— அகரன் —-
முனைவர் தொ. பரமசிவம் அவர்களின் கட்டுரையும், கேள்வி பதிலும் அடங்கிய நூல்.
திரு கமல்ஹாசன் நடித்த தசாவதாரத்தில் ஒரு வசனம் வரும் ‘கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, அது இருந்தால் நல்லது’ இந்த புகழ்கொண்ட வசனத்தின் சொந்தக்காரன் தொ.பா. அவர்களே.
பேராசிரியர்களுக்கு மட்டும் விளங்கும் மொழி இல்லாமல் வாசிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்கும் தமிழரின் நீண்ட மெய்யியல் வரலாற்றையும், நடைபெற்ற சூதுகளையும், நாம் யார்? என்பதையும் ஆதாரங்களுடன் புரிய வைக்கிறார்.
சமயங்கள் என்கிறபோது, 20ம் நூற்றாண்டின் வாசல்வரை தமிழர் நிலத்திற்கு வந்த சமயங்கள், குறிப்பாக நீண்ட நெடிய காலமாக தமிழர் நிலம் சந்தித்த ஆரிய அலையில் நீந்திய தமிழரின் உண்மையான மத நெறி எது? என்பதை அறியமுடியும்.
ஆய்வாளர்கள் எல்லாம் எடுத்த எடுப்பிலே மேலத்தேய ஆய்வு முறையை கையிலெடுக்கும்போது, தொ.பா தனக்கான தனித்துவமான ஆய்வைச் செய்கிறார். சாதாரண கிராம மக்களிடம் தலைமுறை தலைமுறையாக இருக்கும் கதைகளை கேட்டு அங்குள்ள வரலாற்றை வெளிப்படுத்தும்போது படிப்பவரின் மூளையை அதிரச்செய்கிறது.
குறிப்பாக ‘கோயில் இல்லா ஊரில்க குடியிருக்கவேண்டாம்! என்பது அறிவுரையல்ல எச்சரிக்கை’ என்பதும் தமிழர்கள் கோலம் போடுவதற்கும், கார்த்திகை தீபமேத்துவதற்குமான விளக்கங்கள்.
‘பூச்சாண்டி வருகிறான்’ என்று தாய்கள் குழந்தைகளை பயம் காட்டுவார்களே அது சைவர்களின் துறவிகளே!. திருநீறும் தலையில் பூக்களும் அணிந்துவரும் அவர்கள் பூ+ஆண்டிகள்= பூச்சாண்டிகள்!
தமிழரின் வட்டவடிவில் ஆதியில் இருந்த கோட்டங்கள் எப்படி அரசின் தோற்றத்தில் செவ்வக வடிவான கோயில்களாக மாறின.
பெண்தெய்வ வழிபாட்டில் இருந்த கோட்டங்கள் ஆண் ஆதிக்க வழிபாடுகொண்ட கோயில்களாக மாறின. அங்கு அரசனும் அந்தணர்களும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆரியர்களின் தென்புலம் சார்ந்த இடப்பெயர்வே பெண்ணை முதன்மைப்படுத்தி வாழ்ந்த தமிழர் ஆணை முதன்மைப்படுத்தக் காரணமாயிற்று.
பிராணர்கள் 20 ம் நூற்றாண்டு ஆரம்பம்வரை தம் வீட்டுப்பெண்களை வடமொழியையோ மந்திரங்களையோ கற்க இடமளிக்கவில்லை. (தென்னகம் நோக்கிவந்த பிராமணர் தனியே வந்து தமிழ்ப் பெண்களையே திருமணம் செய்தனர்)
தமிழகத்தின் கிராமங்களில் இன்றும் பெண்தெய்வ வழிபாடும், அங்கு பெண்களே பூசைகள் செய்வதும் உண்டு. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் கூட பெண்கள் இறைபூசை செய்ய முடியவில்லையே? என்ற கேள்விகள் முக்கியமானது.
ஆணும் பெண்ணும் சமம் என்பதே சைவம், அதை சிதைத்ததே வேதங்கள், வர்ணங்கள் கொண்டுந்து கொடுமை புரிந்த ஆரியம்.
‘இயக்கம்’ என்ற சொல் எமக்கு மிகநெருக்கமானது, இதற்கு பக்தி இயக்கங்களே ஆரம்பங்கள். தமிழர்கள் வாழ்வில் நிறைந்திருந்த பௌத்தம், சமணம் மறைந்ததற்கு பக்தி இயக்கமாக சைவமும் வைணவமும் செய்த சண்டை முக்கியமானது. தமிழகத்தின் கிழக்கு கரையில் பௌத்தமும் (இலங்கைக்கு செல்ல வசதியாக) மேற்கில் சமணமும் கடைவிரித்தது.
அப்பரும், தொண்டரடிப்பொடியாழ்வாரும் சாதியத்தை எதிர்த்தார்கள். சம்மந்தர் வேதத்தின் குழந்தையாகவே இருந்தார்.
தமிழர்களின் கடவுள்களைத் தமதாக்கி ஒருகாலத்தில் உயிர்களை வேள்வியென்ற பெயரில் பலியிட்ட, மாமிசம் உண்ட ஆரியபிராமணர், (கள்ளும், கறியும் உண்ட அந்தணப்புலவர் கபிலர்) கோயில்களில் அதைக்கட்டிய மன்னனையும், தமிழையும் வெளியில் விட்டுவிட்டு தாம் உள்ளே சென்றுவிட்டார்கள். ஓதுவார்கள் ஒதுங்கி நிற்கும் கொடுமை நடந்தது.
வேதகாலப் பார்ப்பணர்களிடம் உருவவழிபாடு இல்லை. தென்னக வழிபாடே உருவ வழிபாடு இது நடுகல்லில் இருந்து வந்தது.
சைவம் செழித்த யாழ்ப்பாணத்தில் ‘கொல்லான் புலாலை மறுத்தானை’ என்ற புலால் நீக்கிய அதர உணவுமுறை இன்றும் அதிகம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1516 இல் போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ந்த நிலையில் 1520 இல் தமிழகக்கடற்கரையில் வாழ்ந்த பரதவர் என்ற தொல் குடியினர் போர்த்துக்கேயருக்கு பயந்து 100 வீதம் கிறிஸ்தவர் ஆனார்கள்.
திருவள்ளுவருக்கு தங்க நாணயம் வெளியிட எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி வரவேண்டி இருந்தது. அவ்வளவு புத்திசாலிகளாக நம் தலைமுறை இருந்தது.
‘வாளோடு வந்த மதம்’ என்று இஸ்லாத்தை கட்டமைக்கிறார்கள். அது வணிக மதமாக மாலிக்கபூர் வரமுதல் கி.பி 9 இல் கேரள நாட்டுக்கரைகளில் ‘அஞ்சவண்ணம்’ என்ற பெயரில் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. அவர்களும் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்தே வாழ்ந்தனர்.
இப்படி எண்ணற்ற செய்திகளும் சிந்தனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. நம்மை அறியாமல் நம்மைச் சூழ்ந்துள்ள நச்சுவலையும், நம் தத்துவங்களும் மெய்யியலும், களவுபோனதையும் அறிய அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.
நிறைய புத்தகங்களை வாசித்து தெளிவுபெறவேண்டிய விடயங்களை தன் இனிய எளிய சொல்லில் சொல்கிறார் தொ.பா.
ஆராய்ச்சி மாணவர், ஆசிரியர், சமூக ஆர்வம் கொண்டோர்களுக்கு இது நூலாகத்தெரியாது.. மறைத்து வைக்கப்பட்ட மூளையாகத் தெரியும்.
அதிகார வர்க்கத்தையும், நகரமயமாதல் என்ற நச்சு சமூகத்தையும் வெறுக்கும் பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவம் ‘’ஆலமரத்தால் 1000 பறவை வாழும் அரண்மனையில் எத்தனை பேர் வாழமுடியும்? ‘’ என்ற கேள்வி’ இடியேறுச் சத்தத்தின்பின் பெய்யும் அடைமழைபோல’ என்னுள் சிந்தைகளைப் பெய்துகொண்டிருந்தது.