— வி. சிவலிங்கம் —
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை என்பது தற்போது ஒர் தீர்க்கமான இடத்தை நோக்கிச் செல்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலில் காணப்பட்ட விவாதங்கள் ஓர் புதிய பாதையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. இவை கடந்தகால கோரிக்கைகளில் சிலவற்றைத் தொடர்ந்து எடுத்துச் செல்வதோடு சிலவற்றைக் கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூகவியலில் இதனை ‘தொடர்ச்சியும், மாற்றங்களும்’ எனக் குறிப்பிடுவார்கள்.
13வது திருத்தம் தொடர்பாக வெளிவரும் இக் கட்டுரை சில பிரதான காரணிகளால் தூண்டப்பட்டதன் விளைவாகவே வரையப்படுகிறது. சமீப காலமாக ஊடகங்களில் வெளிவரும் விவாதங்களில் பல “தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்ப உட்பொருளாக 13வது திருத்தத்தைக் கொள்ள முடியும்” என வாதிக்கின்றன. குறிப்பாக தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியிலும் 13வது திருத்தத்தினை ஆரம்பமாகக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்ட போதிலும் அவற்றிக்கான விவாதங்கள் அத்துடன் முடிவடைவதாகவே உள்ளன. அதே போலவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கட்சி மற்றும் சில சுயேட்சை அமைப்புகள் இவை பற்றிக் குறிப்பிடுகின்ற போதிலும் விவாதங்கள் முன்னோக்கி நகர்வதாகக் காணப்படவில்லை.
இவ்வாறான இறுக்கமான நிலமைகளிலிருந்து விடுபட்டு விவாதங்களை மேலும் நகர்த்த வேண்டுமாயின் புதிய வியாக்கியானங்கள் அவசியமாகின்றன. இப் புதிய விளக்கங்கள் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குகளுடன் உடன்பட்டுச் செல்வதாகவும், சர்வதேச அளவில் இடம்பெற்று வரும் விவாதங்களுடன் இணைந்து பயணிப்பதாகவும், சர்வதேச அளவிலான இணைப்பினை அல்லது சமாந்தரமான பிரச்சினைகளுக்குள் வாழும் மக்களின் பயணத்துடன் எமது பயணமும் இணைந்து செல்வதற்கான சில கூறுகளை எமது விளக்கங்களில், அணுகுமுறைகளில் இணைக்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் லிபரல் ஜனநாயக ஆட்சிக் கட்டுமானங்களில் வாழ்வதாலும், அவ்வாறான நிர்வாகங்களில் காத்திரமான ஜனநாயக வாழ்விற்கான இடமிருப்பதை யதார்த்தமாக உணர்ந்து வருவதாலும், இலங்கையிலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாலும் லிபரல் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான தீர்வுகள் ஓரளவு உகந்தனவாகவே காணப்படுகின்றன.
தமிழ் அரசியலை நோக்கிய பார்வையில் இதனை அணுகும்போது தொடர்ச்சி என்பது தமிழ்பேசும் மக்களின் அடையாளங்களைப் பேணுவதோடு ஓர் பல்தேசிய சமூகக் கட்டுமானத்தில் சகல மக்களினதும் ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை, சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் போன்ற விழுமியங்கள் பாதுகாப்பது அவசியமானது என்பது தொடர்கிறது. ஆனால் இவற்றை அடைவதற்கான அணுகுமுறைகள் கால, சூழல் மாற்ற நிலமைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக, தமிழ் மக்களின் அடையாளங்களையும், கலாச்சார விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு அம் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சி ஒன்றின் மூலமே சாத்தியமாகும் என்பது வற்புறுத்தப்பட்டது. இதனை அடைவதற்கு சாத்வீக போராட்டங்கள், வன்முறையுடன் இணைந்த ஆயுதப் போராட்டங்கள் போன்றன நடத்தப்பட்ட போதிலும் அவை சாத்தியமான பாதைகளைத் திறக்கவில்லை. பதிலாக அம் மக்களின் இருப்பு மிகவும் பலவீன நிலைக்குத் தள்ளப்பட்டது.
நலிவுற்ற மக்களின் நிலை
போரினதும், இயற்கை அனர்த்தங்களினதும் தாக்குதல்களுடன், போரின் பக்க விளைவாக ஏற்பட்ட இடப்பெயர்வுகள் அம் மக்களின் இருப்பின் அடிப்படைகளை ஆட்டம் காண வைத்துள்ளன. தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடிப்படைகள் மாற்றத்திற்குள் சென்றுள்ள நிலையில் புதிய நிலமைகளுக்கு ஏற்ப புதிய வழியில் எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. அவ்வாறாயின் நாம் கடந்த காலத்தில் எவற்றில் பலமான நம்பிக்கைகளை வளர்த்திருந்தோமோ அவற்றில் சிலவற்றைக் கைவிட வேண்டும். அதேபோல எவற்றை எமது இருப்பின் மாறாத அடிப்படைகள் எனக் கருதுகிறோமோ அவற்றில் முன்னரை விட மிகவும் இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
13வது திருத்தம் ஏன் அவசியம்?
இச் சந்தர்ப்பத்தில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பி அதனூடாகப் பதிலைத் தேடும் ஓர் அணுகுமுறையாக இக் கட்டுரையை எடுத்துச் செல்கிறேன். உதாரணமாக தமிழர் தரப்பில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமாக பண்டா –செல்வா ஒப்பந்தம், டட்லி –செல்வா ஒப்பந்தம் என பல அடிப்படைகள் காணப்பட்ட போதிலும் அவை தற்போது காலாவதியாகிப் போனதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அந்த இடத்திலிருந்து தமிழ் அரசியல் வெகு தூரம் சென்றுள்ளதாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக எழுந்த 13வது திருத்தம் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்ட ஒப்பந்தங்களை விட மிக அதிக காலம் பேசப்படுவது மட்டுமல்ல அதன் மீதான நம்பிக்கைகளும் அதிகரித்துச் செல்கிறது. சிங்கள ஆட்சியாளர்களும் இப் பிரச்சனையில் வகையாக சிக்கிருப்பதும் அதற்கான பிரதான காரணம் எனலாம். தற்போது பெரும்பான்மை, சிறுபான்மைப் பிரச்சனைகள் மிகவும் கூர்மையடைந்து அவநம்பிக்கைகள் அரச கட்டுமானங்கள் வரை பரவி வரும் நிலையில் மூன்றாவது தரப்பின் இடையீடு தவிர்க்க முடியாதது என்ற நிலையிலேயே இந்த ஒப்பந்தம் உருவாகியது. அத்துடன் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை என்பது தமிழ் -சிங்கள தரப்பினருக்கிடையேயானது என்ற போதிலும் இந்தியா இப் பிரச்சினையை இலங்கை -இந்திய தரப்பின் பிரச்சினையாகவே மாற்றி அமைத்து தமிழர் தரப்பிற்குப் பதிலாக தாமே அப் பொறுப்பை வரித்துக்கொண்டது. ஒப்பமிட்டது. எனவே இப் பிரச்சனைக்கான தீர்வு என்பது இந்தியாவின் தார்மீக பொறுப்பாக உள்ளது. எனவேதான் தமிழர் தரப்பு 13வது திருத்தம் என்பது பொருத்தமான ஆரம்பம் என்கிறது.
இப் பிரச்சினை தொடர்பாக நாம் ஆராய்வதானால் இரண்டு முக்கிய அம்சங்களை எமது கவனத்தில் கொள்வது அவசியமானது. அதாவது இந்த ஒப்பந்தம் உருவாகிய வேளையில் காணப்பட்ட பூகோள அரசியல் முற்றிலும் வேறானது. இலங்கை அரசின் செயற்பாடுகள் இந்திய தேசத்தின் பாதுகாப்பினை அலட்சியம் செய்வதாகவே காணப்பட்டது. அத்துடன் உலக பூகோள அரசியல் போட்டி என்பது அமெரிக்க –சோவியத் இடையிலானதாகக் காணப்பட்டது. ஆனால் இன்று அப் பூகோள அரசியல் நலன்கள் முற்றிலுமாக மாறியுள்ள நிலையில் இந்திய -இலங்கை உறவுகளும் நிச்சயமாக மாற்றமடைகின்றன. எனவே 87களில் இந்தியாவின் 13வது திருத்தம் பற்றிய வியாக்கியானங்கள் 2021 இல் முற்றிலுமாக வேறு வியாக்கியானமாக அமைவது சாத்தியமானதே. ஆனால் தமிழ் -சிங்கள அரசியல் தலைமைகள் அம் மாற்றங்களை அடையாளம் கண்டுள்ளதா? என்பது சந்தேகமே. நாம் தற்போது தமிழ் அரசியல் குறித்துப் பேசுவதால் தமிழ் அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் அவசியம்? என்பது குறித்துப் பேசவேண்டியுள்ளது.
இந்திய தலையீட்டால் ஏற்பட்ட மாற்றங்கள்
இங்கு மற்றொரு அம்சம் கவனத்தில் கொள்ளப்படுதல் தேவையாகிறது. முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் என்பது இந்திய தலையீடுகளால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட காரணத்தினால்தான் அதன் உக்கிரம் இயல்பு நிலையை விட அதிகமானதாக இருந்தது. இதன் பின்னணி காரணமாகவே ‘தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்’ என்ற கோரிக்கை பலமானதாக அமைந்தது. இன்று அவ்வாறான பின்னணி அற்ற நிலையில் அரசியல் அணுகுமுறைகளும் மாற்றமடைந்து செல்வது தவிர்க்க முடியாதது. இன்று இந்திய தரப்பின் தேவைகளும், தமிழர் தரப்பின் அரசியல் இருப்புகளும் மாற்றமடைந்துள்ளதால் புதிய நிலமைகளை அனுசரித்தே புதிய பாதைகளைத் தேட வேண்டும். இவ்வாறான மாறிவரும் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதன் மூலமே குறிப்பாக 13வது திருத்தம் குறித்த இந்திய வியாக்கியானங்கள் மாறிச் செல்கையில் தமிழர் தரப்பும் புதிய உள்நாட்டு, வெளிநாட்டு புவிசார் அரசியல் பின்புலத்தில் புதிய வியாக்கியானங்களை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
எதனது பலவீனம்?
இன்று இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடிப்படைகள் பலமான தாக்குதலுக்குள் சிக்கியுள்ளன. இதனால் எதிர்கால நிலமைகள் எவ்வாறு மாற்றமடையலாம்? என்பதைத் தீர்மானிக்க முடியாமலுள்ளது. இவ்வாறான சூழலில் குறிப்பாக சிங்கள பௌத்த இனமையவாதம் முன்னரெப்போதையும் விட அதிக போதையுடன் செயற்படுவதால் பாதிக்கப்படும் இனக் குழுமங்கள் தத்தமது அடையாளங்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நாம் இப் பிரச்சினையைப் பாதிக்கப்படும் இனங்களின் பிரச்சனையாக அணுகுவதா? அல்லது தேசிய அளவிலான ஜனநாயக அடிப்படைகளுக்கான ஆபத்து என நோக்குவதா? இலங்கை லிபரல் ஜனநாயக் கட்டுமானத்தின் அல்லது சமூக ஜனநாயக கட்டுமானத்தின் பலவீனம் என்றே வாதிக்க விரும்புகிறேன். ஆகவே 13வது திருத்தத்தினை தற்போதுள்ள பூகோள அரசியல் சூழலிலிருந்து குறிப்பாக ஐ நா சபையின் நவீன அணுகுமுறைகளோடு இணைத்து நோக்க விழைகிறேன். கட்டுரையின் தலைப்பில் அதன் முடிவின் ஆரம்பமா? என்ற கேள்வியையும் தொடுத்துள்ளேன். ஏனெனில் தமிழ், சிங்கள தரப்பில் செயற்படும் அடிப்படைவாதிகள் 13வது திருத்தம் காலாவதியான ஒன்று எனவும், சிங்கள தேசம், தமிழ் தேசம் என ஒரு நாட்டிற்குள் இரு தனித்துவ தேசங்கள் உள்ளதாகவும், அவை சுயாட்சி அதிகாரம் கொண்டவை என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வாதங்கள் என்பது சுயாட்சி அதிகாரத்தை வற்புறுத்திய போதிலும் அவை சிங்கள பௌத்த இனமையவாதத்தின் உக்கிரத்தின் விளைவாக நோக்கப்படலாமே தவிர அதற்குத் தனித்தன்மையான இயங்குதளம் அல்லது இயக்கு விசை இல்லை என்பதாகும். சிங்கள பௌத்த இனமையவாதத்தின் உக்கிரம் தணியும்போது இந்த அடிப்படைவாதம் உறக்கத்திற்குச் செல்வதும், தேர்தல் காலங்களில் மட்டும் அவை வீறு கொள்வதும் அடையாளங்களாகக் கொள்ள முடியும். அத்துடன் தமிழ் அரசியல் என்பது ஜனநாயக விழுமியம் சார்ந்த கோரிக்கை என்பதை விட பாராளுமன்ற தேர்தல் அரசியல் சார்ந்ததாகவே அதன் இயக்கம் உள்ளது.
சுயாட்சி, சுயநிர்ணய உரிமை மற்றும் தனித்துவமான கலாச்சார நிலப் பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் தனித் தேசமாக வர்ணிக்க முடியும். ஆனால் அதற்கு அப்பால் மக்களின் சமூகக் கட்டுமானமும், பொருளாதாரக் கட்டுமானமும், சந்தைச் செயற்பாடுகளும் அதன் சுய கட்டுப்பாட்டிற்குள் இல்லாத நிலையில் தனித்துவமாக செயற்பட முடியாது. அவ்வாறாயின் மேற்குறித்த வியாக்கியானங்கள் வெறும் வார்த்தை ஜாலங்களாக அமையுமே தவிர வாழ்வாதாரங்களைப் பலப்படுத்த உதவாது. பாராளுமன்ற ஆட்சிப் பொறிமுறை பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது எனவும், 13வது திருத்தம் அதிகாரங்கள் அற்றது எனவும் கூறியபடி அந்த நிர்வாகங்களில் அங்கம் வகிக்க முனைவது அந்த நிறுவனங்களைப் பலப்படுத்த உதவுமா? அல்லது பலவீனப்படுத்த உதவுமா? பதிலாக இத்தகைய அணுகுமுறை மக்களுக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என எண்ணும் சிங்கள பௌத்த இனமையவாத சக்திகளுக்கு இணையானதாகவே காணமுடிகிறது.
நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும்
தற்போது எழுந்துள்ள சிங்கள பௌத்த இனமையவாதம் என்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்த மக்களின் நலன்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருத முடியவில்லை. சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலுள்ள ஆதிக்கப் பிரிவினர்களில் ஒரு சாராரின் ஆதிக்க கருவியாக பௌத்த மதம் பயன்படுத்தப்படுவதாகவே நாம் கொள்ள வேண்டும். தற்போது இலங்கை அரசு புதிய அரசியல் அமைப்பினை வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் அவ் விவாதங்களில் எமது குரல்களும் ஒலிக்க வேண்டியது அவசியமானது. எமது குரல்கள் ஏற்கப்படுமா? என்ற விவாதங்களுக்கு அப்பால் தமிழ் அரசியல் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருளாதார நலன்களோடு இணைந்து செல்லத் தயாராகி வருகிறது என்பதை உரத்து ஒலிக்கும் வேளை இதுவாகும்.
இலங்கையின் இன்றைய அரசியல் அடிப்படைகள் நாட்டின் ஜனநாயக கட்டுமானங்களுக்கும், தேசிய சமாதானத்திற்கும் அச்சுறுத்தலாக மாற்றமடைவதாக நாம் கருதினால் முதலில் வேற்றுமைகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து அந்த ஆபத்தைத் தடுப்பது பிரதான தேவையாகிறது. சில பிற்போக்கு சக்திகள் அவ்வாறான முயற்சிகளைத் திசை திருப்பும் வகையில் அது சிங்களவர்களின் பிரச்சனை எனவும்,அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை எனவும், ஒருநாடு, இரு தேசம் என்ற வகையில் விவாதத்தை முன்வைப்பது அயல் வீடு தீப்பற்றி எரியும் வேளை அது தனது வீடு அல்ல எனக் கூறி எரியும் தீயை அணைக்க உதவாமல் இருப்பது போலவே உள்ளது. நாடு தழுவிய அடிப்படையில் ஜனநாயக அடிப்படைகள் பலமாக இல்லாதிருப்பின் தீர்வுகள் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளதாகவே அமையும். மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதாயின் முதலில் நாட்டில் ஜனநாயக அடிப்படைகள் பலமாக வேருன்றியிருத்தல் அவசியம்.
இதன் காரணமாகவே நாம் 13வது திருத்தத்தினை தேசிய ஐக்கியம், ஜனநாயக மயமாக்கல், நியாயத் தன்மை, சமத்துவம், நீதி, கௌரவம் போன்ற அடிப்படைகளை முதலில் வற்புறுத்துவது தேவையாகிறது. நாட்டின் நிர்வாக யந்திரம் மேற்குறிப்பிட்ட விழுமியங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும்போதுதான் 13வது திருத்தத்தின் உள்ளடக்கம் அர்த்தம் பெறுகிறது. எனவே 13வது திருத்தத்தின் அடிப்படைகள் என்பது பரந்த தேசியத்தின் பாதுகாப்புடன் அல்லது இறைமையுடன் இணைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இவைகளே தற்போதைய இந்திய அரசின் அணுகுமுறையாகவும் உள்ளது. அத்துடன் இவ் விழுமியங்கள் வெறுமனே உள் நாட்டின் தேவைகளுக்கானவை அல்ல. அவற்றிற்கு சர்வதேச பரிமாணம் உண்டு. அதன் காரணமாக சர்வதேச சமூகத்தினையும் எமது கோரிக்கைகளோடு இணைக்க முடியும்.
இப் பிரச்சினை தொடர்பாக குறிப்பாக 13வது திருத்தம் தொடர்பாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள சில பிரிவினர் ஐக்கியத்திற்கான முயற்சிகளைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் சில தேர்தல் வெற்றிகளை அவர்கள் அடையலாம். ஏனெனில் பிளவுபடுத்தும் அரசியல் என்பது தமிழ் அரசியலில் பிரிக்க முடியாத பகுதியாகத் தொடர்ந்து காணப்படுகிறது. இவை சில பிரிவினைவாத சக்திகளுக்கு மட்டுமல்ல, சிங்கள பௌத்த இனமையவாத அரசியலிற்கும் உரமாக அமைகிறது. தேசிய இனப் பிரச்சினை மூலம் அதிகார இருப்புகளைத் தக்க வைக்க இரு தரப்பிலும் எப்போதுமே முனைப்புகள் உள்ளன. ஆனால் இத்தகைய செயல்கள் மக்களின் வாழ்வாதாரங்களைச் சீரழிக்கும்போது அவை ஜனநாயக செயற்பாடுகள் என்பதற்கு அப்பால் சென்றுவிடுகின்றன. அத்தகைய போக்கே இன்றைய எதிர்ப்புகளின் விளைபொருளாக உள்ளன. எனவே எத்தகைய தீர்வுகளாயினும் மக்களின் மேம்பாட்டை நோக்கியதாக அமைதல் என்பதன் அடிப்படையிலேயே அதன் ஜனநாயக செயற்பாடு தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
குழு ஆதிக்கம் அதிகரிக்கும் தமிழ் அரசியல்
தமிழ் அரசியலில் அதன் ஜனநாயக அடிப்படைகள் படிப்படியாகவே மறைந்து தனிநபர் மற்றும் குழு ஆதிக்கம் நிறைந்ததாக மாறி வருகிறது. தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பாரம்பரியங்கள் படிப்படியாக மாறி வருகையில் அதற்கு ஏற்றவாறான விதத்தில் அரசியல் கோட்பாடுகளும், அணுகுமுறை ஏற்பாடுகளும், தந்திரங்களும் மாற்றம் பெறவில்லை. ஏனெனில் பிரதான கட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் அம் மாற்றங்கள் தமது இருப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கோட்பாடுகளையோ அல்லது கட்சியின் உட் கட்டுமானங்களையோ மாற்றத் தயாராக இல்லை. கடந்த 70 ஆண்டுகால அரசியல் போக்கினை அவதானிக்கும்போது அதனையே காணமுடிகிறது. சுதந்திரத்திற்குப் பின்னதான காலத்திலிருந்து ஆரம்பித்தால் முதல் 35 ஆண்டுகள் குடியேற்ற ஆட்சிக்கால சமூக ஆதிக்கம் அரசியலில் பிரதிபலித்தது. நிலப் பிரபுத்துவம், ஆங்கிலக் கல்வி ஆதிக்கம், இந்து சமய கட்டுப்பாடுகள் என்பன தத்தமது இருப்பிற்கு ஆபத்தில்லாத போராட்ட அணுகுமுறைகளை அதாவது காந்திய போராட்டங்களின் சில பகுதிகளைத் தேவைக்கேற்றவாறு தமிழ் அரசியல் பயன்படுத்தியது. அவற்றின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. பாராளுமன்ற ஆட்சிப் பொறிமுறை இப் பிரிவினரின் குடியேற்ற ஆட்சிக்குப் பின்னதான தேவைகளை அல்லது நலன்களை நிறைவேற்ற ஓரளவு உதவியது.
ஆனால் இவ்வாறான மிதவாத அரசியல் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. நாட்டில் நிலவிய இலவசக் கல்வி முறை இரு புறத்திலும் அரசியல் விழிப்புணர்வை மட்டுமல்ல, நாட்டின் அரசியல் நோய்களுக்கான காரணிகளையும் அடையாளம் காண உதவியது. குடியேற்ற ஆட்சிக்குப் பின்னரான காலத்தில் நிலவுடமையாளர்களும், ஆங்கிலக் கல்வி ஆதிக்கமும் இரு புறத்திலும் ஒரே மாதிரியான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உணர்வுகளை உருவாக்கின. இரு புறங்களிலும் அதிகார சக்திகளுக்கு எதிரான போராட்டங்களாகவே அமைந்தன. ஆனால் இரு புறத்திலும் காணப்பட்ட கல்வி ஆதிக்கமும், நில ஆதிக்கமும் உடைய பிரிவினர் அவற்றைத் தத்தமது நலன்களுக்கு ஏற்றவாறு மடை மாற்றினர்.
இதன் விளைவாக உருவாகிய இனவாதம் ஒருவகையான மாயைக் கனவுலகத்தை போலித் தேசியவாத சிந்தனைகளின் மூலம் உருவாக்க முனைந்தது. இன்று நாம் அதன் கொடுமையான தாக்கத்தில் உருவான பிளவுபட்ட ஒரு சமூகத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். நாம் கடந்து வந்துள்ள 40 ஆண்டுகால நவ தாராளவாத பொருளாதாரப் பிரச்சனைகளையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரினையும், தற்போது பரவி வரும் கொரொனா தொற்று நோய் பரவலையும் நன்கு அவதானித்தால் இவை யாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவின? என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும். சாமான்ய மக்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இவை யாவுமே ஆளும் வர்க்கத்தின் தேவைகளை அதாவது செல்வக் குவிப்பு, அதிகாரக் குவிப்பு, சொத்துக் குவிப்பு என்பவற்றால் எழுந்த நிகழ்ச்சி நிரலாகவே இவற்றைக் காண முடியும்.
ஒட்டு மொத்த பௌத்த சிங்கள மக்களுக்காகக் குரல் எழுப்புவதாகக் கூறும் தேசியவாத சக்திகள் எவ்வாறு தனது மக்களைக் கைவிட்டுச் செல்கிறது? என்பதை அவதானிக்கும்போது அதன் உண்மைத் தோற்றம் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. உதாரணமாக, தேசத்தின் மிக அதிகளவு வெளிநாட்டுச் செலாவணியை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உழைப்பு வழங்குகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆண், பெண் என்போரின் கடின உழைப்பு ஆகும். கொரொனா நோய் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்களைக் கைவிட்டபோது தனது சொந்த மக்கள் தொடர்பாக அரசு நடந்துகொண்ட முறை சமூகப் பிளவின் தோற்றங்களை தெளிவாக அடையாளப்படுத்தியது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை சொந்த நாட்டிற்குள் எடுத்து வருவது வெடி குண்டுகளைக் கொண்டு வருவதாக விபரிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்படும் தனது மக்களை வேண்டப்படாதவர்களாக, நாட்டை நாசப்படுத்தும் வெடிகுண்டுகளுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டது. சிறிய வருமானத்திற்காக அங்கு சென்ற பலர் வீதிகளில் தங்கும் நிலை காணப்பட்டது. தூதுவராலயங்கள் மக்களுக்கு ஆறுதல் கூறவும் தயாராக இல்லை. தொலைபேசி அழைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தின் நண்பர்கள், உறவினர்கள் முதலில் விசேச விமானங்கள் மூலம் அழைக்கப்பட்டனர். ஏனெயோர் விமானப் பயணச் சீட்டிற்கும், 14நாட்கள் உல்லாச விடுதிகளில் தங்குவதற்கும் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இவை யாவற்றையும் அரச ஆதரவாளர்களே மேற்கொண்டு அதிக லாபம் ஈட்டினர்.
பல லட்சம் தொழிலாளர்கள் மிகவும் இன்னமும் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் போக்குக் குறித்து பலமான அதிருப்தி நிலவுகிறது. உள் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தன. அரசு கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்த போதிலும் அப் பொருட்கள் கிடைக்கவில்லை. பதிலாக கறுப்புச் சந்தையில் தாராளமாகக் கிடைத்தது. கறுப்புச் சந்தை வியாபாரத்தைத் தடை செய்ய அரசு தயாரில்லை. நாட்டின் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைப் பொம்மைகளாக மாறினர். தேச உடமைகளைக் கொள்ளையிடுவதற்கு சட்டங்களை வழைக்க ஒத்துழைத்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைகளை மீறி சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் ஆதிக்கத்திற்குப் பணிந்து சுகாதார விதிகளை மாற்றினர். இறந்த உடல்களை எரிக்கும்படி அம் மக்களின் கலாச்சார பாரம்பரியங்களைப் புறக்கணித்து மனங்களைப் புண்படுத்தினர். கொரொனா நோய் சம்பந்தமான மருந்துகள், கருவிகள் போன்றனவற்றிற்கு அரச ஆதரவாளர்களுக்கே இறக்குமதிக்கான உத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களின் தரம் பற்றிய ஆய்வுகளை நடத்துவது தவிர்க்கப்பட்டது.
இக் கட்டுரை 13வது திருத்தம் பற்றியதாக தலைப்புக் காணப்பட்ட போதிலும் அவை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக வாசகர் கருதக் கூடும். ஆனால் இந்த விபரங்களை ஆழமாக ஆராயும்போது சிங்கள பௌத்த இனமையவாதம் என்பது சிங்கள மக்களையும் குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களை சிங்கள பௌத்த பெருந்தேசியவாத மாயைத் திரைகளால் ஏமாற்றிச் செல்கிறது என்பதனையும், நாட்டில் அமைதி, சமாதானம், நீதி, சமத்துவம், ஜனநாயக மயப்படுத்தல் என்பது வெறுமனே தமிழ் மக்களுக்கானதாக மட்டுமல்ல, அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அலைக்குள் சிக்குண்டுள்ள அனைத்து மக்களுக்குமான தேவையாக உள்ளது என்பதை உணர்த்தவே அவை தரப்பட்டன.
எனவே 13வது திருத்தம் என்பது ஓர் புதிய அரசியலுக்கான ஆரம்பமாகவே அமைகிறது என்பதால் அவை பரந்த வியாக்கியானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது அவசியமானது. ஜெனிவா பிரச்சனைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இத் தருணத்தில் குறிப்பாக இந்திய அணுகுமுறை முன்னைய நிலமைகளை விட பாரிய மாற்றங்களை நோக்கிச் சென்றுள்ளன. அதே போலவே ஐ நா மனித உரிமை ஆணையத்தின் அணுகுமுறைகளும் வெறுமனே மனித உரிமை என்ற நிலையிலிருந்து மாறி பாதுகாப்பான உணவு, குடிநீர், குடியிருப்பு என்பவைகளும் மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விவாதங்கள் மிகவும் ஆழமாக எடுத்துச் செல்லப்படவேண்டும். இவை குறித்து மேலும் பல கருத்துக்களை நோக்கலாம்.
(தொடரும்.)

