— அகரன் —
என்ன செய்தாலும் என் மூளையை சரிக்கட்ட முடிவதில்லை. அது குறுக்குப்போக்கு. ‘புறம்போக்கு’ என்று திட்டுவார்களே அப்படி. சென்னையிலிருந்து மதுரை போவதென்றால் அது என்னை அறியாமலே கொடைக்கானல் போய்விடும். இந்த நோயை குணப்படுத்த முடியாது என்பதற்கு அறிகுறி அதிகம்.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கிறேன். 36 வருடங்களாக புலம்பெயர்ந்து வாழும் ‘திரு அரசரத்தினம்’ அவர்களை சந்திக்கப்போகிறேன். ‘திரு தறுமுவை’ அறிந்த உற்ற நண்பன் அவர் ஒருவர்தான்.
அப்படி ஒரு நபர் இருப்பது இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் போய்விட்டது.
அம்பிகாவிடம் தறுமுவைப்பற்றி கேட்கமுடியாது. அம்பிகா தறுமுவோடு வாழ்ந்தது மூன்று வருடங்கள்தான். அதையும் தாண்டி ஆவலாய் ஏதும்கேட்டால் கண்ணீரால் காது நனைப்பவள்.
தறுமு, வெங்காயம் வேண்டப்போனாரோ? வெடிகுண்டு வேண்டப்போனாரோ? எனக்குத் தெரியாது. ஏனெனில் எனக்கு அப்போது வயது 58 நாட்கள். ‘’இராணுவம் அவரை நோக்கி சுட்டது அவர் ஓடினார்’’, அவ்வளவு சேதிகளையும், வற்றாத கண்ணீரையும் வைத்துக்கொண்டு அம்பிகா வாழ்கிறாள். அவளது அடங்காத கற்பனையில் இராணுவம் சுட ஓடிய தறுமு, 35 வருடமாக ஓடி வந்துவிடுவார் காத்திருக்கிறாள். அவர் வருவார் !
சங்ககாலத்திலும் பெண்ணொருத்தியின் கண்ணீர் பற்றி புலவர் தாயங்கண்ணணார்,
‘’காதல் மிகுந்த பெண் அழுது சிந்திய கண்ணீர் எலும்புகள் கிடக்கும் சுடலையின் சாம்பலை அவித்தது.‘’
‘’… நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண்நீறு அவிப்ப.. ‘’ என்று பெண்களின் சுடு கண்ணீரைப் பற்றிச் சொல்கிறார்.
நாங்களும் ஒரு சங்ககாலத்தில் தான் வாழ்கிறோம் போலும். எல்லாமே பொருந்திப்போகிறதே!?
தறுமு பற்றிய முழுச்சேதிகளும் திரு அரசரத்தினத்திடம் இருந்து எனக்கு விடைகளாக கிடைக்கலாம்.
அவரின் இலக்கத்தை கண்டுபிடித்து அழைத்தபோது,
‘’ஐயோ தம்பி அவன் என் உயிர் நண்பன் உங்களை பார்க்கவேணும்போல் உள்ளது.
வாருங்கள் வாருங்கள் எல்லாம் சொல்கிறேன்.’’
என்று தழுதழுத்தாலும். இறுதியில்,
‘’எங்கள் குடும்பத்தில ஐந்து டொக்டர்’’ என்று ஐந்து தடவை சொன்னார். மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் சந்திப்பை உறுதிசெய்தேன்.
ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கு இந்த ‘டொக்டர்’ நோய் இருப்பது எனக்கு தெரியும். எனக்கு முக்கியம் தறுமு பற்றிய கதைதானே?
என்ன கேள்விகள் கேட்கலாம்? என்று ‘புலுனிக்’ குருவிகள் போல கத்துகிறது மனசு. ‘திரு தறுமு’ வேறு யாருமல்ல, 35 வருடங்களின் முன்பு காணாமல் போன எனது அப்பாதான்.
**
ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு செல்ல வாகனத்திற்கு கருப்பாண்டியிடம் சொல்லி விட்டேன். அது அவன் சொந்தப் பெயர் அல்ல. வன்னி வெயிலும் மற்ற கறுப்பர்களும் அவனுக்கு வைத்த பெயர்.
அவனிடம் மட்டும்தான் கார் (voiture) உண்டு. இலங்கை ஓட்டுனர் பத்திரத்தை இங்கு மாற்றியதால் அவனது கார் தென்னை மரம் போல அனுபவ அடையாளங்களை கொண்டிருந்தது. பாரிசில் பயங்காட்டித் திரியும் வீதிப் போலிசுக்கு இவனை நன்கு தெரியும். இவன் எவ்வளவு அழுதாலும் அவர்கள் ஆறுதல் சொல்லிவிட்டு, சம்பளத்தில் அரைவாசியை குற்றத் தண்டமாக பறித்து விடுவார்கள்.
இப்போது பழகிவிட்டான். வேதனைப்படுவதில்லை. ஒவ்வொரு முறை குற்றப்பணம் கட்டும்போதும் ஒரு தத்துவம் சொல்வான்-
‘மச்சான் போலீஸ்சோட மட்டும் எதிர்த்து பேசக்கூடாது கதைச்சதுக்கும் சேர்த்து காசு எடுத்திடுவாங்கள்’
அந்தக் கண்டுபிடிப்பில் அவனுக்கு மகிழ்ச்சி. ‘வாகனம் ஓட்டுவதற்கான வாய்ப்பே எனக்கு இல்லை’ என்று கந்தசாமி சாத்திரி சொல்லி விட்டது அவனுக்கு எப்படி தெரியும்?
**
கைப்பேசி கத்திக் கொண்டே இருந்தது. எழுந்து அதை எடுக்க முடியாமல் இருந்தது. உடற்பயிற்சி என்ற பெயரில் நேற்று உடலுக்கு கொடுத்த வதை தான் அதற்குக் காரணம். நரம்புகள் கூட அசைய மறுத்தன. மணிக்கூட்டின் சின்னக்கம்பி அசைவது போல அசைந்து கைபேசியை எடுத்தேன் கறுப்பாண்டிதான்
‘ஓம் சொல்லு…’.
‘எங்க மச்சான் நிற்கிறாய்?
‘இந்த நேரம் எங்க வீட்ட தான், லூசாடா உனக்கு?’
‘இல்லடா ஒரு முக்கிய விஷயம்….’.
‘என்ன? சொல்லு… ‘.
‘மச்சான் உன்ர அப்பாவ இன்று மின் மயானத்தில் எரிச்சுப்போட்டினமாம்..’
‘என்னடா சொல்லுறாய்?’
‘ஓமடா முகப்புத்தகத்தில அறிவித்தல் கிடக்கு!’
‘என்னடா இழவு? மகனுக்கு சொல்லாம முகப்புத்தகத்தில அறிவிச்சு செய்திட்டாங்களா? படுபாவிகளா?’
‘மகன் இருக்க எப்படிடா இப்படி செய்யலாம் ஐயோ..என்னடா இப்ப செய்ற?’ முகத்தை கூட பார்க்கேல்லையேடா..?
‘மச்சான், நீ இருக்கிறது அவங்களுக்கு தெரியாம இருக்கலாம்….. நாங்க அந்த மின் மயானத்துக்கு அழைத்து தகவல் சொல்வோம்.’
‘சரிஅடே.. வாடா அங்க உடன போவம்.’
என்னால் அதற்கு மேல் பேச முடியவில்லை. கருப்பாண்டி ஓரளவு மொழி (French) கதைப்பான். எனக்கு ஒன்றும் வராது. ஊரில நல்லாத்தான் படிச்சன். இங்க வந்து சிறந்த மொக்காய்ப் போனேன். பத்து வருசமா இந்த மொழியை கதைக்க முடியல…. உண்மையான மொக்கு தான்.
இந்தப் பிரச்சனையை விடக்கூடாது. என்ர அப்பாவ எனக்கு அறிவிக்காம எப்படி எரிக்க முடியும்? ஒரு முறையேனும் அந்த மனுசனை பார்க்க முடியலையே….!
இதை ஏற்பாடு செய்தவரையும் விடக்கூடாது. ஒருவேளை அவரின் நண்பராக இருக்குமோ? அவர்தான் ‘திரு அரசரத்தினம்’. எப்படி அவர் எனக்கு சொல்லாமல் விடலாம்? அவர்தான் என்றால் அவர் எப்படி வரும் ஞாயிறு என்னுடைய முகத்தைப் பார்ப்பார்?
ஐயோ…….. ஒருவர் கூட இல்லையே… துரோகிகள்… துரோகிகள்…
கறுப்பாண்டி வந்ததும் உடனே புறப்பட்டு விட வேண்டும். ஏனென்றால் மாலை 6 மணிக்கு மின்மயானம் பூட்டி விடுவார்கள். அப்பா நான் இங்கு இருப்பது தெரிந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? அவர் என்னைப் பார்க்க நிச்சயம் விரும்பி இருப்பார். ஏதாவது சொல்ல ஆசைப்பட்டிருப்பார். முதலில் என்ன நடந்தது என்று அறிய வேண்டும். எனக்கு பிரெஞ்சு மொழி தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நானே கதைத்து உடனேயே அறியலாம். இன்னொருவனுக்கு காத்திருக்கவேண்டி இருக்காது.
இந்தக் கொடுஞ்செயலை நிகழ்த்தியது ‘திரு அரசரத்தினம்’ ஆகத்தான் இருக்கும். அன்று தொலைபேசியபோது‘ தறுமு’ என்னுடைய முதன்மையான நண்பன்; நீர் இங்கே இருப்பது தெரியாமல் போய் விட்டது. அடிக்கடி உங்களை விசாரிப்பன். அவன் காணாமல் போனது எனக்கு உங்களை விட சரியான கவலை’ என்றாரே ? இப்படிப்பட்ட மனுசனா இதைச்செய்திருக்கும்?
இப்படி என் மனம் கரைக்கு வந்து மோதும் அலை போல ஆவேசமாக இருந்தது. ஏக்கங்கள் நுரையாகப் பொங்கின.
கறுப்பாண்டியின் கார் சத்தம் கேட்டது. அதன் சத்தம் பாரிசிலேயே புதிய சத்தம். கோயில் பூசையின் போது எல்லாம் மணியையும் அடிப்பார்களே அந்த சத்தமும், செல் விழுந்து வெடித்த பின்னர் ஒரு சத்தம் வருமே… அந்த இரண்டு சத்தமும் சேர்ந்த சத்தம். பிரெஞ்சுக் கிழவிகள் இந்த காரை கண்டதும் மரியாதை நிமித்தம் ஒதுங்கி நிற்பார்கள். காரின் எல்லா நட்டுகளும் ஓய்வூதியத்திற்கு தயாராய் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். கறுப்பாண்டியோடு காரின் முன் இருக்கையில் இருந்து போகும் போது எனக்கு அடிக்கடி ஒரு நினைவு வரும், ‘இந்தச் சில்லுகளில் ஒன்று கழன்று ஓடிவிட்டால் என்ன நிலை?’ அவனுக்கு இதை எப்படி சொல்வது? இப்படி என் உயிரை அடகு வைத்து பயணம் போகும்போது, சில வேளைகளில் கறுப்பான கண்ணாடியை எடுத்து மாட்டுவான். அந்த வேளைகளில் என் உடலில் உயிர் இருப்பதில்லை.
கைப்பேசி நடுங்கியது.
‘ஓம் வந்துட்டியா?’
ஓமடா, இவன் நிசாந்தனையும், தயாவையும் கூட்டியந்தனான்.’
‘இந்த நேரத்தில அவங்களிட்ட போயா வாராய்?’
‘இல்லடா அவசரப்பயணம் தயாளன் வந்தா நல்லா இருக்கும்.’
‘சரி வாறன்.’
தயா, பல ஆண்டுகளாய் சட்டரீதியற்ற குடியிருப்பாளன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அவன் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. (இப்போது இங்கு முயற்சியில் இருக்கிறான்) அதற்கு காரணம் அவன்தான். ‘தான் பொய் சொல்ல மாட்டேன்’ என்று அதிகாரிகளிடம் விசாரணையில் வில்லங்கம் செய்துவிடுவான். அதைவிட அபூர்வமான குணம் ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறான்.
கதைக்கும் போது அவனை அறியாமலேயே சத்தம் கூடிவிடும். ஒலி திருகும் திருக்கி பழுதான வானொலிபோல. கடைசியாக நடந்த விசாரணையில், விசாரணை அதிகாரியும், மொழிபெயர்ப்பாளரும் வாழ்நாளில் உணராத ஒலியை தம் காதுச்சவ்வுகள் கேட்டதாக விசனப்பட்டார்கள் என்று நிசந்தன் சொன்னான்.
இவனைக் கறுப்பாண்டி காரில் கொண்டு திரிவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவன் காருக்கான அவசர வைத்தியன் அவன்(தயா) தான்.
நிசாந்தன் ஒன்றும் சாதாரண சீவன் இல்லை. வஞ்சகம் இல்லாத உடலுக்கு சொந்தக்காரன். கதிரையில் இருக்கும் போது அவனுக்காகவே செய்த கதிரைகளாக எல்லாக் கதிரைகளும் இருக்கும். இவனைத் தனியே எங்கேயும் நாங்கள் விடுவதில்லை. போற இடங்களில் சூழலை பார்க்காமல் கதைத்து விடுவான். பிறகு வைத்தியசாலையில் பருப்பு வடை முகத்தை பார்க்க வேண்டியிருக்கும். செத்த வீட்டுக்குப் போய் பகிடிவிட்டு பாரிய வடுக்களை அனுபவமாக வைத்திருக்கிறான். வில்லங்கமான கதைகளை மோசமான இடங்களில் கதைத்துவிட்டு ‘கலவாய்’ குருவி போல சத்தத்தோடு சிரிப்பான். அதுதான் எதிரில் உள்ளவர்களுக்கு கொலை வெறியைத் தூண்டும்.
மூவரும் என்னை பார்த்தவாறே நின்றார்கள். முகங்கள் இருண்டு இருந்தன. கறுப்பாண்டி அமைதியை உடைத்தான்.
‘மின் மயானத்துக்கு அழைப்பு விடுத்தேன், அது வேலை செய்யவில்லை’
பாருங்கடா என்ன வேலை செய்திட்டாங்கள்?’
நிசாந்தன் தன் அருமையான வாயைத் திறந்தான்.
‘இப்ப என்ன செய்ற? சாம்பல் போய் வேண்டுவம்.’
என்னால் பொறுக்க முடியவில்லை. கல் ஒன்றை எடுத்து குறி பார்க்காமல் நிசாந்தன் மீது எறிந்தேன். அது பட்டுவிடும் .
**
திடுக்கிட்டு எழுந்து விட்டேன். பிறகு நித்திரை வரவில்லை. வலது கை தாங்கியிருந்த ‘கல்லை’ பார்த்தேன். அந்த தொடுகைபேசி காட்டியது, நேரம் அதிகாலை மூன்று மணி.
வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடக்காது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.