13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — 

சென்ற இரு பத்திகளிலும் (சொல்லத் துணிந்தேன்-59,60) ‘பொத்துவில்- பொலிகண்டி’ப் பேரணி குறித்த எனது அவதானங்கள் சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். இந்தப் பத்தியிலும் இப் பேரணி குறித்த மேலும் பல விடயங்களைக் குறிப்பிடலாமெனக் கருதுகிறேன்.  

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலின் முதற்கட்ட முயற்சி அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கூடாக முன்னெடுக்கப்பட்டது. சேர் பொன். இராமநாதன் மற்றும் சேர் பொன். அருணாசலம் காலத்திலிருந்து ஜி.ஜி. பொன்னம்பலம் காலம்வரை முதற்கட்டமாகக் கருதலாம். இதில் தமிழர்தரப்பு தோல்வி அடைந்தது. 

பின்னர் இரண்டாம் கட்டமாக எஸ். ஜே. வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துவந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவித் தமிழர் தாயகம்- சுயநிர்ணய உரிமை- தமிழ்த்தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறைமையை வேண்டி காந்தீய வழியில் நடத்திய அறவழிப் போராட்டங்களைக் (கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- உண்ணாவிரதம்- வீதி மறியல்-சத்தியாக்கிரகம்- ஆர்ப்பாட்டப் பேரணி-ஒத்துழையாமை இயக்கம் போன்றவை) கருதலாம். இக்காலகட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949 லிருந்து ‘தமிழீழத்’ தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய வட்டுக்கோட்டை மாநாடு நடைபெற்ற 1976 வரை சுமார் முப்பது வருட காலமாகும். தந்தை செல்வா தலைமையிலான அகிம்சை வழிப் போராட்டமும் தமிழர்களுக்குத் தோல்வியையே அறுவடையாகத் தந்தது. 

1976 லிருந்து 2009 மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தம்வரை அடுத்த சுமார் முப்பது வருட காலம் நடைபெற்ற தமிழீழத் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டக் காலத்தை மூன்றாவது கட்டமாகக் கருதலாம். பிரபாகரன் தலைமையிலான ஆயுதப் போராட்டமும் இறுதி விளைவாகத் தோல்வியையும் பாரிய அழிவுகளையுமே விட்டுச் சென்றது. 2009 மே 18 இற்குப் பின்னரான நான்காவது காலகட்டம் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளினால் (அகிம்சை போராட்டமும் ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்ற நிலையில்) இராஜதந்திரப்(?) போராட்டம் என வர்ணிக்கப்பட்டது. 

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியலைப் பொறுத்தவரை 1949 இல் இருந்து இன்றைய 2021 வரை சுமார் 70 வருட காலமும் (ஆயுதப் போராட்ட காலம் உட்பட) தமிழரசுக் கட்சிதான் அரசியல் தலைமையை ஏற்று வந்துள்ளது. தமிழரசுக் கட்சி- தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என காலத்துக்குக் காலம் பெயர்ப்பலகைகள் மாறியிருந்தாலும் தமிழரசுக் கட்சிதான் தலைமைக் கட்சியாகவிருந்து ‘தர்பார்’ நடத்தியது. 

யுத்தம் முடிந்த 2009 லிருந்து இன்று வரையிலான இரா சம்பந்தன் தலைமையிலான பன்னிரெண்டு வருடகால இராஐதந்திரப் போராட்டமும்(?) இன்றுவரை தோல்விகளையே தந்து கொண்டிருக்கின்றன. 

இந்தக் கட்டத்தில் இப்போது நடந்து முடிந்துள்ள ‘பொத்துவில்- பொலிகண்டி’ பேரணி மூலம் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறிய கதைபோல் அகிம்சைப் போராட்ட காலத்திற்குச் சென்று விட்டோமா? அல்லது செல்லப் போகிறோமா? இது வெற்றியளிக்குமா? 

1949 இல் இருந்து 2021 வரை தமிழர்தம் தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தலைமை வகிபாகத்தை ஏற்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி கடந்த எழுபத்தியிரண்டு வருட காலம் தனது அரசியல் கையாலாகாத்தனத்தையே நிரூபித்துத் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளது. இந்தக் கட்டத்தில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவெனில், இனியும் தமிழரசுக்கட்சி நமக்குத் தேவைதானா? என்பதுதான். 

இப்பத்தி எழுத்தாளரின் பார்வையில் நடந்து முடிந்துள்ள ‘பொத்துவில்- பொலிகண்டி’ப்பேரணி இக் கேள்வியையே எழுப்பியுள்ளது. 

அஹிம்சைப் போராட்டமும்- ஆயுதப் போராட்டமும்-இராஜதந்திரப் போராட்டமும் தோல்வியுற்றதற்கான அடிப்படைக் காரணம் இந்த மூன்று வகைப் போராட்ட காலத்திலும் தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக முகத்தைத் தாங்கிநின்ற தலைவர்கள் அனைவரும் தேர்தல் வெற்றிகளை மட்டுமே மனம் கொண்டு, மக்களை உணர்ச்சி அரசியலை நோக்கி உந்தித்தள்ளினார்களே தவிர மக்களை அறிவுபூர்வமான அரசியலை நோக்கி ஆற்றுப்படுத்தவில்லை. 

அதிகார வர்க்கமொன்றின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியுள்ள ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அச்சமூகத்தை சமூக பொருளாதார அரசியல் மீட்சிக்கு இட்டுச்செல்லும் அரசியல் தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய அர்ப்பணிப்பு- ஆற்றல்- தன்னல மறுப்பு-ஒறுப்புக்களுக்கும் இழப்புகளுக்கும் தம்மையே அர்ப்பணிக்கக் கூடிய மனப்பக்குவம்- ஓர்மம்-வினைத்திறன்- இலக்கை அடைவதற்கான உபாயங்கள்- குறுகிய நீண்ட காலத் திட்டங்கள்-இராஜதந்திர அணுகு முறைகள் எதுவும் நிறுவனரீதியாகத் துரதிர்ஸ்டவசமாகத் தமிழரசுக் கட்சியிடம் இல்லாதிருந்ததே “தமிழ் மக்கள் இருந்ததையும் இழந்து போனமைக்கு” காரணம். சீட்டிழுப்பில் பரிசுபெறாத அதிர்ஸ்டலாபச் சீட்டுப்போல் தமிழரசுக் கட்சி இப்போது காலாவதியாகி விட்ட கட்சியாகும். 

 எனவே, இனிமேலாவது தமிழர்கள் ‘பொத்துவில்-பொலிகண்டி’ பேரணி போன்ற ‘பந்தா’ களைக் கைவிட்டு மாற்று அரசியல் வியூகங்களை வகுத்துப் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளை வினைத்திறனுடன் கையாளக்கூடிய அறிவும்-அனுபவமும்- அர்ப்பணிப்பும்- ஆற்றலும் மிக்க துறைசார் நிபுணர்களின் கரங்களில் அமைப்பு ரீதியாகத் தமிழ்த் தேசிய அரசியலின் மடை மாற்றம் நிகழ வேண்டும். 

மேலும், காலம் கடந்து விட்டதென்ற போதிலும்கூட பின்வரும் கேள்வி என் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாணசபை அலகுகளாகப் பிரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட காலத்தில் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்தியோ, இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் அதாவது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது யுத்தத்தில் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் எனவே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தியோ பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை பேரணி ஒன்றினை நடத்துவதற்கு அப்போது சிவில் சமூக அமைப்புக்கள் ஏன் சிந்திக்கவில்லை? 

சரி! போனவை போகட்டும். அகிம்சைப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும், இராஜதந்திர போராட்டமும்(?) வடகிழக்குத் தமிழர்களுக்கு எதுவுமே பெற்றுத்தராது இருந்ததையும் இழக்கச் செய்துவிட்ட இன்றைய நிலையில், அரசியல் யதார்த்தத்தையும், நடைமுறைச் சாத்தியத்தையும், தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நீரோட்டங்களைக் கவனத்தலெடுத்துக் குறைந்தபட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அழுத்தத்தை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிற்குக் கொடுக்கும்வகையில் ‘பொத்துவில்- பொலிகண்டி’ போன்றதொரு  பேரணியை எதிர்காலத்தில் நடத்துவது பற்றிச் சிவில் சமூக அமைப்புக்கள் ஏன் சிந்திக்கக் கூடாது?  

நடந்து முடிந்த ‘பொத்துவில்- பொலிகண்டி’ ப் பேரணி அதன் முடிவில் பத்துக் கோரிக்கைகளைப் பிரகடனப் படுத்தியிருந்தது. இது தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இலக்கை ‘ஐதாக்கம்’ செய்து விடக்கூடியது. வெறுமனே கோரிக்கைகளை அடுக்குவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.  

இன்றைய அரசியல் களநிலையில்,இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையானது ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும்’ என்றவோர் ஒற்றைப் பரிமாண இலக்கை முன்வைக்கும் பேரெழுச்சிப் பேரணியே. சிவில் சமூக அமைப்புகள் இதையிட்டுச் சிந்திக்கக்கடவதாக.