— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/251 தீர்மானத்தின் மூலம் 2007 இல் உருவாக்கப்பட்டதே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கீழ்ப்பட்ட அனைத்து நிறுவனங்களுமே நாடுகளை உறுப்பினராகக் கொண்டவை. அந்த வகையில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் நாடுகளை உறுப்பினராகக் கொண்டது. ஐக்கியநாடுகளின் பொதுச்சபையால் மூன்றாண்டுகள் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பத்தியேழு உறுப்பு நாடுகளையே தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது. இந்த நாற்பத்தியேழு உறுப்புரிமைகளும் ஆபிரிக்க நாடுகள் 13, ஆசிய – பசுபிக் நாடுகள் 13, லத்தீன் அமெரிக்க மற்றும் கபிரியன் நாடுகள் 08, மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகள் 07, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 06 எனப் பகிரப்பட்டுள்ளன. தீர்மானங்களை வழிநடத்தும் குழுவில் மாலாவி (ஆபிரிக்கா), பிரித்தானியா, ஜேர்மனி, மொன்டீனிக்ரோ, வடக்கு மசிடோனியா (மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பியா), கனடா ஆகிய ஆறு நாடுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த ஆறு நாடுகளுமே அனுசரணை நாடுகள் என அழைக்கப்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கட்டமைப்பு இதுவேயாகும். இக்கட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், ஜெனீவாவில் வருடாவருடம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் அண்மைக்காலங்களில் போர்க்குற்றங்களையும் உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழர் தரப்பினால் எவ்வாறு கையாளப்பட்டது / கையாளப்பட்டிருக்க வேண்டுமென்பதைப் பக்கச்சார்பின்றியும் காய்தல் உவத்திலின்றியும் நடுநிலை நின்று ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தம் 2009 மே 19 இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குவந்தமை முழுஉலகும் அறிந்த விடயமே. இந்த இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையொன்றினையே தமிழர் தரப்பு ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களின்போது வேண்டிநின்றது.
அது இப்போது இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் (International Criminal Court – ICC) பாரப்படுத்த வேண்டுமெனும் கோரிக்கையாக வந்து நிற்கிறது. தமிழ்த்தரப்பு எனும்போது ஜனநாயக ரீதியான தேர்தல்களில் பெருவாரியான வடக்குக் கிழக்குத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழர்தம் அரசியல் தலைமையான ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு’ இந்த யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து இன்றுவரை எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை முதலில் நோக்குவோம்.
யுத்தம் முடிந்த பின்னர் யுத்தத்தை முடித்துவைத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ‘கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வை நியமித்தார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தபோது இவ்வறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களில் பகிரங்க அறிக்கையிட்டார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைப்புகள் இதுவரை முழுமையாகவும் திருப்தியாகவும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால்கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை.
ஒரு யுத்த களத்தில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் நடைபெற்றால் அவற்றிற்கு அவ் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்புமே பொறுப்புக் கூறவேண்டும். முள்ளிவாய்க்கால் யுத்தத்தைப் பொறுத்தரை யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் ‘பயங்கரவாத இயக்கம்’ என இலங்கை அரசாங்கமும் ஏனைய சர்வதேச நாடுகள் சிலவும் பட்டியலிட்டு இருந்ததால் பயங்கரவாத இயக்கமொன்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சட்டரீதியான/தார்மீகரீதியான கடமைப்பாடு இல்லையென்பதால் ‘பொறுப்புக் கூறல் கடமைப்பாடு’ தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அவசியமில்லை. அது அவர்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் மக்களால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பெற்ற அரசாங்கமொன்றிற்கு அவ்வரசாங்கத்தின் இராணுவம் இழைத்ததாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறவேண்டிய பாரிய கடமைப்பாடு சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் உள்ளது.
இக்கடமைப்பாட்டினை யுத்தம் முடிவடைந்து பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்தும் இலங்கை அரசாங்கம் திருப்தியாக நிறைவேற்றியுள்ளதா? என்பதுதான் இன்றுள்ள சர்வதேசக் கேள்வி. யுத்தத்தால் வெகுவாகப்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ‘நிலைமாறுகாலநீதி’ (Transitional Justice) இன்னும் கிடைக்கவில்லை. அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினாலும் ஏனைய சில சர்வதேச நாடுகளினாலும் ‘பயங்கரவாத இயக்கம்’ எனப் பட்டியலிடப்பட்டுத் தடை செய்யப்பட்ட இயக்கமாகக் கருதப்பட்ட தமிழீழவிடுதலைப் புலிகளினால் ஏதாவது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் (புலிகள் அல்ல என்றபோதிலும்) 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது வெளியிட்ட தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ்மக்களின் உண்மையான ஏகப்பிரதிநிதிகளாகவும் ஏற்று தமிழ்த்தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பையும் நல்குவோம்’ எனும் வாசகங்களை உள்ளடக்கி அதற்கான ஆணையைத் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அப்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே என்பதையும் நடுவுநிலைமை நின்றும் காய்தல் உவத்திலின்றியும் பக்கசார்பில்லாமலும் சொல்லவேண்டியிருப்பது தர்மமாகும்.
அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது பொறுப்பையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்திற்குப் பொறுப்புக் கூறாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்காவது பொறுப்புக்கூற வேண்டும். இது ஒரு புறமிருக்க யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர், இவ்யுத்தத்தை இராணுவ ரீதியாகத் தலைமையேற்று நடாத்திய இலங்கை இராணுவத்தளபதியே (சரத்பொன்சேகா) ஆவார்.
ஆனால், முரண்பாடு என்னவெனில் எந்த இராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் இப்போது கோரிக்கை விடுக்கிறதோ, அதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010இல் நடைபெற்ற இலங்கையின் ஜனாபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட மேற்குறிப்பிட்ட யுத்தகாலத்து இராணுவத்தளபதி (முன்னாள் இராணுவத்தளபதி) சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ்மக்களைக் கேட்டுக் கொண்டது. தற்கொலைக்குச் சமமான இத்தீர்மானத்தின் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை ஏற்கும் தார்மீகத்தை அன்றே இழந்துவிட்டது.
மேலும், இந்த யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்மையிலேயே இருந்திருக்குமானால் அது பற்றிய குறிப்புக்களைத் தானும் யுத்த முடிவுக்குப் பின்னர் 2010இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்காக வெளியிட்ட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆனால், 2010இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘சர்வதேச போர்க்குற்ற விசாரணை’ பற்றிய ஒரு வார்த்தை கூட மருந்துக்குத்தானும் இல்லை. 2012 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்த பின்னர்தான் (அப்போது அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடாக இருந்தது. இப்போது விலகிவிட்டது) சர்வதேச போர்க்குற்றவிசாரணை பற்றித் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்திறந்தது.
2012இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அப்போது உறுப்புநாடாக இருந்த அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த போர்க்குற்றம் மற்றும் பொறுப்புக்கூறல் சம்பந்தமான தீர்மானம், சீனாவின் பக்கம் சாய்ந்துகொண்டிருந்த முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைத் தம் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியே தவிர தமிழ்மக்கள் மீதான கரிசனையால் அல்ல.
நியாயம் – தர்மம் – உண்மை – தார்மீகம் – இயற்கைநீதி என்கின்ற விழுமியங்களை ஒருபுறம் வைத்துவிட்டு எல்லா நாடுகளுமே தத்தம் நாடுகளின் சமூக- பொருளாதார – அரசியல் – இராணுவ – பாதுகாப்பு – மற்றும் வர்த்தக நலன்களிலிருந்துதான் முடிவுகளையெடுக்கின்றன என்பதே நடைமுறை யதார்த்தம்.
தமிழர்தரப்பு சர்வதேச அரசியலைக் கையாள்வதென்பது இந்த நடைமுறை யதார்த்தங்களினூடாகத் தமிழர்களின் நலன்களை எப்படி வென்றெடுப்பதென்பதாகவே இருக்கவேண்டுமேயொழியத் தனியே தமிழர்தரப்புச் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் சரி என்ற உளவியலில் தமிழர்தரப்பு விடுக்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் ஏனைய தரப்புகள் அல்லது நாடுகளெல்லாம் ஆமாம்! சாமி! போடவேண்டுமென்று எதிர்பார்த்தால் அது நடக்காது. உள்ளூரில் தேர்தல் அரசியலைக் கையாள்வது வேறு, சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர அரசியலைக் கையாள்வது என்பது வேறு. அரசியலிலும் சரி ஆயுதப் போராட்டத்திலும் சரி தமிழர்தரப்பு இந்த வேறுபாட்டைக் கவனத்திலெடுக்காததே தமிழர்தரப்பின் இதுவரையிலான தோல்விகளுக்குக் காரணம்.
2012இல் அமெரிக்கா ஜெனீவாவில் ஆரம்பத்தில் கொண்டுவந்த தீர்மானம் அடுத்துவந்த 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாகப் பரிணாமமடைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கை 2015ஆம் ஆண்டுக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படுவதற்கான நிலைமையை அடைந்தது.
2009இல் யுத்தம் முடிந்து அமெரிக்கா 2012இல் ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவரும்பவரை சுமார் மூன்றாண்டுகள் ‘சர்வதேச போர்க்குற்ற விசாரனை’ பற்றி வாயே திறக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் பின்புதான் ‘சர்வதேச போர்க்குற்ற விசாரணை’ப் பாட்டுப் பாடத் தொடங்கியது. மட்டுமல்ல, தங்களால்தான் 2012இல் அமெரிக்கா ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவந்தது எனக் தம்பட்டம் வேறும் அடித்துக் கொண்டது.
அதேவேளை, யுத்தம் முடிந்தபின் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 27.05.2009 அன்று நிறைவேற்றப்பட்ட S – 11/1 என்ற தீர்மானத்தில் இலங்கையில் சிவில்யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டப்பெற்றும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்திய தமிழீழவிடுதலைப் புலிகள் கண்டிக்கப்பெற்றும் இருந்தன. அப்போது சுமந்திரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இல்லை. 2010ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனங்களிளொன்றை இரா.சம்பந்தன் சுமந்திரனுக்கு வழங்கி அவரைத் தமிழ்த்தேசிய அரசியலுக்கு இழுத்து வரும்வரை சுமந்திரன் யாரென்றே வடக்குக்கிழக்குத் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் 2004ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வடக்குக்கிழக்கிலிருந்து தெரிவான இருப்பத்தியிரண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் (ஆகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) இருந்து ஆர்ப்பரிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், கஜேந்திரனும் கூட அடங்கியிருந்தனர். அப்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைதிகாத்தது. யுத்தம் முடிந்தபின் அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீன்மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்குமிடையில் போர்க்குற்றங்கள் குறித்த ‘உண்மைகளைக் கண்டறிதல் – பொறுப்புக் கூறல் – பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உறுதிசெய்தல்’ கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்தானது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவ்வுடன்படிக்கையைப் பின்னர் உதாசீனம் செய்திருந்தார்.
மட்டுமல்லாமல், அதன்பின் 2010ம் ஆண்டு யூன் மாதம் ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற தாருஸ்மென் தலைமையிலான நிபுணர்குழுவும் அறிக்கையிட்டிருந்தது. இவ்வறிக்கை ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீன்மூனிடம் 12.04.2011 இல் கையளிக்கப்பட்டது. தாருஸ்மென் அறிக்கையென அழைக்கபெற்ற இவ்வறிக்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்டதாக இலங்கை இராணுவத்தின் குற்றங்களாக, எழுந்தமானமான ‘ஷெல்’லடிகள் மூலம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை –மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது ‘ஷெல்’ வீச்சுக்களை மேற்கொண்டமை – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மோதல்களிலிருந்து தப்பிவந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் புலிச்சந்தேகநபர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் -யுத்தவலயத்திற்கு வெளியே ஊடகங்கள்மீதும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீதும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்பனவும், புலிகளின் குற்றங்களாகப், பொதுமக்களைப் பணயக்கைதிகளாக்கி மனித கேடயங்களாகப் பயன்படுத்தியமை– புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்தமை-பொதுமக்களுக்கு அருகாமையில் யுத்த உபகரணங்களைப் பயன்படுத்தியமை- சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் ஆட்சேர்த்தமை- யுத்தத் தேவைகளுக்காகப் பொதுமக்களை வேலைவாங்கியமை என்பனவும் அடையாளம் காணப்பட்டிருந்தன. உண்மைகளைக் கண்டறிவதற்கான ஒரு சுயாதீனமான விசாரணயை இவ் அறிக்கை வலியுறுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் குற்றம் இழைத்துள்ளதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே கூறியது.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இராணுவம் எந்தமனித உரிமை மீறல்களிலோ போர்க்குற்றங்களிலோ ஈடுபடவில்லையென்பதாகவும் நடந்தேறிய இறுதிக்கட்ட யுத்தம் தமிழ்மக்களைப் புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்த மனிதாபிமான யுத்தமேயென்பதாகவுமே இருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைவேறு, புலிகளின் பிரச்சினை வேறு என்பதாகவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் உளமார்ந்த நிலைப்பாடு உண்மையிலேயே இதுவாக இருந்திருந்தால் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களை நோக்கித் தன் நல்லெண்ணக் கரங்களை நீட்டும் வகையில் யுத்தக் கொடுமைகளுக்குள்ளான தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் மற்றும் உடனடி வாழ்வாதாரத் தேவைகளை யுத்தத்தை வெற்றிகொள்ள உதவிய சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்றாவது முன்னெடுத்திருக்க வேண்டும். மட்டுமல்லாமல், புலிகளின் சரி பிழைக்கு அப்பால் இப்படியொரு யுத்தம் ஏற்படுவதற்கு என்னென்ன அரசியல் காரணங்கள் அடிப்படையாக அமைந்திருந்தனவோ அவற்றை அடையாளம் கண்டு இலங்கைத் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்குக் குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்த ஏற்பாடுகளை முழுமையாக அமுல் செய்வதற்கு அரசியல் விருப்பத்துடன் காரியமாற்றியிருக்க வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதின்மூன்றாவது அரசியல் திருத்தச்சட்டத்திற்கு அப்பாலும் செல்வேன் (1310) என்று இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழியைக்கூட நிறைவேற்றத் தவறினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் எதனைக் கூறியிருந்தாலும் நடைமுறையில் ஒரு நாடு இன்னொரு நாட்டைப் போரில் கைப்பற்றினால் கைப்பற்றப்பட்ட நாட்டு மக்களை வெற்றி கொண்ட நாடு எப்படி நடாத்துமோ அதுபோலவே தனது சொந்தநாட்டுப் பிரஜைகளான வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பாரபட்சமாக இலங்கை அரசாங்கம் நடாத்தியது. நடந்தேறிய யுத்தம் புலிகளுக்கு எதிரான யுத்தமேதவிர தமிழ்மக்களுக்கு எதிரானதல்ல என இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் யார் சரி? யார் பிழை என்பதற்கப்பால் இந்த யுத்தத்தின் ஒட்டுமொத்த விளைவு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமாகவே நடந்து முடிந்தது.
யுத்தம் முடிந்த பின்னரான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பற்றதும் தமிழ் மக்களுக்குப் பாரபட்சமானதுமான நடவடிக்கைகளே இலங்கைத் தமிழர் விவகாரம் ஜெனீவாவை எட்டுவதற்குக் காரணமாயிருந்தது.
2015 ஜனவரி 08இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெருவாரியாக மகிந்தராஜபக்ஷவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கக் காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதனால் மட்டுமல்ல, யுத்தக் கொடுமைகளுக்குள்ளான அம்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் என எல்லாத் தரப்புகளாலுமே ஏமாற்றத்திற்குள்ளாயிருந்த நிலையில் ஒரு மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தமையே. இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியை இந்தியா விரும்பியதற்குக் காரணம் அதன் புவிசார் அரசியல் நலன்கள் மட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா + பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டினால் ஏற்படப்போகும் ‘நல்லாட்சி’அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் ஏதாவது நல்லது செய்யும் என்ற எதிர்பார்ப்பும்தான். ஆனால் நடந்ததோ வேறு. அதனை அடுத்தபத்தியில் (சொல்லத்துணிந்தேன் – 64) நோக்கலாம்.

