— பேராசிரியர். செ.யோகராசா —
‘பல்கலைக்கழகத் தமிழ் நாவல்கள்” என்ற நாவல் வகைப்பாட்டினைச் செய்யுமளவிற்கு ஈழத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களைக் களமாகக் கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட நாவல்கள் வெளிவந்திருப்பதனை தீவிர வாசிப்புள்ள ஆய்வாளர்கள் அறிந்திருப்பர்.
இவ்விதத்தில் இவ்வேளை, பேராதனைப் பல்கலைக்கழகம் (கங்கைக்கரையோரம் – செங்கை ஆழியான், நிர்ப்பந்தங்கள் – கோகிலா மகேந்திரன், மிட்டாய் மலை இழுத்துச் செலலும் எறும்பு – ராஹில், உனக்காகவே வாழ்கிறேன் – கமலா தம்பிராஜா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (சந்தனச் சிதறல்கள் – கோகிலா மகேந்திரன்), கொழும்பு பல்கலைக்கழகம் சார்ந்தும் ஒரு நாவல் வெளிவந்ததாக அறியக்கிடைக்கிறது, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (வாக்கு மூலங்கள் – அப்துல் றஸாக்) சார்ந்தெழுந்த நாவல்கள் சில நினைவில் நிழலாடுகின்றன! ஓரிரு நாவல்களில் (எ-டு – நம்பிக்கைகள் – நந்தி, சொந்தமில்லா நினைவுகள்-நற்பிட்டிமுனைப் பளீல்) பல்கலைக்கழகச் சூழல் ஓரளவிற்கே இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறான ஆரோக்கியமான நாவல் இலக்கியச் சூழலில் கிழக்குப் பல்கலைக்கழகச் சூழல் சார்ந்து நாவல் எதுவும் எழவில்லையே என்ற எனது மன ஆதங்கத்தினை குறைக்கின்ற விதத்தில் இந்நாவலின் வரவு அமைந்துள்ளது!
இவ்விதத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்தெழுந்த முதல் நாவலைத் தந்திருக்கின்ற வாய்ப்பு இந்நாவலாசிரியருக்கு கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது!
உங்கள் கரங்களிலே சேரவிருக்கும் இந்நாவல் பல வருடங்களுக்கு முன் (2000) மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தினக்கதிர்’ பத்திரிகையில் ‘காதல் வெண்ணிலா கையில் சேருமா’ என்ற பெயரிலும் அதன் பின்னர் திருகோணமலையில் இருந்து வெளிவந்த ‘மலைமுரசு’ வாரமலரில் ‘வீணையடி நீ எனக்கு’ (2015) என்ற பெயரிலும் தொடர் கதையாக வெளி வந்திருந்ததை உங்களிலே பலர் மறந்திருக்க மாட்டீர்கள்.
தொடர்கதையானது நூலுருப்பெறுகின்ற போது நாவலாக உருமாற்றம் பெற்று விடும் மந்திரவித்தை, தமிழ்பேசும் நல்லுலகிலே இடம்பெற்று வருகின்ற ஒன்றுதான். எனினும் நுணுகி நோக்குவோமாயின் தொடர் கதையும், நாவலும் அடிப்படையில் வெவ்வேறு இயல்புகள் பெற்றிருப்பது கண்கூடு. கதைப்பின்னல், விறுவிறுப்பு, சுவாரசியம், மிகையுணர்ச்சி, மனோரதியப் பாங்கு, கதை வெளிவருகின்ற காலத்தில் நிகழ்கின்ற சம்பவங்களை சேர்த்தல் முதலான அம்சங்கள் தொடர்கதைக்குரிய இயல்புகளாகிவிடுகின்றன!
தொடர்கதைக்குரிய மேற்கூறிய இயல்புகளை இந்நாவல் பெற்றிருப்பினும் அவற்றையும் மீறி பல சிறப்பம்சங்களை இப்படைப்பு. தன்னகத்தே கொண்டிருப்பதே இங்கு எமது கவனத்திற்குரியது.
இந்நாவலின் பேசுபொருள் ‘காதல்’ என்பதனை இந்நாவலின் தலைப்பே தெளிவுபடுத்துகின்றது. கட்டுப்பாடுகள் நிறைந்த கிராம வாழ்க்கையிலிருந்து விடுபடல், சுதந்திர உலகமான பல்கலைக்கழக வாழ்க்கை, கட்டிளமைப் பருவம், இயற்கைச் சூழல், ஆரம்ப கால இலக்கிய வாசிப்பு, (இன்றைய சூழலில் திரைபடங்களும் ‘மெஹா’ தொடர்களும்) முதலியன பல்கலைக்கழகச் சூழலிலே காதல் நாடகங்கள் அரங்கேறுவதற்கு ஏற்ற வாய்ப்பினை வழங்குவது தவிர்க்க இயலாததொன்று என்றே எண்ணத் தோன்றுகின்றது.
‘பரிதியின் மீதும் அந்தப் பார்நிலா மீதும் தானே, உறுதிகள் கோடிசெய்தோம் உன்மத்தராயிருந்தோம்” என்ற நிலைக்கு, பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆட்படுவது தவிர்க்க இயலாததென்றே கூறத் தோன்றுகிறது! போதாக்குறைக்கு இந்நாவலின் கதாநாயகன் கவிஞன்! ஒரு காலத்தில் நா.பார்த்தசாரதியின் நாவல்களில் மூழ்கியிருந்தவன்! என் பிரிய ராஜகுமாரிக்கு என்ற கவிதையை எழுதியவன். பல்கலைக்கழகச் சூழலில் பிரிய ராஜகுமாரியைச் சந்திக்கின்றவன்! அவளும் கவிஞரின் வாசகி, இத்தகைய குணாம்சங்கள் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் ‘படித்தல்’ என்பதை மட்டுமா பற்றிக் கொள்வார்கள்? மனம் பிடிப்பதும் கரம்பிடிப்பதும்கூட நிகழ்வது சகஜமானதுதான்! இப்படிப்பட்ட ‘வாழ்க்கை’ச் சூழலில் அன்றைய காலகட்டத்திற்குரிய – முதல் நாவலுக்குரிய-இவ்எழுத்தாளர் சுவாரஸ்யம், விறுவிறுப்பு, திருப்பங்கள் நிறைந்ததொரு நாவலைத் தந்திருப்பது வியப்பிற்குரியதல்ல! இது அன்றைய காலகட்ட பல்கலைக்கழக மாணவரது நயப்பிற்குரியதுதான்! அவ்விதத்தில் இந்நாவலாசிரியர் கணிசமான வெற்றி பெற்றுள்ளார்!
பல்கலைக்கழக மாணவரது காதல் பற்றி ‘கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பக்கூடாது’ என்றொரு புதுமொழி ஒரு காலத்தில் எழுந்திருந்தது! இந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது காதல் எத்தகையது? ‘காதல் வெண்ணிலா கையில் சேர்ந்ததா? வீணை சொந்தமாயிற்றா? என்பனவற்றை இதன் வாசிப்பு முடிவில், வாசகர்களே கண்டுகொள்க!
இந்நாவலிலே ‘காதல்’ கோலங்களாகி வெளிப்பட்டிருந்தாலும் கோடுகளாக பல்கலைக்கழகத்தில் நிகழ்கின்ற றாக்கிங், விரிவுரைகள், கருத்தரங்கு, சோஷல் பங்சன், தமிழ்ச் சங்கத் தேர்தல், மாணவர் அவைக் கூட்டம், துக்க தினம் அனுஷ்டிப்பு, நாடகப் பயிற்சி வகுப்பு, நாடகப் போட்டி, சில விரிவுரையாளர்கள் பாத்திரங்களாகியிருப்பது என்ற விதங்களில் கிழக்குப் பல்கலைக்கழகம் தனது இருப்பை பல வழிகளில் நினைவுபடுத்தியுள்ளது. பதிவு செய்துள்ளது. அவையாவும் அன்றாட யதார்த்தங்களே என்பதனை அங்கு கல்வி பயில்கின்ற கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் இப்படைப்பினை வாசிக்கும் போது உணர்வர் என்பதிலும் உணர்ந்து களிப்பிலே திளைப்பரென்பதிலும் அவற்றினூடே தம்மை இனங்காண்பர் என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறெனில் அது இந்நாவலாசிரியருக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறவேண்டும். இது இந்நூலுக்கு ஓரளவு யதார்த்தச் சாயலை வழங்கியுள்ளது. அவ்வாறுதான், மட்டக்களப்பு நகரத்து நிகழ்வுகள் சில (எ-டு மாமாங்கக்கோயில் திருவிழா) இந்நாவலுக்கு ஓரளவு பிரதேசச் சாயலை வழங்கியுள்ளது!
அனைத்தையும் விட, நாவல் நிகழ்ந்த காலத்து ராணுவ கெடுபிடிகள்? ‘காதல் வெண்ணிலா கையில் சேர்வதற்கும் வீணையை உரியவர் மீட்டு வதற்கும் பெருந்தடையாகவிருந்தமை இந்நாவலுக்கு ஓரளவு அரசியல் சாயலையும் வழங்கியுள்ளது! (இவ்விதங்களில் இந்நாவலாசிரியர் திருப்திப்படுவதற்கு வாய்ப்புள்ளது!)
இறுதியாக ஒன்று : மேற்கூறிய விதங்களில் இந்நாவல் கவனத்திற்குரியதென்பதில் ஐயமில்லை. எனினும், இந்நாவலில் கூறப்பட்டிருப்பவை மட்டுமே ஒரு பல்கலைக்கழக நிகழ்வுகளென்றோ பிரச்சினைகளென்றோ எவரும் கருதிவிடக் கூடாது, கருதவும் முடியாது!
அத்தகையதொரு நாவலின் முகிழ்ப்பிற்காகவும் வந்தாறுமூலை காத்துக் கொண்டிருக்கிறது. வ.அ. வின்’ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருப்பது’ போன்று! அத்தகைய காத்திருப்பை உணருமொருவரின் நாவலுக்காக நாமும் காத்திருக்கின்றோம். அத்தகைய நாவலாசிரியரும், இவராதல் கூடும் யாரறிவார்? அத்தகைய முயற்சியில் அன்னாருக்கு நிச்சயம் வெற்றிகிட்டுமென்பதில் அவரது அண்மைக்கால இலக்கிய முயற்சிகளை உண்ணிப்பாக அவதானித்து வரும் எனக்கு பூரண நம்பிக்கையுண்டு. நீலாவணனின் ‘வேளாண்மை’ ஓரளவு வீடு வந்து சேர்ந்தது போன்று ‘விண்நிலா கிழக்கு மண் நிலா’வாக பவனி வருகின்ற நாள் எப்போது மலரும்?
வாழ்த்துகளுடனும், நம்பிக்கையுடனும்…