போன வடை (சிறுகதை)

போன வடை (சிறுகதை)

 — அகரன் — 

யாழ்ப்பாணத்து ‘’மலாயன் கபே’’வடையும் ‘’  ‘‘லிங்கம் கூல்பார்’’ ஐஸ்கிரீமும் ஒருவன் அடிக்கடி சாப்பிடுவது ஒரு சர்வதேச குற்றமா? குணத்தின் வாழ்நாளில் அது ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. 

இறுதியில் எல்லாம் வெறுத்துப்போய் பாரிசின் பெரிய புகையிரத நிலையத்தில் ஒன்றான gare de lion இல் இருந்துபுறப்படும், மணிக்கு 575km  வேகத்தில் செல்லத்தக்க, இன்று வரை உலகின் மூன்றாவது வேகம் கொண்ட மின்வண்டியில் (le train) விழுந்து இறக்கதயாராகக் காத்திருந்தான். 

குணம், எங்கு புறப்பட்டாலும் அவனால் வளர்க்கப்பட்ட வயிறு முதலில் புறப்பட்டு விடும். மிதிவண்டி ஓட்டி யாழ்ப்பாண வீதிகளுக்கு வேலை கொடுத்ததால் கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தது. 

பாரிசுக்கு வந்த பிறகு கட்டுக்கடங்காமல் வளர்ந்து சென்றது. தன் உயரத்தை விட அது வளர்ந்து விடுமோ? என்ற பயம் அவனுக்கு இல்லாமலில்லை. அவன் சாப்பிடும் சாப்பாடுகளும் இந்தக் குளிர் தேசத்தில் கீரைப்பாத்திக்கு மாட்டுச் சாண உரம் போல இருந்தது. (கோழிப்பொரியல், சோறு, விதம் விதமான எண்ணெயில் பொரித்த உணவுகள், எப்போதும்போல ஐஸ்கிரீம்.)  

வழமையாக தனக்கான அளவை விட ஒரு அளவு கூடிய முழுக்கால்சட்டை. நாங்கள் கைச் சட்டையை மடித்து விடுவதுபோல அவன் கால் சட்டையை மடித்துவிட வேண்டிய அவசியம் இருந்தது. மேல்சட்டையால் தன்னுடலை போர்த்தி இருப்பான். முதுகில் ஒரு புத்தகப் பை. அதற்குள் ஒரு உணவகம் கட்டாயம் தூக்கத்தில் இருக்கும். அவன் தலை மயிருக்கு சீப்பை பிடிப்பதில்லை. அதனால் அது தன்பாட்டுக்கு வளர்ந்து ‘கறுப்புக்காடு’போல அழகை கொடுக்கும்.  

ரத்தினம், சாந்தா, விஜயகலா, தாசன், பிரதீபன் இவர்களோடு சேர்ந்து பிறந்தது என்னமோ உண்மைதான். ஆனால் இவர்கள் யாரும் குணத்தின் குணத்தில் இருக்கவில்லை. 

குணத்தின் நேர் முன்னே பிறந்த தாசன் ஆனையிறவு யுத்தத்தில் இறந்துவிட்டான். 

தனக்கு எப்போதாவது மனக் கஷ்டம் ஏற்பட்டால் தாசனின் ஆன்மாவோடு பேசிக் கொள்வான். ஆனால் ஐரோப்பா வந்ததும் ‘தாசன் இங்கு தன்னுடன் பேசமாட்டான் அவன் அங்குதானே செத்தவன்’ என்று நினைத்துக் கொள்வான்.  

குணத்தில் பெற்றோர் தமது ஒரு பிள்ளையை நாட்டுக்காக கொடுத்துவிட்டு மீதி எல்லோரையும் படிப்படியாக ஐரோப்பாவுக்கு கொடுத்துவிட்டார்கள். இறுதி யுத்தம் முடிந்து எல்லாமுமே வெற்றிடமாக இருந்தபோது அவர்களுக்கு துணையாக வைத்திருந்த கடைசிக்கு முதல் குட்டிதான் குணம் ! 

எல்லா பிள்ளைகளும் திருமணம் முடித்து விட இறுதியாக பிரான்ஸ் போய்ச் சேர்ந்த பிரதீபன்(கடைசி) அனுப்பும் பணத்தில் தான் அவர்களின் உலக வங்கி இயங்கி வந்தது. குணத்தை ஐரோப்பா அனுப்பாமல் வைத்திருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.  

அவனை எவராலும் கோபப்படுத்த முடியாது. அவன் ஒரு போராளியாக இருப்பான் என்று சிங்கள ராணுவமும் ஒருபோதும் நம்பாது ‘தாசன்’ வீரச்சாவு என்ற செய்தியை பொட்டம்மான் வந்துகேட்டாலும் இவனிடம் இருந்து பெறமுடியாது. எந்த வில்லங்கமானவர்களும் இவனின் சிரிப்பில் சிதைந்து சின்னாபின்னமான கதைகள் உண்டு. அதை விட நெற்றியில் சிவபெருமானின் சித்தப்பா மகன் போல திருநீறு, சந்தனம் நிறைந்து வழியும். எல்லாவற்றையும்விட ‘யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற மாட்டேன்’ என்று உடும்புப் பிடியில் இருந்த உத்தமன். சங்கிலியன் மன்னர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் இப்போதும் இருந்தால் ‘சங்கிலியன்’ விருதை பெறக்கூடிய முதல் தரமான குடிமகன். 

தாய், எப்போதும் குணத்தை தன்னோடே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு அகக்காரணங்களும் இருந்தது. தாய், தந்தையோடு 36 வயதிலும் நண்பர்கள் போல்தான் பழகுவான். சின்னச் சின்ன நக்கல் தகப்பனோடு சேர்ந்து ஏட்டிக்கு போட்டியா பழைய பாட்டு, சில செல்லக் கோபங்கள், இரவானால் தாய் சலம் கழிக்க போனாலும் பாதுகாப்பு. இப்படிப்பட்ட பிள்ளையை எந்த வயோதிப பெற்றோருக்கு பிடிக்காமல் போகும்? 

பிரதீபன் பிரான்ஸ் போய் 2010இல் அகதி அடைக்கலம் கிடைத்ததும், சுதுமலையில் இருந்து யாழ்ப்பாண நகரம் வரை இருந்த எல்லா கோயிலுக்கும் அர்ச்சனை செய்தான் குணம்.  

கொஞ்சமும் நன்றி கடன் இல்லாத சாமிகள் செய்த சதிதான் பிரதீபன் ரூபத்தில் அவனுக்கு வந்திருந்தது. இரண்டு வருடமாக பணம் அனுப்புவதோடு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தான் அவனது தம்பி பிரதீபன்.  

‘அடே எப்பிடியெண்டாலும் ஒரு வேலை எடடா’ 

ஓம்.. ஓம்.. 

‘சுயமா வருமானம் வர ஏதாவது செய்’ 

ஓம்.. ஓம்..  

‘உன்ர காலில நீ நிக்கோணும்’ 

ஓம்.. சரிடா.. சரி.  

குணத்துக்கோ முதலாளியாக இருக்கப்பிடிக்காது. தொழிலாளியாகவும் இருக்கப்பிடிக்காது. மொத்தத்தில் உடம்பில் இருந்து வியர்வை வெளியேறினால் பொறுத்துக்கொள்ளமாட்டான்.  

இரண்டு வருடமாக தம்பியின் நச்சரிப்புகள் அவனை எந்தவித சலனத்திலும் ஆழ்த்தியதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டுவிட்டு அவனது வாழ்வு நதியில் யாரும் அணைகட்டாமல், கணியன் பூங்குன்றன் சொன்னதுபோல் இருந்தது அவனது வாழ்வு. 

அன்று அழைப்பு எடுத்த பிரதீபன் குரல் கொஞ்சம் முட்டையிட்ட கோழி போல இருந்தது. 

‘சரிடா சரி’ என்றவாறு தாயிடம் கைபேசியை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டான். 

‘’எணை, இவன் என்ன செய்யப்போறான் ? இப்பிடியே திரியுறான்’’ 

‘’இல்ல ராசா, பிள்ளை காலேல வெளிக்கிட்டா மாலைவரை வேலைதேடி களைச்சுப்போய்தான்  வருது’’ 

‘’இஞ்ச பாரண எனக்கு 33 வயது உவனுக்கு 36 வயது. இவன் இப்படி இருந்தா நான் எப்ப கட்டுறது ? ‘’ 

பிரதீபன் ஒரு வேலை செய்தான். தன் நண்பன் ஒருவனுக்கு 5000 ரூபா பணம் அனுப்பி ‘’குணம் காலையில் இருந்து மாலைவரை வேலைதேடும் விசுத்திறத்தை புலனாய்வு செய்து அறிக்கை தரவேண்டும்’’ 

அந்த புலனாய்வு செய்த படு பாதகன் கொடுத்த பணத்தைவிட அதீத கடமை உணர்வோடு கடமையாற்றிவிட்டான்.  

அந்த அறிக்கை :- 

« குணம் காலை 9 மணிக்கு புறப்படுகிறான் மெல்லிய பாட்டோடு. யாழ்ப்பாண நகரம் வரையுள்ள எல்லா கோயிலுக்கும் செல்கிறான். கோயிலாளர்களுக்கு குணத்தை நன்றாக தெரிந்திருக்கிறது. பின்பு 12 மணிக்கு மனுஷன் மலாயன் கபே சென்று 2 வடை சாப்பிட்டுவிட்டு, 3 வடை பார்சல் கட்டுகிறார். பின்னர் மதியம் 1 h30 மணிக்கு லிங்கம் கூல்பார் ஐஸ்கிரீமுக்கு முதல் ஒரு roll சாப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டு முப்பது மணிக்கு நகரத்திலிருந்து அவசரமற்று அதேவரிசையில் கோயில்களுக்குச் சென்று மாலை 4 மணிக்கு வீட்டை அடைகிறார். இதுதான் தொடர் நடவடிக்கை »  

இந்த அறிக்கையோடு கடமை உணர்ச்சியாக ஆதார புகைப்படங்களும் சுடச்சுட சென்று சேர்ந்தது. பிரதீபன் ஒன்றும் பறையாமல் எடுத்த அதிரடி நடவடிக்கையால் சரியாக ஆறு மாதத்தில் குணம் தான் விரும்பாத பாரிசுக்கு நாடு கடத்தப்பட்டான். 

** 

பிரதீபன் கடுமையாகத்தான் வேலை செய்கிறான். காலை 5 மணிக்கு எழுந்து ஒரு நெத்துவா (nettoyage/ cleaning)) வேலை, பின்பு காலை 10 மணிக்கு குசினி வேலை, மாலை நாலு மணிக்கு வருகிறான். மீண்டும் மாலை 6 மணிக்கு குசினிவேலை. இரவு 23 h30 மணிக்கு வருகிறான். இதையெல்லாம் பார்க்க குணத்துக்கு ஏதோ செய்தது. மானொன்று மலைப்பாம்பால் விழுங்கப்படுவதுபோல உணர்ந்தான். 

பிரதீபன் தமயனுக்கு செய்த முதல்வேலை அவனை கடத்துவதற்கான செலவை எழுத்து வடிவில் கொடுத்தது. அத்தோடு « வட்டிப்பணம் 600€. வேலை எடுத்து நீதான் கட்டணும். «  

எல்லாவற்றுக்கும் முதல் அகதி அடைக்கலம் கோரவேண்டும். அதற்கு பல வழிகள் உண்டு. முதலில் கேஸ் எழுதுகிறவர்கள் இடம் போக வேண்டும். அவர்களுக்கு முன்பணமாக 500 யூரோ. நீண்ட காலத்தின் முன் வந்த அகதி கெட்டிக்காரர் பின் வரும் அகதிகளுக்கு கதை எழுதிக் கொடுக்கும் கடை வைத்திருக்கிறார்கள் பாரிசில். அவர்கள் செய்யும் அட்டூழியத்தைவிட சிங்களவனிடம் அடிவாங்கியே சாகலாம். முட்டாள் இருக்கு மட்டும் மூன்றுதேவிகளும் இருப்பார்கள் போலும். 

அப்படி ஒரு கதை எழுதும் கடையில் குணத்துக்கான அகதி அடைக்கல கதை தயாரானது. மிக வேகமாக கதை எழுதுபவர்கள் அங்கு தான் இருக்கிறார்கள். கதையை சுடச்சுட கொடுத்தார்கள். கதையை படித்தபோது அவன் மூளைக்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. உச்சபட்சமாக யாழ் பல்கலைக்கழகத்தில் படித்ததாக எழுதி இருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பல்கலைக்கழகம் இருக்கும் பாதையில் செல்வதை அவன் விரும்பாதவன். என்ன செய்ய ? 500€ கொடுத்த கதை அகதிக் கோரிக்கைக்கு அனுப்பப்பட்டது. 

‘கண்டபடி தமிழாக்களோட கதைக்காத’ 

‘வீட்டில் சும்மா இருக்காத சுத்தம்செய்’ 

‘வேலை இல்லாதவர்கள்தான் இங்கே சமைக்கணும்’ 

‘சமறிக்காசு மாதம் 250€ மறக்காத’ 

‘எங்கயெண்டாலும் திரிஞ்சு வேலை எடு’ 

‘O. F. F. R. A இல வெண்டுடோனும், கேசை பாடமாக்கு’ 

தன் தம்பி ஏதோ பாடசாலை அதிபர்போல இட்ட கட்டளைகள் அவனை வெறுப்பின் உச்சத்தில் இருத்தியது. ‘இப்படி எப்படி இவங்கள் வாழுறாங்கள்?’ தலையில் அடித்துக்கொண்டான்.  

அதைவிட குளிரின் கொடுமையும், தெரியாத பிரஞ்சுமொழியும் அவனை எரித்தது. விட்டில் பூச்சிபோல பலர் எரிந்துகொண்டிருப்பதை அவன் பார்த்தான்.                    

8 மாதம் ஆகியும் அவனுக்கு ஒரு வேலையும் அமையவில்லை. பிரெஞ்சுக்காரர்களுக்கு வேலை இல்லை என்று பாரிசில் போராட்டம் வேறு வெடித்துக் கொண்டிருந்தது. அதற்கு ‘மஞ்சள் சட்டை போர்’ என்று தொலைக்காட்சிகள் உறுமின. போர்தான் போகும் இடமெல்லாம் சேர்ந்து வருவதை யாரிடம் அவன் சொல்வது? யாரோ சூனியக்காறரின் வேலை என்று நினைத்துக்கொண்டான்.  

O. F. F. R. A என்ற அகதிகளை விசாரித்து வதிவிட அனுமதி வழங்கும் அமைப்பு அவனை விசாரணைக்கு அழைத்திருந்தது. பதட்டம் தொற்றிக்கொண்டது. பிரதீபன் ஓயாமல் இரவில் இராணுவ நடமாட்டம் கண்ட நாய் போல கத்திக் கொண்டே இருந்தான்.  

‘’குணம் இதில் வடிவா கதைச்சு வெண்டுடோனும் பிறகு கோர்ட் கேஸ் என்று சரியான பிரச்சினை உன்ர கேசை வடிவா படி’’ 

குணம் அந்தக் கதையைப் படிப்பது, ஏதோ கொழும்பில் நாலாம்மாடிக்கு போவது போல உணர்ந்தான்.  

அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அங்கு விசாரணை. வியாழன் மாலை அங்கு இருந்தவர்கள் துணையோடு பாரிசில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் சென்று விட்டு இரவு 23h00 மணிக்கு வீடு வந்தான். அங்கு ஆண் பத்திரகாளி போல பிரதீபன் காத்திருந்தான்.  

‘’ எங்க திரிஞ்சிட்டு வாராய் ? ‘’  

‘’ கோயிலுக்கு போய்ட்டு வாறன். ‘’ 

‘’இந்த மயிர் சாமிகளா நாளைக்கு O. F. F. R. A வருவினம்? எருமை.. எருமை.. ‘’ 

இரவு ஒரு மணிக்கு தூங்கினார்கள். குணத்துக்கு தூக்கம் வரவில்லை. அது வெண்மை இரவாகவே இருந்தது. அதிகாலை 6 மணிக்கு தயாராகிவிட்டான்.  

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பிரதீபனை எழுப்ப கவலையாக இருந்தது. ஆனால் ஏழு மணிக்கு மின்வண்டி ஏறவேண்டும் அவனை எழுப்பி அவசர அவசரமாக மின்வண்டி நிலையம் சென்றார்கள். 

அவன் வாழ்நாளின் முதல் விசாரணை. மின் வண்டியை விட அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சரியாக இங்கு விசாரணை நடக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் சாமிகளுக்கு பூசை ஏற்பாடாகியிருந்தது. 

விசாரணை முடிவில் அந்த மொழிபெயர்ப்பாளர் –  

‘’இன்னும் 21 நாட்களில் உங்களுக்கு பதில் வரும் சாதகமற்ற பதிலாக இருந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்’’ என்றார். 

வற்றாப்பளை அம்மனுக்கு பாரிசில் விசாரனை நடக்கும் நேரம் விசேட பொங்கல் நடந்தது. அதனாலோ என்னவோ அகதிகள் வரலாற்றில் நடக்காத காரியம் குணத்துக்கு நடந்தது. இன்றைய தேதியில் உலகத்தில் மிகவேகமான மணிக்கு 603km/h யப்பான் மின் வண்டிபோல பதில் வந்தது.  

சரியாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விட்டு திங்கட் கிழமை பதில்வந்தது. ஒரு விசாரணை அதிகாரி இவ்வளவு வேகமாக கடமையாற்றியதை நினைக்க ஆச்சரியம் அலைமோதியது.  

‘’…. ஆகவே, தங்கள் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.’’ -தங்கள் நம்பிக்கையுடைய அதிகாரி- 

** 

சாமிகள் சேர்ந்து குணத்தின் வாழ்க்கைக்கு அர்ச்சனை செய்துவிட்டார்கள்.  

இனி வரும் நாட்களை அவனால் நகர்த்த முடியாது. தன் வாழ்க்கையை இந்த உலகம் அழித்துவிட்டது. இதில் விடுபட மரணம் தான் முடிவு என்று அவன் முடிவு எடுத்துவிட்டான்.  

அதிவேக மின்வண்டியின் (575km/h) ஒலி கேட்டது பாய்வதற்கு தயாராகி தன் வயிற்றை தூக்கிக் கொண்டு அந்தப் பாலத்தின் விளிம்புக்கு சென்றபோது, புகையிரதம் 50 கிலோமீட்டர் கடந்து விட்டிருந்தது. 

மரணமும் தன்னை விரும்பவில்லை என்ற வெறியோடு வெறித்த பார்வையில் நின்றபோதுதான் குணத்தின் முதுகை நான் தட்டினேன். 

                            ***முற்றும்****