— அ. தேவதாசன் —
1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை…
நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெற்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அரசியல் அகதியாக பதிவு செய்யவேண்யது அவசியம். அதனாலையே அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்தேன்.
1983 இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து தனி நாட்டிற்கான ஆயுதப்போராட்டம் போன்றவை இலங்கையை யுத்த பூமியாக மாற்றின. இதுவே என்னை நிரந்தர அரசியல் அகதியாகவும் மாற்றியது.
நான் பிரான்ஸ் வந்த புதிதில் தமிழர்கள் மிக குறைவானவர்களே இருந்தனர். இதனால் எங்காவது ஒரு தமிழ் முகத்தை பார்த்தவுடன் நட்புக் கொண்டாடி விடுவோம். காரணம் தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் தெரியாததும் பிரெஞ்சு மொழி அறவே தெரியாததுமாகும். தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஊர் தெருக்களை விசாரிக்க மறந்ததில்லை. ஆனாலும் அதை பெரிதுபடுத்திப் பார்க்கும் சூழல் அப்போது இருக்கவில்லை.
நான் பிரான்ஸ் வரக்காரணமாக இருந்த அண்ணன் காசி, ரஞ்சினி அக்கா அவர்களிடமே வந்து சேர்ந்தேன். அது ஒரு சிறிய அறை, அதற்குள் ஏற்கனவே நண்பன் தங்கம் உட்பட ஐவர் இருந்தனர். நான் ஆறாவது ஆள். மிகுந்த சிரமத்தோடேயே பல நாட்கள் கழிந்தன.
பின்னர் ரஞ்சினி அக்காவின் முயற்சியால் வேறு ஒரு வீடு எடுத்தோம். அதற்குள் பெடியங்கள் தனியாக வந்து விட்டோம். ஒரு சிறிய அறை, அதற்குள் சிறிதாக ஒரு குசினி, ரொய்லெற் இதை ஸ்டூடியோ என அழைப்பர். இதற்குள் ஏழுபேர் இருந்தோம். சில நாட்களில் பத்து பன்னிரண்டாகவும் கூடிவிடும். ஒரு போர்வைக்குள் நான்கு பேர் முடங்கும் நிலை. இவ்வேளைகளில் ஆண்களும் ஆண்களும் அணைத்தபடி சுகம் காண்பது ஒன்றும் புதினமில்லை.
நமது அறையில் ரீ.வி, டெக் எதுவும் கிடையாது. படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் பாரிஸ் நகரில் பெல்வில் எனும் பகுதியில் ஒரு தமிழ் கடை இருந்தது, அங்கே ரீ.வி, டெக், தமிழ் படக் கசெட் வாடகைக்கு விடுவார்கள். அதை இரண்டு நாள் வாடகைக்கு நாம் காவி வந்து. படங்கள் பார்த்து மகிழ்வோம். மாதம் ஒரு முறையாவது இந்நிகழ்வு இடம்பெறும். இப்படியான நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் பல நண்பர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். அப்போது சாப்பாடு பெரிய பிரச்சினை ஆகிவிடும். சினிமா பார்க்கும் ஆர்வத்தில் யார் சமைப்பது என்னும் குழப்பத்தில் இருக்கும்போது நண்பர்கள் பலர் வந்து விட்டால் சொல்லவா வேண்டும். சோறும், கோழிக்கறியும், பருப்பும் – தினமும் காலை, இரவு, பகல் என மூன்று நேரங்களும் இதுவே எமது உணவு. அதில் நண்பர்கள் அதிகமாக வந்து விட்டால் கறிக்குள் தண்ணீர் ஊற்றி பெரிதாக்கி விடுவோம். ஒருவருக்கு ஒரு இறைச்சித் துண்டு கிடைத்தால் அது அவரது அதிஷ்டம்.
அந்த சில வருடங்கள் யாரு என்ன சாதி என்பதை கண்டுகொள்ளாத காலம். ஒரே கோப்பையில் ஒன்றாக கூடிச் சாப்பிட்ட காலம்.
யாழ்ப்பாணமே ஐரோப்பாவுக்கு…
பின்னர் இலங்கையில் யுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க யாழ்ப்பாணமே ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தது. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு தமக்கு தமெக்கென வீடுகள் எடுக்கத் தொடங்கினர். அண்ணன், தம்பி, மாமன், மச்சான், ஊரான், உறவு என தனித்தனி குடும்பங்களாக வீடுகள் அதிகரித்தன. அதோடு சேர்ந்து சாதிச்சமூகமும் தளிர் விடத்தொடங்கியது.
அரபு ஆபிரிக்க நாட்டவர்களின் கைவசமிருந்த பாரிஸ் நகர உணவகங்களின் சமையலறைகள், குறைந்த விலையில் நிறைந்த சேவை என்பதற்கு, இணங்க தமிழ் இளைஞர்களின் கைகளில் மாறின. அரபு நாட்டவரின் பலசரக்கு கடைகள் தமிழர்கள் கைக்கு மாறின. அடையான் கடையென கேலியாக அழைக்கப்பட்ட கடைகள் தமிழர்களால் அடையாத கடைகளாகவே மாறிப்போயின. கடைகளின் வாடகைகளும், விலைகளும் இரட்டிப்பாக ஏறிப்போயின. இரவு, பகல் பாராமல், ஊண், உறக்கம் இன்றி பணமே வாழ்வென வாழ்வு முடங்கிப் போனது.
சிலர் மன ஆறுதலுக்காகவும், சிலர் பெயர் புகழ்ச்சிக்காகவும், சிலர் ஊர் மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், சிலர் தொழிலாகவும் ஊர்ச்சங்கங்களை உருவாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள குக்கிராமங்களின் பெயரிலும் சங்கங்கள் அமைந்தன. ஊரில் உள்ள பாலர் பாடசாலையில் இருந்து பட்டப்படிப்புக்கு தேர்வாகும் பென்னம்பெரிய பாடசாலை வரை சங்கங்கள் உருவாகின. ஊரில் உள்ள குலதெய்வக்கோயில்கள் தவிர இந்தியாவின் பெரும்கடவுள்கள் அனைவரும் சிலையாகவும் சிற்பமாகவும் அவைகளுடன் கூடவே சிலைகளுக்கு பூசைகள் செய்ய அந்தணர்களும் வந்திறங்கினார்கள்.
ஒருபுறம் சாதி பேதமற்ற சமுத்துவ தமிழீழம் வேண்டும் என போராடியவர்களே, மறுபுறத்தில் சாதிச் சங்கங்களையும், கோயில்களையும் நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஊரில் மாட்டுக்கொட்டில் அளவு இருந்த கோயில்களெல்லாம் கோபுரமும் கலசமுமாக கொழுத்து வீங்கிவிட்டன. புலம்பெயர் தமிழர்களின் அன்பளிப்பால் வாங்கிய சாமிதூக்கும் வாகனங்கள் தூக்க ஆளின்றி துருப்பிடித்து கிடக்கின்றன.
ஊரில் இருந்து வந்த கத்தோலிக்க பக்தர்களும், சைவப்பழங்களும் தங்கள் தங்கள் மதவழிகளில் நம்பிக்கை அற்றவராய் பைபிள் என்னும் ஒரு புத்தகத்தில் இருந்து உருவான பல விதமான சபைகளிலும் தங்களை இணைத்துக்கொண்டனர். புகையிரத நிலையங்களிலும் தெருக்களிலும் குழந்தை குஞ்சுகளுடன் நின்று மத உபதேசம் வழங்குகின்றனர்.
இவர்கள் தெருவில் போகும்போது வீட்டுக்கதவில் தமிழர் பெயரைக் கண்டால் கதவைத்தட்டி நேரடித் தரிசனமும் கொடுப்பர். ஒருநாள் எனது வீட்டுக் கதவையும் தட்டினார்கள். வணக்கம் சொன்னார்கள், நான் பதிலுக்கு அஸ்லாம் ஆலேக்கும் என்று சொன்னேன், திரும்பிக்கூட பார்க்கவில்லை கழன்று விட்டார்கள். இவர்களது கவர்ச்சிப்பேச்சு முஸ்லிம்களிடம் எடுபடாது என்பதுதான் இதற்குக் காரணம்.
இவர்களிடத்திலும் சாதிச்சபைகளும் உண்டு. ஆனாலும் ஒரு சிறப்பம்சமும் உண்டு.
இந்துக்கோயில்களில் பிராமணர் என்கிற சாதியினர் மட்டுமே அர்ச்சகராக சமஸ்கிருத மொழியில் பூசை செய்ய முடியும். ஆனால் கிறித்தவ சபைகளில் எழிய சாதிகள் என ஒதுக்கப்பட்டோரும் போதகர்களாக வரமுடியும். இதற்காகவே பலர் சபைகளில் இணைந்தனர்.
ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள், பாடசாலைச் சங்கங்கள், ஆலயச்சங்கங்கள் அனைத்திலுமே சாதிய விசம் கலந்தே கிடக்கிறது.
(தொடரும்……)