யாழ்ப்பாணத்தில் புதிய பெருந்தெருவுக்கான தேவை

யாழ்ப்பாணத்தில் புதிய பெருந்தெருவுக்கான தேவை

    — வேதநாயகம் தபேந்திரன் — 

யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிப்போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும் தென்மராட்சிப் பிரதேசத்தின் உள்கிராமங்களில் ஒரு பகுதியின் வளர்ச்சியை ஏற்படுத்தவுமென புதிய பெருந்தெரு அமைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. 

யாழ் –பருத்தித்துறை வீதியில் நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையிருந்த இடத்தின் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி கைதடிப் பக்கமாக ஒரு பாதை செல்கிறது. அந்தப் பாதை கைதடி வடக்குப் பிரதேசத்தில் முடிவடைகிறது.  

இந்த வீதி கைதடி நீர்வேலி இணைப்பு வீதியென அழைக்கப்பட்டுத் தற்போது மண் பாதையாக உள்ளது. இப்பிரதேசம் பருவகாலப் பரவைக் கடல் உண்டாகும் தரவைப் பிரதேசமாகும். 

இந்த வீதியின் முன் புறத்தில் தான் புகழ்பெற்ற நீர்வேலி மாட்டுச் சவாரித்திடல் இருக்கிறது. 

கைதடி நீர்வேலி இணைப்பு வீதி 2 கிலோமீற்றர் நீளமானது. இந்த வீதி கைதடி வடக்கு வழியாகச் சென்று நவபுரம் கிராமத்தின் ஊடாக மட்டுவில் வடக்கு நோக்கிச் செல்கிறது. மட்டுவில் வடக்கு வீதியின் ஊடாக வடக்கு நோக்கிச் செல்லும் பாதை பன்றித்தலைச்சி அம்மன் கோவில் முன்பாகச் செல்லும் புத்தூர் மீசாலை காப்பெற் பெருந்தெருவுடன் இணைகிறது. 

நீர்வேலி வடக்கிலிருந்து கைதடி வடக்கு கிராமம் நோக்கிய வீதி பல இடங்களில் வளைந்து நெளிந்து செல்கிறது. அதுபோல கைதடி வடக்கிலிருந்து நவபுரம் ஊடாக மட்டுவில் வடக்குச் செல்லும் வீதியும் பல இடங்களில் வளைந்து செல்கிறது. 

பெருந்தெரு ஒன்று வளைந்து நெளிந்து செல்லாமல் நேர்ப்பாதையாகச் செல்வதுதான் போக்குவரத்துக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் பொருத்தமானது. 

அதனால் புதிய பெருந்தெருவை கூடியளவில் நேர்ப்பாதையாக அமைக்கவேண்டியது அவசியம். 

அதற்கான சாத்தியமும் உள்ளது. நீர்வேலி வடக்கிலிருந்து கைதடி வடக்கு நோக்கித் தற்போது வரும் மண் பாதையைத் தார்ப்படுக்கை வீதியாகக் கைதடி வடக்கு இந்து மயானம் வரையும் அமைக்க வேண்டும். அதன் பின்னர் கைதடி வடக்கு இந்து மயானத்திலிருந்து 50 மீற்றர் வடக்காக நவபுரம் நோக்கிக் கிழக்காகச் சென்று மட்டுவில் வடக்கு நோக்கிச் செல்லும் வகையில் தரவைப் பிரதேசம் ஊடாகப் பாதை அமைத்தல் வேண்டும். 

இடையில் எந்த ஒரு குடிமனைகளும் இல்லாததால் பொதுமக்கள் எதிர்ப்பு என்பதும் இந்த வீதி அமைப்பிற்கு வராது. 

தரவைப் பிரதேசம் ஊடாகப் பெருந்தெரு அமைக்கப்படும் போது மழைக் காலத்தில் நீரோட்டம் வேகமாகச் செல்லும் இடங்கள் கணிப்பிடப்பட்டு அந்த இடங்களில் பாலங்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.  

இந்தப் பாதை நேர்ப் பிரதேசமாக வரும். கைதடி வடக்கு ஊடாக நவபுரம் செல்வதை விட இவ்வாறு அமைப்பதன் மூலமாக ஒரு கிலோ மீற்றர் தூரம் குறைவாக இருக்கும்.  

நீர்வேலி வடக்கு ஊடாக கைதடி நவபுரம் ஊடாக மட்டுவில் வடக்கு நோக்கிச் சென்று பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வரையான பாதை 7 கிலோமீற்றர் தூரம் உடையதாக இருக்கும். 

இந்தப் பெருந்தெருவை அமைப்பதன் மூலமாக வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திலிருந்து தென்மராட்சி ஊடாக ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லும் மூன்றாவது பாதையும் உருவாகிவிடும்.  

ஏற்கனவே கைதடி கோப்பாய் வீதி, புத்தூர் மீசாலை வீதி ஆகியவை ஊடாக நாட்டின் நாலா புறங்களுக்கும் நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானோர் பயணம் செய்கின்றனர். 

இதனால் இவ் வீதிகள் எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும்.  

நீர்வேலி வடக்கு கைதடி ஊடாக மட்டுவில் வடக்குப் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் முன்பாக வரை பெருந்தெரு அமைப்பதன் மூலமாக ஒருதொகுதி வாகனங்கள் இந்தப் பாதை ஊடாகப் போக்குவரத்துச் செய்யும்போது வீதி விபத்துகளைக் குறைக்கலாம். 

கைதடி, மட்டுவில் கிராமங்களின் உள்புறக் கிராமங்களின் நிலப் பெறுமதிகூடி பிரதேச அபிவிருத்தி ஏற்படும். 

இப் பிரதேசங்களில் மழைக் காலங்களில் பரவைக் கடல் பிரதேசங்கள் தனித்துவமான ஒரு அழகைக் காட்டும். ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் சைபீரியப் பறவைகளும் புலம் பெயர்ந்துவருவது வழக்கம். 

அதனை ரசிக்க நாலா புறமும் இருந்து ஆள்கள் வரும்போது சுற்றுலாப் பெறுமதி உடையதாக இந்தப் பிரதேசம் மாறும். 

என்னால் கூறப்பட்ட இந்த வீதி அமைக்கப்படுவதற்கு அரச நிருவாகத்தரப்பிலுள்ளோர், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  

மழை காலத்தில் இந்த வீதி அரிப்பிற்கு உள்ளாகிப் பாவனை செய்யமுடியாதளவில் இருப்பதனைக் காட்டும் புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். 

புதிய புதிய பெருந்தெருக்கள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளலாம்.