மூன்று முடிச்சு : இது ஒரு அரசியல் வடமோடி நாட்டுக்  கூத்து!!. (காலக்கண்ணாடி : 26)

மூன்று முடிச்சு : இது ஒரு அரசியல் வடமோடி நாட்டுக் கூத்து!!. (காலக்கண்ணாடி : 26)

—- அழகு குணசீலன் —-

மூன்று முடிச்சு….!  

வடமோடி நாட்டுக் கூத்து!!. 

அண்ணாவியார் : விசேட அதிரடி சுமந்திரன். 

கொப்பி மனேச்சர் : வன்னி ராஜா சத்தியலிங்கம். 

கட்டியகாரன் : பிற்பாட்டும் சல்லாரியும் சிறிதரன்.

மன்னன் : தமிழரசன் சம்பந்தர் ஐயா. 

மூத்த இளவரசர் : வடக்கு ராஜா மாவை. 

இளைய இளவரசர் : கிழக்கு ராஜா சாணாக்கியன். 

எதிர்ச்சண்டை நாயகன் : ரெலோ செல்வம். 

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் அண்மையில் வவுனியாவில் நடந்து முடிந்திருக்கிறது. 

எதற்காகவோ கூடியவர்கள் என்னெல்லாமோ பேசி, என்னவோ முடிவுகளை? எடுத்திருக்கிறார்கள்.   

ஆடு அறுப்பதற்கு முன் அதை அறுப்பது போல……. சில விடயங்கள் நடந்தேறி உள்ளன. 

எல்லாம் அண்ணாவியாரின் தலையும், தாளமும்தான். ஆட்டக்காரர்கள் அண்ணாவியாரின் தாளத்திற்கு அச்சொட்டாக ஆடியிருக்கிறார்கள்.  

கட்டியகாரன் அரசர் வருகைக்கு முன் களரியில் தோன்றி கட்டியம் சொல்பவன். அரசரின் வருகையை பார்வையாளர்களுக்கு அறிவிப்பவன்.   

அதனால்தான் ஒரு விடயத்தினை முன்கூட்டியே குறிப்பிடும்போது கட்டியம் கூறுதல் என்று தமிழ் மரபு கூறுகிறது. 

“மூன்று முடிச்சு” வடமோடி நாட்டுக்கூத்தில் கட்டியகாரனாகவும் அண்ணாவியாருக்கு பிற்பாட்டுப்பாடி, சல்லாரியும் அடிக்கும் சிறிதரன் கூறிய கட்டியம் என்ன? 

அண்ணாவியார் விசேட அதிரடி சுமந்திரனின் தாளக்கட்டுக்கு சற்றும் பிசகாமல் ஆடும் இந்த கட்டியக்காரனின் கட்டியத்திற்குப் பின்னால் ஒழிந்திருக்கும் கசக்கும் உண்மைகள் எவை? 

கூத்தமைப்பின் கூத்தர்களைப் புறந்தள்ளி தமிழரசு சுடுகுது மடியைப் பிடி என்று தனித்து மாங்காய் பறிக்கப்போனதன் நோக்கம் என்ன? 

அவசர அவசரமாக மாவையரையும், சாணக்கியரையும் முதலமைச்சர் வேட்பாளர்களாக வவுனியாவில் அரங்கேற்றம் செய்ய வேண்டியதன் தேவை என்ன.? 

அண்ணாவியாரின் ஆலோசனையில் கட்டியக்காரன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவிக்கும் சாட்டோடு சாட்டாக கட்டியம் கூறிவிட்டார். வடமோடியின் கொப்பி மனேச்சர் சத்தியலிங்கம் செயலாளராம்? 

தமிழர்தாயகம் பிரிக்க முடியாதது என்பார்கள். பதவியை வடமோடிக்குள் மடக்க வடக்கு, கிழக்கு என்று மட்டும் அல்ல வன்னியும் என்று கூறுபோடுவார்கள். அப்போதுதான் 1/2 :1/2 (50:50) என்றில்லாமல் 2/3:1/3 (67:33) என்று மேலாதிக்க மூல உபாயத்தில் சமத்துவம் பேசலாம். 

ஆக, இந்த வடமோடி மூன்று முடிச்சு கூத்தின் கதைச் சுருக்கம் இதுதான். 

1. தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி கிழக்கிற்கு மறுப்பு. 

2. மாவைக்கும், சாணக்கியனுக்கும் பாராளுமன்ற அரசியலுக்கு முழுக்கு. 

3. கூட்டமைப்பு- தமிழரசு தலைமைப் பதவியை சுமந்திரனும், பேச்சாளர் பதவியை சிறிதரனும் பறிப்பு. 

4. கூட்டுக்கட்சிகளுக்கு வடமோடியில் ஆப்பு. 

5. 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ நாங்கள் சங்கீதக் கதிரையில் இடம்பிடிக்க தயார் என்று இந்திய மோடிக்கு அறிவிப்பு. 

நுனிப்புல் மேய்பவர்களுக்கும் வெளிப்பார்வைக்கும், ஊடகச் செய்திகள் அழகான ஆலம்பழம். உடைத்து உள்ளே உற்றுப் பார்த்தால்தான் உள்ளே உள்ள புழுவும், அதன் நளின நெளிவும் தெரியும். 

கூட்டத்தில் சுமந்திரனின் சங்கை ஊதியிருக்கிறார் சிறிதரன். தமிழரசின் சிந்தனை தொழிற்சாலையாக செயற்படும் சுமந்திரன், சிறிதரன் என்ற தன் ஊதுகுழலை பிற்பாட்டுப்பாட விட்டு மெதுவாக ஒரு கல்லில் ஒரு குலை மாங்காயை வீழ்த்தப்பார்க்கிறார்.   

சுமந்திரன் வைத்துள்ள இந்தப் பொறியின் மூன்று முடிச்சுகளையும் அவிழ்க்கிறது காலக்கண்ணாடி. 

#. முடிச்சு ஒன்று:  

********************* 

தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்படும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழரசின் முன்னாள் செயலாளர் துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் விவகாரத்தில் அழுத்தங்கள் மூலம் பதவிதுறக்க நிர்ப்பந்திக்கப்பட்டு பதவியை துறந்தவர். அப்போது செயலாளர் பதவி கிழக்கிற்கே வழங்கப்படும் என்று பலரும் நம்பினார்கள். 

இந்த நிலையில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க மாவையினால் முன்னாள் பா.உ. பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டார். 

இவரின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் தான் அண்மையில் எழுச்சிப் பட்டறை நடாத்தப்பட்டது. இவருக்கு அல்லது மட்டக்களப்பின் முன்னாள் பா.உ.கள் எவருக்காவது செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழரசின் செயலாளர் பதவிக்கு மூத்த போராளி “பாதர்” மற்றும் முன்னாள் அரச அதிபர் உதயகுமாரின் பெயர்களும் கூட அடிபட்டன. 

இந்த நிலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு, ஏற்கனவே சுமந்திரன் வகுத்திருந்த திட்டத்தை எப்போதும் சுமந்திரனின் வாயாக இயங்கும் சிறிதரன் வெளிப்படுத்தி உள்ளார்.  

இதற்குப் பின்னால் ஒருவகையான உளவியல் இருக்கிறது. இனி எவரும் தமிழரசுக்குள் இன்னொரு பெயரை குறிப்பிட முன்வருவது கஷ்டம். நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கும் மனநிலை ஏற்பட்டுவிடும். இது சுமந்திரன் திட்டத்திற்கு இலகுவில் வழி விட்டுவிடும். 

கிழக்கு தமிழரசார் மௌனமாகி விடுவார்கள். ஏனெனில் இது வடக்கு, கிழக்கு பிரதேச விவகாரமானால் எதிர்த்தரப்பினருக்கு வலுசேர்த்துவிடும். இது போன்ற பல நிகழ்வுகள் இராசமாணிக்கம், இராசதுரை முதல் சாணக்கியன் வரை தொடர்ந்துள்ளன. 

கிழக்கு தமிழரசார் வடக்கு தலைமைகள் கிழக்கை புறக்கணிக்கின்றன அல்லது கிழக்கிற்கான சம பங்கை தரமறுக்கின்றனர் என்பதை அனுபவ ரீதியாக, மனதளவில் ஏற்றாலும் வெளியில் பேச தயங்குகின்றனர்.  

ஆக, சம்பந்தருக்கும், மாவைக்கும் பின்னர் தலைவர் பதவியையும், தனக்கு நம்பிக்கையான, பொருத்தமான வடக்கு பிரமுகர் ஒருவரை செயலாளராகவும் நியமிக்க சுமந்திரன் போட்ட முடிச்சு இது.  

கொப்பி மனேச்சர் சத்தியலிங்கம் அண்ணாவியாரின் தாளத்திற்கு ஆடக்கூடியவர். வடக்கைச் சேர்ந்தவர் என்பதால் தன் நம்பிக்கையிலும், கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடியவர் என்பதால் சுமந்திரனின் தெரிவு சத்தியலிங்கம். 

தமிழரசின் தலைவர், செயலாளர் பதவிகளை வடக்கில் வைத்துக்கொண்டு வேண்டுமானால் ஒரு போடுகாய் பொருளாளர் பதவியை கிழக்கில் கொடுத்து மேலாதிக்க சமரசம் செய்வது இந்த முதல் முடிச்சின் நோக்கம். 

தமிழரசின் தலைவர், செயலாளர் பதவிகளில் ஒன்றை கிழக்கிற்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடவும், உட்கட்சி போராட்டம் நடாத்தவும் கிழக்கு தமிழரசார் தயாரா? இவர்களின் இதுவரையான மௌனத்தை சுமந்திரனின் சகுனி இராஜதந்திரத்திற்கான சம்மதம் என்று கொள்ளலாமா? 

#. முடிச்சு இரண்டு: 

*********************** 

சுமந்திரன் போட்டுள்ள இரண்டாவது முடிச்சே இந்த நாட்டுக்கூத்தின் முக்கிய கருப்பொருள். தமிழரசின் பாராளுமன்ற அரசியலில் சுமந்திரனுக்கு நிகரான, அவருக்கு சவாலாக செயற்படும் ஆற்றலும், திறனும், மொழிவளமும் உள்ள ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்கமுடியாது. 

சாணக்கியன் சட்டவாதி இல்லை என்பதனால் பாராளுமன்ற சட்டவாக்க விவகாரம் தன் கையில்தான் இருக்கும் என்பது சுமந்திரனுக்கு தெரியும். 

ஆனால் இளமையும், சிங்கள, முஸ்லீம் பாராளுமன்றவாதிகளுடன் அதிக தொடர்பும் உள்ளவர் சாணக்கியன். ஏன்? ராஜபக்சே குடும்பத்தினருடனும், பௌத்த துறவிகளுடனும் சாணக்கியனுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இவை சுமந்திரனுக்கு புளியைக்கரைக்கின்ற விடயங்கள். 

இன்றைய தமிழ்த்தேசிய அரசியலில் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான போட்டியின் தாற்பரியம் என்ன? அரசியல் கொள்கை வேறுபாடா? இல்லவே இல்லை. எல்லோரும் பேசுவது தேசியம் என்ற பெயரில் அடைய முடியாத இலக்கு. இது வேறுபாடல்ல மிகப்பெரிய ஒற்றுமை. 

யாழ்.மேலாதிக்க குணாம்சமான சட்டம், மொழி திறமைகளின் அடிப்படையிலான வெறும் வரட்டுக் கௌரவத்திற்கான போட்டியே இவர்களுக்கிடையில் நிலவுகின்றது. இது அதிகாரப் போட்டியையும், தலைமைத்துவ போட்டியையும் நானா? பெரிது நீயா?பெரிது என்று தேசியத்தின் பேரால் தமிழ்மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் மேல்தட்டு அரசியல். 

வித்துவான் விற்பன்னத்தனம். இந்த அதிகாரப்போட்டி சாணக்கியனுடனும் ஏற்பட வாய்ப்பு உண்டு என அஞ்சுகிறார் சுமந்திரன். வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதை எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தனை முடிச்சுக்களையும் போட்டு சாணக்கியனின் குரல்வளையை நசுக்க அவர் தயாராகவே உள்ளார். 

இன்னொரு விடயம் மாவையும், சாணக்கியனையும் பாராளுமன்ற அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் கட்சித்தலைவர் பதவி மட்டுமல்ல, பாராளுமன்றத் குழுத்தலைவர் பதவியையும் தான் கையகப்படுத்தலாம், ஏன் தப்பித்தவறி எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தாலும் அதுவும் அவருக்குத்தான். 

தமிழரசு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மாவை, சாணக்கியன் இல்லாத பாராளுமன்றத்தில் அமைச்சராவதற்கான வழியும் இதன் மூலம் சுமந்திரனுக்கு திறக்கப்படுகிறது. 

இதனால்தான் சர்ச்சைக்குரிய, பல்வேறு விடயங்கள் முழுமையாக இன்னும் தீர்க்கப்படாத, அவர்களின் வார்த்தைகளில் அதிகாரங்களற்ற மாகாணசபை என்ற கிணற்றுக்குள் இவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு தான் தப்பிக்கொள்ளவும், பதவிகளில் குறிவைக்கவும் சுமந்திரன் போட்ட திட்டம் இது. 

சிலவேளைகளில் மாகாணசபை முறை ஒரு காலத்தில் ஒழிக்கப்பட்டால் மாவைக்கும், சாணக்கியனுக்கும் கல்தா. இருந்ததையும் இழந்தாய் போற்றி. 

முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்று சாணக்கியன் முதலமைச்சர் ஆகலாம் என்ற கட்டியக்காரனின் காரணம் சிறுபிள்ளைத்தனமானது. 

இது சாணக்கியனை உசுப்பேற்ற போடப்பட்ட சீனிமிட்டாய்.  

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு. ஜனாஸா அடக்கத்திற்கும் எதிர்ப்பு. இந்த சீத்துவத்தில் முதலமைச்சராக முஸ்லீம்களின் வாக்குகள் வேண்டும். இவ்வளவு விரைவாக மேலாதிக்க மனநிலை தனது சுய ரூபத்தைக் காட்டும் என்று எந்த முஸ்லீமும் எண்ணியிருக்க மாட்டான். முஸ்லீம்கள் கடந்த காலத்தை திரும்பிப்பார்க்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழரசு தனித்து ஆட்சி அமைக்க முடியாது. முஸ்லீம்களின் ஆதரவுடன் சாணக்கியன் முதலமைச்சராவது முயல் கொம்பு. தேசியக்கட்சிகளுடன் இணைந்து தான் முஸ்லீம், தமிழ் கட்சிகள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு  அதிகமாக உள்ளது.  

இந்த நிலையில் சாணக்கியனை பலி கொடுத்து தமது மேலாதிக்க பேராசையை அடையப் பார்க்கிறார் சுமந்திரன். தேசிய அரசியலில் இருந்து சாணக்கியனை அகற்றி, செல்வாக்கை இழக்கச்செய்து பா.உ.வில் இருந்து மாகாணசபை உறுப்பினர் ஆக்கப்பார்க்கிறார் சுமந்திரன். 

எப்படியோ மாவையையும், சாணக்கியனையும் மாகாணசபைக்குள் இழுத்து விட்டால் திண்ணை காலியாகும் என்பதுதான் சுமந்திரனின் சூத்திரம் மட்டுமல்ல சூட்சுமமும் கூட. 

#.முடிச்சு மூன்று: 

********************* 

முதல் இரண்டு முடிச்சுக்களையும் இறுக்கினால் தமிழரசின்- கூட்டமைப்பின் தலைவர் பதவியை சுமந்திரனும், செயலாளர் பதவியை சத்தியலிங்கமும், பேச்சாளர் பதவியை சிறிதரனும் அலங்கரிப்பார்கள். 

நம்மவர்களுக்கு பார்வையாளர்கள் பதவி போதும்தானே! 

சித்தார்த்தன் வாயே திறக்கவில்லை. நமது கிழக்காரும் அவர் போன்றுதான் மௌனமாக இருக்கிறார்கள். வவுனியாக் கூட்டத்தில் கூட இவர்கள் பார்வையாளர்கள் தானாம்.  

ரெலோ செல்வம் மட்டும் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பு கட்சிகளைப் புறக்கணித்த தமிழரசின் இந்தப் போக்கு, தமிழ்தேசியம் கதிரைகளுக்கும், பதவிகளுக்குமான வெறும் வெற்றுவார்த்தை என்பதை வெளிப்படுத்துகிறது. 

இந்த அறிவிப்பின் மூலம் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு மாகாணசபை முதன்மை வேட்பாளர் ஆகுவதற்கான கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. 

ஏன்? பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் முதன்மை வேட்பாளருக்கு தகுதியானவர்களா? 

சரி. அப்படியே வைத்துக்கொண்டாலும் ஜனாவை கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக நிறுத்த முடியாதா?  

ஜனா, சாணக்கியனைவிடவும் பாராளுமன்ற அனுபவமும் மாகாணசபை அனுபவங்களையும் கொண்டவர். அது மட்டும் அல்ல தமிழ்த்தேசிய  அரசியலில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அனுபவம் உள்ளவர்.  

தமிழரசு திருமலையையும், அம்பாறையையும் அனாதரவாகவிடுவதேன்?  

P2P க்கு மட்டும்தான் அம்பாறையும், திருமலையும் தேவையா? இந்த மாவட்டங்களில் முதன்மை வேட்பாளருக்கு தகுதியானவர்கள் இல்லையா? 

வடமாகாணத்தை தமிழரசும், கிழக்கு மாகாணத்தை ஏனைய கூட்டமைப்பு கட்சிகளுக்கும் ஒதுக்கி தமிழ்தேசியத்தின் ஒற்றுமையை காட்ட தமிழரசு தயாரா? 

ஆக, மூன்றாவது முடிச்சு சுமந்திரன் கூட்டுக்கட்சிகளின் கழுத்தில் போட்ட சுருக்கு! குறிப்பாக ரெலோவுக்கு வீசப்பட்ட வீசு கயிறு!! 

தமிழரசும் மேலாதிக்க சிந்தனையும்: 

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றை வரைபவர்கள் மேலாதிக்க கருத்தியலை தவிர்த்து நகர முடியாது. இந்த வரலாற்றுப் பாதையில் இது ஒரு புதியதல்ல. வடக்கு – கிழக்கு சம உரிமை விவகாரத்தை பிரதேசவாத சாயம் பூசுவதன் மூலம் குறுங்காலத்திற்கு மறைக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் அதனைச் செய்ய முடியாது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய கிழக்கு அரசியல். 

கிழக்கு மக்களுக்கு என்ன விசேட பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று கூறும் வடக்கு மேலாதிக்க தலைமைகள் சிங்கள மேலாதிக்க தலைமைகளின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். 

ஏனெனில் சிங்கள மேலாதிக்க தலைமையும் ஒட்டுமொத்த தமிழர்களைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்கிறது. 

நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்று அது கூறுகிறது.  

இதைப் புரிந்தால்தான் கிழக்கு மக்களை வடக்கு தலைமைகளும் புரிந்து கொள்ள முடியும். 

இங்கு ஒரேயொரு காட்சியை மட்டும் காலக்கண்ணாடி காட்சிப்படுத்த முனைகிறது. 

கிழக்குமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வது யார்? ஒரு பழம்பெரும், ஜனநாயக மரபுகளைக் கொண்ட தமிழரசுக்கட்சி கிழக்கு மக்களின் அரசியல் உரிமையை பறிப்பது ஏன்? 

வடக்கை சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும், சிறிதரனும் திட்டம் போட்டு கிழக்கு மக்களின் அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிக் கட்டமைப்புக்கும், பிரதிநிதிகளுக்கும் மாறாக சிறிதரன் முதலமைச்சர் வேட்பாளரை முன் அறிவிப்பு செய்வதற்கு அவர் யார்? 

சிறிதரன் கிழக்கு மாகாணத்தவரா? 

கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதியா? 

கிழக்கு மாகாண தமிழரசுக்கட்சிக் கிளையின் உறுப்பினரா? 

கிழக்கின் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஒன்றைச்சேர்ந்தவரா? 

கிழக்குமாகாண, மாவட்ட தமிழரசுக்கட்சி கிளைகளுடன் இது பற்றி கலந்துரையாடப்பட்டதா? 

அப்படியானால் இந்த அறிவிப்பை கிழக்கு பிரதிநி ஒருவர் செய்யாமல் சிறிதரன் செய்வதற்கு அவருக்கு  இருக்கின்ற உரிமை என்ன? 

வவுனியா கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசின் கிழக்கு முக்கியஸ்தர்கள் திருவாய்மலர்வார்களா? 

எங்கள் அரசியல் தலைமையை தேர்வுசெய்யும் உரிமை எங்களுக்கு -கிழக்கு மக்களுக்கு உரியது. 

இது எங்கள் அடிப்படை அரசியல் தேர்வுரிமை. 

இந்த உரிமையை எங்களிடம் இருந்து பறிக்கவேண்டாம். 

பறிப்பதற்குப் பெயர்தான் மேலாதிக்கம்.  

மேலாதிக்கமா? அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.  

மேலாதிக்க யானைப் பசிக்கு இது வெறும் சோளப்பொரி.!