நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் விண்டோ சீட்

நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் விண்டோ சீட்

— ஆரதி — 

நெஞ்சம் மறப்பதில்லை 

ரீ மேக் பாடல்களைப் போல பழைய படங்களில் பெயர்களில் புதிய படங்கள் வருகின்ற காலமிது. இப்படி வந்திருக்கும் இன்னொரு படமே நெஞ்சம் மறப்பதில்லை. 

1963 இல் வந்த நெஞ்சம் மறப்பதில்லையை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். அதிலே கல்யாண்குமார், தேவிகா, நம்பியார், மனோரமா, நாகேஸ் நடித்திருந்தனர். நிறைவேறாக்காதல், மறுபிறப்பு போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. இதில் வரும் “நெஞ்சம் மறப்பதில்லை…. அது தன் நினைவை இழப்பதில்லை” என்ற பாடல் இன்றும் உச்சமே.  

கல்யாண்குமாரும் தேவிகாவும் உருகி உருகிப் பாடும் இந்தப் பாடலில் உருகாதவர்கள் இல்லை. அது விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் கொடி பறந்த காலம். அதில்  விளைந்த அற்புதப்பாடல் இது. 

இப்பொழுது வந்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லையில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசை. இது ஒரு வகையில் பேய்ப்படம். மறுவிதத்தில் க்ரைம் படம் என்றும் சொல்லலாம். படத்தின் கதையை சுருக்கமாகச் சொல்வது என்றால், பணக்காரத் தம்பதிகளான எஸ்.ஜே.சூர்யா – நந்தி ஸ்வேதா வீட்டில் பணி செய்யவும் அவர்களுடைய பிள்ளையைப் பராமரிக்கவும் மரியம் என்ற இளம் பெண்ணொருவர் வருகிறார். அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்திக் கெடுத்துக் கொன்று விடுகிறார் சூர்யா. கொல்லப்பட்ட பெண், ஆவியாக, பேயாக வந்து சூர்யாவைப் பழிவாங்கத் துடிக்கிறார். இதற்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கின்றன என்று நீள்கிறது கதை. 

இப்படிச் சொல்லும்போதே மீதியை நீங்கள் புரிந்து விடக் கூடும். வழமையான பேய்ப்படங்கள். அல்லது கொலையைத் துப்பறியும் கதை. அதன் இறுதி முடிவு என்பதெல்லாம் நீங்கள் யூகித்து விடக் கூடியவையே. இந்தப் படமும் வழமைகளின் வழித் தடத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. ஆனால், சிறிய வித்தியாசம், இதில் சூர்யாவின் பாத்திரமும் அந்தப் பாத்திரமாக மாறியிருக்கும் சூர்யாவும். ஆச்சரியமூட்டக் கூடிய வகையில் நடித்திருக்கிறார் சூர்யா. அதைப்போலப் பணிப்பெண்ணாக  வரும் ரெஜினாவும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே அதிகமாகச் சோபிக்க மறுத்திருப்பது நந்திதா ஸ்வேதாதான். இவ்வளவுக்கும் மிகத் திறமையான நடிகை அவர். அவர் ஓரளவுக்கு பின்பாதியில்தான் தன்னை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். அதற்கிடையில் படம் முடிந்து விடுகிறது. ஆனாலும் ஆற்றலும் திறனும் உள்ள நடிகை என்ற வகையில் பின்பாதியில் தவறிழைத்த கணவனைக் கையாளவும் கையாள முடியாமலும் தத்தளிப்பதிலே தன்னை வெளிப்படுத்துகிறார். 

படத்தில் முக்கியான இன்னொரு பாத்திரமாக இருப்பது ஒளிப்பதிவே. இந்த மாதிரிப் படங்களில் ஒளிப்பதிவில் வெளிப்படும் கோணங்களும் இருளும் ஒளியும் இணைந்த கலவையும் தனியொரு பாத்திரமாகி விடும். அதைச் செய்திருக்கிறார், அரவிந்த் கிருஸ்ணா. உண்மையில் பாராட்டும்படியாக –காட்சிப் புலத்தை மறக்கவே முடியாமல் உள்ளது  ஒளிப்பதிவு. 

இதை தன்னுடைய வழமையான படங்களை விட்டு வித்தியசமாகக் காட்ட முற்படுகிறார் செல்வராகவன். ஆனால், அதில் அவர் வெற்றியடைந்திருக்கிறாரா என்றால் அது கேள்வியே! அதாவது நெஞ்சம் மறக்காமல் நெஞ்சம் மறப்பதில்லை இருக்குமா? என்று. 

இந்தப்படம் இன்றைய சூழலில் ஐந்து ஆண்டுகள் வரையில் தயாரிப்பிலிருந்தது. இது இன்றைய நிலையில் ஆச்சரியமூட்டக்கூடியது. இப்பொழுதெல்லாம் தயாரிப்புத் தொடங்கினால் அதிகபட்சம் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே படம் வந்து விடும். மற்றும்படி சாதாரணமாக ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் படம் வந்து வீடும். இது கால நீட்சியொன்றின் பிறகு வந்திருப்பது, இந்தப் படத்தில் நடித்துள்ளோருக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில் நுட்பம், காட்சிப்புலம் எல்லாவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகளை உணர்த்துகிறது. அதுவும் ஒரு வகையில் வேறான ஈர்ப்புக்குரிய ஒன்றே. 

விண்டோ சீட் 

பஸ்ஸிலும் ரெயினிலும் யன்னலோர இருக்கைக்கு நம் உள் மனதில் ஒரு துடிப்பிருக்கும். அந்த இருக்கை, அந்த யன்னல் தருகின்ற காற்றும் ஒளியும் காட்சியும் அதற்கு அப்பால் வெளியுலகம் ஒன்று எப்போதும் நம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வுத்துணையும் நமக்குப் பிடித்துப் போகிறது. நமக்கு வேண்டியதாகிறது. இது நாம் இருக்கின்ற வீட்டில் நம்முடைய அறையிலும் நம்மைக் கேட்கிறது. நம்முடன் இணைந்து கொள்கிறது.  

ஏறக்குறைய இதை இன்னொரு விதமாக உணர வைக்கிறது பரத்ராஜ் இயக்கிய “விண்டோ சீட்” என்ற படம். இது பத்துக்கும் மேற்பட்ட உலகத்திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறது. 

தமிழில் இந்த மாதிரியான படங்களின் வருகை குறைவு. ஏற்கனவே வெற்றிமாறனின் “விசாரணை”ஒளிப்பதிவாளர் செழியனின் “டூலெட்”அருண் கார்த்திக் இயக்கிய “நஸீர்”, தரணி ராஜேந்திரன் இயக்கிய “ஞானச்செருக்கு” மற்றும் கூழாங்கல், தேன் போன்ற படங்கள் வெளிப்பரப்பில் பெருங்கவனம் பெற்றிருக்கின்றன. இது விலகல் சினிமாக்களை அல்லது மறுதலைச் சினிமாக்களை விரும்புவோருக்கு மகிழ்ச்சியளிக்கும், நம்பிக்கை தரும் சங்கதி. 

“விண்டோ சீட்” ஒரு வெற்றிச் சினிமாவாக மாறுவதற்குப் பார்வையாளர்களின் பங்களிப்பு, ஊக்கம், ஆதரவு தேவை. இது பண்பாட்டுச் சினிமாவுக்கான வாய்ப்பை அளிக்கும்.