— அகரன் —
ஒரு அகதி நிசந்தனுக்கு இப்படி ஒரு அநியாயத்தை இந்த பிரான்ஸ் அரசு செய்ய எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. உயிரோடு இருக்கும் போதே ‘அவன் இறந்து விட்டான்’ என்று எல்லா அலுவலகங்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டது. அதை விடக் கொடுமை அவன் மரணச் சான்றிதழை அவன் கையிலேயே கொடுத்ததுதான்.
பிரான்ஸ் நாடு 600 ஆண்டுகளாக தொடர் யுத்த அனுபவம் கொண்டது. நெப்போலியன் என்ற பெரும் வரலாற்று புயலை அறிமுகப்படுத்தியது. நவீன ஜனநாயக புரட்சியால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று மூன்று விரலால் பட்டை போடுவது போல எல்லா அதிகார மையங்களிலும் எழுதி வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நாடுதான் இந்தத் தவறைச் செய்தது.
இது உண்மையில் நிசந்தனின் கதை அல்ல. அயந்தனுடைய கதைதான். அயந்தன் வேறு யாருமல்ல. நிசந்தனுடைய அண்ணன் தான்.
**
அயந்தன் தன் வாழ்நாளில் வஞ்சகம் வைக்கவில்லை. இருபது ஆண்டுகளை இலங்கைக்கும், இருபது ஆண்டுகளை இலங்கைக்கு வெளியிலும் கழித்து விட்டான்.
அவன் சிறுவனாக, சிறுத்தை போல இருந்தபோது “தெல்லிப்பளை”யை விட்டு இடம்பெயர்ந்தார்கள். அப்போது தேம்பித் தேம்பி அழுதிருக்கிறான். அதற்குப் பிறகு இருபது வருடங்களுக்கு மேல் இடம்பெயர்ந்த போது திருவிழாவிற்கு போவதைப்போல உற்சாகம் எப்போதும் அவனிடம் இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளாக பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறான். எல்லா நாடுகளும் சுவரில் பட்ட பந்து திரும்பி வருவது போல அவனைத் திருப்பி பாரிசுக்கு அனுப்பிவிடுவார்கள். அகதிக் கோரிக்கை 20 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு கொண்டு வந்திருக்கிறது. அயந்தன் அதைப்பற்றி அலட்டிக்கொண்டது கிடையாது.
ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு அதிகம் பெற்ற அகதி போல் ஆகிவிட்டான். பாரிசில் 110 வித்தியாசமான தேசமக்கள் வாழ்கிறார்கள். அதில் அதிக வேற்றுநாட்டு மக்களுடன் நட்பு பாராட்டிய இலங்கையன் அவனாகத்தான் இருக்க முடியும். இதற்கு காரணம் பிரெஞ்சு மொழியை இளம் பிரெஞ்சு பெடிபெட்டைகளும் இரசிக்கக் கூடியதாக பேசும் அழகு தான். நாற்பது வருடமாக பிரான்சில் குடியுரிமை பெற்று வாழும் பலருக்கு கூட நாக்கில் சூனியம் வைத்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிரெஞ்சு மொழி, அயந்தனின் நாக்கில் குடியுரிமை பெற்று விட்டது.
அவனது தோற்றம், இனம் மொழி கடந்து எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். எப்போதும் தேவதையை கண்டவனின் முகம் போலவே இருக்கும். சிரிப்பு அவன் தூங்கும் போது மட்டும் தடை செய்யப்பட்டிருக்கும். படமெடுத்த நாகபாம்பின் கோடுகள் போல பிரெஞ்சுத் தாடிக்கோடுகள் நிரந்தரமாக இருக்கும். முன்னம் பல்லின் கால்வாசி துண்டை வன்னியின் ஒரு விளையாட்டு மைதானம் கடனாக பெற்றுவிட்டது. ஆறு அடியை தொட்டுவிடக்கூடிய உயரம். மிக இலகுவாக சொல்வதென்றால் போராளியாகி இருந்திருந்தால் ஒரு சிறந்த தளபதியாக இருந்திருப்பான்.
‘2000மாவது ஆண்டு உலகம் அழிந்து விடும்’ என்று உலகம் பேசிக்கொண்டிருந்த நாளொன்றில் பாரிசுக்கு வந்து சேர்ந்தான். பல நாடுகளை அவன் இலகுவாகக் கடந்தத்திற்கு அவன் சிரிப்புத்தான் காரணமாக இருக்கும்.
அகதி அடைக்கல விசாரணையில் சிரித்துக் கொண்டே பதில் சொன்னானோ என்னவோ? அவனுக்கு கடைசி மட்டும் அடைக்கலம் வழங்கவில்லை அந்த நாடு. அவனுக்கு நடிக்கத் தெரியாததற்கு அவன் என்ன செய்வான் ?
ஆனால் சட்டம் வேலை செய்ய அனுமதிக்கா விட்டாலும் அவன் வேலையை ஆரம்பித்துவிட்டான். அந்த நிறுவனம் அவனுக்கு வாகனம் ஒன்று வழங்கியது. கட்டளைகள் வந்துகொண்டிருக்கும். அந்தந்த இடங்களுக்குச் சென்று வீட்டு வேலை செய்வதுதான் அவனுடைய வேலை.
அந்த வேலைதான் அவன் மக்களோடு பழகி, மக்களில் ஒருவனாகி, அந்த மக்களின் மொழியைக் கற்றுக்கொள்ளவதற்கு காரணமாக இருந்தது. ஒரு புற்றுக்குள் புகுந்த உடும்பு வேறு புற்றுக்குள்ளால் வெளியேறுவது போல பாரிஸ் கட்டட காட்டுக்குள் புகுந்து வெளியேறிவிடும் வல்லமை இருந்தது. பாரீசை காவல்காக்கும் காவல்துறை எப்போ? எந்தப் பகுதியில் நிற்பார்கள்? என்ற ஜாதகம் அவனிடம் இருந்தது.
முதல் பத்தாண்டுகளில் மூர்க்கமாய் உழைத்து தன் குடும்பத்தை பட்டினியில் இருந்து காத்து, அவர்கள் தொடர்ந்து இடம்பெயர்வதற்கு, துணையாக இருந்தான்.
பாரிஸ் வருவதற்கு கள்ளப்பயண முகவர் அவன் முதுகில் ஏற்றிவைத்திருந்த நல்ல கடனையும் வட்டியும் முதலுமாக கட்டிவிட்டான்.
பாரிஸ் அவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன? கனவு நகரம் ரொரன்ரோ அவனை வரவேற்க வெற்றிலை பாக்கு சகிதம் காத்திருந்தது. மணிக்கூடுபோல இரண்டு வருடம் உழைத்து ரொரன்ரோ படையெடுப்புக்கு தயாரானான்.
இந்த காலகட்டத்தில்தான் நண்பன் மணி திடீரென புதுப்புது காரில் பயணப்பட்டான்.
ஒரு நாள் அகதியாக வந்த தமிழர் தங்கள் வீரத்தைக் காட்ட அடிக்கடி காட்டுக்குள் இருந்து வெளியேறி வெட்டுப்பட்டு விளையாடும் “லா சப்பல்” (la chappale) இல் மணியும் அயந்தனும் சந்தித்துக்கொண்டார்கள். மணி பாரிஸ் வந்த புதிதில் அயந்தன்தான் அவனுக்கான ஆரம்ப அடைக்கலத்தை வழங்கியவன். அதை சொன்னால் அவர்கள் உறவைப் புரிந்து கொள்வீர்கள்.
‘என்ன மச்சான் நல்ல வசதி போல’
‘ஓமடா கனகாலம்’
‘விசா கிடைச்சா நீங்கள் மறந்துடுவீங்கள்?’
‘இல்ல மச்சான் இல்ல.. நான் இங்க நிக்குற குறைவு. வேற நாடுகள் போய்வாறனான்.’
‘என்ன ஏஜென்ஸி ஆகிவிட்டாய் போல ?
‘மச்சான் கனடாவுக்கு அனுப்புறேன். நல்லா போகுது. நேற்று இரண்டு பேரை கிளியர் பண்ணிட்டன்.‘
‘ஓ… நல்லது நல்லது.’
‘மச்சான் உன்ர விசா அலுவல் என்ன மாதிரி?’
‘ஒன்றும் இல்லையடா’
‘லூசா ஏன் இங்க இருந்து காய்கிறாய்? உன்ர உழைப்புக்கு அங்கே போடா. நல்ல வாழ்க்கை விசா உறுதியாகிடைக்கும்’
‘பார்ப்போம்.. பார்ப்போம்’
‘மச்சான் றூட் நல்லா ஓடுது. 20 போகுது நீ 15 தா. உன்னட்ட நான் ஏன் லாபம் வைப்பான் ?’
அயந்தன், மணியிடம் பதினையாயிரம் யூறோ கொடுத்தான். அந்த நிமிடத்தில் வந்த வார்த்தை முக்கியமானது :-
‘மணி இது என்ர இரண்டு வருட ரத்தமும் வேர்வையுமடா’
வேகமாக பயண நடவடிக்கை ஆரம்பமானது. அமெரிக்காவின் விமான நிலையத்தில், மெக்சிகோவுக்கான விமானத்தில் ஏறப்போகும்போது, ஒசாமா பின்லேடனை. பிடிப்பதை விட்டு விட்டு அமெரிக்க காவல்துறை அயந்தனை பிடித்துவிட்டது. மணி விசில் அடித்துவிட்டு கைபேசியை மாற்றிவிட்டான்.
அமெரிக்காவிற்கு பெரிய மனது. ஒரு வருடம் கடும் காவல் தண்டனை வழங்கியபின் நாடு கடத்துவதாக சொன்னது. ஒருவருடம் அமரிக்காவில் தங்குவதையிட்டு மகிழ்ந்துபோனான். அந்தச் சிறைதான் அயந்தனை ஆங்கிலத்தில் விற்பன்னன் ஆக்கியது. ஒரு சிறந்த ஆபிரிக்க அமெரிக்கனாகவே மாறிப்போனான். சிறையில் இருந்தால் என்ன அமெரிக்க காற்றுத்தானே வீசிக்கொண்டிருந்தது?
அமெரிக்க சிறைக் காவலாளியாக இருந்த ஒருத்தி அடிக்கடி சிரித்து பேச ஆரம்பித்த அதிகாலை ஒன்றில் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டான்.
கொழும்பு அவனை கொடுப்புக்குள் வைத்திருக்கும் வெற்றிலைச்சாறு போலதுப்பி விட்டது. அவன் தோற்றம் இப்போது இலங்கைக்கு உரியவனாக இல்லை.
தனது அனுபவத்தில் அசையாத நம்பிக்கை வைத்து எந்த அமெரிக்க சிறையில் இருந்து நாடுகடத்தப்பட்டானோ? அதே அமெரிக்காவின் கடவுச்சீட்டை வடிவமைத்து அமெரிக்கன் போல பாரிசுக்கு மீண்டும் வந்திறங்கினான். (அமெரிக்க CIA அப்போது ‘டோராபோரா’ மலைகளில் நின்றிருக்கும்.)
பாரிஸ் மீண்டும் அகதி அடைக்கல கோரிக்கையை நிராகரித்தது. அயந்தன் அடை மழை போல சிரித்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்து விட்டான். இனி பாரிசை விட்டுப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டான். ஏனென்றால் அவசரப்பட்டு அவன் அழகி ஒருத்தியை காதலித்து விட்டான். அழகியின் குடும்பமும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் சொந்த வீடு அவசியம்! என்றார்கள்.
அவனுக்கு எந்த ஒரு நாடும் இல்லைத்தான் அதனால் என்ன? சொந்த வீடு என்ன நாடே வாங்கலாம், என்று உழைத்து உழைத்து அழகி பெயரில் செல்வம் சேர்த்தான்.
எல்லோருக்கும் அவசர ஊர்தி போல தன் வியர்வையை செலவழித்துக் கொண்டிருந்தான். தன் திருமண நாட்களை எண்ணிய அவன் காதுகளுக்கு ஒரு சேதி வந்தது-
‘என்னை மறந்துவிடு’
ஒன்றும் புரியாமல் அவளின் தாய் தந்தையிடம் ஓடினான். ‘ஆம் அவளை மறந்து விடு’ அவன் கத்திய ஓசை பாரிசில் இடிமுழக்கமாக உணரப்பட்டது. அவன் கட்டிய வீட்டில் இருந்தே ‘’வெளியே போ’’ என்றார்கள்.
அதன் பிறகு அவன் எந்த வீடுகளுக்கும் போகவில்லை. வீதியில் உலக தோழர்களும், பாரிசின் அத்தனை போதை உலகமும், வீதிகள் அறிய தன்னைத்தானே இந்த மனிதர்கள் பார்க்க பார்க்க தன்னை சிதைக்க ஆரம்பித்தான்.
அந்த நாட்களில்தான் அவன் தம்பி நிசந்தன் பாரிசுக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. ஆனால் அவனால் அயந்தனை மாற்ற முடியவில்லை.
எப்போதாவது பாரிசின் ஏதோ ஒரு வீதியில் கடும் முயற்சிக்குப் பிறகு அயந்தனை சந்திப்பான். அச்சந்திப்பில்-
‘அண்ணா என்னோடு வந்து இரு நாம் ஒன்றாக இருப்போம்’ என்றால்-
‘உன் வேலையை பார்’ என்ற துண்டு வார்த்தை வீசிவிட்டு, கெற்றப்போலில் இருந்து புறப்படும் கல்லுப் போல புறப்பட்டு விடுவான். மனிதர்களின் ஆலோசனைகளை ஏற்பதில்லை என்று உறுதியான முடிவை அயந்தன் எடுத்துவிட்டான்.
**
அப்போது அவசரப்பட்டு 2020 வந்துவிட்டது. நிசந்தன் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, லீலாவதி ஆசிரியர் ‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்று சொன்ன வசனம் அவன் மனதில் எப்போதும் அழிவதில்லை. காரணம் ஆசிரியர் அவ்வளவு அழகு.
அதன் அர்த்தத்தை 2020இல் அறிந்துகொண்டான். கொரோனா போலவே கடவுளும் இருப்பார் போலும். அந்த முதலாவது முடக்கத்தை பிரான்ஸ் அறிவித்த மறுநாள் போதைப் பொருட்களால் துருப்பிடித்த குரல் ஒன்று தொலைபேசியில் கத்தியது.
‘’அயந்தனை பொம்பியே (அவசர மருத்துவ வண்டி) கொண்டுபோயிட்டு.. அவன் கோமாவாபோட்டான்’’
‘’ஏன்.? எந்த hospital? நீங்கள்?.. ஐயோ..‘’
நிசந்தன் கேள்விகளை முடிக்க முன்னரே அது துண்டிக்கப்பட்டு விட்டது. கைபேசி சூடாகும் அளவிற்கு அந்த இலக்கத்துக்கு தொடர்பெடுக்க முயன்றான். அந்த இலக்கம் தொடர்பு எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக ஒரு பெண் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தாள்.
ஆபத்தான சூழலில் சிலருக்கு மூளையின் ஒரு பகுதி தூக்கத்திற்கு போய்விடும். அடுத்த நாள்தான் அயந்தனின் இலக்கத்துக்கே அழைக்கலாமே? என்று அவன் மூளை சொன்னது. அழைத்தான் அது வேலை செய்தது. குறுஞ்செய்திகளை அனுப்பினான் அச்செய்திகளுக்கு பதில் இல்லை, ஆனால் பார்க்கப்படுவது தெரிந்தது.
ஏதோவொரு வைத்தியசாலையில் அவன் இருக்கலாம். பாரிசின் வைத்தியசாலைக்கு அழைத்தான். அப்போது கொரோனாவால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்தனர். இருந்தும் வைத்தியசாலைகள், காத்திருக்கச் சொல்லி தங்கள் தரவுகளை கணனிக்கு தெரிவித்து தேடியதில் எல்லா வைத்தியசாலைகளும் ‘இந்தப் பெயரில் ஒருவரும் இல்லை’ என்று சத்தியம் செய்தன.
கைபேசிக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான். அந்த செய்திகள் பார்க்கப்பட்டு கொண்டே இருந்தது.
முதல் முடக்க காலம் முடிவடைந்து, அயந்தனை வைத்தியசாலைகளில் தேட நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பெரிய வைத்தியசாலை ஒன்றில் அதிகாரியை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த வைத்திய அதிகாரி இப்படிச் சொன்னார்
‘’தவறுக்கு வருந்துகிறோம். நாங்கள் 15 நாட்கள் நிசந்தனை தேடி யாரும் வருவார்கள் என்று காத்திருந்தோம். அதற்கு மேல் இக்கட்டான நிலையில் உடலை வைத்திருக்க முடியவில்லை. இந்த நகரமன்று தந்த இடத்தில் அடக்கம் செய்து விட்டோம். இறந்தது ‘நிசந்தன்’ அல்ல ‘அயந்தன்‘ என்பதை நீதிமன்றமே மாற்ற முடியும். ஆண்டவன் உங்களை காப்பாற்றுவாராக’’
அயந்தன் வீதி மனிதனாக விதி செய்தவர்கள் ‘வைத்தியசாலைக்கெதிராக வழக்கு போடவேண்டும்’ என்று கொதித்தனர்.
அயந்தனுக்கு பிரான்ஸ் நாடு சொந்த நிலம் கொடுத்துவிட்டது.
நிசந்தன் தன் இறப்புச்சான்றிதலோடு காத்திருக்கிறான். மூன்று கேள்விகளுக்கு ஓராண்டு நெருங்கியும் அவனுக்கு விடையில்லை.
1, அயந்தன் தொலைபேசியின் குறுஞ்செய்திகளை யார் பார்த்துக்கொண்டிருப்பது?
2, நிசந்தன் என்ற பெயரில் அயந்தன் எப்படி சாக முடிந்தது?
3, நீதிமன்றம் நிசந்தன் இறக்கவில்லை என்று எப்போது தீர்ப்பிடும்?