைப் பழிதீர்ப்பதால் இலங்கை தமிழர்கள் மீதான சிங்கள பொதுமக்களின் வன்மம் அதிகரிக்குமே தவிர, அதனால் நீண்ட கால நோக்கில் இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் ஆகப்போவதில்லை. எங்கேயென்று காத்திருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு மேலும் தீனி போடுவதாகத்தான் இது அமைந்து, மேலும் மோசமடையும். இது இருக்கின்ற பிரச்சனைகளை அதிகரிக்கச்செய்யுமே தவிர பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத்தரமாட்டாது.

எந்தவிதமான திட்டமிடல்களோ-தயார்படுத்தல்களோ- இராஜதந்திர நகர்வுகளோ முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த தத்துவார்த்த தளமோ தொலைதூர பார்வையோ இல்லாமல் ஒரு கட்சி நலன் சார்ந்த தேர்தல் தேவைகளுக்காக 1976 இல் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றிய தமிழீழ தனிநாட்டு கோரிக்கைக்கு வரலாற்றில் என்ன நடந்ததோ அதுதான் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகள் என ஊடகங்களால் குறிசுடப்பட்டுள்ள கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரவை கழகம் போன்றவைகளும் புலம்பெயர் நாடுகளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகளும் விடுத்த கோரிக்கைக்கும் நடந்திருக்கிறது/ நடக்கப்போகிறது.

இந்த யதார்த்தத்தை வழமைபோல் உணர்வு நிலையிலிருந்து நோக்காமல் உலக ஒழுங்கை புரிந்துகொண்டு அறிவு பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இலங்கைத் தமிழர்கள் இலவு காத்த கிளியாக இன்னும் காலத்தை வீணடிக்க வேண்டிவரும்.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் விடயம் நடைபெறப் போவதுமில்லை. எல்லாத் தடைகளையும் தாண்டி அவ்வாறான ஒரு விசாரணை நடைபெற்றாலும் கூட அதனால் தாயகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதுமில்லை. எனவே எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான இராஜதந்திர அரசியலும் சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாகக் கைகோர்த்து செல்லக்கூடிய ஒரு புதிய அரசியல் கலாசாரமொன்றைத் தமிழ் மக்கள் மத்தியிலே கட்டி வளர்ப்பதற்கான அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டும். அரசியல் வியூகங்கள் அவ்வப்போது இலங்கையின் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுடன் மோதல்களை தவிர்த்துக் கொண்டு பேணப்படக்கூடிய தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே வெற்றிகளை கொண்டு சேர்க்கும். இப்படி ஒரு நிலைமை தமிழர் அரசியலில் மேலோங்குமாயின் சிங்கள முற்போக்குச் சக்திகளும் சிங்கள மக்கள் மத்தியிலேயுள்ள நியாய புத்தி படைத்த புத்திஜீவிகளும் ஏன் கணிசமான பாமர சிங்கள மக்களும்கூட தமிழர்கள் மீது ஆதரவு காட்டும் நிலைமை நிச்சயம் உருவாகும்.

சர்வதேச நாடுகளை நம்பி குறிப்பாக மேற்குலக நாடுகளை நம்பி இலங்கை அரசாங்கங்களைப் பகைத்துக் கொள்வதை விட இலங்கையின் சாதாரண சிங்கள மக்களின் மனங்களை வென்று இலங்கைத் தமிழர்கள் மீதான அவர்களது நம்பகத்தன்மையை கட்டி எழுப்புவதன் மூலம் தமிழர்கள் எவ்வளவோ சாதிக்க முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தமிழரசுக் கட்சி காலத்திலிருந்து இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம்வரை தமிழ்த் தேசிய அரசியல் என்பது தனது குறுந்தமிழ்த் தேசியவாத செயற்பாடுகளால் சாதாரண சிங்கள மக்கள் ஆத்திரமூட்டப்பட்டு வந்திருக்கிறார்களேயல்லாமல் அவர்களது மனங்கள் வெல்லப்படவேயில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் ஏகாதிபத்திய சார்பு நிலை கொண்ட பிற்போக்குக் குறுந்தமிழ்த் தேசியவாதிகளிடமிருந்து விடுபட்டு, முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்து சிந்தித்துச் செயல்படக்கூடிய விளிம்பு நிலை தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கு அரசியல் சக்திகளின் கைக்குள் வர வேண்டும். இது தற்போது ‘தமிழ்த்தேசிய’ அரசியல் சந்தையில் வியாபாரம் நடத்துகின்ற போலித் தமிழ்த் தலைவர்களால் சாத்தியப்படாது. மக்களால் மட்டுமே இம்மாற்றம் சாத்தியப்படும். இந்தப் பின்புலத்தில் நடந்து முடிந்துள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் நாலாவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அடுத்த பத்தியிலிருந்து (சொல்லத் துணிந்தேன்-66) ஆராயலாம்.