தான் போக வழியில்லையாம், தவில் போலவாம்  மாராப்பு!!  (காலக்கண்ணாடி-29)

தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு!! (காலக்கண்ணாடி-29)

   — அழகு குணசீலன் — 

அரசியலில் எதுவும் நிலையானதல்ல. 

காலங்கள் மாறும்……….. 

காட்சிகள் மாறும்…………. 

கதைகளும் மாறும்…….. 

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை கூடுவதற்கு பல வாரங்களுக்கு முன்னரே முதற்கோணல் முற்றும்கோணல் என்பதற்கேற்ப காட்சிகளும், கலர்களும் மாறத்தொடங்கிவிட்டன. 

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா விவாதம் முடிவடைந்துள்ள இன்றைய சூழலில் தாயகத்திலும், புகலிடத்திலும் மற்றும் அண்டைய அயல் நாடுகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகள் ஏழு தசாப்தகால அகிம்சை, ஆயுதப்போராட்டங்களின் ஜனநாயக, சமூக, அரசியல் அடிப்படைகளை நகைப்புக்கிடமாக்கி உள்ளன. 

ஒருங்கிணைந்த செயற்பாடும் ஒற்றுமை இன்மையும் சுட்ட மண் – பச்சை மண் கதையாகத் தொடர்கிறது. 

எந்த சிறிலங்கா அரசு தமிழ்தேசியத்தை அழித்தது, அழிக்கிறது என்று இன அழிபப்பை அங்கிகரிக்க சர்வதேசத்தை கோரி நிற்கின்றமோ, அதே சிங்கள அரசு மியான்மாரில் ஜனநாயகத்தை மறுபிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டு நிற்கிறோம். 

சர்வதேசத்தின் கண்சிமிட்டலிலும், கண்டும் காணாத போக்கினாலும், ஒத்துழைப்பினாலும்தான் முள்ளிவாய்க்கால் துயரத்தில் முடிந்தது என்கிகிறோம். ஆனால் அதே சர்வதேசத்திடம் விடுதலையை அடவுவைத்து நிவாரணம் கோருகிறோம். 

எந்த ஆதிக்க சக்திகள் போராட்டத்தைச் சிதைத்தார்களோ அவர்கள் ஜெனிவாவில் சமரசம் செய்பவர்களாகவும், மனித உரிமை மீட்பர்களாகவும் தமிழ்தரப்பினராலும், தமிழ் ஊடகங்களாலும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். 

தியாகி திலீபனையும், அன்னை பூபதியையும், ஏன்? ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றதும், உலகத்தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றுகின்ற கோயில் உண்டியல் ஆசாமிகளின் வாரிசுகளின் சுய இலாபநட்ட கணக்கு அரசியலுக்கு சாகும்வரை உண்ணாவிரதம் என்று மகுடமிட்டு சாகாதிருப்பதற்கு சத்துணவு ஊட்டுகிறோம். 

இந்தியாவின் ஆதரவில் கிடைத்த மாகாணசபை முறைக்கான 13 வது திருத்தத்தை நிராகரித்து கிடைத்ததையும் கிடைக்காமல் ஆக்கி, இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் பிரித்து விட்டு இன்று குளத்தில் போட்டதை ஆற்றில் தேடுகிறோம். 

இந்த காட்சிகள்தான் ஜெனிவாவைச் சூழ மட்டுமல்ல, பிரித்தானியா, கனடா, சுவிஸ் மற்றும் புகலிட நாடுகளிலும் வடக்கு, கிழக்கிலும், தமிழகத்திலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

ஈழப்போராட்டத்தின் தோல்வியே அது குறித்த மிகைமதிப்பீடுதான். 

அடிப்படை அரசியல் உள்ளீடு எதுவும் அற்ற ஊதிப் பெருப்பித்த வெறும் பலூன். இன்று ஜெனிவாவில் நடந்து முடிந்திருக்கும் நாடகமும் அதுதான். 

லண்டன்  காட்சிமாற்றங்கள் ! 

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் 90 நாள் அவகாசம் பிரித்தானிய அரசதரப்பிற்கு வழங்கப்பட்டு, தீர்ப்புக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மனித உரிமை கூட்டத்தொடரை கருத்தில் கொண்ட கால அவகாசம் இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இது இவ்வாறு இருக்க பிரித்தானியாவில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரியங்க பெர்ணாண்டோ கழுத்தில் விரலை வைத்து கழுத்தை அறுப்பது போன்று சைகை செய்ததாக தமிழ் இளைஞர் ஒருவரால் முறையீடு செய்யப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டுத் தீர்ப்பு கடந்தவாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து சிறிலங்காவிற்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. பிரியங்க பெர்ணாண்டோ காட்டிய சைகையை கழுத்தை அறுப்பதாக அர்த்தம் கொள்ளமுடியாது என்பதும், இராஜதந்திர சேவையில் உள்ள அதிகாரிகளுக்கான வியன்னா பிரகடன விசேட சிறப்புரிமை காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

அதுமட்டுமின்றி வியன்னா பிரகடனம் மூலமான இந்தச் சிறப்புரிமை சிறிலங்காவில் கடமையாற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கும் பொருத்தமானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்ட தவறவில்லை. 

அடுத்த விடயம் சாகாமல் இருப்பதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அம்மையார் பற்றியது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இவ்வாறு மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் இவர்களுக்கு பின்னால் பிரித்தானிய தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களும் கொடிபிடித்து தமிழர் தரப்பின் பலவீனமான, தலைமைத்துவமற்ற இராஜதந்திர அரசியலை வெளிக்காட்டியிருக்கிறார்கள். 

நான்கு கோரிக்கைகளில் ஒன்றை, ஒன்றரையை பிரித்தானியா நிறைவேற்றியதாக ஊடகங்கள் ஊதுகின்றன. அவை எந்தக் கோரிக்கைகள் என்று கேட்டால் சரியான பதில் இல்லை. சாகும்வரை உண்ணாவிரதம் சமரசத்திற்கு செய்யப்படுவதில்லை என்பதை இவர்கள் அறிவார்களா? 

இவர்கள் தியாகதீபம் திலீபனையும், அன்னை பூபதியையும் மீண்டும் ஒருமுறை கொல்லுகிறார்கள். அரசியல் அறம் தவறி அவர்களின் தீயாகத்தை அவமதிக்கும், கொச்சைப்படுத்தும் செயல் இது. கொள்கைக்கு தேவை மன உறுதி, உடலையும் உயிரையும் காப்பாற்றும் சத்துணவு அல்ல. 

இது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள், தமிழ்தேசிய பற்றாளர் போர்வையை அணிந்து தேசிய அரசியலை சுமக்க வந்து மூக்குடைபட்ட கதை. தான் போக வழியில்லையாம் தவில் போலவாம் மாராப்பு.  

சுவிஸ் –  ஜெனிவா  இராஜதந்திர நகர்வுகள்! 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா விவகாரம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன் சுவிஸ்ஸிக்கான இந்திய தூதுவர் மோனிகா கபில் மோஹதா தமிழர்கள் சிலரைச் சந்தித்துள்ளார். இதற்குப் பின்னால் ஒழித்துள்ள இருதரப்பு அரசியல் என்ன?

சுவிஸின் பேர்ண் நகரில் நடந்த இந்தச் சந்திப்பில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரெட்ணம் சிவனேசன், அதே அமைப்பைச் சேர்ந்த நிதிப் பொறுப்பாளர் மகேந்திரராசா நாகராசா, முன்னாள் நிதிப்பொறுப்பாளர் ஜெயபாலன் செல்லையா மூவரும் கலந்து கொண்டுள்ளனர். 

1. பதின் மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்தல். 

2. இந்தியாவில் உள்ள அகதிகளை சொந்த இடங்களில் குடியமர்த்தல். 

3. போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கல். 

ஆகிய கோரிக்கைகளை தூதுவரிடம் முன்வைத்ததாக தெரியவருகிறது. 

ஜெனிவாவில் இந்தியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை தவிர்க்கும் வகையிலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நாடித்துடிப்பை அறிவதற்கும் இந்தியா இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. 

இவர்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராக தம்மை அடையாளப்படுத்தி இருப்பினும் இவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள். 

சுவிஸில் தமிழ் இளையோர் அமைப்பு (TYO), சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (STRO) இப்படி பல அமைப்புகள் இருக்கும் நிலையில் வெளிப்படையாக ஒரு அமைப்பைமாத்திரம் பிரதிநிதித்துவம் செய்து இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இது சுவிஸ் தமிழர் அமைப்புக்களுக்கு இடையை நிலவும் பிளவுகளை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. புகலிடத்தில் பல நாடுகளில் அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றபோதும் சுவிஸில் இடம்பெறவில்லை. இந்த விடயங்களில் இந்தியத்தரப்பு ஆர்வம் காட்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது. 

இந்தியாவில் காலிஸ்தான் என்ற ஒரு தனிநாட்டை அமைப்பதற்கு சீக்கியர்கள் செயற்பட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புக்களுக்கும், தமிழீழ ஆதரவு அமைப்புக்களுக்கும் இடையே அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ் ஆகிய நாடுகளில் தொடர்புகள் ஏற்பட்டு உள்ளன. 

இது இந்தியாவுக்கு பிடிக்காத ஒரு விடயம். அதேவேளை காலிஸ்தான் ஆதரவு அமைப்பொன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக இன்ரநெற் மூலம் வழங்கி உள்ளது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விடயத்தில் இந்தியா சும்மா இருக்கப்போவதில்லை. 

எனவே சீக்கியர்களின் அரசியல் நாடித்துடிப்பை மோப்பமிடுவதாகவும், சீக்கியர்களின் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதுடன் தொடர்புகள் குறித்து சற்று விலகி இருக்குமாறு கேட்டிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. 

இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஜெனிவாவில் நடுநிலைமையாக செயற்பட்டதன் மூலமும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் மூலமும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட அரசியலை தனது ஆளுமையின் கீழ் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. இதில் அரசியல் வெற்றி யாருக்கு? தமிழ் தேசியத்திற்கா? இந்திய தேசிய மேலாதிக்கத்திற்கா?    

இதற்கு பதிலளிக்கிறார் வைகோ: “இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது” என்கிறார் அவர். 

சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமை பேரவையின் தீர்மானம் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவைப் பெறமுடியவில்லை என்கிறார் தினேஷ் குணவர்த்தன.  

47 நாடுகளில் பெரும்பான்மை என்பது 24. ஆனால் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும் 11 நாடுகள் தீர்மானத்தை வெளிப்படையாக எதிர்த்து சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. இந்தியா உட்பட  14 நாடுகள் வாக்களிப்பில் நடுநிலைமை வகித்துள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கான ஆதரவை குறைத்து மதிப்பிடமுடியுமா? என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை. 

புவியியல் சார், சர்வதேச அரசியலையும், இராஜதந்திரத்தையும் தமிழர் தரப்பு சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் முன்னுக்குப்பின் முரணான அரசியலை தமிழ்த்தேசியம் அன்று முதல் இன்றுவரை மேற்கொள்ளக் காரணம். 

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவாறு தமிழ்த்தேசியவாதிகள் நடிக்கிறார்கள். 

தாயக  ஆர்ப்பாட்டங்கள்! 

P2P அமைப்பினர் யாழ்.கிட்டு பூங்காவிலும், மட்டுநகர் காந்தி பூங்காவிலும் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதங்கள் லண்டனுக்கு ஆதரவாகச் செய்யப்பட்டவை. 

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் மற்றும் தமிழர்களின் மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர். 

கோரிக்கைகளில் ஒன்று ஐந்து தமிழீழ அமைப்புக்கள் திம்பு மாநாட்டில் முன் வைத்த கோரிக்கைகளை நினைவுபடுத்துகின்றன. 

இந்தியாவின் அனுசரணையில் ஒன்றிணைந்த ஐந்து அமைப்புக்கள் சாதிக்க முடியாத தேசியத்தை சர்வதேசத்திடம் கோருகிகிறது P2P. 

நோர்வே சமாதான முக்கியஸ்தர் எரிக் சொல்கைம் அண்மையில் இந்தியாவின் ஆதரவுடன்தான் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுமுடியும் என்று கூறியிருக்கின்ற நிலையில் இந்தியாவைத் தவிர்த்து P2P சாதிக்கப்போவது எதனை? 

இன்னொரு ஆர்ப்பாட்டம் மியான்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பட்டது. 

மியான்மாருடனான அனைத்து உறவுகளையும், பரிமாற்றங்களையும் நிறுத்துங்கள். 

‘மியான்மாரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட ஐ.நா.பொதுச்சபையிலும், மனித உரிமை பேரவையிலும் சிறிலங்கா அரசு முன்னின்று செயற்படவேண்டும்.’–  

என்று இவர்கள் சிறிலங்கா அரசைக் கோருகிறார்கள்.  

உண்மையில் இது ஒரு அரசியல் பித்தலாட்டம். எந்த அரசுக்கு எதிராக மனித உரிமை பேரவையில் குரல் கொடுக்கிறார்களோ, அதே அரசிடம் மியான்மாரின் மனித உரிமையை பாதுகாக்க உதவுமாறு கேட்கிறார்கள். 

தமிழர் பிரச்சினைக்கே தீர்வுக்கு வழியில்லையாம் மியான்மாருக்கு தீர்வு கேட்கிறார்கள். 

தான் போக வழியில்லையாம் தவில் போலவாம் மாராப்பு.!  

பிராந்திய  புவியியல் அரசியல் ! 

ஜெனிவா வாக்கெடுப்பையும் ஆசியப் பிராந்திய பூகோள அரசியல் நிலைப்பாட்டையும் உற்று நோக்கினால் தமிழ்தரப்பு எதிர்பார்த்த அளவுக்கு சிறிலங்கா தனிமைப்படுத்தப்படவில்லை. 

வங்காளதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சீனா, உஸ்பேகிஸ்தான், ரஷ்யா என்பன சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதில் சீனாவும், ரஷ்யாவும் சர்வதேச வல்லரசுகள் மட்டுமல்ல வீட்டோ அதிகாரமும் கொண்டவை. 

மற்றும் பிராந்தியத்தில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா என்பன நடுநிலை வகித்துள்ளன. 

ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் ஆதரவும் ஒப்பீட்டளவில் பிரேரணைக்கு குறைவாகவே கிடைத்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே பிரேரணையை அதிகம் ஆதரித்துள்ளன. இந்த நாடுகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிவதற்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தவை.  

இதில் நெதர்லாந்து, பிரித்தானியா என்பன விட்டுச்சென்ற காலனித்துவ எச்சமே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம். எனவே ஐரோப்பியர்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுகிறார்கள். 

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஜெனிவா பிரேரணை. 

யுத்தம் முடிந்து தசாப்தம் கடந்த பின்னரும் அந்த நீதிமன்றம், இந்த நீதிமன்றம் என்று பேசி இறுதியில்   தமிழ் தரப்பு எதிர்பார்த்த எந்த காத்திரமான அம்சங்களும் உள்வாங்கப்படாமல் ஒரு பிரேரணை நிறைவேறி இருக்கிறது.  

உலக வல்லரசுகளான ரஷ்யா, சீனாவை மாத்திரமல்ல ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலக வல்லரசு அமெரிக்காவையும், பிராந்திய வல்லரசு இந்தியாவையும் கூட சிறிலங்கா தன்பக்கம் சாய்த்தே வைத்திருக்கிறது.  

ஜெனிவாவில் இந்தியாவை தனக்கு எதிராக வாக்களிக்கவிடாமல் தடுப்பதிலும், ஒரே ஒரு ஆசியநாடான கொரியாவை தனித்து விடுவதிலும் சிறிலங்காவுக்கு வெற்றிகிடைத்திருக்கிறது. 

தமிழ் ஊடகங்கள் எந்த இராஜதந்திர அணுகுமுறையும் அற்று வெறும் 22:11 ஐக் காட்டி தமிழ்மக்களை ஏமாற்றிப் கொண்டிருக்கின்றன. 

14 நாடுகளின் கரங்கள் உயர்த்தப்படாமை சிறிலங்காவின் பலமே அன்றி பலவீனம் அல்ல. 

சிறிலங்கா மீண்டும் ஒருமுறை தனது புவிசார் கேந்திர முக்கியத்துவத்தை ஐ.நா.வில் நிருபித்திருக்கிறது. 

வல்லரசுகளை முடியுமானவரை வளைத்துப் போட்டு பிராந்தியத்தில் தனது பலத்தை காட்டியிருக்கிறது. 

இந்து சமுத்திரத்தில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தன்னோடு மோதி, தன்னை பகைத்து அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் எதையும் செய்ய முடியாது என சவால் விட்டிருக்கிறது. 

இந்து சமுத்திரத்தில் ஒரு சின்னம் சிறிய குட்டித்தீவுக்கு இந்த பலம் எங்கிருந்து வந்தது?  

ரஷ்யாவும், சீனாவும், யப்பானும், இந்தியாவும் ஏன் முழு ஆசியாவும் சிறிலங்காவுக்கு அரணாக இருக்கின்றன என்பதுதான் அந்தப் பலம். 

இங்குதான் சர்வதேசத்திற்கு சிறிலங்கா தேவையா? சிலங்காவிற்கு சர்வதேசம் தேவையா? என்ற பூகோள அரசியல் கேள்வி எழுகிறது.