— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
2009 இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கும் முன்னாள் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீன்மூனிடமும் அவ்வப்போது சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய உறுதிமொழிகள் யாவும் அவராலேயே உதாசீனம் செய்யப்பட்ட நிலையிலேயே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கை 2015ஆம் ஆண்டு ஜெனீவாக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
அதே ஆண்டு (2015) ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்று இலங்கையில் ஆட்சிமாற்றமும் (‘நல்லாட்சி’) ஏற்பட்டிருந்தது.
2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் வேண்டுமென்று ஆர்ப்பரித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2015 ஜனவரி 08 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சர்வதேச போர்க்குற்ற விசாரணை பற்றிய விடயத்தில் ‘சுருதி’யை மாற்றிக்கொண்டது. ‘நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவின் விசாரணை சர்வதேச விசாரணைதான். எனவே சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது. இனிமேல் சர்வதேச விசாரணை தேவையில்லை’ எனச் சாரப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவும் கூறினர்.
ஆனால், பின்னர் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வேண்டிக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் ஆறு இலட்சம் கையெழுத்துக்களை இலக்கு வைத்து ஐ.நா.வுக்கு அனுப்புவதற்காக வடக்குக்கிழக்குத் தமிழர்களிடையே கையெழுத்து வேட்டையை ஆரம்பித்தவுடனும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தை நிறைவேற்றி சர்வதேச போர்க்குற்ற விசாரணையே வேண்டுமென்று கோரும் மகஜரை ஐ.நாவுக்கு அனுப்பியவுடனும் உசாரடைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் (தமிழரசுக் கட்சியினர்) சுருதியை மீண்டும் மாற்றி ‘உள்ளக விசாரணையை ஒரு போதும் ஏற்க மாட்டோம். சர்வதேச விசாரணையே வேண்டும்’ எனப் பாடத்தொடங்கினர்.
அதாவது ஒரு கட்டத்தில் முன்பு சர்வதேச விசாரணை முடிந்து விட்டதென்று கூறிய தமிழரசுக்கட்சித் தலைவர்கள் இப்போது சர்வதேச விசாரணையே வேண்டுமென மாற்றிப் பாடத்தொடங்கினர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தமிழர் விவகாரங்களைக் கையாள்வதில் தெளிவான நிகழ்ச்சி நிரல் இல்லையென்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
மட்டுமல்ல, 2012 இல் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவிருந்த உத்தேச தீர்மானத்தில் இலங்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் விடயமும் அடங்கியிருந்தது. அதனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்திருந்தது. முன்பு இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்களால் நிராகரிக்கப்பட்ட அவ் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும்படி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்று ஆதரித்தமை ஒரு முரணான அரசியல் செயற்பாடாகும். தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்மக்களின் நலன்சார்ந்த விடயத்தில் ஒரு தெளிவான அரசியல் நிகழ்ச்சிநிரல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையென்பதைத்தான் இம் முரண்பாடும் வெளிப்படுத்துகிறது. 2012இல் அமெரிக்கா ஆரம்பத்தில் கொண்டுவரவிருந்த உத்தேச தீர்மானம் காலம் செல்லச்செல்ல நீர்த்துப்போய் அல்லது ஐதாக்கப்பட்டு இறுதியில் 2015 செப்டெம்பரில் இலங்கை அரசாங்கமும் (‘நல்லாட்சி’ அரசாங்கம்) சேர்ந்து இணை அனுசரணை வழங்கும் தீர்மானமாக வடிவெடுத்தபோது அதாவது போர்க்குற்றங்கள் மீதான உள்ளக விசாரணையாக வடிவெடுத்தபோது தமிழரசுக்கட்சித் தலைவர்கள் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பதுபோல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கவுள்ளதால் வந்திருப்பது சர்வதேச விசாரணைதான் என விளக்கம் வேறு அளித்தனர். இந்த விளக்கங்களை அளிப்பதில் சுமந்திரன் முந்திரிக் கொட்டைபோல் முன்னிலையில் நின்றார்.
ஆனால், அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (நவநீதம்பிள்ளைக்குப் பின்னர் பதவியேற்ற) அப்போதைய ஆணையாளர் ஹுசைன் அவர்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்வாங்குவதா? இல்லையா என்கிற விடயம் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தது என்று திட்டவட்டமாகக் கூறி உள்ளக விசாரணைப் பொறிமுறையையும் மேலும் ஐதாக்கிவிட்டுச் சென்றார். அப்போது தமிழரசுக் கட்சித் தலைவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தனர். இலங்கை இணை அனுசரணை வழங்கிய இந்தத் தீர்மானம்தான் 30/1 தீர்மானம் என அழைக்கப்பட்டது. இத்தீர்மானத்தின் சூத்திரதாரியான அமெரிக்கா பின்பு 2018இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிருந்து விலகிக் கொண்டது.
2015 ஜனவரி 08இல் ஆரம்பித்து 2019 நவம்பர்வரை சுமார் நான்கரை ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு முழுதாக முட்டுக்கொடுத்திருந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. தாம் ஜெனீவாவில் இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்தைக்கூட ‘நல்லாட்சி’ அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் சிரத்தையற்றிருந்தது. இது விடயமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எந்த அழுத்தங்களையும் ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்குக் கொடுக்கவில்லை. ஆனால் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் காய்களை நகர்த்தி அடுத்துவந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டுத் தொடர்களில் இரு தடவைகள் காலஅவகாசங்களைப் பெற்றுக் கொண்டது. 30/1 தீர்மானமே கால அவகாசங்களைப் பெற்றுக்கொண்டு 34/1, 40/1 எனப் பின்னர் மாற்றமடைந்தது.
30/1 தீர்மானம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் அர்த்தமுள்ள விதத்திலான அமுலாக்கல் விடயத்தையும் உள்ளடக்கியதாகும். போர்க்குற்ற விசாரணைகள் -நிலைமாறுகால நீதிவிவகாரங்கள் -பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஒருபுறமிருக்கக் குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யத்தானும் ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு துரும்பையாவது அசைக்கமுயலாமல் தமிழ்மக்களுக்குப் ‘புதிய அரசியலமைப்பு’க் கனவைக் காட்டிக்கொண்டே நான்கரை வருடகாலத்தைக் கடத்தி நாசமாக்கியது.
இந்தப் பின்புலத்தில்தான், 2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாகிறார். 2020 ஆகஸ்ட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்தை அமைக்கிறது.
2020 ஆகஸ்ட் இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வென்று ஆட்சியமைத்த பின்னர் முன்பு ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் 2015 செப்டம்பரில் ஜெனீவாவில் அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கையும் இணை அணுசரணை வழங்கிப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கக் கடப்பாடுகளை 30/1 தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்ட பின்னர் இருதடவைகள் கால அவகாசங்களையும் பெற்றுக்கொண்ட அனைத்துத் தீர்மானங்களிலிருந்தும் முற்றாக விலகிக் கொள்வதாக புதிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்புடன் இலங்கை விவகாரம் ஜெனீவாவில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
தாயகத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன பல குளறுபடிகள் குத்துவெட்டுகளின் பின்னணியில் ஒன்றுகூடித் தீர்மானித்து இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் கூடிய கடிதங்களை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் 19.01.2021 இல் அனுப்பி வைத்தன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் இலங்கை மீதான காட்டமான அறிக்கை 27.01.2021இல் வெளிவருகிறது.
மிச்செல் பச்லெட் அம்மையாரின் இந்த அறிக்கை வெளிவந்ததும் இங்கே தாயகத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்டுள்ள கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவும் ஏதோ ‘தமிழீழம்’ கிடைத்துவிட்ட மாதிரித் துள்ளிக்குதித்து இலங்கையை மாட்டிவிட்டோமென மார்புதட்டின. இப்பத்தியில் நான் அடிக்கடி சுட்டிக்காட்டுவதைப்போல் இதுவும் ஒருவகையில் தமிழர்தரப்பின் ‘மாடுவாங்க முதல் நெய்க்கு விலைபேசும்’ வழமையான உணர்ச்சி அரசியல்தான்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது அறிக்கையில் இலங்கையைப் போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் சர்வதேசப் பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
ஆனால், இறுதியில் என்ன நடந்திருக்கிறதெனின், இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் தலைமையில் பிரித்தானியா உட்பட ஜேர்மனி, கனடா, மொன்டீனிக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் மாலாவி ஆகிய ஆறு நாடுகளின் அனுசரணையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பூச்சியவரைபு’ எனப்படும் பிரேரணையின் முதல்வரைபும் பின்னர் அதன் திருத்தப்பட்ட வடிவமும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல்பச்லெட் அம்மையாரின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழர்தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளிலிருந்தும் தூரவிலகி மிகவும் ஐதாக்கப்பட்ட நிலையிலேயே இப்பத்தி எழுதப்படும் போது, இப்பிரேரனை வாக்கெடுப்பை நோக்கிக் கலந்துரையாடப்பட்டுகொண்டும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கையை ஆரம்பத்திலேயே முற்றாக நிராகரித்து, இப்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கும் எத்தனங்களில் ஈடுபட்டிருக்கின்றது. தாயகத்துத் தமிழ்த்தேசியக்கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னவெனில், தமிழ்மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரித்தானியாவின் தலைமையில் இப்பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகள் வெட்கித்தலைகுனிய வேண்டுமென்கிறார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்பிரேரணையை ஏற்கமுடியாதெனக் கர்ச்சிக்கிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ இப்பிரேரணைக்கு ஆதரவளிக்கும்படி ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளை வேண்டிக்கொண்டிருக்கிறார். இது எதனைக் காட்டுகிறதென்றால் இலங்கைத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச அரசியலைக் கையாளுவதில் தமிழர்தரப்பு அரசியல் தலைமைத்துவத்திற்குள்ள அறியாமையை– வறுமையை அல்லது நிபுணத்துவமின்மையைத்தான்.
இத்தொடரின் அடுத்த பத்தி எழுதப்படும் போது ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் முற்றுப்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் மிகுதிவிடயங்களை அடுத்தபத்தியில் (சொல்லத்துணிந்தேன் -65) ஆராயலாம்.

