— விஜி – பிரான்ஸ் —
நம்மை சுற்றியிருக்கும் மதம், கலாசாரம், பண்பாட்டு அம்சங்கள் யாவுமே ஆணுலக சிந்தனை மையத்தில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண் உலக சிந்தனை முறைமையை தலைமுறை தலைமுறையாக கடத்தி வருவதற்கு மொழி எனும் ஊடகமே பயன்பட்டு வருகின்றது. மொழியால் கட்டமைக்கப்படும் சொற்களும் அர்த்தங்களுமே ஆணாதிக்க உலகை தொடர்ச்சியாக பேணவும் பாதுகாக்கவுமான கடமையைச் கச்சிதமாகச் செய்து வருகின்றன.
துரதிஷ்டவசமாக இந்த ஆணாதிக்க கட்டமைப்பை பாதுகாத்து வருகின்ற மொழியெனும் தூரிகை ஊடாகவே பெண்களும் தமது படைப்புலகை நிகழ்த்த வேண்டியிருக்கின்றது.
ஆனாலும் பெண்கள் எப்போது தங்கள் உலக அனுபவத்தை, அதனால் ஏற்படும்வலியை, உணர்வை வெளிப்படையாக, கட்டற்றமுறையில், சுதந்திரமாக பேசத்தொடங்கினார்களோ அப்போதே பெண்ணுக்கான உடல் மொழியையையும் உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஈழத்து புதுக்கவிதை வரலாற்றில் செல்வி, சிவரமணி போன்றவர்களின் கவிதைகள் ஊடாக அறிமுகமான பெண்ணுடல் மொழியானது இன்று பெரும் ஆர்பரிப்புடன் பேரலையாய் மாறிக்கொண்டிருக்கிறது.
பெண் மொழித் தேடலும், புதுப்புது சொல்லுருவாக்கங்களும் பெரும்பாலும் கவிஞைகளிடமிருந்துதான் தோன்றி வருகின்றன.
அந்தவகையில் அண்மையில் வெளிவந்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த கிழக்குமாகாண கிராமமான ‘காயன்மடு”வை பிறப்பிடமாகக் கொண்ட “தில்லை”யின் “விடாய்” என்கின்ற முதலாவது கவிதைத் தொகுதியானது பெண்ணுடல் மொழி சார்ந்து கூடிய கவனத்தைக் கோரி நிற்கின்றது.

இக்கவிதைத் தொகுதியில் காணமுடிகின்ற பெரும்பாலான கவிதைகள் குடும்பத்தால், உறவினர்களால், நண்பர்களால், இன்னும் இனந்தெரியாதோரால், ஊரால், தேசத்தால் வெறுத்தொதுக்கப்பட்டவளின், வஞ்சிக்கப்பட்டவளின், சிதைக்கப்பட்டவளின் வலி நிறைந்த கதைகளையே பேசுகின்றன. படிக்கின்றபோது அந்த வலிகளினால் ஏற்பட்ட வடுக்களும் அந்த ரணங்களில் இருந்து பீறிடும் அணையாத சீற்றமும் எம்மை சுட்டெரிக்கின்றன.
“இந்த கொடுமைகள் நடைபெறும் போதெல்லாம் நீ எங்கே போனாய், அவற்றையெல்லாம் ஏன் உன்னால் தடுக்கமுடியவில்லை” என்று படிப்பவர்களின் மனச்சாட்சியை பிடித்து ஒரு உலுப்பு உலுப்புகின்றன தில்லையின் கவிதைகள்.
இத்தொகுப்பின் முதலாவது கவிதை “கட்டக்காடு” இவ்வாறுதான் தொடங்குகிறது..
“நான், என் சிறுவயதிலிருந்தே
என் ஒவ்வொரு பருவமும்
என்னில் முளைத்து
பூத்துக் குலுங்கும் கணங்களில்
பறித்தெறியப்பட்டே வருகிறேன்.
என் பூனை மயிரைக்கூட நீவி
ஈசல் பிடித்த பேரண்டப்பன்
குருதி கொப்பளித்த வளரியிலும்
அவன் என் முன் யமனாக நிற்பான்……..” என்று தொடர்கிறது இக்கவிதை .
எமது வீடுகளிலும், அயல்களிலும் ஒவ்வொருநாளும் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் பலாத்காரம் பற்றி இன்னும் பட்டி தொட்டிகளுக்கு போய்ச் சேரும் வண்ணம் பேசப்படவேயில்லை. பெற்றோர்களுக்கோ, பிள்ளைகளுக்கோ அது பற்றிய அறிவோ, பிரக்ஞையோ உருவாவதற்கு எமது கலாச்சாரமோ கல்வியோ இன்னும் இடமளிப்பதாய் இல்லை.
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்கள் தமக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்னரே சின்னாபின்னமாக்கப்படும் கொடுமைகள் நடந்தேறுகின்றன.
இத்தகைய பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாத அவஸ்தை வாழ் நாள் முழுவதும் தொடர்வதை பிரதிபலிக்கின்றன இக்கவிதைகள்.
“…………..உயிரின் சுவைகொண்ட
இரத்தத்தை நக்கியும்
கொடுவலிகளைக் குடித்தும்
நான்.
பாய்கள்
விந்தூறி நனைந்தும்
சாயம் வெளுத்தும்
எனது தலைமுறைகளின்
அசவு.
தகப்பன்
கணவன்
மகன்கள் என
தலைமுறைகளின்
ஆதிக்கம்.
இறுகியும் இறுக்கியும்
பொட்டைமுடிச்சாய்…………” என்று “பொட்டைமுடிச்சி” நீளுகின்றது.
சில கவிதைகளில் நமக்கு கிடைக்கும் தரிசனம் தனித்துவமானதும், உயிர்த்துடிப்பானதும். இளம்பராய நாட்களில் இடிமின்னல் பீதியில் அடைக்கலம் தேடிப்புகும் உறவினர்களின் மடிகளுக்குள் நடக்கும் விசமத்தையும் ‘மின்னொளி’ யில் பளிச்சென்று இவ்வாறு வீசிச்செல்கிறார்.
“………அருச்சுனனுக்கு
அபயம் அடைக்கலம் என்ற
என் ஓசை எழும் போதெல்லாம்
ஆண்குறிகள் திமிறி
என் பூப்படையா மேனியை
பதம்பார்த்திருக்க …………
கிழடு, வாலிபன், என் சமவயதானவன்
என அடைக்கலம் கொடுத்து
நான் புகும் இடமெல்லாம்
நாசமறுத்தவனுகள் ……….”
தில்லையின் கவிதைகளில் கிழக்கு மாகாணத்தின் பூர்வீக நிலங்களாய் விரிந்து கிடக்கும் ‘படுவான்கரை’யின் பழந்தமிழ் சொற்களை நிறையவே தரிசிக்க முடிகின்றது.
மொழியினூடாகவே தான் வாழ்ந்த நிலத்தையும், வாழ்வையும் அவற்றின் எச்சங்களையும் எம்முன் விரியச் செய்கின்றன, இந்த ‘விடாய்’ ல் தொகுக்கப்பட்டிருக்கும் சில கவிதைகள்.
‘படுவான்கரை’ எனும் கவிதையில்
“எண்ட கிராமத்து ஊடும்
நல்லதண்ணிக்கிணறும்
கரையாக்கன் கம்பு வரிச்சு வேலியும்……………”
என்று கிராமத்து அழகையும், “விடாய்” என்கின்ற கவிதையில் சிறுபராயத்து இதமான தருணங்களையும் பாடும்விதம் அலாதியானது.
“………..என் ஊர் வயல்களில்
கதிர் பொறுக்க போய்
உப்பட்டி களவெடுத்து
முல்லைக்காரனால்
விரட்டி அடிக்கப்பட்ட
வெப்புசார நாட்களும்………….”
கிராமிய மொழி வழக்காறுகளுடன் பரீச்சயம் இல்லாதவர்களுக்கு தில்லையின் கவிதைகள் அன்னியமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் புதிய சொற்களை அறிதலும், தேடுதலும்தானே இலக்கியத்தின் அழகு.
கவிதைக்கான மொழியைத் தேடி எடுத்துக் கோர்க்காது, தன் மனம் போன போக்கில் வடிப்பது தான் கவிதை. அத்தகைய கவிதைகள்தான் உயிர்ப்புடன் வாழும். அதனால்தான் ‘இவளது சில கவிதைகள் எம்மை உலுக்கவும், உறையவும் வைக்கின்றன. குறிப்பாக “எனக்கம்மா”, மற்றும் அவளைப் பிரிந்து தொலைந்து போக மறுக்கும் காதலின் தகிப்பு, ஏமாற்றம், அதன் வலி, நீங்க முடியா நினைவுகளின் சுமை என்பவற்றை கவிதைகள் மூலம் ஒவ்வொன்றாக பிய்த்தெறிய முனைகிறாளோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ‘மூடுண்டறை’ யில்?
“……..பெருமூச்சை அடக்கி
என்னைக் குடைகின்ற அவன்
என்னில் அப்பி உருழும்
ஊத்தையைப்போல்
என் மனது முழுதும்
ஒட்டிப் புடைக்கிறான்
என்ன செய்ய?…….”
என்றும், மற்றுமொரு ‘கலட்டிக்காய்’ கவிதையில்
“புரிந்து கொள்ள முடியாததின் மீது
உயிர் உறைவதும் கரைவதுமாய்
ஒடுங்கி ஒடுங்கி நீள மறுக்கிறது மனது………..”
என்று காதலின் வேட்கையை சொல்வதோடு நச்சுப்பாம்பு போன்று அவளை சுற்றியிருக்கும் நெருடல்களை வேரறுத்து, எதிர்ப்பையும், மறுத்தலையும் கூட இக்கவிதைகள் வெளிக்கொண்டுவருகின்றன.
“……..நான் நிலங்களை
பாம்பூராக் காடுகளை
வெளிகளை கடல்களைக்
கடந்து
இன்னும் உயிரோடு……..”
என்று ‘சூல்‘ கொண்டெழுந்து
“…..சில வருடங்களுக்கு முன்பு நீ
எந்தப் புள்ளியில் விட்டுப்போனாயோ
நான் அந்தப் புள்ளியில் இல்லை.”
என ‘வாழ்ந்து முடிந்த கதை‘ இல் குரலெழுப்புகிறாள்.
சிறுபராயத்தில் தாயை, தந்தையை இழப்பதென்பது கொடுமையானது. இந்த பொல்லாத சமூகத்துள் ஒரு சிறுமி தனக்கு பசிக்கும்போதும், வலிக்கும்போது, சொல்லியழுவதற்கு கூட யாரும் அற்றநிலையில் தன்னை தனியே விட்டுச்சென்ற அம்மாவை, தந்தையை சாடுகிறாள். இந்தச் சிறுமியின் முன்னால் ‘பெற்றால்தான் பிள்ளையா?”, ‘வந்தாரை வாழவைக்கும்….” என்பதெல்லாம் சுத்தப் பொய்யாகிவிட்டதை ‘காடேறிப் போனவன்’ இல்
“………அறுந்து விழுந்த கிளையின்
அரும்பாய்க்
கருகிக் கிடந்த நான்
என் அம்மாவையும் காணேன்.
மந்திரப் பித்துப்பிடித்த
என் அப்பாவையும் காணேன்……….”
எனினும் தனக்கு உணவளித்து உறங்க இடங்கொடுத்த ஆத்தையை ‘எனது உடலில் உயிரை ஒட்டிவைத்தாய்” என அவளை மதித்து விழிப்பதோடு அவளது ஓரவஞ்சனையை ‘குமர்’ ஊடாக கச்சிதமாக கூறுகையில்
“…..ஆத்த நொச்சிக் கம்போடு
எனைத்துரத்த
பீச்சூத்தோடு நான்
ஓடித்திரிந்த காலங்கள்.
இப்பவும் எனக்கு பீப்பயம்.
‘கக்கிசம்” என்னில் பேயாடினாலும்
கால்வயிறு சோறும் கஞ்சியும்
தனியாளா ஊத்தியவள் நீ………”
தில்லை தன் “ஆற்றொணாத் துயரத்தையும் தனிமையையும்” போக்குவதற்கு கவிதைதான் எனக்கு வடிகாலென்கிறார். ஆம் கவிதை ஒரு வலுவான ஆயுதம் என்கிறார் கவிஞர் பாப்லோ நெருதாவும்.
ஒருமுறை கவிஞர் பாப்லோ நெருதாவின் வீட்டை இராணுவம் சுற்றிவளைத்து, இங்கு ஆயுதங்கள் இருக்கின்றனவா என தேடியபோது, ‘உங்கள் கையில் இருப்பதைவிடவும் வலிமையான ஆயுதம் இங்கே இருக்கிறது கவிதையாக” என்றாராம்.
அந்தவகையில் தனக்குள் ஆழப்பதிந்து கிடந்த காயங்களை நினைவுகளை அள்ளி அப்பி, அவஸ்தைக்குள் மூழ்கி, திமிறி எழுந்து, நிமிர்ந்து சிலிர்த்து நிற்கும் அவளை உணரமுடிகிறது கவிதைகளில்.
சில கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே சொற்களும், சொற்தொடர்களும் பாவிக்கப்பட்டும், ஒரு சில கவிதைகள் உரைநடையாகவும், தேவையற்ற சொற்களின் நீட்சியும் காணப்படுகின்றன.
இத்தொகுப்பு 49 கவிதைகளை தாங்கி “தாயதி” இன் வெளியீடாக வந்துள்ளது. கவிதைகளின் தலைப்புகள் மிகவும் கனதியானவை, தனியாகப் பேசப்படவேண்டியவை.
தில்லையின் மொழியாளுமையும், அதை பயன்படுத்தும் லாவகமும், உருவகப்படுத்தும் படிமங்களும், பாடுபொருளும் தற்காலத் தமிழ் கவிஞைகளிலிருந்து தில்லையின் எழுத்தாற்றலை தனித்துவமாக காட்டி நிற்கின்றன.
‘கவிதை என்பது மொழிக்குள் மொழியாகும்’ என்பான் ‘போல் வலறி’ எனும் பிரஞ்சுக் கவிஞன்.
“விடாய்” தொகுப்பின் மூலம் இக்கவிஞையும் அதனை உறுதிசெய்கிறாள் என்றால் மிகையாது.

