பெரியார்-அறிதலும் புரிதலும்  (பாகம்- 8)

பெரியார்-அறிதலும் புரிதலும் (பாகம்- 8)

      — விஜி/ஸ்டாலின் —  

திராவிட கழகத்தின் தோற்றம் 

திராவிட இயக்கம் என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை கடந்து நிற்கின்றது. இது எப்படி சாத்தியமானது?  

திராவிடர்களின் சமூக முன்னேற்றம் என்கின்ற கொள்கையில் ஓய்வின்றிய சுடரோட்டமாக அது பயணித்து வருகின்றமை ஆச்சரியம் தான். பாதைகளை மாற்றிக் கொண்டாலும் நீண்டகால இலக்கு மாறாமல் தன்னை தகவமைத்து வருகின்றது. இத்தகைய கொள்கை மாறாத இலட்சியமே அதன் தொடர்ச்சியான இருப்பை இன்றுவரை சாத்தியமாக்கியிருக்கின்றது.  

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் சங்கம், திராவிட சங்கம் என்கின்ற பெயர்களில் செயற்பட்டு வந்த இயக்கங்களின் தொடர்ச்சியில் இருந்துதான் நீதிக்கட்சி என்கின்ற அந்த நீண்ட நெடிய அரசியல் இயக்கம் பரிணாமம் பெற்றது. அதாவது திராவிடர்களின் நலனை முன்னிறுத்துவதிலிருந்து அச்சொட்டும் பிசகாத ஒரு திராவிட இயக்கமாகவே நீதிக்கட்சி  இயங்கி வந்தது. அதில் பல வெற்றிகளையும் கண்டது. 

இந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை இரண்டு வகையான கால கட்டங்களாக பிரித்து நோக்கலாம். பெரியார் தலைமைக்கு வருவதற்கு முன்னரான நீதிக்கட்சி என்கின்ற பெயரில் இயங்கிய காலகட்டம் என்பது ஒன்று. பெரியார் தலைமை ஏற்ற பின்னர் திராவிட கழகம் எனும் பெயர் பெற்று இயங்கிய கால காலகட்டம் என்பது மற்றொன்று. 

இந்த இரு காலகட்டங்களிலும் ஒரே விதமான கொள்கையில் உறுதியாக அது பயணித்து வந்தது. ஆனால் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைகைக்கொண்டு செயற்பட்டு வந்தது. அது எப்படி? 

அதாவது பெரியார் நீதிக் கட்சிக்கு தலைமை ஏற்பதற்கு முன்னர் அக்கட்சியானது தேர்தல் அரசியலை முன்வைத்து இயங்கியது. ஆட்சி அதிகாரத்தின் ஊடாக சமூக நீதியை நிலைநாட்டுவதை குறிக்கோளாக கொண்டு பலமுறை சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்தும் வந்தது. இதன் காரணமாக திராவிடர்களின் நலன் சாந்த கொள்கைகளை அது உறுதியாக பின்பற்றி வந்தது.    

பெரியாரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி வந்த பின்னர் தேர்தல் அரசியலை புறக்கணிக்கும் முடிவை பெரியார் முன்வைத்தார். அதனுடாக அரசியல் பதவிகளை துறந்த சமூக சீர்திருத்த இயக்கமாக அதனை மாற்ற விரும்பினார். இதன் காரணமாக நீதிக்கட்சித் தலைவர்கள் சிலர் பெரியாருடன் முரண்பட்டனர். ஆனாலும் பெரியார் நீதிக்கட்சியை பொறுப்பெடுக்கும் போது முன் வைத்த நிபந்தனையின் அடிப்படையிலேயே அக்கட்சியை வழிநடத்துவதில் பிடிவாதமாய் இருந்தார்.  

இதற்காக மிகப் பெரிய மாநாடு ஒன்றை கூட்டினார். 1944ஆம் ஆண்டு சேலத்தில் கூட்டப்பட்ட மாநாட்டில்தான் நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து “திராவிட கழகம்” என பெயர் சூட்டப்பட்டது. இதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் யாவும் திராவிட கழகத்தின் சமுதாயக்கொள்கைகள் என்ற தத்துவத்துவம் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டது. 

இத்தகைய முடிவுகளூடாக சமுதாயப் பணி ஒன்றே திராவிட கழகத்தின் கொள்கைகள் என பகிரங்கமாக அறிவித்தார் பெரியார். 

சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற விடயங்களில் அரசியல் பதவிகள் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாமேயன்றி அவற்றை தொடர்ச்சியாக பாதுகாக்கும் காரணிகளை இல்லாதொழிக்க முடியாது என்பதே பெரியாரது வாதமாக இருந்தது. 

ஆகவே அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடுவதை விட திராவிடர்களை அடிமையாக நடத்தும் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டமே அவசியம் என்று உணர்ந்தார் பெரியார். மக்களை மூட நம்பிக்கையில் இருந்து வெளிக்கொணருவதும் ஆதிக்க கருத்தியல்களை பாதுகாக்கும் சாதி, மதம், கடவுள் போன்ற கட்டுமானங்களை தகர்ப்பதுமே சமுதாயப் பணி செய்பவர்களின் முதல் கடமை என அவர் தீர்க்கமாக நம்பினார். ஆதிக்க கருத்தியல்களுக்கு எதிரான போராட்டத்தை அவர் மிகமிக வலியுறுத்தினார். 

நீதிக்கட்சியின் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து வந்த அண்ணாதுரை என்னும் இளைஞன் இந்தப் பணிகளில் பெரியாருக்கு நெருக்கமானார். நீதிக்கட்சியில் இருந்தபோதும் பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பங்கெடுத்து வந்தவர் அண்ணாதுரை ஆகும். 1929ஆம் ஆண்டு  பெரியார் நடத்திய செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஒரு மாணவனாக கலந்துகொண்டவர் அண்ணாதுரை. அந்த வகையில் ஏலவே அறிமுகமாகியிருந்த அண்ணாதுரையை செயலாளராக்கி திராவிட கழகத்திற்கு இளரத்தம் பாய்ச்சினார் பெரியார். 

திராவிட கழகத்தின் எதிர்கால கொள்கை திட்டங்களில் இந்தச் சேலம் மாநாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. 

அண்ணாவின் தீர்மானங்கள் என்று அழைக்கப்படும் அம்மா நாட்டுத் தீர்மானங்கள்தான் திராவிட கழகத்தினை தியாக உணர்வு மிக்க இயக்கமாக மாற்றியமைப்பதில் பெரும் பங்காற்றின. 

அண்ணா தீர்மானங்கள்”  

*மக்கள் பிரதிநிதிகளாக சட்டசபையிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பதவி வகிப்பவர்களில் நியமன உறுப்பினர்கள் யாவரும் தமது பதவிகளை துறப்பது,  

*பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சார், திவான், பகதூர் பட்டங்கள் அனைத்தையும் உடனடியாக துறப்பது,  

*பிரித்தானிய அரசாங்கத்தின் இரண்டாம் உலகம் யுத்த பணிகளின் பெயரில் வகிக்கும் சகலவிதமான பொறுப்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வது,  

*எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் எவ்விதத் தேர்தல்களிலும் போட்டியிடாதிருப்பது  

போன்றவையாகும். 

ஆகவே நீதிக்கட்சியின் தேர்தலில் பங்குபற்றி ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றும் கொள்கையில் இருந்து  “அண்ணாதுரை தீர்மானம்” மூலம் திராவிடர் கழகம் மக்கள் இயக்கமாக முன்னேறியது.  

பெரியாரும் அவரது தோழர்களும் திராவிடக்கழகத்தின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக பெரிதும் பாடுபட்டனர். அண்ணாதுரையின் பேச்சுக்களும், எழுத்துக்களும் திராவிடக் கழகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் பெரும் பங்காற்றியது. மிகக்குறுகிய காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மும்மடங்காக மாறியது.  

பணபலமோ, பணக்காரர்களின் பக்கபலமோ ஏதுமற்ற திராவிட கழகம் இளைஞர்களின் அசுர பலத்துடன் மிக வேகமாக வளர்ச்சி கண்டது. அண்ணா எங்கள் தளபதி என்று இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். 

அடுத்து 1945 ஆம் ஆண்டு திருச்சியில்நடைபெற்ற மாநாட்டுக்கு  தளபதி அண்ணாத்துரையின் வேகத்தையும், திறமையையும் மதித்து அம்மா நாட்டுக்கு தலைமையேற்று நடத்துமாறு பணித்தார் பெரியார். அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 10-10-1945 அன்று திராவிடக்கழகத்தின் ‘கருஞ்சட்டைப் படை” (தொண்டர்படை) உருவாக்கப்பட்டது.  

உழைக்கும் மக்களை ஊத்தயர்களாகவும் அழுக்கு நிறைந்தவர்களாகவும் சித்தரித்து இழிவாக்கியும் புறந்தள்ளியும் வந்த நிலைமையை உணர்ந்து அவர்கள் வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் வெளிக்காட்டவும், அவற்றை நீக்கி கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதை பிரசித்தம் செய்யவும் கறுப்புச்சட்டை அடையாளம் அறிமுகம் செய்யப்பட்டது. 

அதன் பின்னர் 1946ல் தான் திராவிட கழகத்திற்கென ஒரு கொடி உருவாக்கப்பட்டது. இக்கொடி கறுப்பு நிறத்தின் நடுவே ஒரு சிகப்பு வட்டத்தை கொண்டது. சாதி, மத, சமூக, பொருளாதாரத்தில் இருண்ட பகுதிக்குள் வாழும் மக்களை கறுப்பு நிறம் குறிப்பதாகவும் அதிலிருந்து விடுபடும் மக்களை சிவப்பு நிறம் குறிப்பதாகவும் பெரியார் கருதினார்.  

திராவிடர் கழகத்தை மிகக் குறுகியகாலத்தில் குறிப்பிடத்தக்க வலிமைகொண்ட கட்சியாக மாற்றிய பெரியாரும் அவரது தோழர்களும், 1946 ஆம் ஆண்டு  50,000 பேர் கலந்துகொண்ட கருஞ்சட்டைப்படை மாநாடு ஒன்றை மதுரையில் நடாத்தினார்கள். இம்மாநாட்டில் வன்முறையாளர்கள் கலவரங்களை தூண்டிவிட்டனர். கழகக் கொடிகள் எரிக்கப்பட்டும், மாநாட்டுப் பந்தல்கள் தீவைத்து கொழுத்தப்பட்டும், உறுப்பினர்கள் தாக்கப்பட்டும், கறுப்பு சேலை அணிந்த பெண் தோழர்கள் நிர்வாணமாக்கப்படுமளவுக்கும் எதிர்ப்புகள் தலைதூக்கின. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில்தான் திராவிடர் இயக்கம் வளர்ந்தது என்பது கவனத்துக்குரிய விடயம்.   

இன்னுமொரு முக்கிய விடயமாக பெரியார், அண்ணாத்துரை போன்றோருக்கு பின் வந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் தலைவர்களாக திகழ்ந்தவர்கள் இக்காலகட்டத்தில்தான் இணைந்து கொண்டார்கள். முக்கியமாக இரா.நெடுஞ்செழியன், க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, மணியம்மையார், கி.வீரமணி போன்றோரை குறிப்பிடலாம்.  

அண்ணா தீர்மானங்களின் அடிப்படையில் இதன்படி 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் எதிர்கொண்ட சட்டசபைத் தேர்தலையும் அரசியலமைப்பு அவைக்கான தேர்தலையும் பகிஷ்கரிக்கும் முடிவுக்கு திராவிடக் கழகம் வந்தது. தொடர்ந்தேர்ச்சியான பிரச்சாரங்களும், போராட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் எழிச்சியை உருவாக்கியது. இது “திராவிட நாடு” கோரிக்கையையும் வலுப்படுத்துவதாக மாறியது.     

மேற்படி பிரிவினைக் கோரிக்கையை கண்டு 1947 பெப்ரவரியில் திராவிடக் கழக கூட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு தடை விதித்தது.  

மறுபுறத்தில் அனைத்து தடைகளையும் தாண்டி திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்தில் அதிக வரவேற்பை பெறத் தொடங்கின. பெருகி வந்த மக்கள் ஆதரவுகளுடன் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் திராவிட கழகம் பல்வேறு வெற்றிகளை ஈட்டியது. 

(தொடரும்)