சுருங்கக் கூறல் : நான் தடுத்தாட்கொள்ளப்பட்ட தினம்

சுருங்கக் கூறல் : நான் தடுத்தாட்கொள்ளப்பட்ட தினம்

   — சி. மௌனகுரு — 

நல்ல குரு நாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல 

  பேராசிரியர்விசெல்வநாயகம் நினைவுக்கு வருகிறார்’

அண்மையில் மீண்டும் ஒரு தடவை முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர். வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலையும் அவரது தமிழ் உரை நடை வரலாறு எனும் நூலையும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவற்றை படித்தபோது எழுந்த சிந்தனைகளையே இங்கு எழுதுகிறேன். 

1961ஆம் ஆண்டு ஒரு நாள், பேராதனைப் பல்கலைக்கழகத்ததின் ஓர் விரிவுரை அறை.  

தமிழ் சிறப்பு பாட நெறியில் கற்கும் இரண்டாம் வருட மாணவர் எழுவர் அமர்ந்திருக்கிறோம். டியூட்டொரியல் வகுப்பு அது.   

எமக்கு டியூட்டோரியல் பொறுப்பு ஆசிரியராக பேராசிரியர் செல்வநாயகம் நியமிக்கப்படிருந்தார்.  

ஒரு வாரத்திற்கு முன்னால் சிலப்பதிகாரம் பற்றி நாம் எழுதிக்கொடுத்த கட்டுரைகளைப் பற்றி எம்முடன் உரையாட எமது ரியுட்டோரியல் பொறுப்பாளரான பேராசிரியர் செல்வநாயகம் அந்த வகுப்பிற்குள் நுழைகிறார்.  

தூய வெள்ளை வேட்டி, 

தூய வெள்ளைநிற நெசனல்,  

கரை குலையாது மடித்து வலது தோளின் மீது  போடப்பட்ட தூய வெள்ளை நிறச் சால்வை,  

அழுத்தி வாரிவிடப்பட்ட தலை,   

அகன்ற பெரு நெற்றி,  

முகத்தில் அந்தப் பழைய மூக்குக் கண்ணாடி,  

கூர்மையாக அவதானிக்கும் கண்கள்,  

கையில் புத்தகக்கட்டு,    

கம்பீரமான தோற்றம்,  

பார்த்தவுடன் ஒரு மரியாதையும் பயமும் பக்தியும் வந்து விடும் தோற்றம். 

எமது ரியூட்டோரியல்களை வாசிக்கச் சொல்கிறார். 

அதற்கு முன்னரேயே அதனைப் பார்வையிட்டு அதன் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் திருத்தியும் இருந்தார்.  

எனக்கு அப்போது 19 வயது. 

தினகரனிலும் சுதந்திரனிலும் கதை, கவிதை கட்டுரைகள் எழுதியதால் என்னைப்பற்றி எனக்கோர் பெருமித உணர்வு இருந்தது. முதிரா இளம் வயது, இரண்டு கர்வக் கொம்புகள் வேறு தலையில் முளைத்திருந்தன. 

எனது கட்டுரை 20 பக்கங்களில் அமைந்திருந்தது. பாராட்டுகள் கிடைக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தேன்.  

கட்டுரையை வாசிக்கச் சொன்னார். 

நான் முதல் பக்கத்தை வாசித்தேன் முதல் பக்கம் முடிந்ததும்,  

‘மௌனகுரு இதில் நீர் என்ன சொல்ல வருகிறீர் ஒரு வரியில் கூறும்’ என்றார்.  

நான் அதனை ஒரு வரியில் கூறினேன். 

‘இது போதுமே மற்றவற்றை வெட்டுவோம் என்ன?’ என்றார்.  

நான் தலையசைத்தேன்.   

இவ்வண்ணம் ஒவ்வொரு பக்கமாக என்னை வாசிக்க வைத்து, வெட்டி வெட்டி, அந்த 20 பக்கக் கட்டுரையை நான்கு பக்கங்களுக்குள் கொணர்ந்தார்.  

இப்போது கட்டுரை மெலிந்து சுருங்கி விட்டது, ஆனால் இறுகிவிட்டது. ‘4 பக்கத்துள் சொல்ல வந்தவற்றை 20 பக்கங்களில் சொல்லியிருக்கிறீர்களே’ என்றார். 

நான் அசந்து போய் இருந்தேன். என் கொம்புகள் கழன்று விழுந்தன. அவமானப்படுத்தப்பட்டதோர் பெரும் கோபம் வந்ததாயினும் எதிர்த்து வாதிட என்னால் முடியவில்லை. காரணம் என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். ஒரு வகையில் நான் அவரால் அன்று தடுத்தாட்கொள்ளப்பட்டேன். என்னால் மறக்க முடியாத நாள் அது.  

அனாவசியமாக அலங்காரமாகச் சொற்களை வீசி அதிகமாக எழுதுவது பிழையென்பது தெரியவந்தது. எடுத்துகொண்ட விடயத்தை தெளிவாகப் புலப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் போடப்பட வேண்டும் என்பதனை அவரது தொடர் ரியூட்டோரியல் வகுப்புகளில் மேலும் கற்றுக்கொண்டேன் எழுத்துப் பிழைகளின்றி எழுதுதல், புணர்ச்சி விதிகளுக்கு இணங்க எழுதுதல், ஒருமை பன்மை வழுபால்வழு இன்றி எழுதுதல், கூறியது கூறாமை, சுருங்கசொல்லி விளக்குதல் போன்றன அமைந்த கட்டுரை ஆக்கும் வன்மையினை அவர் ரியூட்டோரியல் வகுப்புகள் தந்தன.  

இன்றைய எனது உரை நடையும் கட்டுரை எழுதும் முறையும் பேராசிரியர் செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டது என்பதனை நான் உரத்துச் சொல்வேன்.  

எனக்கும் அவருக்குமிடையே மூன்று வருடங்களும் கருத்தியல் ரீதியான பெரும் முரண்பாடுகள் இருந்திருப்பினும் அவரது புலமையும் மாணவர் எழுத்துமீது அவர் கொண்ட அக்கறையும் அவரது கற்பிக்கும் திறனும் என்னை அன்றும் இன்றும் தோன்றாத் துணையாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.   

அவர் என் மனதில் ஓர் பெரும் இடத்தில் ராஜ கம்பீரமாகக் கொலுவீற்றிருக்கிறார். அவர் முறையாக தமிழ் அறிஞர்களின் கீழ் பயின்றவர். இவர் நாவலர் கல்வி மரபிலே வந்த வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களிடம் கல்விகற்றதுடன், பல்கலைக்கழகக் கல்வி மரபுடைய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் நீ. கந்தசாமிப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரப் பாரதியார் ஆகியோரிடமும் பயின்றவர்.  

அவருடைய ஆரம்பக்கல்வியும் இடைநிலைக் கல்வியும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலேயே நடைபெற்றன. பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்துபடித்து, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சைகளிலே தேறிக் கலைமாணிப் பட்டம் (முதற்பிரிவினைப்) பெற்றவர்.  

நவீன உரை நடைக்கு பயிற்சியமானவர். பாரதியார், புதுமைப்பித்தன், லா.சா.ரா போன்றோரின் நவீன உரைநடையினை அறிந்தும் கொண்டவர். இவரது சிந்தனையில் மேற்கும் கிழக்கும் இணைந்திருந்தன. இந்த இணைப்பே அவரது உரை நடையின் பெரும் பலமாகும். அவர் பல நூல்கள் எழுதியவர் அல்ல, அவரது இரு நூல்கள் மிக பிரதானமானவை. ஒன்று தமிழ் இலக்கிய வரலாறு, இன்னொன்று தமிழ்உரை நடை வரலாறு.  

தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழ் உணர்ச்சி மீதூரப்பெற்று விஞ்ஞானபூர்வ அணுகுமுறையின்றி அணுகி புற்றீசல்கள் போல தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் வந்த காலத்தில் அவரது இலக்கிய வரலாற்று நூல் ஓர் வழிகாட்டும் நூலாயிற்று.  

இலக்கியத் தோற்றத்தை அக்கால அரசியல் சமய பின்னணியில் வைத்து நோக்கி அவ்வரலாற்றை 

சங்க காலம்,  

சங்கமருவியகாலம்,  

பல்லவர் காலம்   

சோழர் காலம்,  

நாயக்கர் காலம், 

ஐரோப்பியர் காலம், 

20ஆம் நூற்றாண்டுக் காலம் என பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய இலக்கியங்களின் பண்புகளை அக்கால அரசியல் சமூக சமய பின்னணியில் கூறும் முதல் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்படுகிறது.  

இந்நூல் 1951ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதனை நாம் மனம்கொள்ள வேண்டும். பின்னால் இது அவராலேயே சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது மீள் பதிப்பாகவும் வந்துள்ளது. ஒரு பாட நூல் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு உதாரண நூலாகவும் அமைந்துள்ளது. அதுவரை வெளிவந்த ஆய்வுகளின் சாரம்சமாகவும் இது திகழ்கிறது.  

இன்று தமிழியல் ஆய்வு வெகுதூரம் வந்துவிட்டதாயினும் முன்னோடி ஆய்வு எனும் மதிப்பிற்கு உரிய நூல் இதுவாகும். 

அவரது தமிழ் உரைநடை வரலாறு எனும் நூலும் இத்தகைய சிறப்புமிக்கதே. தமிழ் இலக்கிய வரலாறு நூலில் கூறப்பட தமிழ் உரைநடை வரலாற்றை மிக விரிவாக தக்க ஆதாரங்களுடன் தரும் ஓர் நூலாகும். 

ஐரோப்பிய விமர்சன முறையில் மாத்திரமன்றி தமிழ் உரையாசிரியர் அணுகுமுறையிலும் இலக்கியத்தை அணுகும் தமிழ் விமர்சன முறையை அறிமுகம் செய்தல் இந்நூலின் சிறப்பம்சமாகும்.  

இந்த இரண்டு நூல்களையும் பேராசிரியர் செல்வநாயகத்தையும் இங்கு அறிமுக செய்யும் காரணங்களுக்கு இப்போது வருகிறேன்.. 

1.அவரது எழுத்து நடை சின்னச் சின்னவசனங்களால் அமைந்ததுள்ளது. இதில் ஆறுமுகநாவலரின் சாயலையும் பாரதியாரின் சாயலையும் காணலாம். இதுவும் எடுத்துகொள்ளும் பொருளைத் தெளிவாகக் கூற சொற்களை அவர் கையாளும் முறையும் இன்றைய தலைமுறை அவரிடம் முதலில் கற்கவேண்டியனவாகும்.  

2. எழுத்துப் பிழைகளின்றி இலக்கணப் பிழைகளின்றி மாணவர் தமிழை எழுதவேண்டும் என்பதில் அவர்கொண்ட பெரும் அக்கறை இன்றைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் கற்கவேண்டியதாகும். 

3. கட்டுரை தர்க்க ரீதியாக அமைந்து சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்கனவாக அமையவேண்டும் என்ற அவரது அக்கறையும் இன்றைய தலைமுறை கவனத்தில் எடுக்கவேண்டிய ஒன்றாகும். 

இக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளிலும், எம் ஏ எம் பில் படிப்புக்களை பூர்த்தி செய்ய எழுதப்படும் உயர் ஆய்வுக் கட்டுரைகளிலும் காணப்படும் எண்ணற்ற எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் பார்க்கும்போது எமக்கு பேராசிரியர் செல்வநாயகமே ஞாபகத்திற்கு வருகிறார்.  

சில விரிவுரையாளர்கள் அதிலும் சிரேஸ்ட விரிவுரையாளர்கள் எழுதும் கட்டுரைகளிலேயே இத்தகைய பிழைகள் காணப்படுகின்றதெனில் மாணவரை நாம் எவ்வாறு குறைகூற முடியும்? 

அக்கட்டுரைகளில் காணப்படும் வழுக்களைச் சுட்டிக் காட்டினால் நம்மீது கோபம் அடைவோரையேயும் வேறுவகையில் நம்மைக் குறை சொல்வோரையும் அதனையும் மீறிக் கிண்டல் பண்ணுவோரையுமே இப்போது காண்கிறோம்.  

சில பல்கலைக்கழகங்களில் ரியுட்டோரியல் வகுப்பு எடுப்பதனையும் அவற்றைத் திருத்துவதனையும் தற்காலிக உதவி விரிவுரையாளர்களே செய்யும் அவல நிலையையும் காணுகிறோம். எமது காலத்தில் அவற்றைச் சிரேஸ்டரே செய்தார்கள். இதில் அவ்வத் துறைத் தலைமைகளும் பீடாதிபதிகளும் கவனம் செலுத்தவேண்டும்.  

முதலாம் ஆண்டில் சிரேஸ்ட விரிவுரையாளார்களே கற்பிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி நாங்கள் படித்த காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அன்று இருந்தது. இப்போது அவற்றை சில பல்கலைக்கழகங்களில் காணவில்லை.  

அத்தோடு ஆசிரியருக்குரிய தோற்றம், நேரம் தவறாமை, குரல் வன்மை, விரிவுரையாற்றும் திறன், மாணவர் மீது அக்கறை, அவர்களை வினாக்களை வினவ அனுமதித்தல், அதன் மூலம் அவர்களின் விமர்சன நோக்கைத்தூண்டல், அவர்களை நூல்களைப் படிக்கத்தூண்டல், நல்ல நூல்களுக்கு அறிமுகம் செய்தல், அவற்றைப்படித்தார்களா என ஆய்ந்து அறிதல், மாணவர் மீது கண்டிப்பு என்பனவும் இன்றைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் அவரிடம் கற்கவேண்டிய பண்புகள் ஆகும். 

பேராசிரியர் செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றை மீண்டும் ஒருமுறை  எழுத்தெண்ணிப்படிக்கும் படி ஆர்வலர்களை கேட்டுகொள்கிறேன்.