“விடாய்” பேசும்  மொழி : படுவான் வாழ்வியல் ஒரு மறுவாசிப்பு! (காலக்கண்ணாடி – 28)

“விடாய்” பேசும் மொழி : படுவான் வாழ்வியல் ஒரு மறுவாசிப்பு! (காலக்கண்ணாடி – 28)

   — அழகு குணசீலன் — 

விடாய்” பேசும்  மொழி…….. 

படுவான் வாழ்வியல் ஒரு மறுவாசிப்பு…..!! 

படுவான்கரை! 

மட்டக்களப்பு தமிழகத்தின் மேற்குக் கரை. 

சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்திலும் வானம்பார்த்து பெருமூச்சுவிடும் வரண்ட மண்.  

இதுபோன்று சில மனிதர்களின் மனங்களும் ஈரமற்று வரண்டுதான் இருக்கிறது என்று “விடாய்” பேசுகிறது. 

விடாய் பேசுகின்ற அனைத்து அக்கிரமங்களுக்கும் முகம்கொடுத்து, சமூகவாழ்வியலில் தான்கொண்ட விடாயால் எதிர் நீச்சல் போட்டு, தன்னை தானே செதுக்கிக்கொண்ட, பின்நவீனத்துவ, பெண்ணியக் கவிஞை தில்லை. 

“விடாய்” இல் உள்ள படுவான்கரைச் சமுக, பொருளாதார, அரசியல் வாழ்வியலின் வெட்டுமுகங்களைக் காட்சிப்படுத்தி அதன் விம்பங்களைக் காட்ட காலக்கண்ணாடி திரும்புகிறது.  

விடாய்க்கு அருகில் வேலி போட்டு (தாகம்) என்று எழுதவேண்டிய தேவை அற்ற மட்டக்களப்பு தமிழகத்தின் -படுவான்கரையின் தனித்துவமான மொழியியல் வாடை விடாய். 

ஏற்கனவே சிலர் விடாய்க்கு குறிப்பெழுதி இருப்பதால் கூறியவை கூறலை தவிர்த்தும், அரைத்தமாவைத் திருப்பி அரைக்காமலும் பார்க்கக் கடவாயாக என்று மந்திரம் சொல்லி, உடுக்கடித்து செய்யும் ………. மறுவாசிப்பு இது. 

அருச்சுனப் பெருமானுக்கு அபயம் அடைக்கலம். 

விடாய் பேசும்களமான படுவான்கரைப் பெருநிலப்பரப்பில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், படுவான் வாழ்வியலுக்கு ஊடாக பிறந்து, வளர்ந்தவன், சிறுபராய அனுபவங்களை அள்ளி அளைந்தவன், அந்தமண்ணின் புழுதியில் உருண்டு பிரண்டு தோய்ந்தவன் என்ற வகையிலும் “விடாய்” பற்றி நானும் பேசவேண்டும் என்ற விடாய் எனக்கும் ஏற்படுகிறது. 

தில்லை பாடுகின்ற மாம்பழக்குருவியும், அத்தாங்கும், குஞ்சுமீனும், உப்புக்கரைச்சையும், உவர்க்காற்றும், கண்ணாக்காடும், உப்பட்டித்திருட்டும், பண்டிக்கிழங்கும், போடியார் வீட்டுத்திண்ணையும், புழுதி படிந்த வீதிகளும் என்னையும் புடம்போட்டவை.  

சாணைக்கூறை, வட்டி சேருவக்கால், நெல்லும் பதக்கடையும், மரைக்காலும், திண்ட்ற மண்ணும், சுங்கானும் தூண்டில்மீனும், எருமையைக் குளிப்பாட்டும் மனிதமும், எங்க ஊரின் அழியாத கோலங்கள். 

கல் உயர நீர் உயரும் 

பாழ் கிணறு ஒன்று ஒரு தாயைவிழுங்கி -ஆட்கொல்லி கிணறாகி, படுவான்கரையின் ஒரு கிராமியச் சிறுமியை தாயைத் தின்னியாக்கி, அவரின் சிறுபராய வாழ்வை எவ்வாறு சிதைத்து இருக்கிறது என்பதன் ஊடாக ஒரு சமூகத்தின் வாழ்வியல் வெட்டுமுகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

படுவான் கிராமிய கிறவல் வீதிகளில் உத்துக்கம்பு விளையாடி, கிட்டிப்பொல்லும் பம்பரமும் கிறுகி அடிக்கபாலாறு…….. பாலாறு என்று பாடி…… 

கோயிலடி மணலில் செங்கற்களில் சட்டிபானைத் துண்டுகளையும், ஓட்டுத்துண்டுகளையும் அடுக்கி குறிபார்த்து பந்தெறிந்து பிள்ளையார் கட்டை விளையாடி ……. 

தாமரைக் குளத்து வயல் வெளியில் தட்டுக்கோடடித்து …….. 

மில்லுக்கார சோமண்ணன் வயலில் மகன் தவத்தின் அத்தனை அர்ச்சனைகளையும் கேட்டு கால்பந்து உதைத்து…….. தண்ணீர் விடாய் எடுக்க கோயில் கிணற்றடியில் வாளித்தண்ணியை அள்ளிக்குடித்தும், ஆச்சி வீட்டு குடத்தடியில் குந்தியிருந்து விடாய்க்கு விடைகொடுத்த நினைவுகளோடும்…….. 

பாலர் வகுப்பில் மொனிக்கா அக்காவும், தவம் அக்காவும் சொன்ன, குடத்தில் கல் நிரப்பி காகம் விடாய் தீர்த்த கதைகளும் என்னைத்துரத்த… 

படுவான் சமூகத்தின் வாழ்வியல் சார் விடாய்கள் ஒன்றல்ல… பத்தல்ல நூறாக விரிந்து கிடக்கின்றன. 

தில்லையின் விடாய் பேசும் மொழி, அதனூடாக அந்த வரிகள் சொல்லும் படுவான்கரை மக்களின் வாழ்வியல் எந்த போர்வைகளாலும் மூடப்படாமல் அப்படியே அம்மணமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

மட்டக்களப்பு செந்தமிழில் சொன்னால் படுவான் வாழ்வியல் தாய் பெத்த மேனியாய் அப்படியே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

படுவான் வாழ்வியல் நம்பிக்கை : பாணிச்சேவலும்பல்லியும் !. 

“வீட்டின் முற்றத்திலிருந்ந 

பாணிச்சேவல் 

தலையைச் சுற்றி கிறுகி மாய 

அம்மாவின் சேதி 

ஊரைக்கூட்டியது.” 

இங்கு படுவான்கரை மக்களின் நம்பிக்கை வெளிப்படுகிறது. ஒரு கெட்ட சகுனம். ஏதோ துக்ககரமான நிகழ்வு இடம்பெறப்போகிறது என்று பாணிச்சேவலின் தீடீர் மரணம் அறிவிக்கிறது. 

காளிகோயிலில் உயிருக்கு உயிராக சேவல் கோழியை நேர்த்திக்கடனாக வழங்குகின்ற மட்டக்களப்பின் சிறு தெய்வ வழிபாட்டுப் பாரம்பரியங்கள் நினைவில் வருகின்றன. 

————————————

இறந்த குடும்ப உறவினர்களை நினைத்து வருடாவருடம் புரட்டாதி மாதத்தில் மட்டக்களப்பில் மாளயம் செய்வது வழக்கம். இன்றைய காலத்தில் இது பிதுர்கடன் என்று நாகரிகமாக(?) பேசப்படுகிறது. 

இரவு வேளையில் இறந்தவர்களுக்கு விருப்பமான உணவுகள், பலகாரங்கள் என்பனவற்றுடன், இறந்த ஆத்மாக்கள் விரும்பிப் புகைத்த சிகரட், சுருட்டு, விரும்பிக் குடித்த கள், சாராயம் எல்லாம் மடையில்- கல்லையில்  வைத்து உள்வீட்டு கதவைச் சாத்தி பல்லி கத்தும்வரை காத்திருக்கும் வழக்கு. 

பல்லி கத்திய பின் உணவப்பொருட்களை எடுத்து உற்றார், உறவினர், ஊரார்களுக்கு கொடுத்து இறந்தவர்களின் பெயரால் உண்டுகளித்தல். 

“காலங்கள் கடந்தும் 

நான் வைக்கும் கல்லையில் 

கதவு சாத்தி காத்திருந்தும் 

பல்லி அடிக்கவில்லை ……” 

திருமணத்தின் போது மணமகன், மணமகள் இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி வழங்கப்படும் முதல் உணவையும் கல்லையில் போடுதல் என்பது வழக்கம்.  

கல்லையில் வைச்சிட்டுப் போகட்டும் என்று ஒருவரைத் திட்டும் வழக்கமும் உண்டு.    

“கல்லூட்டுத் திண்ணையில் 

சாணக்கூறை 

இறுக மூடப்பட்ட 

றங்குப்பெட்டிக்குள் 

இன்னும் உயிர்க்கிறது” 

பெண் பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும் போதே அவர்களின் திருமணத்திற்கு என தாய் பத்திரப்படுத்தி வைக்கும் கூறைச்சேலை. 

தாய், தந்தை சகோதர வழியில் ஆண், பெண் பிள்ளைகள் பிறந்தால் சிறுவயதிலே இன்னார்க்கு, இன்னார் தான் என்று குறிபோடுகின்ற வழக்கமும் இருந்தது. இது மட்டக்களப்பு மண்ணில் சாணைக்குறி என்று அழைக்கப்படும். 

அப்போதெல்லாம் பருவமழை பெரும் இடிமுழக்கம்,  மின்னலுடன் கொட்டும். இடிமுழக்கம், மின்னல் கேட்டாலும், பார்த்தாலும் பெரும் பயமாக இருக்கும். 

அப்போது வளர்ந்தவர்கள் பிள்ளைகளின் அச்சத்தைப்போக்க அருச்சுனப்பெருமானுக்கு அபயம் அடைக்கலம் என்று இடிக்கும்போது சொல்லுங்கள்.  

அருச்சுனன் கடவுள் எங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்வார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒடி ஒதுங்கி இருந்து இதைச்சொல்வது வழக்கம். 

“வயல் வெளியில் தனித்தபோதும் 

வீதியில் முழக்கம் எழுந்தபோதும் 

வீட்டில் நெல்லுச் சாக்கினுள்ளும் 

ஆண்களின் மடியினுள்ளும் 

பருவம் அறியா நாட்களில் 

அருச்சுன பெருமானுக்கு 

அபயம் அடைக்கலம்” 

படுவான்கரையின் நிலவுடமைக்கட்டமைப்பு : போடி ! 

படுவான்கரையின் நிலவுடமைக் சமூகக் கட்டமைப்பானது மட்டக்களப்பிற்கே உரிய தனிப்பண்பான போடியார் சமூகப்பிரிவை முதன்மைப் படுத்துவதாக அமைகிறது. 

இன்றைய காலகட்டத்தில் போடியார் பரம்பரையின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தளர்ந்து இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எச்சங்கள் உள்ளன. 

“போடி” என்ற பெயரைக் கொண்டவர்கள் எல்லாம் போடியார்கள் அல்ல. பெரும் நிலவுடமையாளர்களும் அல்ல. காலப்போக்கில் அந்தப் பெயர் செல்வத்தை, வசதி வாய்ப்பை குறித்து நின்றதால் பெற்றோர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளின் பெயரில் போடி என்ற பெயரை இணைத்துக்கொண்டனர். 

சில சந்தர்ப்பங்களில் போடி என்று பெயர் இறுதி இல்லாத நிலையிலும் கிராம மக்கள் ஒருவரின் பொருளாதார வசதியைக்கொண்டு “போடியார்” என்று அழைத்தனர். 

பிச்சைக்காரன் ஒருவனிடம் உன் பெயர் என்ன என்று கேட்டால் கோடீஸ்வரன் அல்லது செல்வராசா என்று சொல்வதைப்போல் இன்று போடி என்ற பெயர் இறுதி படுவான்கரையின் பல சாதாரண வறிய விவசாயிக்கும், தொழிலாளிக்கும் இருக்கிறது என்பதுதான் உண்மை. 

ஆனால் தில்லையின் விடாய் பேசுகின்ற போடியை உண்மையில் ஒரு நிலவுடைமை அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாகவே மறுவாசிப்பு செய்ய வேண்டி உள்ளது. 

“வட்டிலும் செம்பும் 

சேவரக்கால் சோக்கும் 

எச்சில் படிக்கமும் என்னத்தைச் சொல்ல.” 

வட்டில், வட்டா, செம்பு, சேவரக்கால், படிக்கம் இவை எல்லாம் பரம்பரை பரம்பரையாக ஒரு போடியார் வீட்டு வெண்கலச் சொத்துக்கள். 

வட்டாவில் வெற்றிலை, பாக்கு, பாக்கு வெட்டி, சுண்ணாம்பு, புகையிலை வைத்திருப்பார்கள்.  

புகைப்பது போன்று வெற்றிலை போடுவது இவர்கள் வழக்கம். விருந்தினர் வந்தாலும் வட்டாவை  கொண்டு கொடுத்து வரவேற்பது வழக்கம். 

செம்பு என்பது தண்ணீர் பரிமாறுவதற்கான பாத்திரம். குடம் போன்ற சிறியவடிவம் கொண்டது. சேவரக்கால் வட்டிலை அதன்மேல் வைத்து உணவு உண்பதற்காக ஒரு ஸ்ரான்ட். 

வட்டிலில் சாப்பாடு போட்டு சேவரக்காலில் வைத்து  நிலத்தில் அமர்ந்து இருந்து உண்ணும் வழக்கம் போடி கத்தறைக்கு உரியது. (கத்தறை என்பது பரம்பரை). 

படிக்கம் எச்சில் துப்ப பயன்படுத்தப்படும் பாத்திரம். வெற்றிலை பாக்கு சப்பி விட்டு படிக்கத்துள் துப்புவார்கள். 

“அவனுக்கு சட்டிபானை கழுவ 

 ஒரு பொம்புளக் கூட்டம் 

வாசல் கூட்டிப்பெருக்க கனகன் 

மாடுமேய்க்க கொங்கன் 

ஆடு மேய்க்கத் தங்கன் 

பட்டாளங்கள் நிறைந்திருக்கும் 

பாழாய்ப்போனவன் மனையடி.” 

இந்த வரிகள் போடியார் – வேளாண்மைக்காரன் வர்க்க பிரிவை, ஆண்டான் அடிமை சமூக கட்டமைப்பை தோலுரித்துக் காட்டுகின்றன. 

“என்ட சின்னம்மா என்னமா அழுறா  

வட்டி சேவரக்கால்  வட்டா செம்பு  

தாய் தகப்பன் முதுசமெல்லாம் 

சாக்குச்  சாக்கா அள்ளுறானாம் …..”

——————————— 

“கதிர் புறக்கி மரைக்கால் சேராவிட்டால் 

தூண்டில் குத்தி மீன் காணாவிட்டால் 

திண்ட்ற மண் எடுக்க  

ஒட்ற குளம் போகாவிட்டால் 

குடிகிளப்பும்.” 

கதிர் புறக்குதல் அன்று ஒரு பருவகால தொழில். வயோதிபர்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லோரும் கதிர்புறக்குவர். நெல் அறுவடைக்காலம் பாடசாலை விடுமுறைக்காலம் என்ற காரணத்தால் முழுக் குடும்பமும் வயலில் தங்கி நிற்பார்கள். அறுவடைக்காலம் கிராமங்களில் மகிழ்ச்சியான காலம்.  

கோடைகால பாடசாலை விடுமுறை வேளாண்மை வெட்டு விடுமுறை என்று படுவான்கரையிலும், சித்திரைப் புத்தாண்டு விடுமுறை என்று எழுவான்கரையிலும் அழைக்கப்பட்டது. 

ஆரம்பத்தில் நிறுத்தல் அளவையில் இறாத்தல், அவுண்ஸ் இருந்தது. 

அது போல் முகத்தல் அளவையில் சுண்டு, கொத்து, மரைக்கால், சாக்கு, அவணம் இப்படி………. 

நான்கு சுண்டு ஒரு கொத்து. 

ஆறு கொத்து ஒரு மரைக்கால் 

பத்து மரைக்கால் ஒரு சாக்கு (ஒருமூடை) 

மூன்று மூடை ஒரு அவணம்.  

வயலின் மொத்த நெல் விளைச்சல் அவணக்கணக்கில்தான் பேசப்படும். 

இன்று முகத்தல் அளவை தூர்ந்துபோக நிறுத்தல், நீட்டல் அளவைகளே முன்னணியில் உள்ளன. 

மரைக்கால் பொதுவாக பிரம்பினால் செய்யப்பட்டது. கடகம் மரைக்காலை விடவும் பெரியது. கைப்பெட்டி இரண்டுக்கும் இடைப்பட்ட அளவு. 

இவை முகத்தல் அளவுகோலாக வயல்களில் பயன்படுத்தப்பட்டன. 

அதிகமாக சூட்டுக்களவெட்டியில் இவை பாவனையில் இருந்தன. 

களிமண் அல்லது மண்ணாங்கட்டி தின்னும் பழக்கம் அப்போது பெண்கள் மத்தியில் அதிகம் இருந்தது. சில ஆண்களும் தின்பார்கள். ஒரு வகையான களிமண் வகை. அதை எடுத்து வந்து காயவைத்து பதப்படுத்தி சொந்தப்பாவனைக்கும் விற்பனைக்கும் பயன்படுத்துவார்கள்.  

“வெப்பு” நோய் என்பது இரத்தச்சோகை, அது மண்ணாங்கட்டி தின்பதால் ஏற்படும் என்று கூறுவார்கள். இவை சராசரியான படுவான்கரை குடும்பமொன்றின் வாழ்வியலைக் காட்டுகின்றன. 

படுவானில் ஒருநெய்தல் : உப்புக்கரைச்சையும்கண்ணாத்தோப்பும் ! 

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இது சங்க காலம். எங்கள் காலத்தில் வாவிக்கரையும், உப்புக்கரைச்சையும், கண்ணாத்தோப்பும் நெய்தல். 

முன்னது எழுவான் நெய்தல் பின்னது படுவான் நெய்தல். 

” என் ஊரருகிலுள்ள 

கண்ணாக்காடுகளில் 

காய்ந்த சுள்ளி பொறுக்கி 

சும்மாடு வைத்துச் சுமந்து 

நண்பர்களோடு 

சுரியில் புதைந்து மீண்டெழுந்து 

மீண்டும் புதைந்த நாட்களும்” 

மட்டக்களப்பு வாவியைச் சூழவுள்ள படுவான்கரை கிராமங்களுக்கு இந்தக்காட்சிதான் நெய்தல் காட்சி. 

கடற்காற்றற்று உவர்க்காற்றை உப்புக்கரைச்சையில் நுகர்ந்து, நண்டடிக்காது நஞ்சடித்து மீன் கலைத்து வலையில் பாய்ச்சும் படுவானின் நெய்தல் வாழ்வு. 

தென்னந் தோப்புகளில் கொப்புறா புறக்காது கண்ணா கண்டல் தோப்புகளில் காய்ந்த சுள்ளி புறக்கும் வாவிக்கரை. சேறும், சுரியும், சகதியும் சதுப்பு நிலமும் கொண்ட எங்கள் படுவானின் நெய்தல். 

விடாயில் பல இடங்களில் விட்டு விட்டு வந்து படுவான் வாழ்வியலை பகிரங்கப்படுத்துகின்றது. 

“சும்மா சொல்லக்கூடாது  

போனகிழமை  

என் ஊருக்குப் போயிருந்தேன் 

இப்போதோ பிறகோ  

என்கிற வயதில் 

குளத்துக்குள் எருமையைக் 

குளிப்பாட்டிக் கொண்டிருந்தான் ஒரு கிழவன்……” என்ற குளத்துக் குளியலோடு முடித்துக் கொள்கிறேன்.