— ஆரதி —
தந்தைக்கும் மகனுக்குமிடையில் உள்ள உறவையும் அதில் உள்ள நெருக்கடிகளையும் பேசும் படங்கள் தமிழில் வந்துள்ளன. சிவாஜியின் “தங்கப்பதக்கம்”, கமல்ஹாசனின் “வறுமையின் நிறம் சிகப்பு”, ஜெயம் ரவியின் “சந்தோஷ் சுப்பிரமணியம்”, தனுஷின் “யாரடி நீ மோகினி” போன்றவை உடனடியாக நினைவில் வரக்கூடியவை. இப்பொழுது வந்திருப்பது “ஏலே”.
இது சமுத்திரக்கனியின் படம். ஆனால் அப்படிச் சொல்லி விடவும் முடியாது. இதை ஹாலிதாவின் படம் என்றும் சொல்ல வேண்டும். அப்படியும் சொல்ல முடியாது. இது மஞ்சனம்பட்டிச் சனங்களின் படம் என்றும் சொல்ல முடியும். அந்தளவுக்கு “ஏலே”பாத்திரங்கள், கிராமம், அந்தக் கிராமத்து மக்கள், இயக்குநர் என ஒரு நல்ல இணைவுகளின் உருவாக்கமாகியுள்ளது.

ஹாலிதா சமீம், ஏற்கனவே பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி என இரண்டு படங்களைத் தந்து இளைய பெண் இயக்குநர் என்ற கவனத்தைப் பெற்றவர். இது அவருடைய மூன்றாவது படம். ஆனால், இந்தப் படம்தான் அவர் முதலில் உருவாக்குவதற்கு தயார்ப்படுத்திய படம்.
அதைப்பற்றி அவரே சொல்லியிருக்கிறார், “இந்தப் படத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தேன். நண்பர் ஒருவர் தனக்கும் அப்பாவுக்கும் இடையில் கதைபேச்சு இல்லாமல் இருந்ததைப்பற்றிச் சொன்னார். அது உண்டாக்கிய உணர்வும் கேள்விகளுமே ஏலேவைப் பற்றி யோசிக்க வைத்தது. இந்தப் பிரச்சினையை, இந்த உறவை வைத்து ஒரு கதையை உருவாக்கலாம் என்று நினைத்தேன். அதற்குரிய மாதிரியான கதையையும் களத்தையும் பாத்திரங்களையும் தயார் பண்ணினேன். அதுதான் இப்பொழுது ஏலே ஆகியுள்ளது” என்று.
பொதுவாகவே நம்முடைய குடும்ப அமைப்பு, சமூகச் சூழல் போன்றவற்றினால் வளரிளம் பருவத்தில் உள்ள மகனுக்கும் தந்தைக்கும் இடையில் முரண்களும் இடைவெளிகளும் ஏற்படுவது வழமை. சிறிய வயதில் உலகமே தந்தை என்றிருக்கும் மகன் வளர வளர தந்தையை ஒரு வில்லனைப் போல உணரத் தொடங்குகிறான். இது உயிரியல் விதி என்கிறார்கள் ஆய்வாளர்கள். எந்த விலங்கிடமும் இந்தக் குணவியல்புண்டு என்கிறார்கள்.
வளர வளர மகனைக் குறித்த அச்ச உணர்வும் அவனுடைய வயதை உணராமல் அவன் இன்னும் சின்னப்பிள்ளையே என எண்ணிச் செயற்பட முனையும்போது ஏற்படுவதால் உண்டாகும் அதிகார மனநிலை உணர்வும் எதிர்மறையாக மகனை உணர வைக்கின்றன. இதற்கு மாறாக தந்தையும் மகனும் நண்பர்களாகவே இருக்கின்ற சில விலக்குகள் இருக்கலாம். ஆனால், பொதுவாக இருக்கின்ற தந்தை – மகன் என்ற உறவின் பதின்பருவக்கால முரண்கள் நமக்கும் அனுபவமானவை. இதைப்பற்றி ஏராளம் சினிமாக்கள் உருவாகியுள்ளன. சுகுமாரனின் “கோடைகாலக் குறிப்புகள்” கவிதைகள் இந்த உறவின் விளைவாகவும் அந்தப் பருவத்தின் நீட்சியில் நிகழும் சமூக விளைவுகளைப் பற்றியதுமாகும். இதைவிட பல நூறு சிறுகதைகளில் இந்த விசயம் பேசப்பட்டிருக்கிறது. எத்தனை கோணத்தில் பேசினாலும் அத்தனையும் தவிர்க்கவே முடியாத கரிசனையைக் கோருபவை. ஏலேயும் அப்படித்தானிருக்கிறது.

ஏலேயில் கிராமத்தில் ஐஸ் பழம் விற்கின்ற தந்தை எல்லோருக்கும் இனிப்பாகவும் குளிர்ச்சியாகவுமே இருக்கிறார். வலு பம்பலான ஆள் என்று சொல்வார்களே அப்படி. தமாஷூம் முரணும் குழப்பங்களுமான ஒரு மனிதராக. சிலபோது கனிந்து விடுகின்ற மனிதர். சிலவேளை கசப்பானவராகி விடுகின்றவராக.
அப்படியிருந்தாலும் கிராமத்தில் அவருக்குப் பெரிய பிடிப்புண்டு. கிராமத்தவர்களுக்கும்தான். ஏன், நமக்குக் கூட இந்த அனுபவம் உண்டல்லவா! எங்கள் தெருக்களில் ஐஸ்க்கிறீம் விற்கின்றவரைச் சுற்றி பிள்ளைகள் ஓடுகின்ற காட்சியும் நினைவும் மறக்கவே முடியாதது. எங்களுடைய இளமைப்பருவத்தின் இனிப்பான நினைவுகளில் அதுவும் ஒன்று. இதைப்பற்றி நான் ஒரு கவிதையைக் கூட எழுதியிருக்கிறேன். அந்தளவுக்கு ஐஸ்கிறீம் விற்பவருக்கும் நமக்கும் இடையிலான இனிய உறவொன்றுண்டு. அந்தப் பாத்திரத்தை வைத்து ஒரு படம் வந்திருக்கிறது என்றால் அது ஐஸ்கிறீமைப்போல இனிப்பானதே.

உண்மையும் அதுதான். படத்தின் கதையும் இனிப்பானதே. ஆனால், தந்தை மகன் உறவுதான் அப்படியில்லை. அது கசப்புகள் நிறைந்தது. என்னதான் பிள்ளைக்கு ஐஸ்கிறீமை இனிப்பாகக் கொடுத்தாலும் தனக்கும் மகனுக்குமிடையிலான உறவை இனிப்பாகக் கொடுக்க முடியவில்லை அந்தத் தந்தையினால்.
இதனால் தந்தையை விட்டு, ஊரை விட்டே போய்விடுகிறான் மகன். பிறகு தந்தை இறந்து விட்டார் என்ற சேதி அறிந்து ஊருக்கு வருகிறான். இடையில் ஏறக்குறைய ஏழு எட்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் மகனுக்கும் தந்தைக்கும் இடையினான இடைவெளி வாழ்க்கை, அதன் உண்மை முகம், அதற்குள்ளிருக்கும் உயிரோட்டம், அது உண்டாக்கும் புரிதலே படத்தின் மையப்படுத்தல். இறந்ததாகச் சொல்லப்படும் தந்தையைக் காண வரும் மகன் அடைகின்ற துயரம் அதன்பொழுது ஏற்படுகின்ற புரிதலும் முக்கியமானவை. இது கூட நம்முடைய வாழ்க்கையில் அனுபவமாவதுண்டு. காலம் கடந்து ஏற்பட்டுக் கொள்ளும் ஞானமாக.
ஐஸ்கிறீம் விற்பவராக அப்பாவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தில் பெருமளவுக்கும் நிறைந்திருக்கும் பாத்திரம் அவருடையது. மகனாக மணிகண்டன் நடித்துள்ளார்.
ஏனைய பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கிராமத்து மக்களே நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட பங்கேற்றிருக்கிறார்கள் என்று சொல்வதே சரி. அதுவே நியாயம். அவர்களுடைய சூழலில், அவர்களுடைய வீடுகள், தெருக்களில் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களை வைத்தே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹலிதா. இது ஒரு அசாத்தியமான ஆனால், வெற்றிகரமான முயற்சி. அந்தக் கிராம மக்களை வைத்தே அவர்களுடைய கதையை, வாழ்க்கையை கலையாக்கும் முயற்சிகள் ஒன்றிரண்டு ஏற்கனவே நடந்துள்ளது. அதில் ஒன்று லெனின் பாரதியின் “மேற்குத்தொடர்ச்சிமலை”.பல படங்கள் கதையைக் கொண்டு போய் ஒரு கிராமத்தில் பொருத்துவது. இது வேறு. அந்தக் கிராமத்குள்ளிருந்து கதையை எடுப்பது. அல்லது கையில் உள்ள கதையை அந்தக் கிராமத்தின் மனதில் வைத்து இழைப்பது. இதில் ஹலிதாவுக்கும் வெற்றி. சமுத்திரக் கனிக்கும் வெற்றி. படத் தயாரிப்புக் குழுவினருக்கும் வெற்றி. கிராமத்து மக்களுக்கும் வெற்றி. நமக்கும் வெற்றி கிட்டிவிடுகிறது.

