— விஜி/ஸ்டாலின் —
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
ராஜாஜி-பெரியார் உறவும் முரணும்
ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியின் வரலாறு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியகாங்கிரஸின் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் மட்டுமன்றி இந்திய உள்துறை அமைச்சராகவும் மவுண்பேட்டனுக்கு பின்னர் இந்தியாவின் உயர்பதவியான (இறுதி) தலைமை ஆளுநராகவும் பதவி வகித்தவர். அத்தோடு காந்தியாரின் நான்காவது மகன் தேவதாஸை தனது மருமகனாக்கி காந்தியை சம்பந்தியாக்கிக் கொண்டவர்.
பெரியார் ஈரோட்டிலும் ராஜாஜி சேலத்திலும் நகரசபை தலைவர்களாக இருந்த காலத்திலிருந்து அரசியலில் உறவுகொண்டவர்கள். அதன் பின்னர் சுமார் ஆறாண்டு காலம் காங்கிரசில் ஒன்றாக பணியாற்றியவர்கள். காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி காந்தியும் காங்கிரசும் ஒழியவேண்டும் என்று மூச்சுக்கு மூச்சு கூறிவந்தார். ஆனாலும் ராஜாஜியுடனான தனது உறவை கைவிடவில்லை என்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவேண்டி வந்தது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இக்குற்றச்சாட்டுகளால் பெரியாரது சுயமரியாதை இயக்க தோழர்கள் கூட குழப்பங்களுக்குஉள்ளானார்கள்.
குறிப்பாக கோயம்புத்தூரிலும் குற்றாலத்திலும் நடந்த இவர்களின் இரண்டு சந்திப்புக்கள் அரசியல் வானில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின.
1934ல் ராஜாஜியும் பெரியாரும் ஒரேவேளையில் கோயம்புத்ததூர் மத்திய சிறையில் இருக்க நேரிட்டது. அவ்வேளையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நிறைந்த விடயங்களை பரிமாறிக்கொண்டனர். சிறைக்கு வெளியிலோ இச்சந்திப்பு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. உரையாடல்களின் போது மீண்டும் பெரியார் காங்கிரசில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது என்பதும் அதிலும் காங்கிரஸ் கட்சியானது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை (இந்திய அளவில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளிலும் அரச பணிகளிலும் பார்ப்பனர் அல்லாதோருக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கை) அங்கீகரிக்கும் முடிவுக்கு வரவேண்டுமென்பதை முன்நிபந்தனையாக வைத்தே உரையாடினார் என்பதும் பிற்காலங்களில் தெரியவந்தது.
அதேபோல 1936ஆம் ஆண்டிலும் ஒருமுறை குற்றாலம் சென்றபோதும் அங்கே ராஜாஜியை சந்திக்க இன்னுமொரு வாய்ப்புக் கிடைத்தது. அங்கும் தனது வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காந்தியார் அங்கீகரித்தால் தான் மீண்டும் காங்கிரசில் இணைந்து கொள்ளத்தயாராக இருக்கின்ற நிபந்தனையையே முன்வைத்து ராஜாஜியுடன் உரையாடினார்.
ஆனால் பெரியாருக்கும் ராஜாஜிக்குமான கள்ள உறவின் காரணம் என்ன என்று கம்யூனிஸ்ட்டுக்கள் உட்பட பலர் கேலிப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ராஜாஜியுடனான பெரியாரது நட்பு “கொள்கைக்கு விரோதமானது” “கள்ள உறவு” என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஹிந்தி திணிப்பை தடுத்து நிறுத்திய பெரியார்
1937ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரசின் சார்பில் முதலமைச்சரான ராஜாஜி, பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே ஹிந்தி திணிப்பை அமுலாக்க துணிந்தார். ஹிந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் கட்டாயம் ஹிந்தி படிக்கவேண்டும் என்கின்ற அச்சட்டம் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது.
ஆறாம் ஏழாம் எட்டாம்…. வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு ஹிந்தி பாடத்தை கட்டாயமாக்க இந்த சட்டம் முனைந்தது. ஹிந்தி பாடத்தில் சித்தி அடையாதவர்கள் வகுப்புச் சித்தியை அடைய முடியாதவர்களாக்கப்படும் நிலைமை தமிழ்நாட்டில் பெரும் குழப்ப நிலையை விளைவித்தது.
இலங்கையில் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகரும மொழி சட்டத்தை விட இச்சட்டமானது கடுமையானதாக இருந்தது.
இலங்கை அரச கரும மொழி சட்டமானது சிங்கள மக்கள் வாழும் மாவட்டங்களில் அரச உத்தியோக பணி செய்பவர்கள்தான் சிங்கள பாடத்தில் சித்தியடைய வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தத்தை கொடுத்தது.
ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்களத்தை கட்டாயப் பாடமாக்கும் நிபந்தனையை அச்சட்டம் விதிக்கவில்லை.
அதேபோல் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு சிங்கள பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்கின்ற நிபந்தனையும் விதிக்கவில்லை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பானது முழுக்க முழுக்க திராவிட மொழி பேசும் மாநிலங்களில் ஹிந்தியை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்க முனைந்தது. எனவேதான் இச்சட்டம் ‘ஹிந்தித்திணிப்பு’ சட்டம் எனப்படுகின்றது.
இதன் காரணமாக திராவிடமொழிகள் பேசும் சென்னை மாகாணமெங்கும் மக்கள் கொதித்தெழுந்தனர். இவ்வேளையில் தனது நண்பன் ராஜாஜியை எதிர்த்து போர்க்கொடி தூக்க பெரியார் முன்வருவாரா? என்கின்ற பலத்த கேள்விகள் அரசியல்வாதிகளிடையே எழுந்தது.
காங்கிரசிலிருந்து வெளியேறிய (1925ஆம் ஆண்டு) காலத்தில் இருந்து இந்திய தேசியத்தின் மீது பெரியார் வைத்திருந்த நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருவதை அவரது பேச்சுகளும் எழுத்துக்களும் வெளிக்காட்டிவந்தன.
1930ஆம் ஆண்டு காலத்தில் ‘இந்தியா ஒரு தேசமா’ என்கின்ற கேள்வியை எழுப்பி குடியரசில் விவாதத்தை தொடங்கிவைத்தார் பெரியார்.
அதன் தொடர்ச்சியாக இந்திய தேசியம் என்பதன் பின்னணியில் பார்ப்பன- பனியா ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களே உள்ளன என்று அம்பலப்படுத்தத் தொடங்கினார். அதுமட்டுமன்றி காங்கிரஸானது பிரிட்டிஸ் ஆட்சியாளர்களுடன் முரண்படுவதாக காட்டிக்கொண்டு ரகசியமாக சமரசம் செய்துவருகின்ற உத்தியை கடைப்பிடித்து மக்களை ஏமாற்றிவருகின்றது என்றெல்லாம் நேரடியான விமர்சனங்களை வைத்து வந்திருந்தவர் பெரியார்.
சுருங்கச் சொன்னால் இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்திருந்தார் பெரியார். இந்நிலையில் ராஜாஜி கொண்டுவந்த ஹிந்தி திணிப்பு முயற்சியானது ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்கின்ற ஆவேசத்தை அவர் மனதில் உருவாக்கியது. தமிழரின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்மொழி காக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு பெரியார் வந்தார். ஆனால் அதுவரை காலமும் தமிழ் மொழி பெருமை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவராகவே அவர் இருந்து வந்தார்.
தமிழின் தொன்மை பற்றியோ தமிழ் இலக்கியங்களில் செழிப்பு பற்றியோ மார்பு தட்டி வெற்று அரசியல் செய்பவராக ஒருபோதும் அவர் இருக்கவில்லை. அவரது பாஷையில் சொன்னால் திருக்குறளைத் தவிர மற்றைய அனைத்துமே அவரைப் பொறுத்தவரையில் வெங்காயங்கள்தான்.
1936 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் அவர் ஆற்றிய உரையில் தமிழ் மொழி பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார். “தமிழ்மக்கள் நலன், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பது அல்லாமல் வெறும் பாசையை பிடித்துக் கொண்டிருக்கின்ற பிடிவாதக்காரன் அல்ல நான்” என்று தெளிவாகச் சொன்னார்.
அதே பெரியார்தான் 1937ஆம் ஆண்டு ஹிந்தி திணிப்பு வந்தபோது கொதித்தெழுந்தார். ஹிந்தி திணிப்பின் ஊடாக தமிழர்களின் நலன் பாதிக்கப்படுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியறிவு இன்றி கிடந்த இந்த சமூகத்துக்கு வெள்ளையர்கள் வந்த பின்னரே அந்த வாய்ப்பும் மீண்டும் கிடைத்தது. வெள்ளையர் ஆட்சி கொண்டுவந்த பொதுக் கல்வித் திட்டத்தின் பயனாக அப்போதுதான் மீண்டெழ தொடங்கியிருந்த தமிழ் மக்களுக்கு ஹிந்தித் திணிப்பு மற்றுமொரு பேரிடி என்று அவர் கருதினார். ஆகவேதான் ஹிந்தி திணிப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹிந்தி திணிப்பின் மூலம் மீண்டும் தமிழ் மாணவர்களின் எதிர்காலமும் தமிழர்களின் நலனும் தமிழர்களின் தன்மதிப்பும் கெட்டுவிடும் என்பதை அவர் உணர்ந்தார். அதனால்தான் மிக ஆக்ரோஷமாக ஹிந்தியை விரட்டியடிக்க வேண்டும் என்று அவர் புறப்பட்டார்.
அப்போதுதான் பெரியாரின் தமிழ் மக்கள் நலன் சார்ந்த கொள்கை பிடிப்பை தமிழகம் உணர்ந்து கொண்டது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்க முன்வந்தார் பெரியார்.
சென்னை மாகாணமெங்கும் ஹிந்தி எதிர்ப்பு கோஷங்கள் வேகம் கொண்டன. பொலிஸாரின் தடையுத்தரவுகளை மீறி தமிழின தலைவர்களோடு மாணவர்கள், வழக்குரைஞர்கள், பொது மக்கள் என்று உண்ணாவிரதங்களிலும் எதிர்ப்பு ஊர்வலங்களிலும் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் பெரியாருடன் கடுமையாக முரண்பட்டிருந்த மறைமலை அடிகள் போன்றோருக்கு பெரியாரே கடிதம் எழுதி இந்திக்கு எதிராக போராட வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்தார்.
எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மொழி அறிஞர்கள் என பலதரப்பட்டோரும் பெரியாரின் அழைப்பை ஏற்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
திருச்சியில் மறைமலையடிகள், உ.வெ.சாமிநாதய்யர், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் தலைமையிலும் சென்னையில் பெரியார் மற்றும் நீதிக்கட்சி தலைவர் ஏ.டி.பன்னீர்ச்செல்வம் போன்றோர் தலைமையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
திருச்சியிலிருந்து தமிழர் பெரும்படை எனும் பெயரில் 40 நாட்கள் நடந்து சென்று சென்னையை அடையும் ஒரு யாத்திரை நடாத்தப்பட்டது. ரெ. திருமலைச்சாமி என்பவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றி ஒருவரைக் கொண்ட குழுவினர் இந்த யாத்திரையில் பங்கெடுத்தனர். இந்த சென்னைக்கான யாத்திரையை பெரியாரே திருச்சியிலிருந்து தொடங்கிவைத்தார்.
இந்த யாத்திரை முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் நின்று போராட்டக்காரர்களை பெரியாரே வரவேற்றார். அவர்கள் முன்னிலையில் பேசிய போதுதான் முதன்முதலாக பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷத்தை முன் வைத்து உரையாற்றினார்.
காஞ்சியிலே ஹிந்தி திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய மாநாடு ஒன்றை பெரியார் தலைமை ஏற்று நடத்தினார். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஹிந்தி எதிர்ப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது.
மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இப்போராட்டங்களினால் பொலிஸாரால் பெரியார் உட்பட சுமார் 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டனர். அதில் நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகிய இருவர் சிறையிலேயே மரணமாகவும் நேர்ந்தது.
ராஜாஜியின் ஆட்சி ஆட்டம் கண்டது. ஹிந்தி திணிப்பை வாபஸ் வாங்க வேண்டிய நிலைக்கு சென்னை அரசாங்கம் வந்தது.
இதற்கிடையில் இரண்டாம் உலகமகா யுத்தப்பணிகளுக்கு இந்தியர்களை கட்டாயமாக ஈடுபடுத்தும் பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து தனது முதல்வர் பதவியை துறப்பதாக ராஜாஜி அறிவித்தார்.
இதன் காரணமாக சென்னை மாகாண நிர்வாகம் ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய பெரியார் ஆளுநரோடு பேச்சுவார்த்தைக்கு செல்ல உடன்பட்டார். பேச்சுவார்த்தை மேடையில் ஹிந்தி திணிப்பை உடனடியாக மீளப்பெற வேண்டியதன் அவசியத்தை விலாவாரியாக எடுத்துரைத்து வலியுறுத்தினார்.
அதன் பலனாக 1940ஆம் ஆண்டு கட்டாய ஹிந்தித் திணிப்பை வாபஸ் பெறும் அரசாணையை ஆளுநர் எர்ஸ்கின் பிரபு வெளியிட்டார்.
ராஜாஜி அமுலாக்க எண்ணிய ஹிந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வீச்சும் அதற்கு பெரியார் வழங்கிய உறுதியான தலைமையும் காங்கிரஸாரை மட்டுமல்ல பிரித்தானிய ஆட்சியாளர்களை சென்னை மாகாணத்தை நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தது.
ராஜாஜியுடன் பெரியார் கொண்டிருந்த உறவென்பது தனிமனித உறவு என்பதையும், நண்பனேயானாலும் தனது இலட்சியத்தில் ஒரு போதும் சமரசம் செய்ய மாட்டாதவர் பெரியார் என்பதையும் நிரூபிக்கும் வாய்ப்பினை ராஜாஜியின் ஹிந்தி திணிப்பே பெரியாருக்கு வழங்கியதும் சுவாரஸ்யமானதுதான்.
பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் ஹிந்தி திணிப்பு வாபஸ் வாங்கப்பட்டது உண்மைதான்.
ஆனால் ஹிந்தி திணிப்பின் காரணமாக மக்களின் மனதில் மொழியுணர்வு பற்றி எரியத் தொடங்கியது.
1937-1940 வரையான மூன்றாண்டு காலம் தமிழ்நாடு முழுக்க இடம்பெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையாக கருக்கொள்ளத் தொடங்கியமையை யாராலும் தடுக்க முடியவில்லை.
“முதலமைச்சர் பதவியா நமக்கு சரிப்பட்டு வராதுங்க”
இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபோதுதான் நீதிக்கட்சிக்கு பெரியார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உட்கட்சி மோதல்களாலும், நிதி பஞ்சத்தாலும், தேர்தல் படுதோல்வியாலும் சீரழிந்து அழிவின் விளிம்பில் இருந்த நீதிக்கட்சியையே பெரியார் பொறுப்பெடுத்தார்.
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் பதவி விலகலை தொடர்ந்து அடுத்து யார் முதலமைச்சர், யார் தலைமையில் ஆட்சியை தொடர்வது என்கின்ற கேள்விகள் எழுந்தன. பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்த நீதிக்கட்சியை முன் நிறுத்தி ஒரு ஆட்சியை அமைக்குமாறு காங்கிரஸ் சார்பில் ராஜாஜியிடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் சார்பில் கவர்னர் தரப்பில் இருந்தும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் பெரியாரோ அதையும் நிராகரித்தார். பெரியார் நினைத்திருந்தால் அந்தக்கணமே நான்கு மாநிலங்களை கொண்ட அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக அமர்ந்திருக்க முடியும்.
ஆனால் தேர்தல் பதவிகளை அலங்கரிப்பதை விட சமுதாயப்பணி செய்வதே தனது மேலான கடமை என்பதில் பெரியார் உறுதியான நிலைப்பாடுகொண்டிருந்தார். முதலமைச்சர் பதவியா “ஐயோ நாம மேற்கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் அதற்கும் சரிப்பட்டு வராதுங்க” என்றவர் பெரியார். அவர் பதவிகளை தேடியலைந்தவரல்ல. வீடுதேடி வந்த சென்னை மாகாண முதலமைச்சர் பதவியை அநாயசமாக தன் புறங்கையால் தட்டிவிட்டவர் பெரியார் என்பதே அவருக்கே உரிய சிறப்பாகும்.