— கருணாகரன் —
ஆமென் யோசுவா
(ஒரு சமையல்கார விவசாயப் போதகரின் கதை)
ஒரு மதகுருவை நீங்கள் நல்லதொரு சமையல்காரராகப் பார்த்திருக்கிறீர்களா? அதிலும் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக ஆக்கிப் படைக்கும் சமையல்காரராக. கிளிநொச்சியில் யோசுவா அடிகள் நல்லதொரு சமையல்காராக உள்ளார். நம்ப மாட்டீர்கள், ஒரு நாள் இரவு பப்பாசியில் ஒரு பெரிய “ஸ்பெஷல் விருந்தை” ஆக்கிப் படைத்தார் யோசுவா.
முதலில் பப்பாசிக் காயில் சூப். அதெப்படி, பப்பாசிச் சூப் என்று நீங்கள் கேட்கலாம். எதையும் ஆக்கும் திறனே அதைப் பெறுமதியாக்குகிறது. அதை ஆக்குகின்றோரைக் கடவுளாக்குகிறது என்று சொல்வார் மயன். ஆனால், மயனுக்கு கஞ்சி கூடக் காய்ச்சத் தெரியாது என்பது வேறு கதை. அதைப்பற்றி இங்கே வேண்டாம்.
யோசுவா என்ன செய்தாரென்றால், பப்பாசிக்காயை வெட்டித் துண்டுகளாக்கி, அளவான நீரை ஊற்றி அவிய விட்டு, அவற்றோடு அவரே ஆக்கி வைத்திருக்கும் “தான்தோன்றி”களின் கூட்டைப் போட்டார். எல்லாம் வெந்து வாசனை கிளர்ந்து வரும்போது. தட்டிலேயிருந்த காடை முட்டைகளை உடைத்து அந்தச் சூப்பினுள்ளே விட்டார். ஒரு பத்து நிமிசத்தில் மகத்தான சூப் நம்முடைய கைளில் வந்தது. குடித்தபோது மருத்துவர் சத்தியமூர்த்தி அப்படியே அசந்து போய் விட்டார். சொர்க்கம் நம்முடைய காலடியில் நின்றது. அல்லது நாங்கள் சொர்க்கத்திலிருந்தோம்.
பப்பாசிச் சூப்பைத் தொடர்ந்தது பப்பாசிப் பிட்டு. பப்பாசிக் காய்களைத் துருவிப் பூவாக எடுத்தார். அரிசியும் உழுந்தும் கலந்து உண்டாக்கிய மா, கொஞ்சமாகத் தேங்காய்த்துருவல். இந்த மூன்றையும் கலந்து பிசைந்தெடுத்தார். பிறகு அதை அவித்து பிட்டாக ஆக்கினார்.
பப்பாசிப் பிட்டு ரெடி என்றானதும், அந்தப் பிட்டுக்கு பப்பாசியில் கறியும் கூட்டும், பொரியலும் வேறு தயாரித்தார்.
பப்பாசிக் காய்களை அளவாக நறுக்கி அவற்றை அவித்து, அவற்றுக்கு தான்தோன்றிகளின் பொடியைப் போட்டார். கூடவே கொஞ்சமாகச் சரக்குத்தூளும் மிளகாயப் பொடியும் கொஞ்சமாகத் தேங்காயும் சேர்த்தார். கறி வாசமேறிக் கமகமத்து வாயை ஊற வைத்தது.
இப்படித்தான் பப்பாசிக் கூட்டும் பொரியலும் தயாரிக்கப்பட்டன. என்ன ஆச்சரியமென்றால், ஒரு மாயம் போல இந்த அதிசயமெல்லாம் எங்களுடைய கண்களுக்கு முன்னேதான் நடந்தன.
இதற்காகத்தான் வள்ளுவர் “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து – அதனை அவன்கண் விடல்” என்று சொன்னாரோ என்னவோ, உண்ட விருந்துக்கு மரியாதை செலுத்த வேண்டாமா என்று நாங்கள், “எதை எவன் கண் ஆய்ந்து அதை அவன் கண் விடல்” என்றொரு குறளை எழுதி யோசுவாவிடம் கொடுத்து விட்டு வந்தோம்.
ஆனால், எந்தப் போதையிலும் மயங்கி விடும் ஆளல்ல யோசுவா. அவர் ஒரு புன்சிரிப்போடு தன்னுடைய தான்தோன்றிகளைச் சுற்றிக் காட்டினார். அப்படியே காடைகளின் கூடுகளையும். அதற்குப் பக்கத்தில் ஊர்க்கோழிகளின் பண்ணையையும். அதில் நூற்றான கோழிகள் கேரிக் கொண்டும் கூவிக் கொண்டும் கொக்கரித்துக் கொண்டுமிருந்தன. நாங்கள் அசந்து போய் வாயடைத்து நின்றோம்.
கணேசன், “வாயடைத்துச் போச்சு நண்பா, வராதாம் ஒரு சொல்லும்…” என்று முருகையனின் கவிதையைச் சொன்னார். உண்மைதான், ஒருவருக்கும் ஒரு சொல்லும் வரவில்லை. யோசுவாவின் அதிசயங்களின் முன்னே அப்படி உறைந்து நின்றோம்.
இந்த வித்தையைச் செய்த யோசுவா இன்னொரு நாள் தான்தோன்றிகளை வைத்து இன்னொரு அற்புதமான சமையலைச் செய்தார். இந்தத் தான்தோன்றிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். இதொன்றும் புதினமில்லை. என்றாலும் இதைச் சொன்னால்தான் இன்று பலருக்கும் புரியும்.
நம்முடைய (ஈழ) சூழலில் உள்ள முசுட்டை, மொசுமொசுக்கை, குறிஞ்சா, வல்லாரை, புளிக்கீரை, குப்பைக்கீரை, பசளி, ஆவரசம் பூ, வேப்பம்பூ, அகத்தி, கொவ்வை, பனங்கீரை, குமிட்டில், கறிவேப்பிலை, பொன்னாங்காணி, ஆடாதோடை, முருங்கை இலை, தவசி முருங்கை என்று பதினெட்டுப் பத்தொன்பது வகையான கீரை மற்றும் பூ வகைளைச் சேர்த்துச் செய்த சமையல் அது. அத்தனையும் இயற்கையின் விளைச்சல். எதையும் யாரும் விதைப்பதுமில்லை. நடுவதுமில்லை. எல்லாமே தானாகவே தோன்றி வளர்ந்து விளைகின்ற செடிகளும் கொடிகளும் அவற்றின் பூக்களும். இதனால்தான் இவை தான்தோன்றிகள்.
இந்தத் தான்தோன்றிகளையே நம்முடைய தாயும் தந்தையும் அவர் தாய், தந்தையரும் உண்டும் திண்டும் வளர்ந்தனர். வாழ்ந்தனர்.
ஆனால், சடுதியாகக் குத்துக் கரணம் அடித்ததைப்போல எல்லோரும் இவற்றைக் கை விட்டு விட்டோம். அதனால் யாரும் இவற்றை இப்போது கண்டு கொள்வதில்லை. ஆனால் பலரும் Organic Food க்காக கடுமையாகக் கஸ்ரப்படுகிறோம். அதைத் தேடியலைகிறோம். அதற்குப் பெரிய காசு வேறு செலவழிக்க வேண்டும்.
யோசுவாவோ இவற்றையே தன்னுடைய மூலாதாரமாகக் கொண்டிருக்கிறார். இவற்றைச் சாதாரண சமையலுக்கு மட்டுமல்ல, விற்பனைக்குமாகத் தயாரித்திருக்கிறார். இதற்காக பெரியதொரு ஏற்பாடே அவரிடம் உண்டு. முதற்கட்டமாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தான்தோன்றிகளைக் கிராமங்களில் தேடிப் பெற்றுச் சேகரிக்கிறார்கள். இதை விட கொய்யா இலை, நாவற் கொட்டை, வேப்பம் பூ, கத்தாழை, ஆவரசம் பூ மற்றும் அதன் வேர், இலை, நன்னாரி வேர், தாமரைக் கிழங்கு என்று ஏராளம் ஐயிற்றங்கள்.
ஏற்றுமதியாகின்றன
இவற்றில் சிலவற்றைக் காய வைத்துப் பதப்படுத்திப் பொடியாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப் பொடியாக்கப்பட்டவை பொதிசெய்யப்பட்டு (போத்தல்களில் அடைக்கப்பட்டு) “தான்தோன்றிப் பொடி” கீரைப் பொடி, இலைப் பொடி என இப்பொழுது உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏனையவை வெவ்வேறு விதமாக அவற்றின் தன்மைக்கு ஏற்றமாதிரிப் பதப்படுத்தப்பட்டு அவையும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில பொருட்கள் உள்ளுர் சந்தைகளிலேயே விற்கவும் படுகிறது.
அப்படியொரு ஐயிற்றமே, கீரை மிக்ஸர்.
இது பதப்படுத்தப்பட்ட கீரைகளின் பொடியைச் சேர்த்துச் செய்யப்படுகிறது. இதில் உள்ள விசேசம் என்னவென்றால், இயற்கையாகவே இது பச்சை நிறத்தில் (கீரை நிறத்தில்) உள்ளது. கீரை வாசனை தூக்கலாக இருக்கிறது. அதை விட இதில் ஊட்டச்சத்தும் அதிகம்.
கீரையில் வைன் முதல் பல…
இப்படித்தான் ஒருநாள் யோசுவாவிடமிருந்து அழைப்பு. சென்றோம். அங்கே அவர் கீரையில் உருவாக்கப்பட்டிருந்த வைனைத் தந்து விட்டு, நம்முடைய முகத்தைப் பார்த்தார். எங்களுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. அதை எடுத்துப் பார்த்தபோது அதன் நிறம், மணம், சுவை எல்லாம் வித்தியாசமாகவே இருந்தது.
சிரித்தார். “பாருங்கள் எதையெல்லாம் செய்யலாம். இதை நம்முடைய சூழலில் உள்ள கீரைகளில் இருந்தே செய்தேன். இதற்கு இனி முறைப்படியான அனுமதியைப் பெற வேணும். செய்முறையிலும் சில மாற்றங்களை –மேம்பாடுகளைச் சீர்ப்படுத்த வேண்டும்” என்று. உண்மைதான், எவ்வளவை எங்களுடைய வளங்களிலிருந்து செய்யலாம்? உருவாக்கலாம்!
இப்படியான இன்னொன்று, கீரைப் பாண். மற்றொன்று. கீரைக் கேக். அடுத்தது கீரை பிஸ்கற். எல்லாவற்றையும் கீரையிலிருந்தே செய்கிறாரா என்றால், “இயற்கையாகக் கிடைக்கும் தான்தோன்றிகளைப் பயன்படுத்துவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. செலவும் குறைவு. நம்முடைய சூழலின் இயற்கை வளத்தைப் பயன்படுத்துவது பொருளாதாரத்துக்குச் சிறப்பு. பாராம்பரிய உணவைக் கொஞ்சம் நவீனப்படுத்துகிறேன். அப்படி நவீனப்படுத்தும்போது எல்லோருக்கும் இதைச் சாப்பிடுவதற்கு இயலுமாக இருக்கிறது. அதோடு இதெல்லாம் மூலிகை என்ற உணர்விலிருந்து விடுபட்டு, தினமும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு என்று சாதாரணமாகவே ஆகி விடுகிறது.
நாளாந்தம் சாதாரணமாகவே எங்கள் வீடுகளில் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தான்தோன்றிகளை கை விட்டதால், இப்பொழுது இவற்றை மூலிகை என்ற அடிப்படையிலேயே பலரும் பார்க்கின்றனர். அப்படித்தான் பயன்படுத்தவும் விளைகின்றனர். உணவாக எடுத்துக் கொள்வதைக் கை விட்டதால், பலரும் நோயாளிகளாகி விடுகிறார்கள். நோய் வந்த பிறகு அதற்குப் பரிகாரம் காணவென்று இதை மூலிகையாக எடுக்கப்பார்க்கிறார்கள். இது எவ்வளவு தவறு? இதை மாற்றியமைக்க வேண்டும் என்ற முயற்சியே இதெல்லாம்…” என்கிறார் யோசுவா.
ஆமாம், யோசுவாவின் பணிகளில் முக்கியமான ஒன்று இயற்கைக்குத் திரும்புதலாகும். இயற்கையின் வழி வாழ முற்படுதல். இதற்காக அவர் கிளிநொச்சியில் காவேரிக் கலா மன்றம் என்ற அமைப்பை நிறுவியிருக்கிறார். கிளிநொச்சியிலிருந்து கிழக்கு மாகாணம், தென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாணம் என இலங்கை முழுவதற்கும் இந்த இயற்கை வழி வாழ்க்கையை – தான்தோன்றிகளோடு வாழ்தலை விரிவாக்கி வருகிறார். இதில் இயற்கை வழி விவசாயம், இயற்கை உணவு, மரபு வழிக் கலாசாரச் செயற்பாடுகள், நவீன இலக்கியம், தொழுநோய் விழிப்புணர்வு, சூழற் பராமரிப்பு எனப் பலவற்றையும் செய்து வருகிறார். இதை விட இயற்கை விவசாயப் பண்ணைகளையும் உருவாக்கியிருக்கிறார். கூடவே தான்தோன்றிகளில் வாழ்வைக் கொண்டாடுவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதில் சாதனைப் பெண்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த மாதமும் இயற்கை உணவுச் சமையலோடும் விருந்துக் கொண்டாட்டம் நடந்தது. அதில் இன்னொரு புதிய உணவை அறிமுகப்படுத்தினார் யோசுவா. அது கீரைச் சம்பல்.
இந்தக் கீரைச் சம்பலில் ஆறு வகையான உலர்த்தப்பட்ட கீரைகளும் கருவாட்டுத் தூளும் உப்பு, மிளகாய்த்தூள், சிறிய அளவு சரக்குத் தூள் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருந்தன. உலர்த்தப்பட்ட கலவை போலிருக்கும் இந்தச் சம்பலின் ருசியோ பிரமாதம். எப்படி கீரை மிக்ஸரில் ஊட்டச் சத்து அதிகமாக உள்ளதோ அதைப்போல இந்தச் சம்பலிலும் சத்துக்கள் அதிகம்.
இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், புதிய புதிய உணவுகளையும் உணவாக்கல் முறைகளையும் யோசுவா அறிமுகப்படுத்துவதாகும். அவரே பயிரிடுகிறார். அவரே தான்தோன்றிகளை சேகரிக்கிறார். அவரே அவற்றை உணவாக்கித் தருகிறார். அவற்றை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நமக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
தாந்தோன்றிகள் மாத்திரமல்ல விலங்குப் பண்ணையும்
இப்படித்தான் பண்ணைகளில் பன்றி தொடக்கம் ஊர்க்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, ஆடு, மாடு, முயல் வளர்ப்பு என கால்நடை வளர்ப்பையும் செய்கிறார். மட்டுமல்ல, சிறு குளத்தை உருவாக்கி, அதில் மீன் வளர்ப்பும் நடக்கிறது. இந்தப் பண்ணைகளில் சுற்றுலாப்பயணிகளுக்கான விடுதி வசதியும் உண்டு. இயற்கை உணவோடு கூடிய விடுதிகள். இங்கே கிடைக்கின்ற பொருட்களிலிருந்தே நீங்கள் கேட்கின்ற உணவு தயாரிக்கப்படுகிறது. மீன் வேண்டுமென்றால் உடனடியாக –கண்முன்னாலேயே மீனைப் பிடித்து உணவைத் தயாரிக்கிறார்கள்.
உண்மையில் இன்றைய சூழலில், அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் –இயற்கை வளங்கள் அதிகமாக உள்ள பெரும் பிரதேசத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் பெரியதொரு பணி இது. இதில் ஏராளம் பேருக்கு வேலை வாய்ப்பு வேறுண்டு. பொருளாதாரத்தில் பின்தங்கிய வறிய மக்கள், ஊட்டச் சத்துள்ள உணவைப் பெறுவதென்பது கடினம். அதைப் போக்குவதற்கு எளிய முறையில் -இயற்கையிலிருந்து இயற்கை உணவாகவே பெறக் கூடிய வழியைக் காட்டுகிறார் யோசுவா. என்பதால் இது யோசுவா காட்டும் வழி எனலாம்.
இதையெல்லாம் அவர் செய்கின்ற, செயற்படுத்துகின்ற விதமே நம்முடைய கவனத்திற்குரியது. அவருடைய வாழ்க்கையிலிருந்தே அவர் இதைக் கற்றுக் கொண்டார். மிக வறிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் யோசுவா. அவருடைய இளமைப்பராயம் இந்தத் தான்தோன்றிகளோடுதான் இருந்திருக்கிறது. அவர் வாழ்கின்ற சூழலில் கிடைக்கின்ற இலை, குழை, கிழங்கு, பூ, காய், கனி என்ற தான்தோன்றிகளையே உண்டு வளர்ந்தவர் யோசுவா. பின்னாளில் அவர் அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களுக்குச்சென்ற போதும் கூட அங்கேயுள்ள இயற்கை விவசாய முறைகளின் மீதே அவருடைய கவனம் இருந்திருக்கிறது. ஊர் மீண்ட பிறகு அதை விரிவாக்கும் நோக்கோடு பல விதமாகச் செயற்படத் தொடங்கினார். அதிலே அவர் கண்டறிந்தது, எதையும் போதிப்பதை விட அதைச் செய்து அளிப்பதே சிறப்பு என்பதை. அதன்படியே அவர் ஒவ்வொன்றையும் செய்வதைப் பற்றிச் சிந்தித்தார். அப்படியே எல்லாவற்றையும் செய்து –செயற்படுத்தி வருகிறார்.
இப்பொழுது யோசுவா என்ற சமையற்காரன் உங்கள் வீடுகளுக்கும் வந்து சமைப்பார். அப்படித்தான் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று இயற்கைச் சமையலை –எளிய சமையலைச் செய்து வருகிறார். கூடவே மீட்பராகவும் காப்பராகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். எதற்கு மீட்பர், எதை மீட்கிறார் என்றால், நாம் கைவிட்ட நல்லவற்றையெல்லாம் மீட்டெடுக்கிறார். தான்தோன்றிகள் அவற்றிலொன்று. இது கைவிடப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவற்றை தேடி மீட்பதாகும். இதைப்பற்றி –இந்தக் காணாமல் ஆக்கப்படுவதைப்பற்றி ஒரு கதையே எழுதியிருக்கிறார். இதைப்போல இந்த இனங்கள் – எங்கள் உற்பத்திகளின் இனங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்துக் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். பல அருமையான பயிர்களும் இயற்கை உணவுகளும் இன்று நம்மால் கைவிடப்பட்டு அவை அழிந்து போயிருக்கின்றன. மிஞ்சியவையும் அழிந்து போகும் அபாயத்திலிருக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்த இனவழிப்புக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமே காரணர்களாகவும் இருக்கிறோம்.. எனவே இதைத் தடுத்து, இதையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பது யோசுவாவின் விருப்பார்வம்.
மீட்பரும் காப்பருமாக உள்ள ஒரு மதகுருவை நாங்கள் அறிவது விவசாயியாக, பண்ணையாளாக, சமையற்காரராக, கூத்துக் கலைஞராக, எழுத்தாளராக, கவிதை சொல்லியாக, இயற்கையின் உபாசகராக. இன்றும் ஒரு அழைப்பு யோசுவாவிடமிருந்து. இன்னொரு நாள் சமைக்கலாம். வாருங்கள் என்று.
நிச்சயமாக அன்று ஏதோ ஒன்றை யோசுவா எங்களுக்குப் புதிதாகப் படைத்து அளிப்பார். அவர் பிறர் முகத்தில் காண விரும்புவது மகிழ்ச்சியை. பிறரிடத்தில் காண முயற்சிப்பது இயற்கைக்குத் திரும்புதலை.
புதிதாக்குதலுக்கும் புதிது அளித்தலுக்குமே எப்போதும் இடமுண்டு. அதற்கே ஈர்ப்பும் கவர்ச்சியுமுண்டு. படைப்பின் சிறப்பே அதுதான்.
ஆமென் யோசுவா!
நன்றி: எதிரொலி