— அகரன் —
‘கிறிஸ் கார்மன்‘ அவர்களின் வரலாற்றை கீழ் இருந்து பார்க்கும் புத்தகம் இது.
கீழ் இருந்து பார்த்தல் என்றால், அடக்கி ஆண்டவனின் வழமையான பார்வையைவிடுத்து ஆளப்பட்ட பெரும்பான்மை ‘மக்களின் வரலாற்றை’ பார்த்தல்.
இன்றைய நாட்களிலும் கல்வி நிறுவனங்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? எத்தனை மனைவிகளை வைத்திருந்தார்கள்? எத்தனை போர்களைச் செய்தார்கள்? எவ்வளவு மனித இரத்தங்களை குடித்தது அவர்கள் வாழ்ந்தார்கள்? எப்போது மரணித்தார்கள்? என்ற மனனம் செய்யும் வாய்ப்பாடாகவே வரலாறு கற்பிக்கப்பட்டுவருகிறது.
இதை உடைத்துப் போடுகிறது இந்தப் புத்தகம்.
நியமாக உலகம் பார்காமல்விட்ட கண்களால் வரலாற்றை பார்க்கச் செய்கிறது இப்புத்தகம்.
இற்றைவரை வரலாற்றை சில மனிதர்களின் வெண்பா போலவே உலகம் அறிவித்து வந்திருக்கிறது.
முன்னர் மன்னர்களின் கதையாகவும், பின்னர் மக்கள் தலைவர்கள் என்ற மகுடிகளின் கதையாகவும் இருந்தது.
காரணம் கடவுளிடம் இருந்து அதிகாரம் வருவதாக கூறி பூச்சாண்டி காட்டிய மன்னர்களாலேயே வரலாறு பதியப்பட்டது.
அலெக்ஸாண்டர்கள், நெப்போலியன்கள், செங்கிஸ்கான்கள் இன்னும் இராஜி ராஜமார்த்தாண்டர்களை மகாவீரர்களாக கற்றுக்கொண்டிருக்கிறோம். மக்களை இரத்தம் சிந்த வைத்ததன் மூலமே தங்கள் அற்ப ஆசைகளை நிறைவேற்றிய இந்த விசஜந்துக்களை, மனிதக் கொல்லிகளை மரியாதைக்குரியவர்களாக கொள்வதன் மூலம் இந்தப் பூமியின்அதிசய உயிரினமாகிய மனிதர்களை தவறாக வழிநடத்துகிறோம். “பூமியை கொல்லும் வரலாற்றை நாமே ஏற்கிறோம்” என்ற ஆழமான வலி இதைப் படித்தபோது ஏற்பட்டது.
நவீன மனித இனம் தோன்றி 1 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கடந்த 150 ஆண்டுகளின் செயல்முறைகள் எஞ்சிய மனித இனத்தின் இருப்பை தீர்மானித்து நிற்கின்றன. பூமியையே சுடுகாடாக்கும் ஆயுதங்களை இந்த ’மக்கள் அரசு’ என்று சொல்பவர்களே உற்பத்தி செய்கிறார்கள். உண்மையில் உலக மக்கள் இதை விரும்புவார்களா ?
மக்கள் பட்டினியோடு படுக்கச்செல்லும் நிலையிலும், பட்டினியால் இறக்கும் நிலையிலும்தான் இந்த நவீன ‘மக்களால் மக்களை ஆளும் அரசுகள்’ உள்ளன.
இப்புத்தகம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பனியுத்த காலம் வரையான மக்களின் வரலாற்றை பதிவு செய்கிறது.
‘’காட்டுமிராண்டி காலம்’’ என்று ஒரு காலத்தை இன்றய நைட்ரஜன் குண்டுகள் வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள். அக்காலத்தில் மனிதன் மனிதனை கொல்லவில்லை. எல்லோருக்கும் எல்லாமும் இருந்தது. என்கிறபோது யார் காட்டுமிராண்டிகள் ?
*சீனப்பெருஞ்சுவர் எத்தனை லட்சம் பேரின் குருதி குழைத்துக்கட்டப்பட்டது ?
*பிரமிட்டை கட்டிய மக்கள் எங்கே தூங்கி எழுந்தார்கள் ?
*ஸ்பாட்டர்களில் சிலுவையில் அறையப்பட்டவர்களின் மனைவிகள் நிலை என்ன ?
*மண்தின்ன மன்னர்கள் அலைந்தபோது ஓடியது மன்னர்கள் இரத்தமா?
*எந்த மக்கள் நாடுகளுக்கு எல்லை கேட்டார்கள் ?
*2000 ஆண்டுகளுக்கு முந்தய இந்திய, சீன வரலாற்றை வரலாறுகளே மறந்துவிட்டனவா?
*1000 ஆண்டுகளுக்கு முதல் ஐரோப்பா அழுக்கு நகராகவே இருந்தது.
*கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு 1000 ஆண்டுகள் முதலே நோர்வேயியக்குடிகள் அங்கு சென்றுவிட்டார்கள்.
*18, 19 நூற்றாண்டை தனக்கானதாக மாற்றிய ஐரோப்பா கரகம் ஆடிமுடித்துவிட்டது.
*1770 இல் வெறும் பனிக்கட்டியை எறிந்தபோது திருப்பிச் சுட்டதில் 5 பேர் இறந்ததில் தொடங்கியதே அமெரிக்க சுதந்திரப்போர்.
*மனித உரிமை பற்றி உரக்கப்பேசி அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் 500 அடிமைகளுக்கு சொந்தக்காரர். அவர் மக்கள் என்ற வார்த்தையை வெள்ளையர்களுக்கு மட்டுமே பயன்படுத்தினார்.
*வெறும் ஐந்து பேரின் முடிவுகளால் 2ம் உலக யுத்தத்தில் 5 கோடி மக்களை இழந்ததை யார் நினைப்பார்?
*1967 இல் அக்ரோபர் 20-27 இல் ‘கியூபாவிற்காக சோவியத் யுத்தம் செய்ய முனைந்தால் நாம் அணு யுத்தத்தை ஆரம்பித்திரும்போம்’ என்ற ‘ராபட்கென்னடி’ (அதிபர் கென்னடியின் தம்பி) கூற்று எத்தனை ஆபத்தானது. அது நடந்திருந்தால் பூமிக்கே இன்று பால் !!
இப்படி எண்ணற்ற மாற்று வரலாற்றைத்தருகிறது இந்த நூல். இதை தமிழில் தந்த ச. சுப்பாராவ் நன்றிக்குரியவர்.
« கடந்தகாலத்தை கட்டுப்படுத்துபவன் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவான் » -ஜார்ச் ஆர்வெல்-
« எதிர்காலத்தை செதுக்குபவர்கள்தான் உண்மையான தீர்க்கதரிசிகள் » – ஐரிஸ் புரட்சியாளர் ஜேமஸ்கனோலி-
மக்களிடம் பேரன்புள்ளவர்கள் படிக்கவேண்டிய புத்தகம் !!!