கள்ளும் சாராயமும் …

கள்ளும் சாராயமும் …

     — வேதநாயகம் தபேந்திரன் — 

”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” 

பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. 

உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். 

சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். 

கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது.  

இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். 

இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்றைப் படமாக எடுத்து வைபர்,வற்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். 

ஒரு போத்தல் தென்னங்கள் 120 ரூபாவுக்கு விலைப்படுகின்றது. அதேவேளை 400 மில்லி லீற்றர் பியர் ரின் 400 ரூபாவரையில் விற்பனையாகின்றது. சாராயப் போத்தல்களின் விலைகள் 1000 ரூபா முதல் பத்துப் பதினையாயிரம் ரூபா வரையில் போகும். 

சாராய பார்களும் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளமையால் கள் விற்பனை குறைவடைகின்றது.  

அத்துடன் உயிராபத்தான கள்ளுச் சீவும் தொழிலைவிட்டு ஏராளமான குடும்பங்கள் விலகி உள்ளன. உயிராபத்து மட்டுமல்ல கள்ளுச் சீவுதல் சமூக அந்தஸ்து குறைந்த தொழிலென பார்க்கப்படுவதால் கைவிடுவோர் அதிகம். 

அது உண்மையும்க கூட. 

அதேவேளையில் கள்ளுத் தவறணைகள் மூடப்படும் நிலைகள் கூடகள் விற்பனைத் தொழிலைப் பாதிக்கின்றது. 

முன்னைய காலத்தில் ஆளரவமற்ற வெறும் காணியில் தவறணைஅமைத்திருப்பார்கள்.  

வருடங்கள் செல்லச்செல்ல சனத்தொகை கூடக்கூட கள்ளுத் தவறணைக்குப் பக்கத்தில் குடிமனைகள் வர வர, தவறணை பக்கத்தில் இருப்பது கௌரவப் பிரச்சினையாக மாறிவிடும். அப்போது தவறணையை அகற்றுமாறு போராட்டங்கள் எடுப்பார்கள். 

தவறணை முதல் வந்ததா? குடிமனைகள் முதல் வந்ததா? என யாரும் கேட்கமாட்டார்கள். 

முன்னைய காலத்தில் கள்ளுத்தவறணை வளாகத்தில் ரேஸ்ட் கடையென ஒரு பெட்டிக்கடை இருக்கும். அங்கு ஆடு அல்லது மாட்டின் இரத்தவறை, மீன்பொரியல், இறால்பொரியல், தட்டைவடை, மரவள்ளிக் கிழங்கு அவியல், பொரியல், கடலை, பிலாக்கொட்டைப் பொரியல் போன்றவை விற்கப்படும்.  

கள்ளுக் குடிப்பவர்கள் அவற்றை விரும்பி வாங்கி உண்பார்கள். இந்த ரேஸ்ற் கடை வியாபாரத்தை நம்பி ஒவ்வொரு ஊர்களிலும் நாலைந்து குடும்பங்கள் இருந்தார்கள்.  

அவர்கள் சிறப்பான வருமானத்தைப் பெற்றுச் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தார்கள்.  

எனது சிறுவயதில் அதாவது 1970களின் இறுதியில் 50 சதம் காசு கொண்டுபோய் அதில் 25 சதத்திற்கு இரத்தவறை வாங்கி உண்பேன். 

மிகுதி 25 சதத்திற்கு சென்ற் பற்றிக்ஸ் கல்லூரிச் சந்தியிலுள்ள பரிபூரணம் கடையில் சின்னச்சைக்கிளை ஒரு மணித்தியாலத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓடுவேன். 

இந்த ரேஸ்ற் கடைகளில் விற்கப்பட்ட சிற்றுண்டிகள் இயற்கையில் கிடைத்த உணவுப் பொருள்களாகும். போசாக்கானவை. பிற்காலத்தில் இந்த ரேஸ்ற் பெட்டிக்கடை அமைப்பு முற்றாகவே அழிந்து போய்விட்டது எனலாம். 

1990களின் முற்பகுதியில்  விடுதலைப்புலிகளின்ஆதிக்கத்தின் கீழ் வடபிரதேசம் இருந்தபோது தென்பகுதியிலிருந்து மதுபானம் எடுத்துவருவதை முற்றாகவே தடை செய்தார்கள்.  

அந்தக் காலப்பகுதியில் கள் இறக்கும் சீவல் தொழிலாளர்கள் உயர் வருமானம் பெற்று நல்லதொரு வாழ்க்கைத் தரத்தில் இருந்தார்கள்.  

அக் காலத்தில் விகார் எனும் பெயரில் பனஞ்சாராயமும் உற்பத்தி செய்யப்பட்டது. 

இயற்கையான சாராயம் என்றால் அதுபனம் சாராயம்தான். வடமராட்சி திக்கத்தில் வடிக்கும் பனஞ்சாராயத்திற்குச் சிங்கள மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது மக்கள் கொடுப்பதாகக் காணவில்லை. 

உண்மையில் திக்கம் வடிசாலைச் சாராயம்தான் உயர்ந்தது. 

ஏனையவை யாவும் இரசாயனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை மதுபானங்கள்தான். 

திராட்சைப் பழத்திலிருந்து வைன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் ஒரு குறித்த வீதத்திற்கு அற்கஹோல் சேர்க்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் கிராமத்தின் ஒரு பகுதியில் சாராயத்தை திறம்படக் காய்ச்சும் கைத்தொழில் ஒருகாலத்தில் இருந்தது.  

மக்கள் எழுத்தாளர் கே.டானியலின் கதைகளில் ”உரும்பிராயான் ஒரு போத்தல் எடுத்து வைத்தான்” என்ற வசனம் வரும். 

அந்த மக்களிடம் இருந்த சாராயம் காய்ச்சும் திறன் சரியான ஒரு கைத்தொழிலாக வளர்த்து எடுக்கப்பட்டிருக்காதமை துரதிஸ்டம்தான்.  

அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் பற்றாக்குறைவரும்போது நிதியீட்டம் செய்வதற்கு சிகெரட் சாராயம் என்பவற்றுக்கான விலையைக் கூட்டும்.  

குடிகாரன் தள்ளாடினால்தான் பொருளாதாரம் தள்ளாடாது. குடிகாரன் நிதானமாக இருந்தால் பொருளாதாரம் தள்ளாடும் என்பது நாட்டின் பொது விதியாகிவிட்டது.  

புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வகை வகையான சாராயப் போத்தல்கள் வருடா வருடம் ஆடி, ஆவணி மாதங்களில் தாயகத்திற்குவரும். 

”நாங்கள் என்ன லோக்கல் கள்ளுச்சாராயமோ குடிக்கிறது. பொறின் சரக்கெல்லோ குடிக்கிறம் ” எண்டொரு பீத்தல் பெருமையும்கள் உற்பத்திக்கு வில்லத்தனமாக நிற்கிறது. 

எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள வேண்டுமென்ற அரசாங்கங்களின் கொள்கைகள் காரணமாக உள்நாட்டவரின் திறமை மதிக்கப்படவில்லை.  

இது வரலாற்றின் துயரமாகவே முடிந்தது.