சொல்லத் துணிந்தேன் – 62

சொல்லத் துணிந்தேன் – 62

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் குழுவுக்குமிடையில் 20.02. 2021. அன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கலந்துரையாடலின் போது இரா.சம்பந்தன் அவர்கள் தனது 89வது வயதிலும் ஆணித்தரமாக முன்வைத்த கருத்துக்களையும் அவரின் ஆங்கிலச் சொல்லாடல்களையும் பார்த்து, கேட்டு நிபுணர் குழுவினர் மட்டுமல்ல மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் போன்றோரே இந்த வயோதிப மூப்பிலும் தமது பழைய கம்பீரத்துடனும் உறுதியுடனும் அவர் முழங்கியமை கண்டு வாயடைத்துப் போயினரென்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மின்னிதழ் ஒன்று தனது வெளியீட்டில் இரா சம்பந்தன் அவர்களுக்குப் புகழாரம் சூட்டியிருந்தது. 

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் காலஞ்சென்ற சேர். பொன்னம்பலம் இராமநாதன் ‘டொனமூர் ஆணைக்குழு’ முன் முழங்கினார். முழங்கிய அவர் பின்பு ‘Donoughmore means Tamils no more’ என்று சொல்லிப் போயினார். பின்பு காலஞ்சென்ற ஜி.ஜி. பொன்னம்பலம் ‘சோல்பரி ஆணைக்குழு முன் ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கையை முன்வைத்து முழங்கினார். பலனளிக்கவில்லை. இவை யாவும் இலங்கையின் சுதந்திரத்திற்கு முந்தியவையாகும். 

சுதந்திரத்துக்குப் பிந்தியதாக 1970 இல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்புக்கு மாற்றீடாகப் புதிய குடியரசு அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அப்போதிருந்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றிப் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த போது, அரசியலமைப்பு நிர்ணய சபையில் காலஞ்சென்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையிலான தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முழங்கினார்கள். இறுதியில் புதிய குடியரசு அரசியல் அமைப்பு 1972மே 22 இல் நிறைவேற்றப்பட்டதும் தந்தை செல்வா ‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறினார். 

1977 இல் ஆட்சிபீடமேறிய பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான யூ.என்.பி. அரசாங்க காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் பாராளுமன்றம் ஈடுபட்டிருந்தபோது காலஞ்சென்ற மு. சிவசிதம்பரத்தைத் தலைவராகவும் காலஞ்சென்ற அ.அமிர்தலிங்கத்தைச் செயலாளர்நாயமாகவும் கொண்ட அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்றத்தில் முழங்கினார்கள். பலனளிக்கவில்லை. 

பின், திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க காலத்தில் அவரால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்புத் தீர்வுப் பொதிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை விடவும் இவ் அரசியல் தீர்வுப் பொதி முன்னேற்றகரமாகக் கருதப்பட்ட நிலையில் யு.என்.பி. இதனைப் பாராளுமன்றத்தில் எதிர்த்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெறுமனே வாய் மூடி மௌனியாய் வாளாவிருந்து. 

அடுத்ததாகக் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி இடைக்கால அறிக்கையோடு தன் ஆயுளை முடித்துக் கொண்டமை அனைவரும் அறிந்த சங்கதி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தானும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்றியதுதான் நல்லாட்சி காலத்தில் நடந்தது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபெற்ற மறுத்தது. யு.என்.பி. யும் பங்குபற்றவில்லை. தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியத் தரப்பிலிருந்து ஆலோசனை வழங்கப்பட்ட போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆலோசனையைக் கூட உதாசீனம் செய்திருந்தது. எப்போதுமே யூ.என் பி. இன் பக்கம் நின்று அரசியல் செய்வதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமை. தமிழ் மக்களின் நலன்களை விட யூ.என்.பி. கட்சியின் நலன்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியமாகப்படுகிறது. 

இந்தப் பின்னணியிலேயே தற்போதைய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்புப் பூச்சாண்டி புறப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவில் இரா. சம்பந்தன் முழங்கி எதுவும் ஆகப்போவதில்லை. புதிய அரசியல் அமைப்பு ஒன்று வருமா என்பது சந்தேகம். அப்படி வந்தாலும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தை விடக் கூடுதலாக அதாவது 13+ ஆக இருக்கப்போவதில்லை. 

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் புதிய அரசியல் அமைப்புப் பற்றித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது வெறுமனே தேர்தலுக்கான அதன் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றுமில்லை. 

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை தற்போது கையில் இருப்பது பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் மட்டும்தான். இதனைப் பலப்படுத்துவதே இன்றைய தேவை. அதற்கு முதலில் செய்ய வேண்டியது பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். இதனைச் செய்யாமல் புதிய அரசியலமைப்புப் பற்றிப் பிரஸ்தாபிப்பது காலத்தை வீணடிப்பதாகும். 

பழைய மரபு வழி அரசியலைத் தமிழர் தரப்பு கைவிட வேண்டும். தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டிணைந்து ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையாக அமுலாக்கல்’ விடயத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவு முயற்சியை மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தன் முன்னெடுப்பாரா? இதனைச் செய்யாமல் ‘சும்மா’ முழங்கிப் பிரயோசனமில்லை.