— வேதநாயகம் தபேந்திரன் —
“காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப்பொட்டு வைத்துத் தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்……..” இப்படி ஒரு பாடல்.
”பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையால் என்னைத் தொட்ட நிலா….” இதுவுமொரு சந்தோசப்பாட்டு.
”மஞ்சள் போனால் திலகம் அழிந்தால் வாழ்வு முடிந்தது என்பார்.
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் வாழ்வு வாழ்ந்தாள் என்பார் ”
இது அமங்கலத்தையும் மங்கலத்தையும் உணர்வு பூர்வமாகச் சொன்ன சினிமாப் பாடலின் இடை வரிகள்.
பொட்டுக்கும் சினிமாவுக்கும் இணை பிரியாத உறவு உண்டு.
குங்குமப் பொட்டுக் கவுண்டர், பொட்டு அம்மன், பொட்டு என்ற பெயர்களில் படங்கள் வெளி வந்துள்ளன.
இலங்கை வானொலி கொடி கட்டிப்பறந்த நாள்களில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற பெயரில் பிரபலமான பெண்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
பொட்டு சைவப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. தமிழர் பாரம்பரியத்திலும் அசைக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது. கோயில்களில் பூசை முடிந்த பின்பு விபூதி, சந்தனம், குங்குமம், பூ, தீர்த்தம் வழங்கி நிறைவு செய்வார்கள். வசதி இருந்தால் பஞ்சாமிர்தம் உட்படப்பல பிரசாதங்கள் வழங்குவார்கள்.
எமது நாட்டில் 1977 ஆம் ஆண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. அது தமிழீழக் கோரிக்கைக்கான அங்கீகாரம் பெற்ற தேர்தல்.
யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சார மேடைகளில் தமிழ் இளைஞர்கள் உணர்ச்சி மேலீட்டால் தலைவர்களுக்கு தமது கைப்பெருவிரலை பிளேட்டால் வெட்டி இரத்தப் பொட்டு வைத்த வரலாறு உண்டு.
அவ்வாறு பொட்டு வைத்த இளைஞர்களில் அரியாலையைச் சேர்ந்த சண்முகநாதன் சிவசங்கர் எனும் இளைஞன் முன்னணியில் நின்றான். அதனால் பொட்டு என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டுப் பிரபலமானான்.
பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகி சக்திவாய்ந்த தளபதியாகப் பொட்டம்மான் என அழைக்கப்பட்டார்.
தமிழ் இளைஞர்களது ஆயுதப்போராட்டம் 1983 யூலைக்குப் பின்னர் தீவிரமடைய ஆரம்பித்தது. சமூக விரோதிகளை, எதிர் இயக்க உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லும் படலம் ஆரம்பித்த காலங்களில் பொட்டு வைத்தல் என்ற ஒரு சங்கேதப் பெயர் புழக்கத்தில் இருந்தது.
அதாவது நெற்றியின் மையப் பகுதியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது பொட்டு வைத்தல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகிய பெண்கள் பொட்டு வைப்பதில்லை.
சைவக் கோயில்களில் குருக்கள் திருநீறு வழங்கிய பின்பாக சந்தனம், குங்குமம் வழங்குவார்.
சந்தனப் பொட்டின் மேலே குங்குமத்தை இட்டுப் பிறைவடிவில் வைக்கும் பொட்டு முகத்துக்குத் தனி அழகைக்கொடுக்கும்.
நெற்றியின் மையப் பகுதியில் மூளைக்குச் செல்லும் நரம்பு முடிச்சு உள்ள இடத்தில் பொட்டு வைப்பது மூளையைக் குளிர்விக்கும். அதனால் உடல் சுகம் உண்டாகுவதற்கு எம்மவர் கண்டுபிடித்த ஒரு முறையே பொட்டு என மெய்ஞான விளக்கம் தரப்படுகிறது. இதனாலேயே வெப்பம் கூடிய ஆசியப் பிராந்தியத்தில் ஆண்களும் பெண்களும் பொட்டு வைக்கும் பழக்கம் வந்தது.
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலில் ஒருவகை மண்ணுடன் தண்ணீரைச் சேர்த்து பொட்டுத் தயாரிக்கும் முறை உள்ளது.
இது நாமப் பொட்டு என அழைக்கப்படுகிறது.
நாளாந்தம் கோயில் சென்றோ வீட்டில் வைத்தோ பொட்டு வைக்கும் ஆண்களின் பெயருடன் பொட்டும் பட்டப் பெயராக ஒட்டிக் கொள்ளும். பொட்டு நடராசா, பொட்டர் என்ற பெயர்கள் ஊர் வழக்கில் இன்றுமுள்ளன.
இளம் பெண் அல்லது நடுத்தர வயதுப் பெண்ணின் கணவன் இறந்து போனால் இறுதிக் கிரியைகளின் போது கூறை கட்டித் தாலி அணிவித்து பொட்டு வைப்பார்கள். பின்னர் பொட்டழித்து தாலி கழட்டும் கொடூரச் சடங்கு இன்றும் தொடர்கிறது. பெண் மோகம் கொண்ட சில ஆண்கள் குங்குமக் கலரில் நெற்றியில் வசியப் பொட்டு வைக்கும் வழக்கம் முன்னாளில் பிரபலமானது. தமிழகத்தில் ஆண்கள் சந்தனப் பொட்டு வைக்காமல் குங்குமப் பொட்டு வைக்கும் வழக்கமே பெருமளவில் உள்ளது.
நீதிமன்றத்தில் நீதிபதியை வசியம் செய்ய மந்திரித்த பொட்டு வைத்துச் செல்லும் பழக்கமும் இருந்ததாம்.
பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு கறுத்தப் பொட்டு வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
இதற்கென பொட்டுக் காய்ச்சிய முறை முன்னாளில் இருந்தது. அரிசிக் குறுணல் எடுத்து இரும்புத் தாச்சி ஒன்றில் நன்றாகக் கறுக்கும் வண்ணம் வறுப்பார்கள். அரிசி கறுத்து மாவாகும் தன்மை வரும் போது அதனுடன் சிறிதாகத் தண்ணீரைக் கலந்து அகப்பையால் நசிப்பார்கள். அப்போது கருகிய அரிசி கரைந்து எண்ணைத் தன்மை உடைய கறுப்பு நிற திரவமாக உருவாகும்.
அதனை உட்புறம் விறாண்டித் துப்பரவாக்கிய சிரட்டையினுள் ஒரு படையாக ஊற்றிக் காய வைப்பார்கள்.
இது போலக் கோதுமை மாவையும் வறுத்துக் கருக்கிப் பொட்டுக் காய்ச்சுவார்கள்.
இப்படியான பொட்டுச் சிரட்டையினுள் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்த பின் குளிக்க வார்த்த குழந்தையின் நெற்றியில் பொட்டு வைப்பார்கள்.
இப்படி வைக்கும் பொட்டுக் குழந்தைக்குத் தனியான ஒரு அழகைக்கொடுக்கும்.
தற்போதைய காலத்தில் இப்படிப் பொட்டுக் காய்ச்சுவது அரிதாகவே நிகழ்கிறது.
கறுப்பு நிறத்திலான ஸ்ரிக்கர் ஒட்டுப்பொட்டை குழந்தைகள் முதல் குமரிகள் வரை, திருமணமான பெண்கள் வரை வைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது.
வீட்டுக்கு வீடு வேலிகள் இருந்த காலங்களில் பொட்டு, கடப்பு என்பவை இருந்தன. வேலியின் கீழ் பகுதியை வெட்டி அதனால் புகுந்து போனால் அது பொட்டு.
வேலியின் அரைப் பகுதியை வெட்டி அதன் மேலாகக் கடந்து போனால் அது கடப்பு எனப்பட்டது.
அணியும் பொட்டு வகையிலிருந்து இது வேறுபட்டது.
திருமணமான பெண்கள் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்துத் தான் திருமதி என அடையாளம் காட்டிய காலம் தற்போது அருகி வருகின்றது.
தற்போது சின்னம் சிறிய சிகப்புக் கலர் ஒட்டுப் பொட்டை அணிகிறார்கள். இவர்கள் திருமதியா செல்வியா எனத்தெரியாது சைட் அடிக்கப் புறப்படும் இளமட்டங்கள் தடுமாறுவதுதான் பரிதாபம்.
இன்றைய காலத்தில் காலையில் திருமண வைபவம் நடந்தால் குஞ்குமப்பொட்டு தரிப்பார்கள். மாலையில் ரிசெப்சன் என்ற பெயரில் வரவேற்பு உபசாரத்தின் போது குங்குமப் பொட்டை அழித்து விட்டு ஸ்ரிக்கர் ஒட்டுப்பொட்டை வைக்கின்றனர். இதனால் பாரம்பரியமான பழக்க வழக்கங்கள் மலையேறிப் போகின்றன.
மூவின மக்கள் வாழும் எமது இலங்கை நாட்டில் பொட்டு அணிந்தால் தமிழ்ப் பெண்கள் எனவும் பொட்டு அணியாதவர்கள் சிங்கள முஸ்லீம் பெண்கள் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
போர் நடந்த காலத்தில் தமிழ் பெண்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது பொட்டு அணியாமல் தம்மை இனம் காட்டாமல் சென்ற நிலை கூட இருந்தது.
தமிழ் பெண்களாயினும் பெந்தகொஸ்தே சபை, எக்காளத்தொனி போன்ற சமயங்களைப் பின்பற்றுபவர்கள் பொட்டு அணியாமல் செல்கின்றனர்.
‘நல்லாய் இருந்தவன், அவன் பொட்டெண்டு போயிற்றான்.’ இப்படியாகப் பேச்சு வழக்குச் சொற்களும் பல.
இப்படியாகப் பொட்டு மான்மியத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்பான வாசகர்களே உங்களுக்குத் தெரிந்ததையும் சொல்லுங்கள்.