— இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் —
(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் “பணிப்பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பில்” நிகழ்த்தப்பட்ட உரையின் வரிவடிவம் )
பெண்களுக்கெதிரான பலதரப்பட்ட வன்முறைகள் பல காரணங்களால் காலம் காலமாக அகில உலகின் மூலை முடுக்கெல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது (17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில் பிரதமருடனான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.கியர் ஸ்ராமர், ‘பாலின வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களில் 1/5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால் சாதி சமய பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழை நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக் கொடுமைகளை கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.
பெண்களின் துயர்நிலை அவள் பிறந்த வீடு, புகுந்தவீடு, படித்த இடம், பதவி வகிக்குமிடம், அரசியல் காரணங்கள், அகதி நிலை என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது வாழ்க்கையின் உணவுக்கும் உடைக்கும் அத்துடன் தனது ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கைக்கும் வழிதேடி பணிப்பெண்ணாக முன்பின் தெரியாத அன்னிய இடங்களுக்கு உழைக்கச் செல்லும்போதும் பன்முகத் தன்மையான வன்முறைகளுக்கு முகம் கொடுக்கிறாள்.
பணிப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அவள் வீட்டுவேலை செய்யும் இடத்தில் அவள் வேலை செய்யும் வீட்டாரால் மட்டும் நடத்தப்படுவதில்லை. அவர்களின் வீட்டுக்கு வருபவர்களாலும் நடக்கிறது. அந்தப் பாலினக் கொடுமையைப் பல பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எனது சொக்கலேட் மாமா என்ற கதையொன்றில் பதிவிட்டிருக்கிறேன். (மனிதன் –பத்திரிகை -1992)
இன்றைய கால கட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று கிட்டத்தட்ட 232 கோடி மக்கள் பல்விடங்களுக்கும் சென்று அடிமட்ட ஊதிய வேலைகளான சாரதி, தோட்டக்காரன், பணிப்பெண்கள் போன்ற பல்விதமான வேலைகளையும் அகில உலக ரீதியாகச் செய்கிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு பணிப் பெண்களை மட்டுமல்லாமல் மற்ற வேலையாளர்களையும் மனித நேயமின்றி நடத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் மூன்றில் ஒருத்தர் பணிப்பெண்களாகத் துன்பப்படுகிறார்கள் (செல்வி.பிலேஸா வீரரத்தினா 2014. ஐ.பி.எஸ் அறிக்கை).
அகில உலகத்திலும் கிட்டத்தட்ட 17.2 கோடி சிறுவர்கள் ஊதியமற்ற வீட்டுப் பணிவேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பாலியற் கொடுமை தொடக்கம் பலவித இன்னல்களையும் அவர்களின் பிஞ்சு வயதிலேயே அனுபவிக்கிறார்கள்.
2013ம் ஆண்டு இலங்கையில் எடுத்த தகவலின்படி 164450 பெண்கள் வீட்டுப்பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் இவர்களின் நலம் கருதி இயற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
2016ம் ஆண்டு இன்டர்நாஷனல் லேபர் நிறுவன அறிக்கையின்படி இலங்கையில் 800771 அடிமட்டத் தொழிலாளர்களிருக்கிறார்கள். அதில் 66195 பெண்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருப்பவர்கள் 25-55 வயதுக்குட்பட்டவர்கள், மிகவும் குறைந்த கல்வித்தகமையுடையவர்கள், மிகவும் வறிய நிலையுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்று சில அறிக்கைகள் சொல்கின்றன.
மத்திய தரைக் கடல் நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் பெண்களில் 60-75 வீதமான பெண்கள் இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்களாகும்.
பணக்காரர்களின் வீடுகளில் பெண்கள், குழந்தைகள், சிலவேளை ஒரு குடும்பத்தையே வேலைக்கு வைத்திருப்பது பல நாடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. இவை பழமையான உலக சரித்திரம், காலனித்துவம், அடிமை முறை, ஆண் கடவுளர்களை முதன்மைப்படுத்தும் சமய முறைகள், நிற ரீதியாகத் தன்னையுயர்த்திக்கொண்ட இனத்தவர் என்ற ரீதியில் தொடர்கின்றன. அத்துடன் மனிதரை அடிமையாக நடத்த இந்து சமய வர்ணாஸ்ரம முறையில் தன்னையுயர்த்திக்கொண்ட சாதி அமைப்பும் உதவுகிறது. இப்படிப் பல்வேறு அடிப்படை கருத்துக்கள் சார்ந்த சாதாரண சமூகக் கோட்பாடுகளில் ஒன்றாக மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் பல கொடுமைகளை அனுபவிப்பது வழமையாக இருந்திருக்கிறது.
பழைய சரித்திரங்களை எடுத்தால் ஒரு நாடு இன்னொரு நாட்டைப் படையெடுத்து வெற்றியடைந்தால் பெரும்பாலும் அந்நாட்டு ஆண்கள் அடிமைகளாக்கப்பட்டு வெற்றியடைந்த நாட்டின் பொருளாதார வளத்திற்குத் தேவையான பல மட்டத்திற்கும் பாவிக்கப்படுவார்கள். பெண்கள் பாலியல் தேவை, வீட்டுப் பணிவேலை போன்றவற்றிக்குப் பாவிக்கப்படுவார்கள்.
உரோம ஏகாதிபத்தியம் இங்கிலாந்தை அடிமை கொண்டபோது என்னவென்ற ஆங்கிலேயரை உரோம் நகருக்கு அழைத்துச் சென்று அடிமையாக நடத்தினார்கள். கொலை வெறி விளையாட்டான கிலாடியேற்றர்ஸ் என்ற குரூர விளையாட்டுக்கு ஆண்களைப் போரிட வைத்துக் குருதி பெருகி மரணமடையும் விளையாட்டை அதிகாரத்தின் இரசனையாக்கினார்கள். அழகிய ஆங்கிலப் பெண்களைத் தங்களின் பல்வித தேவைகளுக்கும் பாவித்தார்கள் என்பதைச் சரித்திரத்தின வாயிலாக அறியலாம்.
அடிமைப் பெண்களைப் பாலியற் தேவைக்குப் பாவிப்பது அவர்கள் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுத் தங்கள் போர்வீரர்களாக்குவதற்கும் உதவியது. கிரேக்க மாவீரர் மகா அலெக்சாண்டர் பாரசீகத்தை கி.மு. 333 இல் வெற்றி கொண்டபோது பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) ஆண்கள் பெரும் தொகையில் கொல்லப்பட்டார்கள். உலகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியுடனிருந்த அலக்சாண்டர் பாரசீகப் பெண்களைத் திருமணம் செய்து தனது படைக்குத் தேவையான படைவீரர்களைத் தயாரிக்கத் தனது வீரர்களுக்கு ஆணையிட்டார்.
அதே வக்கிரமான கொடிய சரித்திரத்தை ஒட்டோமான் ஏகாதிபத்தியம் (1301-1922) என்ற (இன்றைய துருக்கிய) மகாசக்தி அவர்கள் அடிமை கொண்ட மற்ற நாடுகளிடம் காட்டியது. வயது வந்த கிரேக்கப் பெண்களைப் பிடித்துக்கொண்டுபோய் அவர்கள் மூலம் குழந்தைகளைப் பெற்று படையில் சேர்த்து, அந்தப் போர்வீரர்களை வைத்தே கிரேக்கம் தொடக்கம் எகிப்து மத்திய தரைக் கடல் நாடுகள் போன்ற இடங்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தார்கள்
அதேமாதிரி 15ம் நூற்றாண்டு தொடக்கம் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை உலகின் 25 வீத நிலப்பரப்பின் ஆட்சியைத் தன்வசம் வைத்திருந்த ஆங்கிலேயரும் தாங்கள் அடிமைகொண்ட நாடுகளிலுள்ள பெண்களைத் தங்கள் (பாலியல் தொடக்கம் பல) தேவைகளுக்கும் பாவித்தார்கள். கிழக்கிந்தியக் கொம்பனி இந்தியாவை அடைந்தபோது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கொம்பனி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைத் தனது நயவஞ்சக சூழ்ச்சிகளால் அடிமைப்படுத்தியது.
இங்கிலாந்தைவிடப் பன் மடங்கு செல்வம் பெருகும் இந்தியாவில் தங்களின் நிலையை ஸ்திரப்படுத்தப் போதுமான படைக்குத் தேவையான (ஆண்) குழந்தைகளைப் பெற கிழக்கிந்திய கொம்பனியைச் சேர்ந்த ஆண்கள் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்ய உத்தரவிடப்பட்டது. அவர்களின் பெண் குழந்தைகள் ஆங்கிலேயரின் பலவித தேவைகளுக்கும் பாவிக்கப்பட்டார்கள்.
அகில உலகம் பரந்த விதத்தில் சமய ரீதியிலும் பெண்கள் மிகவும் படுமோசமாக நடதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமேரிய கால கட்டத்திலிருந்து கடந்த 6.000 வருடங்களாக ஏதோ ஒரு சமயம் முன்னிலைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. சமயத்தின் வளர்ச்சிக்கு முன்னர் மனிதர் காடுகளில் வாழ்ந்த காலத்தில் உயிர் படைக்கும் பெண்ணைத் தாயாய் வணங்கினார்கள். அந்த நாகரிகத்தின் தொன்மை சரித்திரத்தில் படிந்திருக்கிறது. நாகரிகம் வளர்ந்து கொண்ட காலத்தில் தங்களின் விவசாயத்திற்கு நீர் தரும் நதியைத் தமிழர் காவேரி என்றும் பொன்னி என்றும் பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.
அதேமாதிரியே பல நகரங்கள் பெண்களின் பெயரில் வளர்ந்தன. உதாரணமாக ஆதிகாலத்திலிருந்து மனிதருக்குத் தேவையான தத்துவத்தையும் ஜனநாயகக் கோட்பாடுகளையும் உலகுக்குத் தந்த கிரேக்க நாட்டின் தலைநகர் அதென்ஸ் என்ற பெண் பெயரில் வளர்ந்தது. பாரினிலே நாகரிகத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் பிரான்ஸ் நாட்டு மக்கள் அவர்களின் அழகிய நகருக்குப் பாரிஸ் என்ற அழகிய பெண் பெயரை வைத்துப் போற்றுகிறார்கள்.
ஆதிகாலத்தில் ஒரு குழுவின் தலைவியாயிருந்தவள் பெண். வேட்டையாடிய கால கட்டத்தில் இன்னொரு குழுவுடன் போராடித் தங்கள் இடத்தைப் பாதுகாக்கப் போராளிகள் தேவையாயிருந்தது. அந்தத் தேவைக்கு அடுத்த குழுவின் பெண்களைக் கைப்பற்றுவது பெரிய வெற்றியான விடயமாகவிருந்தது.
இரு குழுக்களும் சிலவேளைகளில் பெரும் சண்டைகளைத் தவிர்க்கப் பெண்களை பண்டமாற்றுச் செய்தார்கள். காலக்கிரமத்தில் ஒரு குழுவின் தலைவன் இன்னொரு குழுவின் தலைவனுக்குத் தனது மகள் அல்லது தங்கையைக் கொடுத்துத் தன் உறவை இறுக்கிக் கொண்டான். அந்தப் பண்டமாற்று சடங்குதான் திருமணமானது. இந்த பண்டமாற்றில் பெண்களின் சம்மதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு குழுவின் பாதுகாப்பும் தேவைகளும்தான் முன்னெடுக்கப்பட்டன. அதனால் இன்றும் பல்லாயிரக் கணக்கான பெண்கள் தாய், தகப்பனின் வேண்டுதலால் அவளுக்கு வேண்டாத திருமணத்தால் புகுந்தவீட்டுக்குச் சென்றபின் பன்முக வேலைக்காரிகளாகப் பல கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.
தனது தங்கை அல்லது மகள் கணவனின் குழுவுடன் சேரும்போது, அவளுக்குத் தேவையான தோலாலான உடைகளையோ அல்லது அவன் சேகரித்த மணிகள் கற்களையோ மகள் அல்லது தங்கைக்குக் கொடுத்தனுப்பினான். அதுதான் சீதனமாக உருவெடுத்து இன்று பல பெண்களின் உயிரைப் பறிக்கின்றது.
பொருளாதார வெற்றி கொண்ட மனிதன் தங்கள் ஆளுமையை நிலை நிறுத்த மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தினான். ஒரு குழுவின் நல்வாழ்க்கையை அவர்களின் பாதுகாப்பை முன்னெடுத்த தலைவனை மக்கள் மதித்தார்கள். அவன் இறந்தபோது அவனை ஞாபகப்படுத்தித் தங்கள் மதிப்பைத் தெரிவித்தார்கள். அது அவர்களின் வணக்கமுறையானது. அந்த நம்பிக்கையின்படி வளர்ந்த கோட்பாடுகளின் முறையில் அதை வைத்துக் கொண்டு உலகில் சமயம் வளரத் தொடங்கியபின் அதன் காவலர்களாக ஆண்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழரின் வாழ்க்கை முறை சமத்துவமாகவிருந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர், எம்மதமும் சம்மதமே, அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்ற தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டது எங்கள் தமிழினம். சாதி பேதமற்ற விதத்தில் தொழில் முறையில் மக்களுடனான உறவைத் தொடர்ந்தவர்கள் தமிழர்கள்.
வணக்கமுறை, இயற்கையுடன் இணைந்தது. அதாவது மழையைத் தரும் தெய்வம் மாரி, பேய்களை அடக்குபவள் பேச்சியம்மன், எல்லையைக் காப்பவள் எல்லையம்மன் என்றழைக்கப்பட்டாள்.
பார்ப்பனியம் தமிழரிடம் ஊடறுத்தபின் (கி.பி. 2ம் நூற்றாண்டு) தமிழர் கடவுள்கள் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டார்கள். பார்ப்பனிய ஆண் கடவுள்கள் முன்னெடுக்கப்பட்டார்கள்.
வர்ணாஸ்ரம முறையில் மக்கள் பிரிக்கப்பட்டு எந்த ஒருகாலத்திலும் அவர்கள் ஒன்று சேரமுடியாத பிரிவினையைக் கொண்டுவந்தார்கள். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக்கினார்கள். கோயில்களில் தேவதாசிகளை உருவாக்கிப் பாலியல் தேவைக்கான பெண் அடிமைகளை உருவாக்கினார்கள்.
தமிழர்களைப் பிரித்து, நிரந்தர தொழிலற்ற ஏழை மக்களை சூத்திரராக்கி அவர்களை மனிதமற்ற முறையில் அடிமைகளாக நடத்தினார்கள். இதன் வரலாற்றைப் பின் வரும் சரித்திரச் சான்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, இலங்கையில் ஆங்கிலேயரின் முதலாவது பொதுசன வாக்கெடுப்பில் (1832) யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை 145,638 என்றும் அதில் 20,543 மக்கள் எந்த விதமான அடிப்படை உரிமையுமில்லாமல் பெரிய சாதியினரின் அடிமைகளாகவிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியை மலையகப் பணிப்பெண்களை எப்படி மற்றத் தமிழர்கள் நடத்துகிறார்கள் என்பதை எனது பேச்சில் குறிப்பிட்டேன். 2005ம் ஆண்டு முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது மலையகப்பெண் யாழ்ப்பாணத்தில் ஒரு விரிவுரையாளரால் பாலியற் கொடுமைக்காளாகி குருதி பெருகி மயக்கமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இந்த ஏழைப்பெண் அவளின் ஏழுவயதிலிருந்து 13 வயதுவரை 40 தடவைகள் பாலியற் கொடுமைக்காளாகிய செய்தி தமிழ் உலகத்தை உலுக்கியது. அவரைப் பற்றிய விடயத்தை இலங்கை மனித உரிமைவாதிகளால் லண்டன் தமிழ் தகவல் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு என்னை எழுதும்படி பணித்தார்கள். எனது கட்டுரையைப் படித்த நல்லுள்ளம் கொண்ட பல நூறு பெண்கள் யோகேஸ்வரிக்கு நீதி கேட்டு யாழ் நகரில் போராட்டம் நடத்தினார்கள்.
விடுதலைப்புலிகளின் பொங்கு தமிழ் குழவிலிருந்த அந்த விரிவுரையாளர் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் சில வருடங்களில் பாலியல் கொடுமைக்குள்ளான யோகேஸ்வரி காணாமற்போனார்! நான் யாழ்நகர் சென்றபோது (2008), யோகேஸ்வரி பற்றி விசாரித்து, அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமற் துடித்தேன். பாவம் ஒரு ஏழைப்பெண். அவளைத் ‘தட்டி விட்டார்கள்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. இன்று அந்த விரிவுரையாளர் உலகம் தெரிந்த ‘புத்திஜீவி’யாக மதிக்கப்படுகிறார். இதுதான் தமிழர்களின் பெண்ணியம் சார்ந்த தர்ம வழியான வாழ்க்கைமுறை.
மற்ற சமயங்கள் பற்றிய விளக்கங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.
20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் எண்ணெய் வளம் காரணமாக அவர்களின் பொருளாதார வாழ்க்கையில் மிக விரைவான உயர்ந்த நிலையைக் கண்டன. அவர்களின் தேவைகளுக்கு இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பல பெண்கள் பணிப்பெண்களாக அழைக்கப்பட்டார்கள். இன்றும் தொடர்ந்து அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள், அவர்கள் வாழும் நாடுகளில் மிகவும் வறுமை நிலையில் வாழ்பவர்கள். இவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாதது.
பணிப்பெண்களாக மத்திய தரைக் கடல் நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அளப்பரியன. பாலியல் கொடுமை, உடல், உள கொடுமைகள், சம்பளம் கொடுக்காமை, வெளியில் செல்ல அனுமதியில்லை, வேலைநேரம் 12-14 மணித்தியாலங்கள், ஒரு நாளும் ஓய்வு கிடையாமை போன்ற பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். தாய் நாட்டிலிருந்து இவர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்றதும் இவர்களின் கடவுச்சீட்டு இவர்களிடமிருந்து பறிக்கப்படும்.
இவர்கள் படும் துயர் சொல்லில் அடங்காதவை. பாலியற் கொடுமைகள் மனித இனத்தை வெட்கப்படுத்துபவை. உடல், உளக் கொடுமைகள் தாங்கமுடியாதவை. பல்வித கொடுமை தாங்காமல் மத்திய தரைக்கடல் நாடுகளிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு 2004ம் ஆண்டு கால கட்டத்தில் ஒரு மாதத்திற்கு 150 பெண்கள் என்ற முறையில் உதவி கேட்டு ஓடிவந்திருக்கிறார்கள். 80ஆம் ஆண்டுகளிலிருந்து பல்லாண்டுகள் மத்திய தரைக்கடல் நாடுகளில் பாலியல் கொடுமைக்குள்ளாகியது மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட இலங்கைப் பணிப்பெண்கள் பலர். இப்படியாகப் பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாட்டில் பிரஜா உரிமை கொடுபடவில்லை. இலங்கை அரசு தங்கள் குழந்தைகளாக ஏற்றுக்கொண்டது.
2005ம் ஆண்டு, இலங்கையின் மூதூர் கிராமத்தைச் சேர்ந்த றிசானா நபீக் என்ற 17 வயதுப் பெண் அவள் வேலை செய்த வீட்டுச் சிறு குழந்தையைக் கொன்றதாகச் சாட்டப்பட்ட குற்றத்திற்காக சவுதி அராபிய நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி வந்தது. அந்தப் பெண் அநியாயமாகப் பழிசுமத்தப் பட்டு மரண தண்டனைக்குள் தள்ளப்பட்டிருக்கிறாள் என்று சொல்லப்பட்டது.
அவளுக்கு நீதி கிடைக்க எழுதும்படி ஒரு முஸ்லிம் நண்பர் என்னைத் தொடர்பு கொண்டதால் நான் அதுபற்றி விசாரித்தேன்.
இலங்கையிலிருந்து வேறுநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்பும் ஏஜென்சிக்காரர்களின் கேவலமான முறைகள் தெரிந்தன. றிசானா நபீக் 1988ம் ஆண்டு பிறந்தவர் ஆனால் அவர் 1982ம் ஆண்டு பிறந்ததாகச் சொல்லப்படும் ஏஜென்சிக்காரனின் கள்ளமான பதிவுடன் பணிப் பெண்ணாக அனுப்பப்பட்டிருக்கிறார்.
குழந்தைப் பராமரிப்புத் தெரியாத 17 வயதுப் பெண்ணான றிசானா வேலைக்குச் சேர்ந்து மூன்றாம் மாதம் அவள் குழந்தைக்குப் பாலுட்டும்போது குழந்தை இறந்துவிட்டது.
பிரேத பரிசோதனை எதுவுமின்றி மரணதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து நான் கட்டுரை எழுதினேன். அங்கிருந்த இலங்கைத்தூதுவர் மூலம் இலங்கை அரசு றிசானாவுக்கு வாதாட ஒரு வழக்கறிஞரை நியமித்தது.
றிசானாவுக்கு இரக்கம் காட்டச்சொல்லி இறந்த குழந்தையின் தாயைக் கெஞ்சி நானும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்களும் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தோம். வழக்கு 2005 தொடக்கம் 2013 ம் ஆண்டு வரை இழுபட்டது.
அப்போது இலங்கையிலிருந்து ஒரு பிரபல முஸ்லிம் அரசியல் பிரமுகர் சவுதி அரேபியா சென்றார். றிசானாவின் குடும்பத்திற்கு அவளைக் கொலைகாரி என்று குற்றம் சாட்டியவர்களிடமிருந்து பண உதவி வாங்கிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சவுதி அராபியாவில் இருபத்திமூன்று வயது ஏழைப்பெண் றிசானாவின் தலை 09.01.2013ல் வெட்டப்பட்டது. அந்தக் கொடுமையைத் தாங்காமல் சில நாட்கள் துடித்தேன்.
பெண்கள் உலகின் கண்கள் என்று சொல்லும் தர்மம் எங்கே?
2001ம் ஆண்டு அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் 850,000 பேரில் பலருக்கு உண்மையான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கிடையாது. ஏஜென்சிக்காரரின் திருட்டு வேலைகளுக்கு றிசானா போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பறிபோகின்றன.
1990ம் ஆண்டுகளின் முற்பகுதியில் லண்டனில் ஒரு தமிழ்ப் பணிப்பெண்ணைக் கொடுரம் செய்த அராபியச் சீமாட்டிக்கு எதிராக லண்டன் பொலிசார் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அந்த ஏழைப் பணிப்பெண் இந்தியாவைச் சேர்ந்தவர். மிக நீண்ட நாட்களாக அராபியச் சீமாட்டியின் வீட்டில பணிபுரிகிறார். உள, உடல் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். ஒரு நாள் அராபியச் சீமாட்டி செய்த கொடுமை தாங்காமல் அலறியதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆங்கிலேயர் பொலிசாருக்குப் போன் பண்ணியதால் சீமாட்டியின் மீது பொலிசார் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த ஏழை இந்தியத் தமிழ்த் தாய்க்குப் பிரித்தானியாவிலுள்ள இந்திய பெண்கள் அமைப்பு உதவி செய்து கொண்டிருந்தது.
அங்கு தமிழ் பேசுபவர் யாரும் இல்லாததால் அந்த ஏழைப் பணிப்பெண்ணக்கு என்னை மொழி பெயர்ப்பாளராக அழைத்தார்கள்.
அங்கு சென்றதும் எழைப் பணிப்பெண்ணுக்குச் செய்த கொடுமைகள் எனக்குக் காட்டிய புகைப்படங்களில் பிரதிபலித்தன. பணிப்பெண்ணின் உதடுகள் வெடித்து, கண்கள் வீங்கியதைக் காட்டியது ஒரு படம். அடுத்த படம் தோள்மூட்டில் இரும்புக் கம்பியால் சூடுபோட்டதைக் காட்டியது. முதிய பணிப் பெண்ணின் முதுகில் அயன்பெட்டியை வைத்துத் தேய்த்துத் தோலுரிந்த படம். வயதுபோன தளர்ந்த மார்பகங்களை நகத்தால் கீறிப் பிளந்த காயங்கள். வீங்கிய முழங்கால்கள். முழங்கையில் இறுக்கிய கயிறு கட்டிய தடத்துடன் படம். தொடையில் பயங்கரக் கோடுகளுடன் இன்னொரு படம். அது சாட்டையடியாம்.
அந்தப் படங்களைப் பார்த்து எனக்கு அழுகை வந்தததை விட மனிதமற்ற அந்தச் சீமாட்டியில் ஆத்திரம் பொங்கி வந்தது. ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு அதுவம் அந்தச் சீமாட்டியின் தாயின் வயதொத்த ஒரு மூதாட்டியை இப்படிச் சித்திரவதை செய்ய என்னவென்று மனம் வந்தது?
வழக்கு ஆரம்பமாக முதல் அந்தச் சீமாட்டி வந்து பணிப்பெண் முன்னமர்ந்தார். மொழி பெயர்ப்புக்கு அழைத்த மாதர் நிறுவனப் பெண் என்னை வெளியே வரும்படி சைகை செய்தார்.
அந்த வேலைக்காரிக்குப் பணம் கொடுத்து இந்த வழக்கில் சீமாட்டிக்கு எதிராகச் சாட்சி சொல்லவேண்டாம் என்று பேரம் பேசுகிறார்கள் என்று பெண்கள் காப்பகப் பெண் சொன்னார். நான் திடுக்கிட்டுப்போய் பணிப்பெண்ணிடம் ஓடிவந்தேன். பணிப்பெண் சொன்னார். ‘அம்மா தயவு செய்து என்னிடம் எதுவும் பேசாதீர்கள். எக்காரணம் கொண்டும் இந்த வழக்கில் இந்தச் சீமாட்டிக்கு எதிராகச் சாட்சி சொல்ல மாட்டேன்.’
நான் அதிர்ந்தேன். ‘உனக்குச் செய்த கொடுமைக்கு நீதி கேட்க நான் வந்திருக்கிறேன்’ எனது ஆதங்கத்தைப் பார்த்துப் பணிப்பெண் அழுதார். அந்த முதிய மாதுவின் கண்ணீர் என்னைச் சித்திரவதைப்படுத்தியது.
அந்த ஏழை முதுமாது தொடர்ந்தார் ‘அம்மா நான் வேலைக்காரியா உழைத்துப் பணம் அனுப்பாவிட்டால் எனது மகளின் கணவன் அவளைக் கொலை செய்துவிடுவான். அவனுக்கு எந்த வேலையும் கிடையாது. நான் அனுப்பும் பணத்தைக் குடித்து அழிக்கிறான். என் மக அவன விட்டுப் போக முடியாது. அவளுக்குக் குழந்தைகள் உள்ளன. அவர்களைப் பாதுகாக்க நான் இறக்கும் வரைக்கும் உழைக்கணும் இந்த அம்மா இனி என்னை அடிக்க மாட்டன் என்று சொல்றா’
நான் வாயைடைத்து நின்றேன். ’இந்த அம்மா அவவின் புருசனில கோபம் வந்தாற்தான் என்னை அடிப்பாங்க, இந்தச் சீமாட்டிய நான்தான் தூக்கி வளர்த்தன். அவ புருசன் மற்றப் பொண்ணுகளோடு போறதால இந்த அம்மா அவனுக்கு எதிராக ஒன்னும் பண்ண முடியாம என்ன அடிக்கிறாங்க உங்களுக்குப் பெண் இருந்தா என்ன பண்ணவீங்க?’. மூதாட்டிப் பணிப் பெண்ணின் கேள்வி இது.
இதற்கு உரிமை. மனித நேயம் என்றெல்லாம் பதில் சொல்ல முயன்றால் அந்த முதிய ஏழைப் பெண்ணுக்கு விளங்குமா?
இன்று இப்படி 200 கோடி ஏழைப் பெண்கள் உலகம் பரந்த விதத்தில் பல நாடுகளில் பணிப் பெண்களிருக்கிறார்கள். அடி, உதை, பாலியல் கொடுமை, சிலவேளை கொலையும் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது. அவர்களுக்கு எந்த நாட்டிலும் வாக்குரிமை கிடையாது. அவர்கள் பிறந்த நாடுகள் அவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவது கிடையாது. அவர்களின் துயர் எந்த அரசியற் கட்சிக்கும் அப்பாற்பட்டது.
ஹியுமன் றைட்வாச், இன்டர்நாசனல் லேபர் நிறுவனம் போன்றவை பல தடவைகளில் பணிப்பெண்களுக்காக எத்தனையோ ஆய்வுகளும் அறிக்கைகளும் விடுகிறார்கள். ஆனால் வறுமையில் வாடும் ஏழைகள் தங்கள் குடும்பத்திற்காகத் தங்கள் மரியாதை, உழைப்பு, உடல், உள நலம் அத்தனையையும் இழக்கிறார்கள். பணிப்பெண்களாக வேலை செய்து எத்தனையோ வன்முறைகளை அனுபவிக்கும் பெண்களுக்கு எந்த நிவர்த்தியும் கிடைப்பது அரிதாகவிருக்கிறது.
இலங்கையின் சனத் தொகையில் கிட்டத்தட்ட 23.5 வீதமான குடும்பங்கள் (2 கோடிமக்கள்.) பெண்களின் தலைமையில் வாழ்கின்றன.
செல்வி பிலேஷா வீரரத்னா அவர்கள் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களைப் பற்றி எழுதிய புத்தகத்தில் பல தகவல்களைத் தந்திருக்கிறார். 2013ம் ஆண்டு இலங்கையை விட்டுப் பல தரப்பட்ட வேலைகள் நிமித்தமாக வெளியேறிய 293,105 இலங்கையர்களில் 40 வீதமானவர்கள் பெண்கள்.
இவர்களில் வீட்டு வேலைக்காகச் சென்றவர்களில் 82 வீதமானவர்கள் பெண்கள். அந்தப் பெண்களில் 98 வீதமானவர்கள் மத்தியதரை நாடுகளுக்குப் பெரும்பாலும் செல்கிறார்கள். சவுதி அரேபியா குவைத் போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
2012ம் ஆண்டு வீட்டுப் பணிப் பெண்கள் மத்தியதரை நாடுகளிலில் வேலை செய்யும் இடங்களில் படும் பலதரப்பட்ட துன்பங்களை 10,220 முறைப்பாடுகள் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். முப்பதாண்டுகள் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின் இன்று இலங்கையில் அமைதி நிலவுகிறது. ஆனால் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் கிடையாது.
பணிப் பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு அவர்கள் பிறந்த நாடுகளில் அவர்களைப் பாதுகாக்கும் சட்டம் எதுவும் பெரிதாகக் கிடையாது. ஹொங்கொங் போன்ற நாடுகளில் பணிப் பெண்களின் நலம் கருதிய சட்டங்களால் சில மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன.
பணிப்பெண்களாக மட்டுமல்லாமல் அடிமட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு சார்ந்த விடயங்களையிட்டுப் பல குரல்கள் 2000ம் ஆண்டிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
2021ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சில அராபிய நாடுகளில் பணிப்பெண்களைப் பாதுகாக்கும் ‘கவ்லா’ என்ற சட்டம் உண்டாவதாக அண்மையில் படித்தேன்.
மனித நேயத்தில் அக்கறை கொண்டவர்கள் பணிப்பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது மிகவும் இன்றியமையாத விடயமாகும்.