ஜெனீவா விவாதங்கள் : இலங்கை அரசு பெரும் ராஜதந்திர நெருக்கடிக்குள்?

ஜெனீவா விவாதங்கள் : இலங்கை அரசு பெரும் ராஜதந்திர நெருக்கடிக்குள்?

  — தொகுப்பு : வி. சிவலிங்கம் — 

தற்போது ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இடம்பெற்றுவரும் விவாதங்கள் இலங்கை அரசின் பலவீனமான அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி வருகிறது.  

இவ் வாதங்கள் தொடர்பாக வெளிவரும் ஊடக செய்திகளை அவதானிக்கையில் இலங்கை அரசின் ஜெனிவா நடத்தைகள் சிரிப்புக்குரியனவாக மாறி வருவதாகத் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரச நிர்வாகத்தின் வெவ்வேறு பிரிவுகள் ஒன்றிற்கொன்று தொடர்பற்றுச் செயற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.  

இதற்கான பிரதான காரணம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுத் தலைவரின் அறிக்கையை ஒரு புறத்தில் முழுமையாக நிராகரிப்பதாக உள் நாட்டில் தெரிவிக்கும் அதேவேளையில் இலங்கையின் ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி அத்தீர்மானத்தின் சில பகுதிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் உண்மையில் அரசு இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளதாக மக்களுக்கு உண்மையை மறைப்பதாக கூறப்படுகிறது.  

தற்போது இப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள பிரதான நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தாம் தயாரித்துள்ள ‘பூச்சிய அறிக்கை’இல் சில சொற் பதங்களை மாற்றச் சம்மதமளித்துள்ளன. ஆனால் இம் மாற்றங்களை அவதானிக்கையில் இவை மேலும் கடுமையான பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இவை தொடர்பாக நடைபெற்ற உத்தியோகப் பற்றற்ற விவாதங்களில் இவை பேசப்பட்டன. 

உதாரணமாக, ஆரம்ப ஆணைக்குழு தீர்மானங்களில் ‘தேசிய நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகளைப் பேணுதல்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவை மேலும் விரிவாக்கப்பட்டு,  

‘…..மனித உரிமைச் சபையின் S 11/1 தீர்மானத்தின் அடிப்படையில் சபை இலங்கை நிரந்தர அரசியல் தீர்வை எட்டும் அடிப்படையில் நீடித்த சமாதானத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் பரந்த அடிப்படையிலான பேச்சுவார்த்தைளில் ஈடுபடப்போவதாகவும், அவை நாட்டின் சகல இனக் குழுமங்களின் உரிமைகளை மதித்து மேற்கொள்ளப்படும் என 2009ம் ஆண்டு மே 26ம் திகதி அன்றைய ஜனாதிபதிக்கும், அப்போதைய ஐ நா செயலாளர் நாயகம் பான் கி மூன் ஆகியோருக்கிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அவை சர்வதேச மனிதநேய சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்களின் பிரகாரம் பொறுப்புக் கூறலுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுத்தப்படும்’ என வாசகம் மாற்றப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஐ நா செயலாளர் நாயகம் ஆகியோர் மத்தியிலே பொறுப்புக்கூறல், மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்து விசாரணை செய்வதாக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதை மீளவும் நினைவூட்டப்பட்டுள்ளது.  

அதைப் போலவே பயங்கரவாத தடுப்பு தொடர்பாக கூறப்படும் பகுதிகளில் பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது.  

‘…..பயங்கரவாதம் தொடர்பாக பின்பற்றப்படும் அணுகுமுறைகள், வன்முறையை ஊக்குவிக்கும் தீவிரவாத செயல்கள், அதற்கான வெவ்வேறு செயற்பாடுகள் போன்றனவற்றை எத் தரப்பினர் மேற்கொண்டாலும் அவை முழுமையாகக் கண்டிக்கப்படுவதோடு, அதனை யார், எந்த நோக்கங்களுக்காக குறிப்பாக நிதித் தேவைக்காக அல்லது பொருள் ஆதாயத்திற்காக அல்லது பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக மேற்கொண்டாலும் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணங்கள் அல்ல’ ….. 

இவ்வாறு அந்த அறிக்கையில் சுமார் 24 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை மேலும் பலமுள்ளதாக மாற்றம் பெற்றிருக்கிறது. ஐ நா மனித உரிமை ஆணைக்குழு புதிதாக எதனையும் மேற்கொள்ளாது மகிந்த – பான் கி மூன் ஆகியோருக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த வாசகங்களையே மூலமாகப் பயன்படுத்தியுள்ளது.  

இவ்வாறான மாற்றங்களின் பின்னணியில் இதனை எதிர்ப்பதாயின் பொதுவாகவே அரசின் இரண்டாம், மூன்றாம் கட்ட அதிகாரிகளே அவற்றிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும்படி கோருவார்கள். ஆனால் இம்முறை எதிர்பாராத வகையில் ஐ நா மனித உரிமைச் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சி ஏ சந்திரபிரேமா தாமே முன்வந்து மாற்றங்களைக் கோரியுள்ளார்.  

முக்கிய இணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பது மனித உரிமை என்ற பெயரில் அரசியல் அறிக்கையாக உள்ளது எனவும், அவை இலங்கையை நியாயமற்ற விதத்தில் அணுகுவதாகவும் குற்றம் சாட்டினார். அவர் தமது உரையின்போது மிகவும் அமைதியற்றுக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாசகர்களின் நன்மை கருதி அந்த அறிக்கையின் பிரதான பகுதிகளில் ஒன்றான ‘செயற்பாட்டு பகுதி 7’ கீழே தரப்படுகிறது. 

‘ … கடந்த வருடம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மாறிவரும் மனித உரிமை மீறல் நிலமைகளை அதாவது அதற்கான ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளைத் தருகிறது. குறிப்பாக அதிகரித்துச் செல்லும் சிவிலியன் நிர்வாகங்களில் ராணுவ மயமாக்கல், சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாடுகளிலும், மனித உரிமையைப் பேணவேண்டிய நிர்வாகங்களில் தலையீடுகள், சட்டத்தினைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளின் அதிகரிப்பு, பொறுப்புக் கூறும் நிலமைகளில் அரசியல் தலையீடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் தலையீடு, சுயாதீனமான மத உரிமைகளைத் தடுக்கும் வகையில் செயற்படுதல், தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினர் மிகவும் அதிகரித்த அளவில் ஒதுக்கப்படுதல், அம் மக்கள் மீதான அதிகரித்த கண்காணிப்பு, தலையீடுகள், கட்டுப்பாடுகள், ஊடக சுதந்திர மறுப்பு, சிவில் சமூக செயற்பாடுகள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாடுகள், சுயாதீனமான செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருங்கிச் செல்லுதல், இறந்தவர்களை நினைவு கொள்ளும் செயற்பாடுகளில் தடைகள், இறந்தவர்களின் நினைவிடங்களின் அடையாளங்களை அழித்தல், சித்திரவதைகள், மனித விழுமியங்களை கீழ்மைப்படுத்தும் வழக்குகள், பால் அடிப்படையிலான கீழ்மைப்படுத்தல்கள், கடந்த சில காலமாக அந் நிலமைகளை மாற்ற எடுத்த முயற்சிகளை மீளவும் பின்னோக்கித் தள்ளும் நடவடிக்கைகள் போன்றன கடந்தகால தகாத செயல்கள் மீளவும் எழுவதற்கான அடையாளங்களாக உள்ளன…..’ 

இவ்வாறான பல குற்றச்சாட்டுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே குறிப்பிட்ட பல சம்பவங்கள் கடந்தகால இருள் நிறைந்த நாட்களை நோக்கி நாடு மீண்டும் செல்வதற்கான அச்சம் தரும் எச்சரிக்கைகள் என ஆணையாளர் தெரிவித்திருந்தார்.  

மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த அச்சமூட்டும் தோற்றப்பாடுகள் குறித்து இலங்கை அரசினால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை. இந் நிலையில்தான் இந்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகக் கூறிய அரசு தற்போது  தனது நிரந்தரப் பிரதிநிதியைப் பேச அனுமதித்தது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆதரவாக செயற்பட்ட போதிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.  

இவ் விவாதங்களில் நேரடியாக ஈடுபட்ட இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனது உரையில் இலங்கையில் மத சுதந்திரத்திற்கான சகல வாய்ப்புகளும் உண்டு எனவும், தமது நாட்டின் மத உரிமைக்கான வாய்ப்புகள் என்பது ஏனைய நாடுகள் பின்பற்றுவதற்கான சிறந்த மாதிரியாக அமையும் என்றார். ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ போர் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விதந்துரைகளை ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைத்துள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் ஆரம்பித்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் அதற்கெதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.  

நாட்டின் சிவிலியன் நிர்வாகத்திற்குள் ராணுவத்தினரின் தலையீடுகளை அவர் நியாயப்படுத்தினார். அவர் தனது விவாதத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகளை உதாரணம் காட்டினார். உதாரணமாக சில நாடுகளில் அரசு மாறும்போது நிர்வாகமும் மாறுகிறது. அமெரிக்க அரசில் சுமார் 4000 அதிகாரிகள் மாறினர். அது போலவே இலங்கையிலும் அவ்வாறான மாற்றங்களைச் செய்ததாகவும். இலங்கையில் 20 முன்னாள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளே அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர் என நியாயப்படுத்தினார். 

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மிகவும் மோசமான நிர்வாகச் சிக்கல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரசின் போலி நியாயங்களை அரச அதிகாரிகளே நியாயப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சர்வதேச அளவில் ஏற்படுத்தப்படும் அவமானம் என்பது வெறுமனே ஆட்சியாளருக்கு உரித்தானதாக நாம் எண்ண முடியாது. நமது தாய்நாட்டின் கௌரவம் சில பதவி வெறி பிடித்த சந்தர்ப்பவாதிகளால் விற்கப்படுவது குறித்து சகலரும் சிந்திப்பது அவசியமாகிறது.