“வெந்து தணியாத பூமி” – நூல் அறிமுகம்

“வெந்து தணியாத பூமி” – நூல் அறிமுகம்

 — அ. ரமேஸ் நந்தகுமார் — 

(சமூகவியல் (இளமாணி)அபிவிருத்தி கற்கைகள் (முதுமாணி), சமூக அரசியல் செயற்பாட்டாளர்.)   

ஜனநாயக நாட்டில், சகபிரஜைகளாக மதிக்கப்பட வேண்டிய மக்கள் பல தசாப்த போராட்டங்களைக் கடந்தும் விடுதலை பெறாமல், அவர்களின் வேட்கைகள் இன்றும் வெந்து தணியாமல் இரணங்களாக இருப்பதை மிகவும் உணர்வுபூர்வமாக ‘வெந்து தணியாத பூமி’ எனும் நூலில் மூலம் வரதன் கிருஸ்ணா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்.  

சுயநிர்ணயம் மற்றும் உரிமைப்போராட்ட வரலாற்றில் மலையக சமூகம் கடந்து வந்த பாதையையும் தனது பங்களிப்பினையும் இந்நூல் மூலம் இளந்தலைமுறையினருக்கு ஊடுகடத்துவதையும் விடுதலையை நோக்கங்களாகக் கொண்ட அசைவியக்கம் கொண்ட சமூகத்தினை (Dynamic Society aiming for liberalism) உருவாக்குவதையும் நோக்காகக் கொண்டு இந்நூலினை எழுதியுள்ளமை பாராட்டுதற்குறியது.  

ஒடுக்கப்பட்ட ஒர் இனத்தில் பிறந்து, நசுக்கப்படும் போதெல்லாம் வீரியம் கொண்டு எழுந்து, வடுக்களோடு வாழ்ந்து அம்மக்களுக்காய் ஓயாது குரல்கொடுத்த ஒருவர் உலகின் எந்தபாகத்திற்கு சென்றாலும் அவருடைய சிந்தனை, செயல் எல்லாம் அச்சமூகத்தின் விடுதலையை நோக்கியதாகவே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு வரதன் கிருஸ்ணா அவர்கள்.  

சமூகவலைத்தளங்கள் சமூகமாற்றத்தின் பரிணாமமாக உருவெடுத்த காலத்தில் அவற்றை மாற்றத்தின் திறவுகோலாய் பயன்படுத்த வழிசமைத்தவர் இவர். இளைஞர் யுவதிகள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை நேரியபாதையில் மாற்றத்திற்காக பயணிக்க தூண்டியவர். அவரின் சமூகமாற்றத்திற்கான கருத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்களுள் நானும் ஒருவன். அவரின் பதிவுகள் மற்றும் அவருடனான உரையாடல்கள் மூலமாக அவரின் சமூக விடுதலைசார் அர்ப்பணிப்புக்கள், உணர்வுகள் மற்றும் கனவுகளை அறியமுடிந்தது.  

உலகளாவிய போராட்ட வரலாறுகள் ஒடுக்கப்பட்ட முறைகள், அது இலங்கையில் எப்படி ஆரம்பித்தது, அதில் மலையக மக்களின் பங்கு என்ன, என்பதை வெளிக்கொணருவதாக இருக்கிறது. இதனை மலையகமக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய வரலாறுகளையும், சகதமிழின மக்களான வட-கிழக்கு மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்காக மலையகத்திற்குள்ளும் வடகிழக்கிலும் தனது பங்களிப்புக்களை எப்படி வழங்கினார்கள் என்பதையும், அதனால் அம்மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளையும், தற்போதைய மலையக மக்களின் நிலைமைகளையும் இந்நூலில் உணர்வுபூர்வமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.  

இதனை தகவல்களாக அல்லாமல் அமைப்புக்கள், அதன் பின்னணி மற்றும் முன்னெடுத்தவர்களின் பெயர்கள் எனக் குறிப்பாக வெளிக்கொணர்ந்தமை பயனுள்ள தகவல்களாகும்.  

மலையக மக்களின் உரிமைப் போராட்டம் என்று பார்க்கும் போது மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக, அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்ட வரலாறுகள், முதலாளிகளின் தலைமைத்துவம், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் உருவான வரலாறு, இடதுசாரிகளின் வியாபகம், போராட்டங்கள், மற்றும் உயிர் நீத்தவர்கள், தொழிலாளர்களை நேசித்த பிரேஸ்கேர்டிலின் வரலாறு, தொழிற்சங்களின் பிளவுகள் மற்றும் புதிய தொழிற்சங்கள், கட்சிகளின் உதயம், தொடர்ச்சியான அரசசதிகள் மற்றும் அடக்குமுறைகள், மலையகமக்கள் மீதான இனவாதத்தாக்குதல்கள் மற்றும் சிங்களமயமாக்கங்கள், காணிசுவீகரிப்பும் போராட்டங்களும், மலையகத்தில் கல்விப்புரட்சி, இ.தொ.காவின் வீழ்ச்சி, அரசியல் சதிகள் மற்றும் எழுச்சி, மலையக மக்கள் முன்னணியின் உதயம் மற்றும் சந்திரசேகரன் அவர்களின் முனைப்புக்கள், கீழைக்காற்று இயக்கமும் கைதுகளும், வாரிசு அரசியல், மலையகத்தில் இராணுவம், புலனாய்வுப்பிரிவு மற்றும் இனவாதிகளின் அடக்குமுறைகள் மற்றும் தற்போதைய மலையகம் எனக் காலத் தொடர்ச்சியுடன் சம்பவங்களை விபரித்துக்கொண்டு போகின்றமையை உள்ளக்கிளர்ச்சியுடன் வாசிக்க முடிந்தது.  

ஈழப்போராட்டத்தில் மலையக மக்கள் என்ற இரண்டாவது உள்ளடக்கத்தில் வன்னியில் மலையக மக்கள், ஆயுதபோராட்ட முனைப்புகள், இந்தியாவின் ஆயுதப்பயிற்சி மற்றும் ஈரோஸ் அமைப்பின் வகிபாகங்கள், விடுதலை அமைப்புக்களுக்குள் உள்ளக முரண்பாடுகள், மலையகம் திரும்பிய போராளிகள், மலையகத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வு, ஈரோஸ் அமைப்பின் தாக்குதல்கள் குறிப்பாக ரூபவாஹினி கோபுரத்தாக்குதலும் பிரயத்தனமும் அதனால் மலையகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளும், இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையின் கட்டுப்பாடுகள், கைதுகள், சித்திரவதைகள், கந்தபொலவில் கிருஸ்ணாவின் கைதும் ஆயுதங்களைக் கைப்பற்றலும், அதன் பிரதிவிளைவுகளாக மலையகத் தமிழர்களை அரசாங்கம் மற்றும் சிங்கள மக்கள் தீவிரவாதிகளாகப் பார்த்தல், சோதனைச் சாவடிகள், மாணவர்கள் உட்பட தொடர்புபட்டோர் மற்றும் சந்தேகத்திற்கிடமான கைதுகள், இ.தொ.காவின் அரசியல் இலாபசெயற்பாடுகள் மற்றும் காட்டிக்கொடுப்புக்கள், ம.ம.மு சந்திரசேகரனின் பங்களிப்பு, கண்டிப் புலனாய்வுபிரிவின் இடையூறுகள், பிந்துனுவேவ படுகொலை மற்றும் கலவரங்கள், மலையகத்தில் ஈரோஸ், புளொட், டெலோ, மலையக விடுதலை இயக்கம் எவ்வாறு செயற்பட்டார்கள், சிறைக்குள் கைதிகளுக்கு நேர்ந்த அவலங்கள் மற்றும் வடக்கின் நேசக்கரம் என மலையகத்திற்குள் எவ்வாறு ஈழப்போராட்டத்திற்கான பங்களிப்புக்கள் வழங்கப்பட்டன என விபரித்திருக்கின்றார்.  

அவருடைய பார்வையில் ஈரோஸ் அமைப்பின் வகிபாகங்களை அதிகமாக காணமுடிகின்றமை அவருக்கும் ஈரோஸ் அமைப்பிற்கும் இடையிலான பிணைப்பினை தெளிவாக எடுத்துரைக்கின்றது.  

வடக்கு- கிழக்கிற்கு அப்பால் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களும் வடக்கு- கிழக்கிற்கு இடம்பெயர்ந்த மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளையும் அங்கு அவர்கள் ஈழப்போராட்டத்திற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள், இயக்கத்தின் பிரதான தலைமைப் பொறுப்புக்கள் தொடக்கம் போராளி வரை மலையக மக்களின் பங்களிப்புக்களையும் விபரித்திருக்கின்றார். 

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட மலையக சமூகம் ஈழப்போராட்டத்திற்கு மேற்கூறிய பங்களிப்பினை வழங்க முடியுமாக இருந்திருந்தால், அடிப்படை உரிமைகள் கிடைக்கப் பெற்ற ஒரு சமூகமாக இருந்திருந்தால் ஈழப்போராட்டத்திற்கு அளப்பரிய பங்கினை வகித்திருப்பார்கள் என்பது கண்கூடு.  

மலையத்திற்கும் வன்னிக்குமான எனது தொடர்பு உணர்வுபூர்வமானது, ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்து, வீரமரணமும், ஊனமும், பல பாதிப்புக்களுக்கு உள்ளாகிய எனது உறவினர்களின் இரணங்கள் என்றும் ஆறாதது. ஜூலை இனக்கலவரத்தினால் வன்னிக்கு இடம்பெயர்ந்து மீண்டும் மலையகம் திரும்பிய எனது குடும்பம் இராணுவத்தாலும், காவல்துறையாலும் மற்றும் புலனாய்வுத்துறையாலும் சந்தித்த இன்னல்களை என் கண் முன்னே மீண்டும் கொண்டுவந்த நூல் வரதன் கிருஸ்ணாவின் ”வெந்து தனியாத பூமி”.  

இளையோர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனச் சமூக மாற்றத்திற்காகச் செயற்படும் அனைவரும் தெரிந்து, தெளிந்து செயற்பட இந்நூல் உதவியாக இருக்கும் அத்துடன் வடகிழக்கை மலையகத்துடன் இணைத்து தமிழர்கள் என்ற உணர்வுடன் உரிமைகளுக்காக போராட வலுசேர்க்கும் என்ற நம்பிக்கை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஏற்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.