“இச்சா” பற்றி ஒரு அறிமுக எழுத்தாளர்

“இச்சா” பற்றி ஒரு அறிமுக எழுத்தாளர்

    — அகரன் — 

ஷோபா சக்தியின் அடர்ந்த எழுத்தில் 2019 கார்த்திகையில் வெளியான நாவல் “இச்சா”.  

இச் சாவுகள் பூக்கள்போல உதிர்ந்துவிடுமோ?வாசங்களை அனுபவிக்கும் தலைமுறையுண்டோ?இனக்காப்புத்தீயில் உருகிய ஒரு இளம் ‘ஆலா’ என்ற ஆயுதப் பெயரைக் கொண்ட போராளி பற்றிய கதை “இச்சா”! 

இலங்கை என்ற தீவை, பேய்கள் ஆள ஆரம்பித்த அந்த அழிவு நாளில், முதலில் சிங்கள இனம் தமிழ்ச்சதை விரும்பிய அம்பாறை மண்ணில், அதிலும் முதல் இன அழிப்பு நிகழ்ந்த இங்கினியாகல (1958) பகுதிகளில் கதை ஆரம்பிக்கிறது. 

1989 இல் பிறந்த ‘ஆலா’ என்ற பெண் தன் கிராமத்தில் காலதிகாலமாக இருந்த குடிகள் கரைந்து, கலைக்கப்பட்டு சிங்களத்தில் படிக்கும் நிலை. அருகே குடியேற்றப்பட்ட சிங்களக் குடிகளின் அழிப்பில் எஞ்சிவாழ்ந்த குடிகளில் ஆலா குடும்பமும் ஒன்று. அவளோடு சேர்ந்து பிறந்த தம்பி தலை வெட்டப்பட்டு கிராமச் சந்தியில் கிடக்கிறான். ஒன்றாக பழகிய சிங்கள நண்பர்களே அதைச்செய்கிறார்கள். (யுத்த நிறுத்த காலத்தில்) 

ஆலா, போராளியாகிறாள். பின்னர் கரும்புலியாகிறாள். கொழும்பில் தாக்குதலுக்கு தயாரான நிலையில் கைது செய்யப்படுகிறாள். 

இறுதியுத்த காலத்தில் அவள் 322 வருட சிறைத்தண்டனையில் கண்டியில் 200 வருட பழமையான சிறையில் இருக்கிறாள். 

அவள் அனுபவித்த கொடூரங்களில் இருந்து மீண்டாளா? ஆம் மீண்டு வேறு கோரத்தில் சிக்கினாள் !  

இறுதிவரை அவள் கோழைபோன்ற சாவை விரும்பவில்லை. இறுதியில் ஐரோப்பிய மண்ணில் ஆலா ‘338 லபுவா மக்னம்’ குண்டு துழைத்து ஆலாப்பறவைபோல நீண்ட பயணம் போனாள் !  

** 

ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து தேர்ந்த திரைக்காவியம் போல் திட்டமிட்ட வடிவமைப்பு இந்த நாவல். 

கிழக்கு மக்களின் பழமை, வழமை, வாழ்வு பச்சையாகப் பதியப்பட்டுள்ளது. அம்பாறை மண்ணில் 1948 இல் 81% ஆக இருந்த தமிழர் இன்று 15% மாறிய கதையை குருதி உறையச்சொல்கிறது. 

தமிழ் கிராமங்களும், ஆறுகளும் சிங்களப் பெயராய்மாறின நம் கண்முன்னால்.  

‘’உறாப்பிட்டியாவில் வைத்த 3 அடி புத்தர் சிலை இப்போ 15 அடி வளர்ந்துவிட்டது’ என்ற வசனம் எல்லாவற்றையும் சொல்கிறது.  

வீரமுனை சித்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலில் 90களின் ஆரம்பத்தில் 400 பொதுமக்கள் வெட்டிக் கொல்லப்பட காரணமாக இருந்த முகமது ரியாஸ் ஐ புலிகளின் கிளைமோர் கொன்றது. என்று உண்மைகளை குழைத்து எழுதப்பட்டுள்ளது.  

நாவலுக்காக உருவாக்கப்பட்ட புது மொழியும், நாடும் அபார உழைப்பு. 

கிழக்கு மாகாணச் சொல்லடைகள் ஒத்தாப்பு, பூஞ்சை, சுலுவன், கூழக்கையன், காளி, காளாத்தி, நீலி, நீலகண்டி என்றும் அரிய நற்சொற்களை (சுனை, விடைப்பு) பயன்படுத்திய ஆசிரியரின் ஆளுமை மதிப்புமிக்கது. 

நாவலில் இனங்களை கடந்து எல்லா இடங்களிலும் மிருகங்கள் இரண்டு காலில் இருப்பதை உரித்துக்காட்டுகிறார். ஒரு பெண் “ஆண் அழுக்கு”களால் படும் அவஸ்தை வலிகளின் உயர் வலி.  

நாவலை உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடும், தான் வாழும் பிரான்ஸ் Versailles கோட்டை அரண்மனையில் ஆலா பறவை சிம்மாசனத்தில் இருப்பதிலிருந்து ஆரம்பித்த விதம் வாசிப்பை விசமாக நினைப்பவர்களையும் வாசிக்கத்தூண்டும் உயிர் நடை.  

தன் பாத்திரப்படைப்பால் பொய்மைகளை பிடரியில் பிடித்து மூஞ்சியில் இடிக்கவும் ஷோபாசக்தி தயங்கவில்லை.  

சிங்கள ஊர்காவல் காடையர்களால் ஆலா அவமானப்படுத்தலில் ஊர் உறைய இழுத்துச்செல்லப்பட்டபோது, கரிக்கோடு போலவும் காக்கை தலையசைப்பது போலவும் இருந்த சிறுவயது புலி வீரன் சயிக்கிளை ஓடிக்கொண்டுவந்து சிரித்துக்கொண்டே அத்தனை பேரையும் சுட்டது. ஆலாவை மீட்டு ஓடச்சொல்லிவிட்டு ஆலாவின் தம்பி தலையை வெட்டியவனின் தலையைத் தேடியது. ஒன்றும் கற்பனை மாதிரி தெரியவில்லை, அப்படியே அப்பிக்கிடக்கிறான் கரிக்கோட்டு காக்கையன்.  

எந்த இடத்திலும் அலட்டாத, அலுக்காத, அவசியமான நாவல் ! ‘இச்சா’ இச் சா ?!