— கருணாகரன் —
தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக் கூடிய தலைமைகள் எதுவும் இல்லை. அரச ஆதரவுக் கட்சிகள், அரச எதிர்ப்புக் கட்சிகள், மேற்குச் சாய்வைக் கொண்ட கட்சிகள், இந்திய ஆதரவுத் தலைமைகள், இடதுசாரிகள், வலதுசாரிகள், முன்னாள் இயக்கங்கள், பின்னர் உருவாகிய புதிய கட்சிகள், பேரவை, சிவில் அமைப்புகள், போதாக்குறைக்கு நாடு கடந்த அரசாங்கம், நாடு கடக்க முடியாத அரசாங்கம் என்று பல தரப்புகள் இருந்தாலும் இவை ஒன்றினாற் கூட உருப்படியாகச் செயற்பட முடியவில்லை. அப்படிச் செயற்படக் கூடிய தரப்புகளை மக்கள் இனங்கண்டு ஆதரிப்பதுமில்லை. ஆகவேதான் நெருக்கடிகள் வரவரக் கூடிக் கொண்டு போகின்றன. தமிழ்ச்சமூகம் வரவர நலிவடைந்து செல்கிறது.
இதற்குக் காரணம், இந்தத் தலைமைகளினதும் கட்சிகள், அமைப்புகளினதும் அறிவுத்திறனும் தூர நோக்கும் போதாது என்பதே. அதையும் விட இவற்றிடம் வினைத்திறனே இல்லை எனலாம். முன்னர் ஆயுதந்தாங்கிய இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாகிய தரப்புகளும் இப்பொழுது படு பஞ்சிக்குழுக்களாகி விட்டன. நல்லதொரு உதாரணம், புளொட்டும் சித்தார்த்தனும். 1970களின் பிற்பகுதியிலும் 1980 இன் நடுப்பகுதி வரையிலும் மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்த புளொட், இப்பொழுது உலக மகா பஞ்சிக்கட்சியாகி விட்டது. பாராளுமன்றத்திலும் வெளியிலும் தூங்கும் அரசியற் தலைவர்களில் சித்தார்த்தனும் ஒருவராகி விட்டார்.
ரெலோவைப் பற்றிச் சொல்வே வேண்டாம். அதில் ஒரு முக்கியமான முகமாக விளங்கிய சிவாஜிலிங்கம் பல சந்தர்ப்பங்களிலும் அரசியற் கோமாளியாகி விட்டார். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் அவர் மட்டுமே சரிபிழைகளுக்கு அப்பால் துணிச்சலான ஒருவராகவும் உள்ளார். இருந்தாலும் அரசியல் வழிமுறையொன்றில்லாமல், அதற்கான சிந்தனையும் செயற்திட்டமும் இல்லாமல் வெறும் துணிச்சல் மட்டும் எந்தப் பயனையும் தராது. இந்தத் துணிச்சல் கூட போர்க்காலத்துத் துணிச்சல்களோடு ஒப்பிடும்போது கழுதை கெட்டுக் கட்டெறும்பாகிய கதைதான்.
அரசியல் என்பது நுண்மதியும் வினைத்திறனும் உடையது. இதற்கு அர்ப்பணிப்பும் துணிச்சலும் வேண்டும். எதையும் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளவும் விட்டுக் கொடுக்கவும் கூடிய பண்பும் மனப்பாங்கும் தேவை.
செயற்பாட்டுத்திறனும் அதற்கான கட்டமைப்புகளும் அவசியம். மக்கள் மீதான கரிசனை வேண்டும். பிரச்சினைகளை வளர்க்காமல், அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய வல்லமையும் அதற்கான சிரத்தையும் வேண்டும். இதொன்றுமில்லாமல், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவே முடியாது. என்பதால்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் படுகுழிக்குள் விழுந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.
அரசியல் ஆய்வாளர்கள்
இதைப் புரிந்தும் புரியாத மாதிரி நம்முடைய அரசியல் ஆய்வாளர்களாக அடையாளம் காட்டுவோரும் ஊடகத்துறையினரும் உள்ளனர். இதற்குள் ஏதாவது அதிசயங்கள் நிகழ்ந்து விடாதா என்ற நப்பாசையோடு விக்கினேஸ்வரனா, கஜேந்திரகுமாரா, சுமந்திரனா, சாணக்கியனா என்ற ஆருடக் கனவுகள் வேறு இவர்களுக்கு. இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் அணிகள் வேறு. இந்த அணிகள் எல்லாம் வெறும் முசுப்பாத்திக் கொம்பனிகள் போலவே உள்ளன. மறுவளத்தில் சம்மந்தனைப் பற்றிய நம்பிக்கைகள் எல்லாம் அவருடைய முதுமையைப்போல முடிந்து வெகு காலமாகி விட்டது. இதில் ஆகப் பெரிய துயரம் என்னவென்றால், ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்திலிருந்து வந்த அரசியல் நோக்கர்கள் கூட தளம்பித் தள்ளாடி, மக்களைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ நம்முடைய சூழலைப் பற்றியோ எந்த வகையான அக்கறையும் இல்லாத பிரமுகர்களின் (விக்கினேஸ்வரன், கஜேந்திரன், சுமந்திரன், சாணக்கியன்) பின்னால் இழுபடுகிறார்கள் என்பது.
இதனால்தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். தோல்வியின் படிக்கட்டிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தீர்க்கதரிசிகளும் இல்லை, தலைவர்களும் இல்லை. வழிகாட்டிகளும் இல்லை என்று தொடர்ச்சியாகவே குறிப்பிட்டு வருகிறேன். ஒரு சமூகத்துக்குத் தீர்க்கதரிசிகளும் வழிகாட்டிகளும் நேர்மையான தலைவர்களும் விசுவாசமான தொண்டவர்களும் (தொண்டர்கள் என்பது கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் தலைவர்களுக்குமே இருக்க வேண்டும் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். இது தவறு. உண்மையான தொண்டர்கள் மக்களுக்கு விசுவாசமானவர்கள். மக்களுக்கே தொண்டாற்றுகின்றவர்கள். மக்களுக்கு மாறாக அமைப்போ தலைமையோ செயற்படுமாக இருந்தால் அதை மக்களின் நிலை நின்று எதிர்ப்போராகவே இருப்பர்) இல்லையென்றால் அந்தச் சமூகம் நெருக்கடிக்குள்ளாகும். இதனால்தான் இலங்கையில் தமிழர்களின் அரசியல் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இந்த அரசியல் நெருக்கடி மக்களுடைய வாழ்க்கைக்கான நெருக்கடியாக, அவர்களுடைய எதிர்காலத்துக்கான நெருக்கடியாக உள்ளது.
மக்களுக்கு எதிரானவர்கள்
இங்கே நாம் ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். மக்கள் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் புதிய புதிய பிரச்சினைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் கட்சிகளும் தலைவர்களும் அதிகரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அவர்கள் கொழுத்துக் கொண்டுமுள்ளனர். இது மக்கள் அரசியலுக்கு எதிரானதல்லவா!
உண்மையான தலைமைத்துவம் என்பதும் உண்மையான அரசியற் கட்சி என்பதும் மக்களுடைய வாழ்க்கைச் சூழலோடு கலந்தது. பின்னிப் பிணைந்தது. இந்தப் பிராந்தியத்தில் இதற்கு நல்லதொரு உதாரணம், காந்தியும் அவர் உருவாக்கிய கட்சியுமாகும். அதிலும் அடி நிலை மக்களின் அடையாளம் எப்படியிருந்ததோ அதை காந்தி பிரதிபலித்தார். அந்த மனநிலையும் அதைப் பிரதிபலிக்கும் பேராற்றலும் அதற்கான துணிவும் காந்தியிடமிருந்தன. அதனால்தான் அவர் பல்லாயிரம் முரண்களையும் பல நூறு அடையாளச் சிக்கல்களையும் கொண்ட அந்தப் பெரிய இந்திய தேசத்தின் விடுதலையைச் சாத்தியமாக்கினார். காலத்தைக் கடந்து, இன்றும் நின்றொளிர்கிறார்.
இலங்கைச் சூழலில் தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் சந்தித்த நெருக்கடிகளும் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளும் சாதாரணமானவையல்ல. அதிலும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் அரசினாலும் தமக்கிடையிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தவை. அதிலும் தமிழர்கள் சந்தித்த நெருக்கடி இன்னும் பெரியது. போரின் அழிவை நேரடியாகவே சந்தித்தவர்கள். எழுபது ஆண்டுக்கும் அதிகமான கால ஒடுக்குமுறையையும் முப்பது ஆண்டுகாலப் போரையும் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். இப்பொழுது போரின் அழிவிலிருந்து மீள முடியாதிருப்பவர்கள்.
குலைந்துபோயிருக்கும் சமூகம்
இந்தக் கனதியை உணர வேண்டுமாக இருந்தால் முப்பது லட்சம் மக்களைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் எண்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் துணையை இழந்து நிற்கின்றனர். மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவினர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஐம்பது ஆயிரத்துக்கும் அதிமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடங்கிய நிலையில் உள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் உளச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சொத்திழப்பு, உடமை இழப்பு, உறவினர் இழப்பு போன்றவற்றினால் வாழ முடியாத கஸ்டத்துக்குள்ளாகியோர் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர்.
இப்படியான நிலையில் அந்த மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு, ஆற்றல், செயற்பாட்டுத்திறன், அர்ப்பணிப்பு, மனப்பாங்கு, சமூகக் கரிசனை, அரசியல் அறிவு, நிதானம், பொறுப்புணர்பு, நேர்மை, விசுவாசம் எல்லாம் எப்படியிருக்க வேண்டும்? இன்றுள்ள எந்தத் தலைமையிடமாவது இவையெல்லாம் திருப்தி தரக் கூடிய நிலையில் உண்டா? அப்படி உண்டென்றால் அந்தத் தலைமையை, அந்தத் தரப்பை உங்கள் மனசாட்சியின் முன்னிறுத்தி அடையாளம் காட்டுங்கள்.
இப்படி நான் எழுதிய உண்மையை – கருத்தை – எதிர்கொள்ள முடியாமல் பதறிய பலர் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்கு முயற்சித்தனர். அது உண்மையை எதிர்கொள்ள முடியாமையின் குறைபாடாகும். அவர்களுக்கு ஒன்றை மட்டுமே சொல்லலாம், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தமிழ்ச்சமூகத்தின் ஈடேற்றத்துக்கும் தமிழ் பேசும் சமூகங்களின் நிலையான எதிர்காலத்துக்குமாக உருப்படியாக எதையாவது செய்யப் பாருங்கள். அதைப் புதிய முறையில் செய்ய முயற்சி செய்யுங்கள் என்றே. அவர்கள் செய்ய வேண்டியதும் அதுதான். பதிலாக உண்மைகளை மறைக்க முயற்சிப்பதும் உண்மையுரைப்போரின் குரல்வளை நெரிப்பதும் அவர்கள் மீது சேற்றை வாரி அவதூறாக எறிவதுமல்ல.
புலிகள் செய்த தவறு
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ஒரு தவறு நடந்திருக்கிறது. ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் தோல்வியைத் தழுவியது மட்டுமல்ல, அது ஏற்கனவே நிராகரித்திருந்த தரப்பிடம் –தலைமையிடம் நிபந்தனையின்றிச் சரணாகதியடடைந்தமையாகும். இதில் கட்சிகள், குறித்த இயக்கங்கள், தலைமைகள் மட்டுமல்ல, அதன் வழியாக வந்த அரசியல் நோக்கர்கள், வழிகாட்டுநர்கள், ஆய்வாளர்களும்தான். இவர்களுடைய தோல்வியும் சரணாகதியும் மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகி விட்டது. பின்னடைவாகியுள்ளது. குறிப்பாக புலிகள் பின்னாளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் செய்த அரசியல் தவறு, நிராகரிக்கப்பட்ட –செல்வநாயகத்தினாலும் அமிர்தலிங்கத்தினாலும் கைவிடப்பட்ட தமிழரசுக் கட்சியை உயிரூட்டுவதில் போய் முடிந்தது. தமிழரசுக் கட்சியோ காலங்கடந்த ஒன்று. அதைக் காலம் கழித்து Dust pin (குப்பைத் தொட்டி)க்குள் போட்டது. புலிகளோ அதை எடுத்து திரும்பவும் மேசையில் வைத்தனர். பிரபாகரன் இழைத்த மாபெரும் தவறுகளில் ஒன்று இதுவாகும். அதாவது அவர் எதை மறுதலித்தாரோ பின்னர் அதையே ஏற்றுக்கொண்டார். இது அவருக்கும் ஏற்பட்ட தோல்வியாகும். அவர் சரியாக இனங்கண்டிருக்க வேண்டிய தரப்புகளைச் சரியாக அடையாளப்படுத்தியிருந்தால், இன்று இந்த அளவுக்கு தமிழ்ச் சமூகமும் தமிழ் பேசும் சமூகங்களும் நெருக்கடிப்பட்டிருக்காது. ஒரு புதிய ஒளி பிறந்திருக்கும்.
இதில் இன்னும் துயரம் என்னவென்றால், அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – மாற்றங்களை நோக்கிப் பார்க்கவும் பயணிக்கவும் கூடிய ஆற்றலர்கள் வரவில்லை என்பதுதான். சிலர் இந்த நிலையை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அவர்களிடம் பலத்த குழப்பமுண்டு. ஒரு சாரார் தாம் அபிப்பிராய உருவாக்கிகள் என்ற நோக்கில் புதிய தலைமையைக் குறித்துச் சிந்திக்கிறார்கள். இது அரசியற் தலைமையை ஒன்றையும் அரசியற் போக்கொன்றையும் உருவாக்குவதாகும். இது நல்லதே. ஆனால் இதை எளிதில் செய்து விட முடியாது. மிகமிகமிகக் கடினமான ஒன்றிது. உள்நாட்டுச் சூழல், பிராந்திய நெருக்கடி, சர்வதேச அரசியற் பொருளாதார அசைவுகள், போட்டிகளுக்குள்ளால் இதைச் செய்ய வேண்டும். அடுத்தது, உள்ள நிலைமையில் சூழலைக் கையாள்வதைப் பற்றிச் சிந்திப்போர். இதில் சமகாலத்தில், சம தளத்தில் நிற்கும் சக்திகளைப் பயன்படுத்தி விசயங்களைக் கையாள்வது. இதுவும் சவால் மிக்க ஒன்றுதான். இதற்கு மிகக் கூரிய மதிநுட்பம் வேண்டும். அத்துடன் நான் முன்னர் குறிப்பிட்டுள்ள அத்தனை அரசியல் அடிப்படை அம்சங்களும் வேண்டும். மக்கள் ஆதரவு உள்பட.
ஆகவே இவற்றைக் குறித்தே தமிழ்ச்சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், எந்தச் சிறு மாற்றமும் முன்னேற்றமும் கிட்டாது. வரவர வரவர நெருக்கடிகள் கூடி, அதிகரித்து அதை நோகடித்துச் சாகடித்து விடும்.