— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’
நாடக விழா இனிதே நடந்தேறிவிட்டதில் திருப்தியும், நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் நல்லமுறையில் தவிர்க்கப்பட்டுவிட்டதில் நிம்மதியும், எதிரிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதில் இறுமாப்பும் ஒன்று சேர்ந்த வெற்றிக்களிப்பை மறுநாள் விடியும்வரை மகிழ்ச்சியோடு கொண்டாடினோம்.
பொருட்களை ஏற்றியிறக்கத் தயாராக இருந்த உழவு இயந்திரத்தில் ஊர்முழுக்கப் பவனி வந்தோம். உழவு இயந்திரத்தின் பெட்டியில் சிலர் அமர்ந்திருந்தார்கள், சிலர் நின்றிருந்தார்கள், அதன் பின்னால் சிலர் ஓடியும், நடந்தும் வந்தார்கள். பாம்பு விடுவோம் என்றவர்கள், தீப்பந்தம் எறிந்தவர்கள், வதந்திகளைப் பரப்பியவர்கள் முதலிய எத்தனையோ வகைகளில், எங்களது விழாவுக்கு இடைஞ்சல் செய்தவர்கள், செய்ய முயன்றவர்கள் அத்தனை பேர்களதும் வீடுகளுக்கு முன்னால் நின்று கோசமிட்டோம்.
இந்த இடத்தில், நாடக விழாவுக்கு முன்னர் இடம்பெற்ற விபரீத நாடகம் ஒன்றைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது, பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், அமரர், சோ.உ.தம்பிராசா அவர்கள். அவரை நாடக விழாவுக்கு விருந்தினராக அழைப்பதற்கு ஏற்கனவே நாங்கள் தீர்மானித்திருந்தோம். 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவருக்கெதிராகவும், தலைவர் சீ. மூ. இராசமாணிக்கம் அவர்களுக்கு ஆதரவாகவும் களத்தில் நின்று பிரசாரம் செய்த என் போன்றவர்கள் உட்படப் பெரும்பாலானவர்கள் இந்த நாடக விழாவினை நடத்துபவர்களாக இருந்தோம். ஆனாலும் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தம்பிராசா அவர்களை அழைக்கும் தீர்மானத்திற்கு எவரும் வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. எங்களது இளம் நாடக மன்ற உறுப்பினர்கள், நாடக விழாத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்த உறுப்பினரல்லாத அன்பர்கள் எல்லோரிலும் தம்பிராசா அவர்களைத் தேர்தலில் ஆதரித்தவர்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இருந்தார்கள். எனினும், தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் என்பதால் தம்பிராசா அவர்களை அழைக்கும் தீர்மானத்தினை எடுத்தோம்.
நாடக விழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், எங்கள் கோரிக்கையைப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் சென்று தெரிவித்தோம். என்னைப்பற்றி மிகவும் நன்றாக அவருக்குத் தெரியும். என்னுடன் சென்றிருந்த நண்பர்களும் அரசியலில் அவரை ஆதரிக்காதவர்கள் என்பதையும் அவர் நன்கு அறிவார். எங்கள் வேண்டுகோளை ஏற்ற அவர் விழாவுக்கு வருவதற்குச் சம்மதித்தார். தான் வேறு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமா என்று கேட்டார். விழாவுக்கு நேரத்திற்கு வருகைதர வேண்டும், அது ஒன்றே போதும் என்று நன்றிகூறி விடைபெற்றோம்.
அதற்கு, அடுத்த வாரம்தான், தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களது வீட்டில், எங்கள் ஊரின் “குட்டித்தலைவர்கள்” என்று தங்களை நினைத்துக் கொண்டிருந்தவர்களும், சில “சாயங்காலச் சண்டியர்”களும் எங்களோடு தர்க்கத்தில் ஈடுபட்ட சலசலப்பு இடம்பெற்றது. (அதுபற்றிக் கடந்த பதிவில் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்)
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அன்றிரவு, எனது மனதில் மிகப்பெரிய சஞ்சலம் ஒன்று ஏற்பட்டு என்னைக் குடைந்துகொண்டிருந்தது. நாடக விழா பற்றி நாங்கள் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தோமே ஒழிய, பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடவில்லை. நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளிப்படுத்தப்படவும் இல்லை. விருந்தினர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால், பா.உ.தம்பிராசா அவர்களும் வருகிறார் என்பதைத் தலைவர் இராசமாணிக்கம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதை, நாங்கள் யாருமே எண்ணிப்பார்க்கவில்லை. உண்மையில் அந்தவிடயம் எனக்குக்கூட மனதில் தோன்றவில்லை. அது, இப்போது தோன்றியது. அதுவே என் சஞ்சலத்திற்குக் காரணம்.
பிரச்சினை ஒன்று ஏற்பட்டுவிட்டதால், இனிமேல் அதை எப்படிச் சொல்வது என்பதை எண்ணிப் பார்க்கவே தலை சுற்றியது. விடயம் தெரிந்த நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தேன். சலசலப்பு அடங்கியதும், இரண்டு மூன்று நாட்கள் கழித்து, அவரிடம் சென்று சொல்வது என்று முடிவெடுத்தோம். அதன்படி மூன்றாம் நாள் ஆறு பேர் அவரிடம் சென்றோம்.
வீட்டு வாசலில் திருமதி லீலா இராசமணிக்கம் நின்றுகொண்டிருந்தார். ஊர் மக்கள் எல்லோரும் அவரை லீலா அக்கா என்றுதான் அழைப்பார்கள். அதனால் எங்களுக்கும் அது வழக்கமாயிற்று. அவரிடம், “அக்கா.. ஐயாவைச் சந்திக்கோணும்… இருகிறாரா…” என்று கேட்டேன்
“என்ன விசயம்…?” அவர் கேட்டார்.
“ஐயாட்டத்தான் ஒரு விசயம் சொல்லோணும்…”
“ஏன் என்னிட்டச் சொல்லக்கூடாதோ?”
“இல்லக்கா… அப்பிடி.. இல்ல…… அவரோட கொஞ்சம் கதைக்கோணும்…. அதுதான்….”
“அத்தான் குளிக்கிறார்…. இப்ப வந்திருவார்… உள்ள வந்து இருங்க…”
திருமதி லீலா இராசமாணிக்கம் தலைவரை, அத்தான் என்றுதான் அழைப்பார். மற்றவர்களிடம் அவரைக் குறிப்பிடும்போதும் அப்படித்தான் சொல்வார்.
“என்ன.. எல்லாரும் சேர்ந்து வந்து இருக்கிறீங்க?….. அண்டையப்போல…. என்னவும் பிரச்சினையோ?” என்று லீலாஅக்கா கேட்டார்.
“என்னக்கா நீங்க? அண்டைக்குப் பிரச்சினையக் கொண்டந்தது நாங்களா….? இப்ப நாங்க வந்தது.. ஐயா விழாவுக்கு வாறது சம்பந்தமாக….” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் வந்துவிட்டார். எங்களைப் பார்த்ததும், “என்ன… எப்பிடிப் போகுது உங்கட வேலைகள் எல்லாம்?” என்று கேட்டுக்கொண்டே கதிரையில் அமர்ந்தார். எல்லாம் நல்லாப்போகுது… என்று சொல்லிக்கொண்டே அவரருகில் சென்றோம். மரியாதை நிமிர்த்தமாக விழாவைப்பற்றிச் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், “நீங்களும், லீலா அக்காவும் ஆறு மணிக்கு வந்திரோணும். நீங்கதான், முதல் டிக்கட்டைக் கிழிச்சித் திறந்து வைக்கோணும்… அதைச் சொல்லத்தான் வந்த நாங்க…”
“அப்பிடியா? அப்ப நாங்க வந்த பிறகுதான் தொடங்குவீங்களா… சரி..சரி….” என்றார்.
“அதோட….. எம்பியும்……” என்று நான் இழுத்தேன்.
“என்ன….?” என்னை நிமிர்ந்து நோக்கினார்.
“தம்பிராஜா எம்பியும்…… (வருவார் என்று சொல்ல முயன்றேன் அதற்கிடையில்) தடால் என்று கதிரையைப் பின்னால் அரக்கிவிட்டுச் சிங்கம்போலச் சிலிர்த்தபடி எழுந்து நின்று, கோபமாகக் கேட்டார்.
“என்ன… என்ன நினைச்சிற்றீங்க நீங்க எல்லாம்? என்னையும் வரச்சொல்லி… அவரையும் வரச்சொல்லி… என்ன.. சாண்ட்விச்…. செய்யப்போறிங்களா?…..”
தொடர்ந்து நான் சொல்ல வந்த சொற்கள் என் தொண்டைக்குள் எப்படி இறங்கின என்று தெரியவில்லை. புதிய சொற்கள் எங்கிருந்து புறப்பட்டன என்றும் தெரியவில்லை. உடனே நான், “இல்ல ஐயா…. அவரையும் கூப்பிடவேணுமா எண்டு உங்களிட்டக் கேக்கிறம்? அதுதான்…”
“அப்பிடிக் கேட்கிறதுக்கு உங்களுக்கு என்ன துணிவு… ங்ஆ!”
நிலைமைக்கேற்றவாறு, விடயத்தை மாற்றிய நான், மேலும் அவரைச் சாந்தப்படுத்தும் விதத்தில், “என்ன ஐயா.. உங்களிட்டக்கேட்காம நாங்க… வேற ஆருட்டக்கேட்கிற…. சிலவேளை.. நீங்க அவருக்கும் சொல்லியிருக்கலாம் எண்டு.. நினைச்சிற்றா.. அதுதான் உங்களிட்டக் கேட்கிறம்….”
“இல்லல்ல. அதெல்லாம் தேவையில்ல. போய் உங்கட வேலைகளைப் பாருங்க” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த லீலா அக்கா, கேட்டார், “என்னடா… நீங்க எல்லாம்? என்ன புதுனம் இது?”
அவரால் விடயத்தைப் பெரிதுபடுத்தவும் முடியும், எதுவும் இல்லாமல் செய்யவும் முடியும் என்பதை, நான் மட்டுமல்ல எல்லோரும் அறிவோம். அதுவரை அவர் குறுக்கே எதுவும் பேசாமல் விட்டது நாங்கள் செய்த புண்ணியம்.
“அக்கா… ஒரு புதினமும் இல்ல அக்கா… எம்பியக் கூப்பிடவேணுமா, இல்லையா எண்டு நாங்க ஆருட்ட அக்கா கேட்கிற? அதத்தான் கேட்டம். முதல்ல உங்களிட்டச் சொல்லிக் கேட்கத்தான் நினைச்சம். ஆனா, அதுக்கிடையில… ஐயா வந்திற்றார். நாங்க கேட்டது பிழை எண்டா… அவர மன்னிச்சுக்கொள்ளச் சொல்லுங்க அக்கா…” என்றெல்லாம் அவரோடு சில நிமிடங்கள் இதமாகக் கதைத்து, அவரின் எண்ணத்தை எங்களுக்குச் சார்பாக நிறுத்திவிட்டு, வந்தோம்.
சொல்ல வந்ததைச் சொல்லாமல், மாற்றிச்சொல்லி, நான் நிலைமையைச் சமாளித்தமையால் அதிர்ச்சி கலந்த, நிம்மதியில் மூழ்கியிருந்த நண்பர்கள்… என்னைக் குடைகுடை என்று குடைந்தார்கள்.
“இப்ப என்ன செய்யப்போறம்? எம்பியும் வாறதுக்குச் சம்மதிச்சிற்றார். அவர் கட்டாயம் வருவார். அவர் வரக்கூடாதெண்டு இவர் சொல்லுறார். இப்ப என்ன செய்யப்போறம்?”
“இப்ப ஒண்டும் பேசாதங்க…. வேலிக்கும் காது இருக்கும். வாங்க போவம்….” என்றேன். எதுவும் பேசாமல் ஆறுபேரும் பாடசாலையையை நோக்கி நடந்தோம். அங்கே அரங்க நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்டவர்களோடு நாங்களும் கலந்தோம். என்னால் அங்கே எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. அவசரமாக ஓரிடத்திற்குப் போய் வருவதாக மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, அரங்கநாதன் அண்ணன், ஸ்ரீஸ்கந்தராசா, மகாதேவன் மூவரையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நால்வரும் தனிமையில் எங்காவது அமர்ந்திருந்து அடுத்து என்ன செய்வது என்பதை ஆலோசிப்பதே எனது நோக்கம். இரவு பத்து மணியாகிக்கொண்டிருந்தது. அப்படியே நடந்து, வைத்திய சாலைக்குப் பின்புறம் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றோம். பனை மரங்களும், வடலிகளும், காரைப்பற்றைகளும், வாகை மரங்களும் பாம்புப் புற்றுகளும் நிறைந்த அந்த இடத்தில்தான் பிணவறை (Mortuaruy) இருந்தது. (கிட்டத்தட்ட அந்த இடத்தில்தான் இப்போது ஆதார வைத்திய சாலை அத்தியட்சரின் விடுதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.) பிணவறைக்குச் சற்றுத்தூரத்தில் இருந்த மணலில் அமர்ந்தோம். ஏறத்தாழ ஒரு மணிநேரம் நால்வரும் கலந்து ஆலோசித்த பின்னர் அதைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்று ஒரு முடிவை எடுத்தோம். உடனேயே அங்கிருந்து எருவிலுக்கு நடந்து சென்றோம். நேரம், நள்ளிரவு 12 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. நான்கு இளைஞர்கள், நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க, அதுவும் அவருக்கு எதிராக இயங்கியவர்கள், அவரின் வீட்டுக்குச் செல்வதென்பது மிகவும் சாத்தியமான ஒருகாலம் அப்போது நிலவியிருந்திருக்கிறதே என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
அவரது வீட்டுக் கதவினைத் தட்டினோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, கதவு திறந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு, கதவைத் திறந்தார் திரு. க. துரைராஜா. ஆம்! இப்போது செட்டிபாளையத்தில் வசிக்கும், இளைப்பாறிய அதிபர் கனகரெத்தினம் துரைராஜா அவர்களின் சித்தப்பா முறையானவர்கள்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சோ.உ.எதிர்மன்னசிங்கம் அவர்களும் அவரின் சகோதரரான சோ.உ.தம்பிராசா அவர்களும். அத்துடன், எதிர்மன்னசிங்கம் அவர்களின் வளர்ப்புப்பிள்ளையாக அவரது குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் திரு. துரைராஜா. அதனால், எதிர்மன்னசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அரசியலுக்கு வந்த தம்பிராஜா அவர்களுடன் அதே வீட்டில் துரைராஜா அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.
அவர், நாங்கள் படித்த அதே பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில், என்னைவிட நான்கு அல்லது ஐந்து வகுப்புக்கள் முந்திப் படித்தவர். என்னுடன் வந்திருப்பவர்களில் ஒருவரான பா.அரங்கநாதன் அவர்களுக்கு ஒரு வருடம் சிரேஸ்ட மாணவர். அப்போதும், இப்போதும், அவரைத் துரைராஜா அண்ணன் என்றுதான் அழைப்பேன்.
அவர் வந்து கதவைத் திறந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது விடயம் இவருக்கும் தெரியப்போகின்றதே என்ற காரணத்தால் அவமானம் கலந்த ஒருவகைக் கூச்சத்தால் குறுகி நின்றோம்.
“ஐயாவைச் சந்திக்க வேண்டும்” என்று சொன்னதும், அவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். “இந்த நேரத்திலா, குஞ்சியப்பா….. படுத்துற்றாரே… இப்ப…… எப்படி அவரை எழுப்புவது….” என்று கூறி அவர் தயங்கினார்.
ஆனால், கட்டாயம் இப்போது அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்ட தோரணையும், ஒரே பாடசாலையில் படித்த தோழமையும் அவரது தயக்கத்தைப் போக்கியது. உள்ளே சென்று ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தம்பிராசா அவர்களை எழுப்பிக் கூட்டி வந்தார்.
“ஆருடாப்பா அது இந்த நேரத்தில…” என்று கேட்டுக்கொண்டே வந்தவர், எங்களைக் கண்டதும், ” ஓ… சிறீ… என்ன தம்பி…. நீங்கெல்லாம்.. இந்த நேரத்தில…. என்ன… விசயம்?” என்று கேட்டார்.
“சேர்.. நாளையண்டைக்கு எங்கட நாடகவிழா…..”
“ஓம் தெரியும்…. தம்பி… நான் வாறன்எண்டு சொல்லிற்றந்தானே…”
“ஓம் சேர்…. நீங்க சம்மதிச்சதால நாங்க மிச்சம் சந்தோசமாக இருந்தம்.. எல்லா ஏற்பாடுகளையும்… செய்தும் போட்டம். ஆனால், சேர்… எங்கட இளம் நாடகமன்றத்தில இருக்கிற சிலபேருக்கு, நீங்க வாறது பிடிக்கல்ல, அவனுகளச் சம்மதிக்க வைக்கலாம் எண்டு.. நங்களும்… எவ்வளவோ… முயற்சி செய்தம். ஆன்னா, இப்ப…. நீங்கவந்தா…. தாங்க ஒருவரும் நடிக்கவும்மாட்டம், எந்த நிகழ்ச்சிகளிலயும் கலந்துகொள்ளவும் மாட்டம்…. எண்டு சொல்லுறானுகள். அப்படி நடந்தா, விழாவையே நடத்த ஏலாது…. அதுதான்…. சேர்… என்ன செய்யுற.. எண்டுதெரியாம…” என்று போலியாக நாங்கள் புனைந்தெடுத்த காரணத்தைச் சொல்லிப்புலம்பி நின்றோம்.
“தம்பிகளா… இது நான் எதிர்பார்த்ததுதான்….. இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு எனக்குத்தெரியும்… ஆனால், நீங்க எல்லாரும்வந்து கேட்டதுக்கு நான் மதிப்புக்குடுக்கோணும். அதனாலதான் சம்மதிச்சன்…..”
“மிக்க நன்றி சேர்… ஆனா…..”
“இப்ப என்ன… நான் உங்கட விழாவுக்கு… வரக்கூடாது. அவ்வளவுதானே? விழா நடக்கிறது முக்கியமா.. நான் வாறது முக்கியமா? கவலைப் படாமப் போங்க. போய் உங்கட கருமங்களப் பாருங்க. நீங்க எனக்குச் செய்யவேண்டியது ஒண்டுதான். விழாவை நல்லா நடத்துங்க. அது போதும் எனக்கு.”
“இல்ல சேர்… இது உங்கட கௌரவப்பிரச்சினை….. தயவுசெய்து எங்கள மன்னிச்சிக் கொள்ளுங்க….”, அரங்கநாதன் அண்ணன் கைகூப்பிக்கேட்டார்.
தம்பிராசா அவர்கள், அருகே வந்து, இரண்டு கைகளாலும் எங்களை அணைத்து, ஒவ்வொருவரின் தோளிலும் தட்டிக்கொடுத்து, “மன்னிக்க ஒண்டுமில்ல.. நீங்க ஒரு பிழையும் செய்யல்ல… நான் விழாவுக்கு வரல்ல. இந்த விசயத்த… இப்பவே மறந்துபோட்டு…. சந்தோசமாகப் போய் உங்கட வேலைகளைப் பாருங்க. எல்லாம் நல்ல சிறப்பா நடக்கிறதுக்கு என்ர வாழ்த்துக்கள்.” என்று சொன்னார்.
மீண்டும், மீண்டும் அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம். எம்பி தம்பிராஜா அவர்கள், அப்போது எங்கள் மனங்களில் இமயமாய் உயர்ந்து நின்றார்.
(நினைவுகள் தொடரும்)