— வேதநாயகம் தபேந்திரன் —
“வெள்ளை வேட்டி, எப்போதும் அரைக்கை சேட். நெற்றி நிறைய விபூதி. அதன் நடுவே சந்தனப் பொட்டு. சாந்தமான வசீகர முகம். கோபம் தெரியாத குணம். அன்பான வார்த்தைகளைப் பேசும் பண்பு.”
இது தான் பொன்னையா இராசரத்தினம் ஐயாவின் தோற்றம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வாசிப்புத் தாகம் உள்ள தலைமுறையை, எழுத்தாளர்களை உருவாக்கிய நூலகர் வரிசையில் முதன்மையானவர்களில் ஒருவரான பொன்னையா இராசரத்தினம் ஐயா மறைந்து 11 வருடங்களாகின்றது.
யாழ்ப்பாணம் தாவடியில் 1933 ஆம் ஆண்டில் பிறந்த அவர் 2010 ஆம் ஆண்டில் பூவுலக வாழ்வை நிறைவுசெய்தார்.
காலம் பல கடந்தும் இன்றும் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவர்களால் பேசப்படுகின்றார். போற்றப்படுகின்றார். அவரால் ஊக்குவிக்கப்பட்டு உருவாகிய எழுத்தாளர் தலைமுறை பெரியது.
பாடசாலை நூலகர் பதவியை மாதச் சம்பளம் பெறும் அரச உத்தியோகமாகக் கருதாது அதனை ஒரு அர்ப்பணிப்புள்ள சேவையாகச் செய்தவர்தான் இராசரத்தினம் ஐயா.
இவர் போன்ற நூலகர்கள் பாடசாலைகளிலும், வேறு நூலகங்களிலும் செயற்பட்டிருந்தால் பெயர் சொல்லக் கூடிய எழுத்தாளர்களை யாழ் இந்துக் கல்லூரி உருவாக்கியிருப்பதைப் போல பலரும் உருவாகி இருப்பார்கள்.
1981 ஆம் ஆண்டு யாழ் பிரதான வீதியிலுள்ள சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆறாம் ஆண்டு படிப்பதற்கென யாழ் இந்துக்கல்லூரிக்குச் செல்கிறேன்.
காங்கேசன்துறை வீதிப் பக்கமாக உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பர்மா(மியன்மார் ) தேக்குகளால் மாடி அமைக்கப்பட்ட பிரார்த்தனை மண்டப மேல் மாடியில் தான் எனது வகுப்பறை.
எனது வகுப்பறையின் அருகில் தான் அப்போது கல்லூரியின் நூலகம் இயங்கியது. எனது வகுப்பறைக்குப் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு மதிய உணவு இடைவேளை, தேநீர் இடைவேளைகளில், பாட இடைவேளைகளில் போவேன்.
எனது அறிவுக்கு எட்டிய நூல்களை விருப்பத்திற்குரிய நூல்களை சஞ்சிகைகளை எடுத்து வாசிப்பேன்.
என்னைப் போல பல மாணவர்கள் வாசிப்பார்கள். இராசரத்தினம் ஐயா தமிழர் பண்பாடு கூறும் தோற்றத்துடன் செந்தளிப்பான முகத்துடன் இருந்து மாணவர்களை அவதானித்துக்கொண்டிருப்பார்.
யார் யாருக்கு என்ன பிடித்திருக்கிறதென தனது மேசையிலிருந்தவாறு கூர்ந்து அவதானிப்பார். அந்தத் துறை சார்ந்த நூல்களை எடுத்துத் தம்பி இதையும் ஒருக்கால் வாசித்துப் பாருங்கள் என இன்முகத்துடன் தருவார்.
அவரது கனிவான பேச்சும் பண்பான செயலும் எம்மை இன்னுமின்னும் வாசிக்கத் தூண்டும்.
சோவியத் யூனியனின் வெளியீடுகள் தமிழ்மொழியில் வர்ண அட்டையுடன் வெளிவந்த காலம் அது. அதனை எடுத்து வாசிப்பவர்களை அவதானிப்பார். லெனின் வரலாறு, ஜோசப் ஸ்ராலினின் வரலாறு, அதிகாலையின் அமைதியில், தாய் போன்ற நாவல்களை எடுத்து வாசிக்கத் தூண்டுவார். அதுபோல எல்லாத் துறைகளினதும் நூல்கள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்.
ஆறாம், ஏழாம் ஆண்டு வாண்டுப் பருவ மாணவர்கள் பெரும்பாலும் அம்புலிமாமாவில் தஞ்சம். அதனை உணர்ந்து சிறுவர் கதைகள், நீதிக்கதைகள் உள்ள நூல்களைத் தருவார்.
வேறு சில மாணவர்களுக்கு ஆனந்தவிகடன், கற்கண்டு, கல்கி போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகளை அறிமுகம் செய்து வைப்பார்.
பத்திரிகைகளையும் ஒழுங்கு முறையாகக் கோப்பிலிட்டு வைத்திருப்பார்.
பாடசாலை நேர சூசியில் நூலகப் பாடவேளையென வாரத்தில் ஒரு சில நாள்கள் இருக்கும். அந்தப் பாடநேரத்தை விரும்பிச் சென்ற மாணவர்கள் இருந்த காலம் அது.
வாசிப்பை உயிராக நேசித்தவர்களால் நிறைந்த காலம் அது. மதிய உணவு இடைவேளையின் போது சாப்பாட்டையும் மறந்து அம்புலிமாமா, ராணி கமிக்ஸ் வாசித்த நாள்கள் அவை.
வகுப்பில் பாடம் நடக்கும்போது களவாகக் கொப்பியினுள் வைத்து அம்புலிமாமா வாசித்துப் பிடிபட்டு அடிவாங்கிய நாட்கள் அவை.
மீத்திறன் கூடிய மாணவர்கள் யாழ் இந்துக் கல்லூரியில் அனுமதி பெறுவார்கள். ஆனால் அவர்களை நல்வழிப்படுத்தி வாசிப்பைத் தூண்டி வாசிப்பின் ஊடாக அறப் பண்புகள் உள்ள மாணவர்களை உருவாக்கியதில் இராசரத்தினம் ஐயாவின் அர்ப்பணிப்புள்ள சேவை உன்னதமானது.
பல இடங்களில் பார்த்திருக்கிறேன் நூலகராகக் கடமை புரிவோர்கள் வந்தவர்கள் என்ன வாசிக்கின்றார்கள், எதை வாசிக்கின்றார்கள் என்பதைப் பற்றிக் கவனிக்காது தாம் உண்டு தம் பாடு உண்டென இருப்பார்கள். அல்லது எதையாவது வாசித்தபடியே நேரத்தைப் போக்குவார்கள்.
ஆனால் இராசரத்தினம் ஐயா இவர்களிலிருந்து மாறுபட்டவர். நூலகத்தினுள் நடமாடித் திரிவார். மாணவர்களது இரசனை அறிந்து புத்தகங்களைச் சஞ்சிகைகளை வாசிக்கக் கொடுத்து ஊக்கப்படுத்துவார்.
அவரது கனிவான பேச்சும் பண்பான செயலும் மாணவர்களை உண்மையாகவே வாசிக்கச் செய்தது.
நான் உயர்தர வகுப்பில் வணிகத்துறையைத் தெரிவு செய்து கொண்டேன். கணக்கியல், பொருளியல், வர்த்தகம் பாடங்களுடன் நாலாவது பாடமாக இந்து நாகரீகத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.
இந்து நாகரீகப் பாடத்திற்கான நூல்களை வாசித்துக் குறிப்புகள் எடுப்பதற்காக கல்லூரி நூலகத்திற்குச் செல்வேன். அப்போது இராசரத்தினம் ஐயா பல புத்தகங்களைச் சிபாரிசு செய்வார்.
பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும் என்பார்கள். இராசரத்தினம் ஐயா செய்த தன்னலம் கருதாத சேவைகள் காரணமாக அவரது பிள்ளைகள் கல்வி, கேள்வியில் உயர்ந்து நல்ல நிலையில் வாழ்கின்றனர்.
இராசரத்தினம் ஐயா சேவையிலிருந்து ஓய்வு பெற்று, அமரத்துவம் அடைந்தபோதிலும் நிலத்திலும் புலத்திலும் அவரால் வாசிப்பின் மீது நேசம் பெற்று அதன் பயனை அனுபவிப்பவர்கள் நினைவுகூர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.
தன்னலம் கருதாத மனிதர்கள் உலகை அழகாக்குவார்கள். அது போலஇராசரத்தினம் ஐயாவினால் வாசிப்பின் மீது நேசம் பெற்ற தலைமுறையால் அவர் என்றென்றும் நேசிக்கப்படுவார்.
வாசிப்புப் பழக்கம் அருகிவரும் காலத்தில் இவர் போன்ற தன்னலம் கருதாத நூலகர்கள் உருவாக வேண்டியதே காலத்தின் தேவையுமாகும்.