வீடு பேறடைதல் யார் கையில்?

வீடு பேறடைதல் யார் கையில்?

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

வீடு என்பது பலருக்கும் ஒரு கனவு. ஆனால் உண்மையில் அதுதான் வாழ்க்கையின் முதலாவது பேறு. ஆன்மீகத்தில் அதை வீடு பேறு என்பார்கள். ஆன்மாவுக்கு நிறைவைத் தருவது என்பது இதன்பொருள் (முக்தி).  

யதார்த்த வாழ்க்கையில் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றாக இருக்கும் வீட்டைக் கட்டுவதென்பது இலகுவான ஒன்றல்ல. மிகப்பெரிய சவால். மிகமிகக் கடினமான ஒன்று. அதுவும் ஊரில் கீழ்நிலைப் பொருளாதார வாழ்க்கையைக் கொண்டவர்களுக்கு இது இயலவே இயலாத காரியம். இதனால்தான் “கலியாணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப் பார்” என்று சொல்வார்கள். இரண்டுமே அவர்களுக்குப் பெரிய விசயங்கள். 

வீட்டுத்திட்டத்தில் அகப்பட்டோர் 

இப்பொழுது “வீட்டுத்திட்டம்” என்ற ஒன்றினால் சனங்கள் படுகின்ற பாடுகள் என்பது சாதாரணமானதல்ல. தற்கொலை வரை கொண்டு போய் விட்டுள்ளது. வெளியே பார்த்தால் அரசாங்கத்தின் மிகச் சிறப்பான கொடை இதுவென்றே தோன்றும். வீடொன்றைக் கட்டுவதற்கு அரசாங்கம் உதவுகின்றது என்ற மாதிரி. சில உதவிகளை வெளிநாடுகளும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொது அமைப்புகளும் செய்கின்றன. ஆனால், இந்த உதவிகள் என்பவை உதவி என்பதற்குப் பதிலாக உபத்திரத்திலேயே விட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும் போலுள்ளது. காரணம், இந்த வீட்டுத்திட்டம் அல்லது வீடமைப்புக்கான உதவி என்பது போரினால் ஏற்பட்ட வீடழிவுக்கான இழப்பீடேயாகும். 

ஆகவே இது பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு இழப்பீடு. அப்படியென்றால் முதலில் பாதிப்பை மதிப்பீடு செய்திருக்க வேண்டும். அப்படி மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலும் அதற்கான ஆலோசனைகளும் நடந்திருக்க வேண்டும். இதில் மக்கள் அல்லது மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், துறைசார் வல்லுனர்கள் எனப் பலரும் பங்கேற்றிருத்தல் அவசியம். 

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதைப்பற்றி மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்திற் கொண்டு பேசவில்லை. நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த மாகாணசபையும் கருத்திற் கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு எரியும் பிரச்சினை. உயிர் கொல்லும் விவகாரம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் மானத்தோடும் வாழ்க்கையோடும் சம்மந்தப்பட்ட சங்கதி. 

தொடரும் பிரச்சினை 

இப்படி யாருமே பொருட்படுத்தாமல் விட்டதனால் 2010 க்குப் பின்னர் மீள்குடியேற்றத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது இன்றுவரையில் பிரச்சினைகளோடுதான் உள்ளது. ஏறக்குறைய பதினொரு வருடங்களாக கவனிக்கப்படாத பிரச்சினையாக இது நீண்டு கொண்டிருக்கிறது. இதொன்றும் ஐநாவுக்குப் போய்த்தான் தீர்வைக் காண வேண்டிய சங்கதியல்ல. அல்லது இதற்கு இயக்கம் ஒன்றை அமைத்துத்தான் போராடவேண்டும் என்றுமில்லை. ஆனால், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. 

2010 இல் மீள் குடியேற்றத்தோடு தொடங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் (வீடமைப்பில்) அரசாங்கத்தோடு இணைந்து இந்தியா, நோர்வே, சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன. இந்தியா மட்டும் 60 ஆயிரம் வீடுகளுக்கு உதவியது. இப்படித்தான் ஏறக்குறைய 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கு சுவிஸ் உதவியுள்ளது. இங்கே பிரச்சினை என்னவென்றால் முதலில் இந்த உதவி போதாது என்பதேயாகும்.  

நிதி போதாது 

வழங்கப்படும் நிதியானது ஒரு சாதாரண வீட்டைக்கட்டிக் கொள்வதற்கு போதுமானதாக இல்லை. ஆனால் திட்டத்தில் ஒரு பங்கை வீட்டுரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, வீட்டைக் கட்டுவதில் அவர்களுடைய நிதிப்பங்களிப்போ அல்லது உடல் உழைப்புப் பங்களிப்போ இருக்க வேண்டும் என்பதாகும். இதை எல்லோராலும் செய்ய முடியாது. செலுத்தவும் முடியாது. காரணம் இந்த உதவி போரினால் பாதிக்கப்பட்டோருக்கானது. என்றால்,நிச்சயமாக குறிப்பிடப்பட்ட உதவியைப் பெறும் குடும்பத்தில் உழைப்பாளிகள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குடும்பச்  சீவியப்பாட்டுக்கே உழைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அதை விட்டு விட்டு வீட்டுக்கு வேலை செய்து கொண்டிருக்க முடியாது, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு இது இரட்டை நெருக்கடி. 

ஆனால், திட்டத்தில் இந்த நிலைமை கவனத்திற் கொள்ளப்பட்டு உள்ளெடுக்கப்படவில்லை. நிதிப்போதாமையை ஈடு செய்வதற்கு செய்யப்பட்ட தந்திரமாகவே இதைக் கொழும்பு கையாண்டது. பாதிக்கப்பட்டோரின் நிலைமையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?அதைத் தெரிந்தவர்களும் இதைப்பற்றிப் பேசவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு (கொழும்புக்கு) இது வசதியாகி விட்டது. ஆகவே அவர்கள் தொடர்ந்தும் இதே நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். இதில் சில வீட்டுத்திட்டங்கள் ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியனவாக இருந்தன. குறிப்பாக சுவிஸ் வீட்டுத்திட்டம். அதற்கு வழங்கப்பட்ட நிதியும் கூடுதல். அதன் நடைமுறைப்படுத்தல் நடைமுறைகளும் வேறு. கெடுபிடிகள் குறைந்தது. ஏனையவை அப்படியல்ல. அது கழுத்தில் சுருக்கை மாட்டுவதைப் போன்றது. 

பயனாளிகள் தெரிவு 

முதலில் வீட்டுத்திட்டத்துக்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதிலேயே ஒரு போர் தொடங்கும். அதில் புள்ளி அடிப்படையிலேயே தேர்வு என்று சொல்லி ஒரு போர்க்கால நெருக்கடியைப் போன்ற பதற்றத்தைப் பயனாளிகள் மத்தியில் உருவாக்குவார்கள். இதில் இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் பொறுப்புண்டு. அப்படிப் புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பல வீடுகள் வெற்றிகரமாகக் கட்டப்பட்டு ஆட்களில்லாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன. அல்லது அவற்றிற் பலவும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. புள்ளி அடிப்படையில் தகுதியில்லை என்று தவிர்த்து விடப்பட்ட மக்கள் இன்னும் குடிசைகளில் வீடற்றவர்களாகவே உள்ளனர். இதை அந்தந்தப்பகுதிகளில் உள்ள கிராம அலுவர்களில் இருந்து அபிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச செயலர், மாவட்டச் செயலர், ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர், அவருடைய இணைப்பாளர், இணைப்பில்லாதவர், பாராளுமன்ற உறுப்பினர், அவருடைய உதவியாளர், மற்றும் இவர்களின் அடிப்பொடிகள் என அனைவரும் அறிவர். அதைப்போல வீட்டுத்திட்டத்தைப் பெற்றுக் கட்டப்பட்ட வீடுகளில் ஆட்களில்லை. வீட்டுரிமையாளர் குறித்த பிரதேசத்திலேயே இல்லை என்பதையும் இவர்கள் அறிவர். ஆனால், வீடில்லாமல், குடிசைகளில் தொடர்ந்தும் வாழ்கின்றவர்கள் நிறையப்பேருண்டு. இவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அதைப்பற்றிக் கேட்டால் அதற்கு ஆயிரம் காரணங்கள், விளக்கங்கள்  வேறு. 

நுண்கடன் நிறுவனங்கள் 

அப்படியென்றால் இந்தத் தவறு நடந்ததற்கான காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பு?  

இதுவரையிலும் நடந்து முடிந்த வீட்டுத்திட்டத்தினால் உழைத்தது பெரும்பாலும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களே. இது இரந்துகொண்டு வருவோரிடம் தட்டிப்பறிப்பதற்குச் சமனானது. நுண்கடன் திட்டத்தின் கொடுமையைப் பற்றி இரண்டு தடவைகள் சிவஞானம் சிறிதரனும் ஒரு தடவை முருகேசு சந்திரகுமாரும் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்த நுண்கடன் நிறுவனங்கள் வன்னியிலும் கிழக்கில் படுவான்கரை, வாகரை போன்ற பிரதேசங்களிலும் எப்படித் தாண்டவமாடுகின்றன என்பதை இவர்கள் கூட ஆராய்ந்து பார்க்கவில்லை.  

முழுமையடையாத வீடுகள் 

வீட்டைக் கட்டி முடித்தாலும் (பல வீடுகள் இன்னும் முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளன) இப்பொழுதும் கடன் கட்டப்படவில்லை என்று அலைக்கழிந்து கொண்டேயிருக்கின்றார்கள் பலரும். 

இந்தக் கடன் சாதாரணமான ஒன்றல்ல. வலைக்கண்ணியைப் போலப் பெரும் பொறியை உடையது. இதில் ஒருவர் மட்டும் சிக்குவதில்லை. ஒருவரோடு ஒருவராகப் பலரை இணைத்து இந்தப் பொறியை இந்த நிறுவனங்கள் உருவாக்கி விட்டிருப்பதால் கிராமமே சிக்கிவிடுகிறது. இதனால் கிராமத்திற்குள்ளேயே அடிதடி சண்டையெல்லாம் உருவாகி மக்களின் ஐக்கியம், ஒருமைப்பாடு எல்லாம் சிதைக்கப்படுகின்றன. இதில் சிலர் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. ஏனையோர் கடனுக்குமேல் கடன்பட்டு கடைசியில் தங்களையே அடகு வைக்கும் நிலைக்குள்ளாகியதும் நடந்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் படுகின்ற பாடுகள் கொஞ்சமல்ல. கடன் கொடுத்த நிறுவனங்களின் பணியாளர்களிலிருந்து கட்டிடப்பொருட்களைக் கடன் கொடுத்த கடைக்காரர்கள், கட்டுமாண வேலைகளைச் செய்யும் மேசன்மார் வரையில் (எல்லோருமல்ல) கொடுக்கின்ற தொல்லையினால் பல பெண்கள் தங்கள் மானத்தையும் உளத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டியுள்ளது. 

இதையெல்லாம் இப்போதும் ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் மேலும் பல வீடுகள்  கட்டி முடிக்கப்படாமல் அரை குறையாக நிற்கின்றன. ஒதுக்கப்பட்ட இந்த அரை குறை நிதியைக் கூடக் கொடுக்க வழியற்று நிற்கிறது அரசாங்கம். இதற்குள் கடந்த அரசாங்கத்தின் திட்டமிடல் தவறு என்ற கதைகள் வேறு சொல்லப்படுகின்றன. 

இதற்குள் மேலும் ஒரு தொகுதிப் புதிய வீடுகள் வழங்கப்படப்போகிறது என்ற அறிவிப்பும் வந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினையை இனியாவது – காலம் கடந்தேனும் – நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பேச வேண்டும். பேசியே தீர வேண்டும். அல்லது மக்களை இணைத்துப் போராட வேண்டும். ஏனென்றால் இதுவும் ஒரு உயிர்ப்பிரச்சினையே.