— இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் —
‘அரங்கம்’ அமைப்பு சார்பில் எடுக்கப் பட்டிருக்கும் ’முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்’ என்ற ஆவணப் படத்தை இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் பார்ப்பதற்குப் பல உதாரணங்களை இங்கு முன்வைக்கலாம். இந்தச் சிறு கட்டுரையில், சாதி மத பேதமின்றி, யாவருக்கும் கல்வியறிவைக் கொடுக்கவேண்டுமென்ற அவரது கனவால் இன்ற கிழக்கிலங்கை மட்டுமல்ல இலங்கை பூராவும் முஸ்லிம் மக்கள் கல்வியில் முன்னேறியிருப்பதற்கு அவர் செய்த கைங்கரியம் பற்றி ஒரு முஸ்லிம் எழுத்தாளர், ஆய்வாளர், சொன்னவற்றை எழுத்துருவிற் தருகிறேன்.
கனடா வாழ், தம்பிராஜா பாபு வசந்தகுமார் அவர்களின் தயாரிப்பு அனுசரணையுடன், ’அரங்கம்’ அமைப்பின் சீவகன், அவரின் குடும்பத்தினர், மற்றும் பல கலைஞர்களின் உதவியுடன் எடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், விபுலானந்த அடிகளார் பற்றிய பன்முக ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தை வெளிக் கொண்டுவரப் பாடுபட்ட அத்தனைபேருக்கும் எனது மனதார்ந்த நன்றிகள்.
இந்த ஆவணப் படத்தில், விபுலானந்தர் ஆற்றிய பல சேவைகள், இசை, இயல், நாடகம் பற்றி அவர் ஈடுபட்டிருந்த பன்முகத் தேடல்கள் பற்றிப் பல அறிஞர்கள் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.
விபுலானந்தர், ’மாதங்க சூளாமணி’ எழுதியதற்கு உந்துதலாகவிருந்தவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். விபுலானந்தரின், இயல், இசை, நாடகத்துறைக்கு அப்பாலான இன்னுமொரு மகத்தான சேவையான கல்விச் சேவையையும், முஸ்லிம் மக்களையும் பற்றிச் சில வரிகள் எழுதுவது பற்றி மகிழ்கிறேன்.
அவரின் அடிப்படை ஆவலாக மலர்ந்த, அத்மீகச் சேவையுடன் கலந்த கல்விச் சேவை அதனால் இன்று முஸ்லிம் ஆளுமையாக விளங்கும் சிலர் பற்றி இந்த ஆவணப் படத்தில் திரு. ஆதம் லெவ்வை அஹமட் அவர்கள் (ஆய்வாளர், மற்றும் எழுத்தாளர்) சொல்லியவை இங்கு பதிவிடப்படுகின்றன.
‘விபுலானந்த அடிகளார் ஒரு முஸ்லிம் நேசராக வாழ்ந்தார். ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் மக்களின் கல்விக்கு அபார பங்களிப்பு செய்திருக்கிறார். அரசாங்கதுறை, கல்வித்துறை, சமுகத்துறையில் சுவாமிகளின் செவ்வாக்கு இழையோடுவதை நாங்கள் காண்கிறோம்.
‘இலங்கை அரசியலில், எத்தனையோ மஜீத்மார்களைச் சுவாமி விபுலானநந்தர் சிவானந்தா பாடசாலை மூலம் உருவாக்கியிருக்கிறார். சம்மாந்துறையில் ஒரு அமைச்சர் மஜீத், மூதூரிலே ஒரு மஜீத், பொத்துவில் தொகுதியில் ஒரு மஜீத். இவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பல சேவைகளைச் செய்தார்கள்.”
இவ்விடத்தில், மூதுர் பாராளுமன்றப் பிரதிநிதியாகவிருந்த ‘மஜீத்’ பற்றிய எனது நேரடி அனுபவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் திருகோணமலையில் மருத்துவத் தாதியாகவேலை செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் எங்கள் திருமணம் நடந்தது. எனது கணவர் திரு பாலசுப்பிரமணியம் கொழும்பிலிருந்தார். கணவர் கொழும்பிலிருப்பதால், எனது வேலையைக் கொழும்புக்கு மாற்றித் தரச் சொல்லிச் சுகாதாரத் திணைக்கழகத்திற்கு எழுதி, எழுதி, அவர்களின் ஏனோ தானோ என்ற போக்கைப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாமல், நாங்கள் இருவரும் சேர்ந்து லண்டன் வர அப்ளை பண்ணியிருந்தோம். அதையொட்டி அடிக்கடி கொழும்பிலிருக்கும் பிரிட்டிஷ் ஹைகொமிஸன் போகவேண்டியிருந்தது.
திருகோணமலையிலிருந்துகொண்டு அடிக்கடி கொழும்பு வருவதால் மிகவும் கோபமாக இருந்த கால கட்டத்தில், திரு மஜீத் அவர்களின் மிக நெருங்கிய உறவினப் பெண் ஒருத்தர், (அவர் மனைவியா அல்லது சகோதரியா என்று எனக்கு ஞாபகமில்லை) எனது வார்ட்டில் பிரசவத்திற்கு வந்திருந்தார். எனது பராமரிப்புக்கு நன்றி சொல்ல வந்த திரு மஜீத் அவர்கள், ’உங்களின் அன்பான பராமரிப்புக்கு எப்படி நன்றி சொல்வது’ என்று சொல்லத் தொடங்கியதும், நான் தயங்காமல், ‘உங்கள் உதவியால் எனக்கு கொழும்புக்கு மாறுதல் கிடைத்தால் மிகவும் சந்தோசப் படுவேன்’; என்று சோகத்துடன் முணுமுணுத்தேன். அதைத் தொடர்ந்து, நான் ஏன் கொழும்பு செல்லத் துடிக்கிறேன் என்பதைச் சொன்னேன். அவர், தன்னால் முடியுமானவரையில் எனக்கு உதவி செய்வதாகப் புன்னகையுடன் சொல்லிச் சென்றார். சில நாட்களின் பின், சுகாதார அமைச்சிடம் இருந்து எனக்கு மாற்றல் உத்தரவு வந்தது.
திரு மஜீத் அவர்கள் அன்று செய்த நன்றியை நான் மறக்க மாட்டேன். திரு மஜீத் அவர்களும் நானும், விபுலானந்தர் ஆரம்பித்த கல்விக்கூடங்களில் வெவ்வேறு காலத்தில் எங்கள் ‘அகர முதல எழுத்துக்களை’ ஆரம்பித்தவர்கள் என்பது விபுலானந்தரின் ஆவணப் படத்தைப் பார்த்போது புரிந்தது. விபுலானந்தரின் அறத்தின் வலிமை அளவிட முடியாதது. அவர் ஆரம்பித்த கல்வியில், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது.
கிராமத்தில் நான் படித்தகாலத்தில், அக்கரைப்பற்று மாவட்டப் பாடசாலைகள் ‘விபுலானந்தரின் வழிகாட்டிகளின் ஒருத்தரான பாரதியின் பிறந்த தின விழாவை ஒட்டி நடக்கும் கட்டுரைப்போட்டி பேச்சுப் போட்டிகளில் பங்கெடுப்போம். ஒருதரம் அக்கரைப்பற்று முஸ்லிம் மாணவர் ஒருத்தரும் நானும் பரிசு பெற்றோம். அவர் பெயர் ஞாபகமில்லை. பாரதி பிறந்த தின விழாவில் சாதி, மத, பேதமற்ற மனித நேயமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம், நீதி உயர்ந்த மதி கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’ என்பது போன்ற பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலம் வருவோம். பாரதியை அடிப்படையாக வைத்த கலாச்சாரப் போட்டிகளில். பாரதியின் பாடலான ’கும்மியடி பெண்ணே’ என்ற பாடலுக்கு எனது தமக்கையார் சொல்லித் தந்த கும்மியை ஆடியிருக்கிறோம்.
அக்கால கட்டத்தில் சமய வேறுபாடுகள் எங்கள் கிராம வாழ்க்கையிலில்லை.
ஒருத்தர் சமயப் பண்டிகைகளை இன்னொருத்தர் பகிர்ந்து கொள்வோம். இந்த, அன்பு கனிந்த அழகிய கிராமத்து உறவுகள்’ பற்றி எனது ‘தில்லையாங்கரை’ நாவலில் எழதியிருக்கிறேன்.
சாதி சமய, இனபேதமற்ற அந்த உறவுகள் மலரவும் வளரவும், ஒரு பண்பான கலாச்சாரம் கிழக்கிலங்கையில் தொடரவும் சுவாமி விபுலானந்தர் எப்படி அத்திவாரமிட்டார் என்பதற்குத் திரு. ஆதம் வெல்வை அஹமட் அவர்கள் கூற்றைப் படிப்பது நல்லது.
விபுலானந்தர் இராமகிருஷ்ண மிசன் மூலம் கிழக்கிலங்கையில் கல்வியை மேம்படுத்த, ஒன்றிரண்டு கிறிஸ்தவப் பாடசாலைகள் தவிர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கால கட்டத்தில், கல்வியில் முஸ்லீம்கள் மேன்மையடைய அடிகளார் செய்த சேவை பற்றி ஆதம் வெல்லை அஹமட் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,.
‘விபுலானந்தர் பல முஸ்லிம் கிராமத் தலைவர்களை உருவாக்கியிருக்கிறார். மருதமுனை மஜீத் என்பவர்தான் கிழக்கு மாணத்திலேயே முதலாவது விஞ்ஞான பட்டதாரி. சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தவர். சுவாமியினுடைய மாணவன். சம்சுதீன் என்பவர் அட்டாளைச் சேனையைச் சேர்ந்தவர். கல்விப் பணிப்பாளராக இருந்தவர். அவரை பி.எஸ்.ஸி என்று சொல்வார்கள். அவர்தான் அட்டாளைச்சேனையின் முக்கிய பதவியிலிருந்தவர். இபுறாலெவ்வை என்பவர், பொலனறுவையில் பி.ஏ. அவர் ஓணகமயைச் சேர்ந்தவர்.’
‘சுவாமி விபுலானந்தர் சிவானந்தாவிலிருந்தபோது, இன்று பேராசிரியர், உவைஸ் அவர்களை உலகம் போற்றும் தமிழ் அறிஞராகக் காண்பதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளாராகும்,
எஸ் எம். கமால்தீன் இந்த நாட்டின் மிக முக்கியமான ஒரு தமிழ்ப் பேரறிஞர், அவரையும் உருவாக்கியவர் சுவாமி விபுலானந்தரே. நல்லதம்பிப் புலவரிடம் சாகிராக் கல்லூரியிற் பயின்றபின்தான் கமால்தீன் அவர்கள் பல்கலைக்கழகம் சென்றார். அவர் இன்று உலகம் போற்றும் அறிஞராக வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கிறார்’.
‘சுவாமி அவர்கள் அவரின் நண்பர்கள் மூலமும், முஸ்லிம் மக்களுக்குப் பல உதவிகள் செய்திருக்கிறார். ஏ.எஸ்.எம்.அசீஸ் அவர்கள் இந்நாட்டின் முதலாவது முஸ்லிம் சிவில் சேர்வண்ட். அவர் கல்வித்துறையை நாடுவதற்கே காரணம் சுவாமி விபுலானந்தர் என்பதை அவரே (அசீஸ்) கூறியிருக்கிறார். அவர் சாகிராக் கல்லூரி அதிபராவதற்கும், அகில இலங்கை கல்வி சகாயநிதியை உருவாக்கி, எத்தனையோ முஸ்லிம்களை கல்விபால் ஊக்குவித்து, அவர்களைக் கல்விமான்களாக்கியதற்கும் சுவாமிக்குப் பங்குண்டு’ என்று சொல்கிறார்
அத்துடன் சுவாமியின் சாதி சமயமற்ற அறம் சார்ந்த அறிவுத் தேடல் பற்றிச் சிலவரிகள் சொல்லவேண்டும். அவர் துறவியாகக் காரணமாகவிருந்த இராமிருஷ்ண மிசன் சுவாமி பரமஹம்சரால் உண்டாக்கப்பட்டது. பரமஹம்சர் இந்து சமயம் மட்டுமல்லாமல் மற்ற சமயங்களிலும் ஈடுபாடுள்ளவர் என்று அவர் பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன. முக்கியமாக இஸ்லாத்தின் ஒரு அங்கமான ‘சூபிஸ்; வழிபாட்டுமுறையிலும் மிகுந்த ஈடுபாடுகள் வைத்திருந்தார் என்று தெரிகிறது. பரமஹம்ஷரின் வழிவந்த விவேகானந்தர் சமய, இன, நிறம் கடந்த மனிதநேயத்தை இந்தியா மட்டுமல்லாது, அகில உலகமெல்லாம் பரப்பியவர். அவரின் மனிதநேயக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட வெள்ளையினப் பெண்ணான நிவேதிதா தேவி அம்மையார். கத்தோலிக்கம், இந்து சமய அறிவு மட்டுமல்லாமல் பௌத்த சமய வழிமுறைகளிலும் ஈடுபாடுடையவர். நிவேதிதா அம்மையாரைச் ’சக்தியின்’ பிம்பமாகக் கண்ட பாரதி அவரின் சாதியினரான பார்ப்பனியரால் ஒதுக்கி வைக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தவர். இவர்கள் வழிவந்த சுவாமி விபுலானந்தர் தன்னோடு வாழும், தன்னிடம் மாணவர்களாக இருப்போரின் சமயம் பற்றி அறிய முன்வந்தது ஆச்சரியமலல் இதைப் பற்றி விளக்கும் திரு. ஆதம்வெல்லை அஹமட் அவர்கள் மேலும் குறிப்பிடும்போது,
‘குரானை மற்ற மதத்தினர் படிக்கக் கூடாது என்றபோது சுவாமிகள் மிகவும் ஆத்திரப்பட்டார். அவர்,’ குரான் என்பது உண்மை, அந்த உண்மைக்கு நடுவே யாரும் நிற்க முடியாது. அந்த உண்மையை அறியும் உரிமை எல்லோருக்குமிருக்கிறது’ என்று சுவாமி விபுலானந்தர் ஆத்திரத்துடன் தெரிவித்திருந்தார்.’
சுவாமி விபுலானந்தர் ஆவணப் படம் பார்க்க முதலே, முஸ்லிம் மக்களின் வழிபாட்டு முறையை அறிவதற்காக நான் ‘புனித குரான்’ வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
சாதி சமயப் பிரிவினைகளால் சிதறுப்பட்ட சமுதாயத்தை, எல்லைகளைக் கடந்தமனிதநேயக் கண்ணோட்டத்தில் மக்களை ஆரத்தழுவிய சுவாமி விபுலானந்தரின் தெய்வீகமானதும், ஆழமானதுமான அன்பை விபரித்த, படுவான்கரையைச் சேர்ந்த, மீன்பிடித் திணைக்கள மாவட்ட முகாமையாளாரான, மறைந்த மாணிக்கம்பிள்ளை கிருஷ்ணபிள்ளை என்ற கிஸ்தவ மத்தைச் சேர்ந்த அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி, மாநிலத்தை ஒரு நொடியில் வகுத்து, குணமான மனிதரையும் படைத்து தான் உதித்த குருவாய் வந்து,
சனமான சம்சாரம் ஒன்றில்லாமல், சன்னியாசி போலிருந்து தவத்தைக் காட்டி, அன்பான சித்தர்களை இருத்தி, அகன்ற தளம் சென்றவனே அருளுவாயே’ என்ற பாடலைச் சொல்லி ‘குருவாக வந்தவர் யார்?’ என்று கேட்டு விட்டு, ‘இயேசுதான்’ என்கிறார். அவர் தொடர்ந்து சொல்லும்போது, ‘விபுலானந்தரும் கிறிஸ்துவாகவே வாழ்ந்தார். அத்துடன், எனது பள்ளிக் கூடத்தில், மஜீத் என்ற ஒரு முஸ்லிம் சகோதரர், சொன்னார், ’தம்பி, சுவாமியைப்போல் ஒருத்தரை என்வாழ்நாளில் கண்டில்லை. அவர் இமயமலைக்குப் போகும்போது, ஸ்ருடண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு, அவர்களைப் பார்த்துக் கும்பிட்டு, தான் இமயமலைக்குப்போகப் போவதாகச் சொன்னார். அப்போது. மஜீத் அண்ணா யோசித்தாராம். ’நாங்க முஸ்லிம், எங்கட மார்க்கத்தின்படி யாரையும் கும்பிட முடியாது,’ அப்போது சுவாமிகள் வந்து, முஸ்லிம்கள்கைகளைப் பிடிக்கும் மாதிரிப் பிடித்து மஜீத் அவர்களிடம் வணக்கம் சொல்லி விட்டுப் பிரிந்து சென்றாராம், மஜீத் சொன்னாராம், ‘இவர் ஒரு கடவுள், அப்படி ஒரு ‘இது’ உள்ளவர்’.
சுவாமிகளைப் பற்றிய வாழ்க்கையைப் பல கோணங்களிலும் வைத்து ஆய்வு செய்யும்போது, அவர் எவ்வளவு தூரம் மனித மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் உழைத்தார் என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.
இன்று கிழக்கிலங்கையில், தமிழ், முஸ்லிம் பிணக்குகளையுண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம்தேட மிகப் பிரமாண்டமான சக்திகள் பல வழிகளையும் தேடுவதை சமுதாய பிரக்ஞை உள்ள தமிழ்-முஸ்லிம் புத்திஜீவிகள் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சுவாமிகள் அமைத்த அறமும் அறிவும் சார்ந்த ஒரு ஒற்றமையின் அத்திவாரத்தை உடைக்கப் பல புல்லுருவிகள், உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் முனைவதையுணர்ந்து கிழக்கின் ஒற்றுமையையும் வளத்தையும் காப்பாற்றுவது எதிர்கால இளைஞர்களின் கைகளிலுள்ளது.
சுவாமி எங்களின் மேம்பாட்டுக்குத் தன்வாழ்க்கையை அர்ப்பணித்தார். அந்தத் தியாகத்தின் தீபம் அணையாமற் பாதுகாப்போம்.
‘என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு, உய்வில்லை,
செய் நன்றி கொன்ற மகர்க்கு’ என்ற குறளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, ஒன்றே குலமாக மனிதத்தை மதித்த விபுலானந்தர் எங்களுக்குச் செய்த சேவைக்குத் தலைவணங்குவொம்.
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’